Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 13 | கிழக்கிந்திய கம்பெனியின் இரும்புக்கரம்!

தூங்காநகர நினைவுகள் | கிழக்கிந்திய கம்பெனி
News
தூங்காநகர நினைவுகள் | கிழக்கிந்திய கம்பெனி

தமிழகத்தில் 16-ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி கால் பதித்தது. இன்றைய சென்னை நகரத்தில், புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். சென்னையிலும் வர்த்தகத்தில் தொடங்கி மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கினார்கள்.

Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 13 | கிழக்கிந்திய கம்பெனியின் இரும்புக்கரம்!

தமிழகத்தில் 16-ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி கால் பதித்தது. இன்றைய சென்னை நகரத்தில், புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். சென்னையிலும் வர்த்தகத்தில் தொடங்கி மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கினார்கள்.

தூங்காநகர நினைவுகள் | கிழக்கிந்திய கம்பெனி
News
தூங்காநகர நினைவுகள் | கிழக்கிந்திய கம்பெனி
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1600-ல் ஒரு வணிக நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மெல்ல மெல்ல உலக வணிகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் விதமாகப் பரிணமித்தது. பருத்தி, பட்டு, சாயம், உப்பு, வெடி உப்பு, தேயிலை, அபினி ஆகிய பொருள்களை உலகம் முழுவதும் வணிகம் செய்த இந்த நிறுவனம் உலக வர்த்தகத்தில் பாதியைத் தன்வசப்படுத்தும் அளவிற்குத் துரித வேகத்தில் வளர்ந்தது.

முதலாம் எலிசபெத் மகாராணி இந்த நிறுவனத்திற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் வழங்கினார். இந்தப் பட்டயத்தின் படி கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுக்காலத் தனியுரிமை இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட போதும், இந்த நிறுவனம்தான் பின்னாள்களில் இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு அமைய அடித்தளத்தை வகுத்துக் கொடுத்தது.

1608-ல் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்கள் இந்தியாவின் சூரத்தை வந்தடைந்து அங்கே தங்களை நிலைநிறுத்திக் கொண்டு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள், கோரமண்டல் கரை தொடங்கி வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் மசிலிப்பட்டினம் வரை தன் கரங்களை விரிவுபடுத்தியது. மசிலிப்பட்டினத்தில் முக்கியப் புறக்காவல் தளம் ஒன்றையும் அமைத்துக்கொண்டனர்.

ஜஹாங்கீரிடம் அனுமதி பெறும் கிழக்கிந்திய வணிகர்கள்
ஜஹாங்கீரிடம் அனுமதி பெறும் கிழக்கிந்திய வணிகர்கள்

இந்நிறுவனம் வணிகத்தில் பெரும் அளவு லாபம் ஈட்டத் தொடங்கியது. 1609-ல் முதலாவது ஜேம்ஸ் மன்னன், நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட வணிக உரிமையைக் கால வரையறையின்றி நீட்டித்தார். இருப்பினும் இந்த நிறுவனம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் லாபம் ஈட்டாவிட்டால், அந்த உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் விதிமுறைகளில் இருந்தது.

ஜஹாங்கீர் கிழக்கிந்திய நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிறுவனமும் மற்றும் அனைத்து இங்கிலாந்து வணிகர்களும் துணைக் கண்டத்தின் ஒவ்வொரு துறைமுகத்திலும், உரிமை கொள்ளவும் நிலங்களை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வணிகத்தில் முன்னுரிமை, சுங்க வரிகளைக் கட்டுவதில் இருந்து முகலாய அரசுகளிடம் விலக்குகள் பெறுவது, குறுநில மன்னர்களை தங்கள் வசப்படுத்துவது எனக் கிழக்கிந்திய கம்பெனி தங்களின் பிடியை மெல்ல மெல்ல வலுவாக்கியது. 1686-ல் 19 போர்க்கப்பல்கள், 200 பீரங்கிகள் மற்றும் 600 வீரர்கள் அடங்கிய ஒரு கடற்படைக் கப்பல் லண்டனில் இருந்து வங்காளத்தை நோக்கிப் பயணித்தது. இந்திய அரசர்களுக்குள் மோதல் ஏற்பட்டால், கிழக்கிந்திய கம்பெனி தனது ராணுவத்தை உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு வாடகைக்கு வழங்கியது. இப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி தொடர்ந்து தனது ஆளுமையை விரிவுபடுத்தியது.

ராபர்ட் கிளைவ்
ராபர்ட் கிளைவ்

1757-ல் பிளாசி போரில் ராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றிக்குப் பிறகு, கிழக்கிந்திய கம்பெனி ஒரு வணிக நிறுவனமாக மட்டும் இல்லாமல் முழுமையான இராணுவ வலிமை கொண்டதாக உருமாறியது. அடுத்து பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, போர்த்துக்கீசிய கிழக்கிந்திய கம்பெனி, ஒல்லாந்தர்களின் கிழக்கிந்திய கம்பெனி என இங்கிருந்து ஏனைய வணிக நிறுவனங்களுடனான போட்டி இன்னும் பல போர்களை நோக்கிக் கொண்டு சென்றது.

பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் பாதைகளை எல்லாம் தன்வசப்படுத்துவதில் கிழக்கிந்திய நிறுவனம் முனைப்புக் காட்டியது. இதனையடுத்து தென்னாப்பிரிக்காவின் டேபிள் மலைப் பகுதி, சென் ஹெலனா பகுதிகளை ஆக்கிரமித்தார்கள். ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவற்றையும் நிறுவினார்கள். வணிகக் கப்பல்களைக் கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கப் பல வழிமுறைகளை வகுத்தார்கள்.

திப்பு சுல்தானின் படைகள்
திப்பு சுல்தானின் படைகள்

தமிழகத்தில் 16-ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி கால் பதித்தது. இன்றைய சென்னை நகரத்தில், புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். சென்னையிலும் வர்த்தகத்தில் தொடங்கி மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கினார்கள். 1684-ம் ஆண்டு தென்னிந்தியாவில் உள்ள கம்பெனி பிரதேசங்கள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில், நடைபெற்ற கர்நாடகப் போர்களால், ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. ஆற்காடு நவாப் மற்றும், பிரெஞ்சுப் படைகளை வென்றதால், அவர்களின் ஆதிக்கத்திலிருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தானை வீழ்த்தியதன் மூலம் மேற்கிலும், மதுரையின் சுல்தான் கான் சாகிப் மற்றும் கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலிய பாளையக்காரர்களை வென்றதும் சென்னை மாகாணத்தில் கம்பெனி ஆட்சி வலுப்பெற்றது.

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் ஏன் இந்தியாவில் விற்கப்படவில்லை என்ற விவாதம் கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்கள் மத்தியில் வந்தது. இந்திய உடைகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை என்பதை அறிந்துகொண்டவுடன் இந்திய உற்பத்திகள் அனைத்தையும் தடை செய்து, இந்தியர்கள் விவசாயத்தில் ஈடுபடவும், பிரிட்டனின் தயாரிப்புகளை வாங்கும் சந்தையாக இந்தியாவை மாற்றிவிடவும் அவர்கள் துரிதமாகத் திட்டங்கள் தீட்டினார்கள்.

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை இந்தியாவெங்கும் விற்பனைக்கு ஏற்பாடு செய்தார்கள். இதனால் 1815-ல் 2.5 மில்லியன் பவுண்டுகளாக இருந்த பிரிட்டனின் ஏற்றுமதி 1822-ல் 48 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது. இந்திய நெசவாளர்களின் எலும்புகளால் இந்தியாவின் நிலமே வெண்மையானது என்று பிரிட்டனில் ஒரு பொருளாதார அறிக்கை குறிப்பிட்டது.

முகலாய காலத்தில் 40 சதவிகிதமாக இருந்த விவசாய வரி, கம்பெனி ஆட்சியில் 66 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. உப்பின் மீது கடுமையான வரி விதிக்கப்பட்டது. இதனால் உப்பு நுகர்வு வெகுவாகக் குறைந்தது. உப்பை மிகவும் குறைவாக உட்கொண்டதால் ஏழைகளின் ஆரோக்கியத்தை அது கடுமையாக பாதித்தது. காலரா மற்றும் வெப்பப் பக்கவாதம் காரணமாக ஏராளமான இந்தியர்கள் உயிரிழந்தனர்.

வங்காளப் போர்கள்
வங்காளப் போர்கள்

கிழக்கிந்திய கம்பெனி சாலைகளை, பாலங்களை இந்தியாவெங்கும் கட்டியது. இந்தியாவில் ரயில்களை, தபால்துறையை அறிமுகப்படுத்தியது. ரயில்களின் மூலம் பொதுமக்களுக்கு முதல் முறை ஒரு பொதுப் போக்குவரத்து வசதி கிடைத்த போதும் அதன் உண்மையான நோக்கம் பருத்தி, பட்டு, அபின், சர்க்கரை மற்றும் மசாலா (spices) வர்த்தகத்தை மேம்படுத்துவதாகவும், இந்திய வனங்களை அழித்து பிரிட்டனில் தரமான ரயில் தண்டவாளங்களை அமைக்க மரங்களை துறைமுகங்கள் நோக்கி அனுப்புவதாகவும் இருந்தது.

1740-களின் கர்நாடகப் போர் தொடங்கி, 1803-ம் ஆண்டின் ஆங்கில – மராத்தா போர் என 60 ஆண்டுக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி தன்னை எதிர்த்த இந்தியப் பேரரசுகள் அனைத்தையும் வீழ்த்தி தில்லியைக் கைப்பற்றியது. புதிய இராணுவத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தை இணையற்றதாக மாற்றியது. 1781-ல் ஜார்ஜ் புரோக்டர் (George Procter) மதுரையின் கலெக்டராக வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றார்.

1806-ல் வேலூர்ப் புரட்சி பிரித்தானியர்களுக்கு எதிரான முக்கிய எழுச்சியாகவே பார்க்கப்பட்டது. டல்ஹெளசியின் நாடு இணைக்கும் கொள்கை, வெல்லெஸியின் துணைப்படைத் திட்டம், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியான பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கில மொழியைப் புகுத்தியது, பெண்டிங் பிரபு கொண்டு வந்த வங்காள நிலக்குத்தகை சட்டம், கானிங் கொண்டு வந்த பொது ராணுவப் பணியாளர் சட்டம், ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய என்ஃபீல்டூ ரக துப்பாக்கிகளுக்கான கொழுப்பு தடவிய தோட்டாக்கள் எனப் பல்வேறு காரணங்கள் ஒன்றிணைந்து 1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போர் பெரும் எழுச்சியுடன் நடைபெற்று லண்டனுக்கு இந்தியச் செய்தியைப் பதிவு செய்தது.

அதே வேளையில் உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு, பெண்சிசுக் கொலை தடுப்பு, விதவைகள் மறுமணம் சட்டமாக்கப்பட்டது என்கிற சீர்த்திருத்தங்களை பிரித்தானியர்கள் கொண்டு வந்த போது இவையெல்லாம் உள்ளூர் சடங்குகள் கலாச்சாரங்களில் தலையிடுதல் என்று இங்குள்ள மேட்டிமை இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகர்கள்
கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகர்கள்
1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்று முடிந்ததும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட ஏகபோக வர்த்தக உரிமையைப் பறித்தது. இத்துடன் பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது.

18-ம் நூற்றாண்டின் இந்தியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெயின் மற்றும் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள், வங்கியாளர்களின் ஆதரவைக் கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருந்தது. 1718-க்கும் 1730-க்கும் இடைப்பட்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி இவர்களிடமிருந்து ஆண்டுக்கு சராசரியாக ரூ.4 லட்சம் கடனாகப் பெற்றது. இந்திய வர்த்தகர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி இயற்கையான கூட்டாளிகளாகத் துணையாக இருந்தது. இந்திய மேட்டிமைச் சமூகத்தின் ஆதரவும் நம்பிக்கையும் இல்லாமல் பிரித்தானியர்கள் இவ்வளவு காலம் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்திருக்க முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் எப்படி ஒரு மிகப்பெரும் பொருளாதாரச் சுரண்டலை கிழக்கிந்திய கம்பெனியும் அதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசும் நிகழ்த்தியது என்பதை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகையில் உணர முடிகிறது.

கிழக்கிந்திய கம்பெனியின் லண்டன் தலைமை அலுவலகம்
கிழக்கிந்திய கம்பெனியின் லண்டன் தலைமை அலுவலகம்
Bernie C. Staggers

ஆனால் இன்றும் அதே நிறுவனங்கள் இந்திய வளங்களை நான்கு வழிச்சாலைகள் மூலமும் கட்டுப்பாடுகளற்ற தனியார் துறைமுகங்கள் மூலமும் தடையின்றிக் கொண்டு செல்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். இந்தியாவை அத்தகைய ஒரு சந்தையாகவே மாற்ற உலகமயம் முயல்கிறது, ஒவ்வொரு ஆண்டும் வெற்றி கொள்கிறது என்பதை மறந்திட வேண்டாம். இன்றும் நம் மண்ணில் உலக கார்ப்பரேட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில் வளாகங்களை அமைத்துக் கொண்டுள்ளது. நம் அரசுகள் அதனைச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிறது, இவையும் இன்றைய நவீன காலனிகள்தானே!

நன்றி:

A History of India - Burton Stein

The Anarchy : The East India Company, Corporate Violence, and the Pillage of an Empire - William Dalrymple