Published:Updated:

மதுர மக்கள்: "நம்ம ஒத்த உசுரு போனா என்ன... மலையைக் காப்பாத்தணும்!"- அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்

மதுர மக்கள் | அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்
News
மதுர மக்கள் | அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

மதுர மக்கள்: "நம்ம ஒத்த உசுரு போனா என்ன... மலையைக் காப்பாத்தணும்!"- அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

மதுர மக்கள் | அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்
News
மதுர மக்கள் | அரிட்டாபட்டி ரவிச்சந்திரன்
"பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் ஐந்தறிவுன்னு சொல்றோம். மனுஷனுக்கு ஆறு அறிவுன்னு சொல்றோம். ஆனா எந்தப் பறவையும் விலங்கும் எனக்கு, என் மகனுக்கு என் பேரனுக்குன்னு இந்த இயற்கையைச் சுரண்டி சேர்த்து வைக்கிறது இல்லை. மற்ற உயிரினங்கள் தன்னோட தேவைகளைத் தாண்டி எதையும் சேர்த்து வைத்ததில்லை. மனுஷன் இன்னும் இயற்கைகிட்ட இருந்து தற்சார்புப் பொருளாதாரத்தைக் கத்துக்கணும்."
ரவிச்சந்திரன்
இயற்கையோடு சேர்ந்து பயணிப்பதன் முக்கியத்துவத்தை நிதானமாக விவரிக்கிறார் ரவிச்சந்திரன். அரிட்டாபட்டியில் இயங்கிவரும் ஏழு மலைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அரிட்டாபட்டி பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

உங்களைப் பற்றிய அறிமுகம்?

ஏழு மலைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அரிட்டாபட்டி பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு இயக்கம்
ஏழு மலைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அரிட்டாபட்டி பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு இயக்கம்

எனக்கு சொந்த ஊரு அரிட்டாபட்டிதான், படிச்சது பி.ஏ வரலாறு. இயல்பிலேயே வரலாற்றின் மீதான ஆர்வம், கூடவே சின்னவயசுல வீட்ட சுத்தி மலைகள், லீவு நாள்கள்ல ஏதாவது குகைக்குள்ள போயி உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சுருவேன். மலைகள் பற்றித் தேடித் தேடிப் படிக்க ஆரம்பிச்சேன்... மலைகள் மீதான் காதல் இப்படித்தான் ஆரம்பமாச்சு. 2011 காலகட்டத்துல மதுரையில மிக முக்கியமான விவகாரமாகப் பார்க்கப்பட்டதுதான் கிரானைட் பிரச்னை. கல்குவாரிகள் கிரானைட்டுக்காக அரிட்டாபட்டி மலைகளை சில்லு சில்லா வெட்டி எடுக்குறதா இருந்ததை எதிர்த்து அரசுக்கும் கலெக்டருக்கும் மனு குடுத்தோம். அதன் தொடர்ச்சியா உயர்நீதி மன்றத்துல தடை வாங்கினோம். அதுதான் எங்களுக்கான முதல் படி, இப்போ பதினொரு வருஷமா இயங்கிட்டிருக்கோம்.

முழுநேரமாகப் பயணிக்கிறீர்களா?

அரிட்டாபட்டி மலையை வெட்டி எடுக்குறதுக்கு முப்பது வருஷ அக்ரிமென்ட் போட்டுருக்காங்க. நம்ம மலைய நம்ம விட்டுறக்கூடாது என்பதற்காகவே முழு நேரமா இயங்கிட்டிருக்கோம். அதுபோக கராத்தே சிலம்பம் ஒயிலாட்டம் கும்மிப்பாட்டு என இந்த மண்சார்ந்த வேலைகளை எனக்கான வருமானத்துக்காகச் சொல்லிக் கொடுத்துட்டிருக்கேன்.

ஏழு மலைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அரிட்டாபட்டி பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு இயக்கம்
ஏழு மலைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அரிட்டாபட்டி பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு இயக்கம்

கிரானைட் எதிர்ப்பை எப்படிக் கையாண்டீர்கள்?

ஊரே சேர்ந்துதான் அந்தப் போராட்டத்த முன்னெடுத்தோம். ஆனாலும் வெளில முன்னிறுத்திப் பேசுவதற்கு யாரும் தயாரா இல்லாதப்போ நான்தான் வெளில் வந்து பேச ஆரம்பிச்சேன். ஆரம்பக்காலத்துல நிறைய மிரட்டல்கள், அரசியல் அழுத்தங்கள் என அந்தக் காலகட்டத்துல என்மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்துச்சு. நம்ம ஒத்த உசுரு போனா என்ன போயிட்டுப்போகட்டுங்கறேன். இந்த மலைய காப்பாத்தணும்னுதான் இதுக்கு எதிரா களமிறங்கினேன்.

இன்னும் சொல்லணும்னா, என் மனைவி வீட்டுல என்னைய கொலை பண்ணிருவோம்னு சொல்லி மிரட்டினாங்க. அதுக்கு அவங்க பயந்து என் குடும்ப வாழ்க்கை விவகாரத்து வரைக்குமே போயிருக்கு. இந்த மண்ணுல கட்டபொம்மனுக்கும் வரலாறு இருக்கு, எட்டப்பனுக்கும் வரலாறு இருக்குல்ல, நம்ம வரலாறு நம்ம இயற்கைக்காகத் தொடர்ந்து இயங்கினாலே போதும்னு மனசு சொல்லுது. அதுபடியே வாழ்ந்துட்டுப் போயிருவோம். நாம எடுத்த முயற்சிகளோட பலனா இப்போ பல்லுயிர்ச் சூழ்நிலை மண்டலமாக அரிட்டாபட்டியை அறிவிக்க இருக்கிறது இந்த அரசு. இதுவே கொஞ்சம் ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருக்கு.

வேறு என்னென்ன வேலை செய்யறீங்க?

இருபது வருடங்களுக்கு முன்பு காகம், மைனா மாதிரி மிகவும் பரவலாகக் காணப்பட்ட பறவை வகைகள்தான் லகடு வல்லூறு என்கிற பறவைகள். இந்த இனம் கிட்டத்தட்ட அழிஞ்சே போச்சு, இப்போ மிச்சம் இருக்கிறது ராஜஸ்தான்லயும் அரிட்டாபட்டி மலைகளிலும்தான்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பறவை காணுதலுக்காக, பறவை ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள்னு வருவாங்க. அவுங்களுக்கு வரலாற்றுச் சான்றுகளோடு இந்த மலைகளைச் சுத்திக் காட்டுவோம், இந்த மலைகள்ல மட்டுமே இருபது வகையிலான கழுகுகளை நீங்க பார்க்கலாம். அதுபோக மான், கழுதைகள்னு நிறைய இருக்கு.

இதுபோக இங்க நீர்நிலைகளை மீட்டெடுத்திருக்கிறோம். நாட்டு மீன் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு இருக்கோம். முழுக்க முழுக்க ஊர் மக்களோட பங்கெடுப்புலதான் இயங்கிட்டு இருக்கோம். 2018-ல டங்க்ஸ்டன் இழை எடுக்குறதுக்காக அரிட்டாபட்டி மலையில டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னப்போ ஒட்டுமொத்த ஊருமே திரண்டு நின்னு அதைத் தடுத்து நிப்பாட்டினோம்.

ஒண்ணே ஒண்ணுதான், இன்னைக்கு நாம பார்க்குற மலைகள் இரண்டாயிரம் மூவாயிரம் வருஷத்துக்கு அப்புறமும் நமக்கு சாட்சியா நிக்குது, நம்மளோட ஆயுள்னு பார்த்தா இந்த இயற்கை வளங்களுக்கு முன்ன வெறும் தூசுதான். தனக்கும் தன் சந்ததிக்கும் ஆபத்த ஏற்படுத்தப்போறோம்னு தெரியாமலேயே மனுஷந்தான் இந்த இயற்கைய சுரண்ட ஆசைப்படுறான், எவ்ளோ பெரிய நகைமுரண் இது? நம்ம வாழ்க்கை இயற்கையோடு சேர்ந்து பயணிக்கிறதா இருக்கணும். இயற்கையை அழிச்சிட்டு மனுஷனால நிம்மதியான வாழ்க்கை வாழவே முடியாது. அதனால எனக்கு அப்பறமும் இயங்குவதற்காக மண்ணை நேசிக்கிற எல்லா மாணவர்களுக்கும் இதைக் கடத்திட்டிருக்கேன்.