புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் புத்தாக்க திட்டம் மூலம் மதுரை மண்டல புத்தாக்க மையம் இன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகும் வகையில் வட்டார புத்தாக்க மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியும் அரசு வழங்குகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த அடிப்படையில் மதுரை வட்டார ஸ்டார்ட் அப் புத்தாக்க மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் வணிகவரி மற்றும் பாத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ் சேகர்,மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், மேயர் இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ''அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த திட்டங்களைத் தி.மு.க அரசு மறைக்கப் பார்க்கிறது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளாரே" என்று செய்தியாளர்கள் கேட்டனர். "ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து பேசுவதற்கு நேரம் போதாது; மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடைபெறுகிறது" என்று பதில் அளித்தார்.

ஸ்டார்ட் அப் புத்தாக்க மையம் அமைக்கப்படுவது குறித்து பேசும்போது, "பெரிய முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முன்வந்தாலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிக முக்கியமானது.
தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளை சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது. புதிய யுக்தியுடன் ரூ.2 லட்ச இருந்தால் தொழில் தொடங்கலாம். ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தில் சமூக நீதி காக்கப்பட்டு வருகிறது. அனைத்துத் தரப்பினருக்கும் தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்டார்ட் ஆஃப் தமிழ்நாடு திட்டத்தால் இரு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான புதிய சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் உருவாகும்" என்றார்.