அலசல்
Published:Updated:

மத்திய அரசுக்கு 2... மாநில அரசுக்கு 3 - டோல்கேட்டுகள் சூழ்ந்த மதுரை!

டோல்கேட்
பிரீமியம் ஸ்டோரி
News
டோல்கேட்

ஏற்கெனவே இந்தப் பகுதியில் சிறு குறு தொழிற்சாலைகள் வைத்திருக்கும் பலரும் இந்த டோல்கேட் பிரச்னைகளாலேயே, வேறு மாவட்டங்களுக்குச் செல்கிறார்கள்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்குச் செல்லும் வாகனங்கள், மதுரை மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வரும் கப்பலூர், மேலூர் சிட்டம்பட்டி டோல்கேட்டுகளில் பணம் செலுத்தித்தான் செல்ல வேண்டும். இந்த நிலையில், மேற்கண்ட இரண்டு டோல்கேட்டுகளுக்கும் இடையேயான 32 கிலோமீட்டர் தூரத்தை இணைக்கும் சுற்றுச்சாலையைத் தற்போது நான்குவழிச் சாலையாக மாற்றியிருக்கிறது தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக்கழகம். அதில், மூன்று டோல்கேட்டுகளை அமைத்து வசூல் செய்யும் உரிமையைத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

மத்திய அரசுக்கு 2... மாநில அரசுக்கு 3 - டோல்கேட்டுகள் சூழ்ந்த மதுரை!

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு, ‘‘கப்பலூர் முதல் உத்தங்குடி வரையில் நான்கு வழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெறும்போதே,மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய மூன்று இடங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோல்கேட்டுகளை அமைத்து வசூல் செய்யப்பட்டது. விதிகளை மீறி இந்த மூன்று டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டதை எதிர்த்து, வாகன உரிமையாளர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்து, 2019-ல் நீதிமன்றத்தில் தடையும் பெற்றனர். இந்த நிலையில், நான்கு வழிச் சாலை அமைத்ததும் ‘அனைத்து விதிமீறல்களும் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும்’, `சாலை அமைத்ததற்கான நிதியை வசூலிக்க மீண்டும் டோல்கேட் இயங்க வேண்டும்’ எனவும் நீதிமன்றத் தடையைத் திரும்பப்பெற்றிருக்கிறது ஒப்பந்த நிறுவனம். இது நியாயமில்லாதது’’ என்றார் கொதிப்புடன்.

மத்திய அரசுக்கு 2... மாநில அரசுக்கு 3 - டோல்கேட்டுகள் சூழ்ந்த மதுரை!

கப்பலூர் டோல்கேட்டை அகற்ற, தொடர்ந்து போராடிவரும் சிறுதொழில் சங்கத் தலைவர் ரகுநாதராஜா, ‘‘ஏற்கெனவே இந்தப் பகுதியில் சிறு குறு தொழிற்சாலைகள் வைத்திருக்கும் பலரும் இந்த டோல்கேட் பிரச்னைகளாலேயே, வேறு மாவட்டங்களுக்குச் செல்கிறார்கள். இதனால் மதுரை மாவட்டத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவருகிறது. இந்த நிலையில், மீண்டும் டோல்கேட்களை இயங்க அனுமதித்திருப்பது உள்ளூர் மக்களை மேலும் பாதிக்கவே செய்யும்’’ என்றார்.

அனீஸ் சேகர் - செய்யது பாபு
அனீஸ் சேகர் - செய்யது பாபு

மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரிடம் இந்தப் பிரச்னை குறித்து விளக்கம் கேட்டபோது, ‘‘விசாரித்து, பிறகு பேசுகிறேன்’’ என்றார். சு.வெங்கடேசன் எம்.பி-யிடம் கேட்டபோது, ‘‘நடவடிக்கை எடுக்க மாவட்ட அதிகாரிகளிடம் பேசுகிறேன்’’ என்றார்.

இது என்னடா... மதுரைக்கு வந்த சோதனை!