தாது வருடத்துப் பஞ்சம் தொடர்பான செய்திகள் இங்கிலாந்து முழுவதும் பரவின, The Great Madras Famine என The Illustrated London News உள்ளிட்ட பல பத்திரிகைகள் தொடர்ந்து இந்தப் பஞ்சத்தில் மக்கள் பட்ட துயரங்களைப் பற்றித் துல்லியமான செய்திகள் வெளியிட்டன. பிரிட்டிஷ் நிர்வாகம் ஏன் பஞ்சத்தின் போது மக்களுக்குப் போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என அங்கே எல்லா மட்டங்களிலும் கேள்விகள் எழுந்தன. கிழக்கிந்திய கம்பெனியாக இருந்தபோது கேட்க முடியாத கேள்விகளை எல்லாம் இங்கிலாந்தின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும் மக்கள் கேட்கத் தொடங்கினார்கள். இங்கிலாந்தில் எழுந்த குரல்களின் வழியே ஆங்கிலேய அதிகாரிகளின் செயல்களிலும் சில மாற்றங்களை இந்திய மண்ணில் பார்க்க முடிந்தது.
ஒரு நூறு ஆண்டுகளாகவே பெரியாற்றின் தண்ணீரை வைகை நதி நோக்கித் திருப்பிவிட இயலுமா, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உச்சியில் இதைச் செய்வது சாத்தியமா என்பது குறித்த பேச்சுகள், விவாதங்கள், ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. வைகை வடிநிலப்பரப்பில் பலமுறை மழை பொய்த்து மிகுந்த உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்கிற வேட்கை பல அதிகாரிகளின் மனதிலும் கனன்று வந்தது.

கேப்டன் கால்டுவெல் என்பவர், பெரியாற்றைக் கிழக்கு நோக்கி திசைமாற்றும் ஒரு திட்டம் இங்கே தொடர்ந்து இருந்து வருகிறது, அப்படி ஒரு முயற்சியைப் பலர் ஆலோசித்திருக்கிறார்கள் என்பதை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். 1798-ல் ராமநாதபுரம் மன்னர் ஒரு குழுவை மேற்குத் தொடர்ச்சி மலைகள் நோக்கி அனுப்பிவைத்தார். திவான் முத்துப்பிள்ளை தலைமையிலான குழு ஒரு பெரும் வேலையாட்களின் படையுடன் சென்று இந்த வேலைகளைத் தொடங்கியது. ஆனால் பல காரணங்களால் வேலைகளைத் தொடராமல் கைவிட்டனர்.
1807-ல் அன்றைய கலெக்டராக இருந்த ஜார்ஜ் பாரிஷ் தானே இந்தத் திட்டம் பற்றி ஆய்வு செய்ய குமுளி நோக்கிச் சென்றார். அங்கே சென்று அவர் பெரியாற்றையும் தண்ணீர் கிழக்கு நோக்கிப் பாய வேண்டிய ஓடைக்கும் நடுவே மூன்று மைல்கள் அகலத்திற்கு மலைகள் பள்ளத்தாக்குகள் இருப்பதைப் பார்த்தார். நடுவில் இருக்கும் பெரும் பாறையைத் தகர்ப்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. இது மனிதர்களால் இயலாத காரியம், இது இயற்கையை மீறும் செயல் என்பது போல் தனது பார்வைகளை முன்வைத்து, திட்டம் இயலாது என்கிற முடிவுக்கு வந்தார்.
இதனைத் தொடர்ந்து 1862-ல் பிரித்தானிய ராயல் பொறியாளரான மேஜர் ரீவ்ஸ் மீண்டும் பெரியாற்று நீரை வைகைக்குத் திருப்பிவிடும் திட்டத்தைத் தன் கையில் எடுத்தார். 1862 முதல் 1867வரை ஐந்து ஆண்டுகள் இந்த மலைகளில் சுற்றித்திரிந்த அவர், இந்த நீரை நாம் திருப்பி விடுவதற்கு முன் அங்கே ஓர் அணையைக் கட்டுவதன் அவசியத்தைப் பற்றித் தெளிவான யோசனைகளை முன்வைத்தார். இருப்பினும் இந்தக் காலத்தில் ஏற்பட்ட தாது வருடத்துப் பஞ்சம் பிரித்தானிய அரசுகளின் கவனத்தை வேறு பக்கம் திசைதிருப்பியது. போதுமான நிதி வசதிகளும் இல்லை என்பதால் இந்தத் திட்டம் நடைமுறைகள் நோக்கிச் செல்லவில்லை.

தாது வருடத்து பஞ்சத்தின் கோர விளைவுகள் மதுரையைச் சுற்றிய பகுதிகளை நிர்மூலமாக்கிவிட்டுச் சென்றது. இந்தப் பஞ்சத்திற்குப் பிறகு மீண்டும் மதுரை மாவட்டமும் அதன் வறட்சியின் கடுமை குறித்தும் ஒரு விவாதம் எழுந்தது. மதுரை தாது பஞ்சத்தில் படாத பாடுபட்டது. அது மட்டுமன்றி மதுரை மாவட்டமே தொடர்ச்சியாக வறட்சியின் நிழலில்தான் உழன்றது. கம்பம் பள்ளத்தாக்குத் தொடங்கி ராமேஸ்வரம் வரை அன்றைய மதுரை மாவட்டம் நீண்டு விரிந்து கிடந்தது. வறட்சியின் விளைவாக கடுமையான களவு நடவடிக்கைகள் மதுரையில் காணப்பட்டன. இந்தத் திருட்டுத்தொழில் செய்யும் குறிப்பிட்ட சமுக மக்களின் மீது குற்றப் பரம்பரைச் சட்டம் 1871-ல் அமல்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் இது 127 சாதியினர் மீது போடப்பட்டது. இந்தப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து வறண்ட நிலங்களில் விவசாயம் நடைபெற்றால் இந்தக் களவு நடவடிக்கைகளுக்கு ஒரு முடிவு வரும் என்று மதுரையில் இருந்த சில பிரித்தானிய அதிகாரிகள் நம்பினார்கள்.
1882-ல் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முழுப் பொறுப்புடன் மேஜர் ஜான் பென்னிகுவிக் நியமிக்கப்பட்டார். இதே ஆண்டில் அவர் சமர்ப்பித்த திட்ட அறிக்கைக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் படி அங்கே 176 அடிக்கு கற்களாலான ஓர் அணை கட்டப்பட்டு அதை ஒரு பெரும் நீர்தேக்கமாக மாற்றி, அங்கிருந்து ஒரு மைல் தொலைவிற்கு பாறைகளுக்குள் ஒரு சுரங்கப்பாதை வெட்டி அதன் வழியே தண்ணீரைக் கிழக்கு நோக்கிப் பாயச்செய்வதாக இருந்தது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிலத்தைப் பெற திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 1886-ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் 8,100 ஏக்கர் நிலம் 999 வருடங்களுக்குக் குத்தகையில் பெறப்பட்டது.
1887-ல் அணைக்கான வேலைகள் தொடங்கின. அணை கட்டுமிடத்திற்கு அருகிலிருந்த மண் சாலை 11 கிமீ தொலைவிலும், ரயிலடி 128 கிமீ தொலைவிலும் இருந்தன. அணையின் கட்டுமானப் பகுதி முற்றிலும் வெளி உலகத்தின் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது. ஜான் பென்னிகுவிக் அணை கட்டுவதற்கான இயந்திரங்கள் வாங்க 1888-ல் இங்கிலாந்து சென்றார், ஏப்ரல் முதல் ஜூலைவரை லண்டனில் அவர் தங்கியிருந்தார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. மெட்ராஸ் பயனியர்சின் முதலாம் மற்றும் நான்காம் பெட்டாலியன்கள், போர்த்துக்கீசிய தச்சு ஆசாரிகள் உள்ளிட்ட மதுரை முழுவதும் இருந்து அணையைக் கட்ட வந்த 3000 பேருடன் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கின. கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் 175 அடிகள் உயரம் கொண்ட அணையை இத்தனை பெரும் அடர்வனத்தில் கட்டுவது உலகின் அசாத்தியங்களில் ஒன்றாகவே கருதப்பட்டது.
முதலில் இரு சிறு அணைகளும் ஏராளமான குறு அணைகளையும் கட்டிப் பெரியாற்றின் திசைகளை மாற்றினார்கள். கட்டுமானம் நடைபெறும் இடத்தில் நீரை வேறு திசைகளில் மாற்றி தற்காலிகமாகத் தேக்கினார்கள். இவ்வளவு பெரும் நீர்ப் பரப்பைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ளப் பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், யானைகள், புலிகள், கரடிகள், அளவில்லாத அட்டைப்பூச்சிகள் போன்றவற்றையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு சிரமங்களுடன் இந்தக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. ஆறு மாதங்கள் இந்த மலைகளில் அடித்துப் பெய்யும் கனமழையும், திடீரென உருவாகும் காட்டாறுகளும் சொல்லொணாத் துயரைத் தந்தது. தொழிலாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அணைக் கட்டுமானத்தில் ஈடுபட்ட அனைவரையுமே ஆண்டுக்கு ஒருமுறை மலேரியா, காலரா என நோய்களும் பதம் பார்த்துச் செல்லும். கடுமையாக நோயுற்று இனி வேலைகள் செய்ய இயலாதவர்கள் தங்களின் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். காலநிலை, நோய்கள், விபத்துகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் செத்து மடிந்தார்கள்.

இத்தனை இடர்களுடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான காட்டு வெள்ளத்தில் அணையின் கட்டுமானம் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டம் சில காலம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. கர்னல் பென்னிகுவிக் உடனே லண்டனுக்குச் சென்று தனது குடும்பச் சொத்துக்களை விற்று அந்தப் பணத்தில்தான் அணையைக் கட்டி முடித்தார் என்கிற ஒரு தகவல் கம்பம் பள்ளத்தாக்கு முதல் மதுரை வரை உலவி வந்தாலும் அதற்கு தக்க ஆதாரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
கடுமையான பாறைகளில் சுரங்கம் வெட்டும் பணி இரு திசைகளில் இருந்தும் நடைபெற்றது. இது 2 கிமீ தூரத்தை இணைக்கும் சுரங்கம், இந்தப் பணிகளின் போது பென்னிகுவிக் மிகுந்த கவலையில் இருந்தார். இரு புள்ளிகளும் ஓர் இடத்தில் கச்சிதமாக இணைந்தால் மட்டுமே அந்தச் சுரங்கம் வெட்டும் பணி வெற்றியடையும். இருப்பினும் அன்றைய தொழில்நுட்பங்களுடன் அவர்களின் கடுமையான ஈடுபாடும் சேர்ந்து பொறியியல் வரலாற்றில் பெரும் வெற்றியைத் தந்தது.
முல்லைப் பெரியாற்று அணை சுண்ணக்கல் மற்றும் சுர்க்கி கலவையுடன் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட ஒரு எடையீர்ப்பு அணையாகும். இந்தத் திட்டத்தில் முழுமையாகப் பணியாற்றிய ஏ.டி.மெக்கன்சி, 'History Of Periyar River Project' என்ற நூலில் அணையின் கட்டுமானத்தில் பயன்படுத்திய பொருள்கள், அவற்றின் அளவு, திட்டவரைவு குறித்த தகவல்களுடன் இந்த அணைக் கட்டுமானம் உலகின் பெரும் சாதனை என்பதை விரிவாக எழுதினார்.
1895-ல் அணையின் கட்டுமானங்கள் முடிந்தன. கர்னல் பென்னிகுவிக் அவர்களுக்கு கம்பம் பகுதியில் இருந்து மக்கள் இந்த வேலைகள் நடைபெற்ற நாள்கள் முழுவதுமே ஏதேனும் ஒரு பரிசைக் கொண்டு வந்து கொடுக்க முயன்றனர். ஆனால் அவர் ஒருபோதும் எதையும் வாங்கவில்லை. அணையின் கட்டுமானங்கள் முடிந்து தண்ணீர் திறக்கும் நாளில் மீண்டும் மக்கள் வந்து அவர் கையில் வெற்றிலையும் ஒரு எலுமிச்சம்பழத்தையும் கொடுத்தனர். அவர் அதை வாங்க மறுத்து அதனை அணைக் கதவுகள் திறக்கப்பட்டதும் நீரில் போடுங்கள், அதுவும் தமிழகம் நோக்கிச் செல்லட்டும் என்றார்.

இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் திறந்து வைத்தார். தண்ணீர் திறக்கப்பட்டு அது சுரங்கத்தின் வழியே பாய்ந்து தமிழக எல்லையை அடைந்த போது பென்னிகுவிக் கதறி அழுதார் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இந்த அணை கட்டியதன் முழுப் பெயரும் இந்தக் கட்டுமானத்தில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கானவர்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்பதை பென்னிகுவிக் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார். இன்றும் பெரியாற்று அணைப் பகுதியில் ஆங்கிலேயர்களின் கல்லறைகளும் கொஞ்சம் தூரத்தில் உயிர் நீத்த தொழிலாளர்களின் புதைவிடமும் புதர் மண்டிக் கிடக்கிறது.
இ.ஆர்.லோகன்தான் இந்த அணைக் கட்டுமானத்தின் இயந்திரங்களுக்கான பொறுப்பாளர். அணைக் கட்டுமானத்தில் பென்னிகுவிக் ஈடுபட, அணைப்பகுதியில் இருந்து தண்ணீரைக் தேக்கடிக்குக் கொண்டுவருதல், அங்கிருந்து தமிழகப் பகுதிகளுக்குத் திருப்புதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டார் லோகன். இன்றும் கம்பம் முதல் தேனி வரையிலான பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு லோகன், லோகன்துரை, பென்னிகுவிக் பெயர்களை வைத்திருப்பதை நீங்கள் காணலாம்.
அன்றைய மதுரை மாவட்டம்தான் இன்று தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம், விருதுநகராகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் நிலங்களில் பெரியாற்று அணையின்றி சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்றிருக்க வாய்ப்பேயில்லை. தேனி மாவட்டத்தின் சுருளிப்பட்டி, காமயக்கவுண்டன்பட்டி, பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுவிக் நினைவைப் போற்றும்படி ஆண்டுதோறும் கிராமத்து தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பகுதியில் பல வீடுகளில் பென்னிகுவிக் அவர்களின் உருவப்படத்தை நீங்கள் காணலாம்.
இந்த அணையின் நீர் ராமநாதபுரம்வரை சென்றாலும், வைகை அணைக்கு அருகில் இருக்கும் மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்களுக்குத் தண்ணீர் கொண்டுசெல்வதற்காக அமைக்கப்பட்ட '58 கிராமப் பாசனக் கால்வாய்’ திட்டம் இன்று இந்த மக்களுக்கு ஒரு கனவாகவே இருந்துவருகிறது.
பென்னிகுவிக் 1911-ல் இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள கேம்பர்லியில் காலமானார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த சந்தானா பீர் ஒலி இந்த நீரின் பயனைப் பெற்ற ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் பென்னிகுவிக் சமாதியையும், பென்னிகுவிக் குடும்பத்தாரையும் லண்டனுக்குக் கல்வி கற்கச் சென்ற இடத்தில் கண்டுபிடித்தார். அவர்களது குடும்பத்தாரை 2018-ல் தமிழகம் அழைத்துவந்தார். லண்டனில் பென்னிகுவிக்கின் சமாதியைப் புணரமைத்து, அவரது சிலையையும் அங்கு நிறுவினார்கள்.

பென்னிகுவிக்கின் பெயர்த்தியான டயானா கிப் மற்றும் பேரன் டாம் கிப் என் நண்பர்கள், அவர்கள் இருவரும் மதுரையின் என் வீட்டிற்கு வருகை தந்தார்கள். பென்னிகுவிக் அவர்களின் இந்த நிலத்தின் மீதான பிரியத்திற்கு என்ன காரணம் என்பதை அவர்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தேன். ஊடகவியலாளரான டாம் கிப் சொன்னார் “அனைவருக்குமே தாம் பிறந்து வளர்ந்த ஊரின் மீது எப்பொழுதுமே ஒரு பிரியம் இருக்கவே செய்யும், என் தாத்தா இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் பூனேயில் பிறந்தவர்” என்றார்.
நன்றி:
History Of Periyar River Project - A.T. Mackenzie
Cultivating Virtue in South India - Anand Pandian