
மக்களுக்கு அனுமதியில்லை... தனிநபர் பிடியில் ரூ.600 கோடி சொத்து...
மதுரை நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, ரயில் நிலையம் அருகேயுள்ள விக்டோரியா எட்வர்டு மன்றம். இதைச் சுற்றி பல ஆண்டுகளாகவே சர்ச்சைகள் வெடித்துவருகின்றன. இந்தநிலையில்தான், ‘சுமார் 600 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள விக்டோரியா எட்வர்டு மன்றத்தைத் தனிநபரிடமிருந்து மீட்க வேண்டும்’ என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து, தனி அதிகாரியை நியமிக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தும், அரசு தரப்பில் தாமதித்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மதுரை ரயில் நிலையம் - பெரியார் பேருந்து நிலையத்துக்கு நடுவில், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 1907-ல் இரண்டு ஏக்கர் பரப்பளவில் விக்டோரியா எட்வர்டு மன்றம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் மதுரை கலெக்டர் உள்ளிட்ட முக்கிய நபர்களை நிர்வாகிகளாக நியமித்து, சங்கமாகப் பதிவுசெய்து டவுன் ஹால், நூலகம், அருங்காட்சி யகம், விளையாட்டுத்திடலுடன் இந்த மன்றம் செயல்பட்டது. பின்னாள்களில் டவுன் ஹால் கட்டடம் ‘தங்க ரீகல்’ திரையரங்கமாக மாறியது. தற்போது மன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள கடைகள் மூலம் கணிசமான வருவாய் கிடைத்துவருகிறது.

முன்பெல்லாம் மன்ற வளாகத்தில் கலை இலக்கியக் கூட்டங்கள், தனியார் நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை நேரங்களில் கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் வருகை தருவார்கள். இப்படி அறிவுக்கூடமாகச் செயல்பட்ட விக்டோரியா எட்வர்டு மன்றம்தான், சில ஆண்டுகளாக அடிதடி மன்றமாக மாறியிருக்கிறது. ‘‘வக்பு வாரியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இஸ்மாயில் கட்டுப்பாட்டிலுள்ள இந்த மன்றத்தை மீட்க வேண்டும்’’ என்று விக்டோரியா எட்வர்டு மன்ற மீட்பு இயக்கத்தினரும், நாம் தமிழர் கட்சி யினரும் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
எட்வர்டு மன்ற நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகள் பற்றி நம்மிடம் கொதிப்புடன் பேசினார் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன். ‘‘பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 1907-ம் ஆண்டில் அமைக்கப்பட்டு, சங்கமாகப் பதிவுசெய்யப்பட்ட இந்த மன்றத்தை, முக்கியப் பிரமுகர்கள் நல்லபடியாக நிர்வாகம் செய்துவந்தார்கள். 1998-ல் கௌரவச் செயலாளராகப் பொறுப்புக்கு வந்த இஸ்மாயில், முழு நிர்வாகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, பல்வேறு குளறுபடிகளைச் செய்துவருகிறார்.
மன்றத்திலுள்ள நூலகம், அருங்காட்சியம் ஆகியவற்றுக்குள் மக்களை அனுமதிப்பதில்லை. நூலகத்தைத் தனது ஓய்வு இல்லமாகப் பயன்படுத்துகிறார். இஸ்மாயிலின் மகனுக்கும் மன்றத்தில் தனி அலுவலகம் உள்ளது. வரவு செலவு கணக்குகளை யாரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்கும் நிர்வாகிகளை நீக்கிவிடு கிறார்கள். கேள்வி கேட்பவர்கள் அடியாட்கள் மூலம் மிரட்டப்படுகிறார்கள். ‘மன்றத்தின் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரை 50 உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும்; 50 உறுப்பினர்கள் வழிமொழிய வேண்டும்’ என்று புதிய விதியை உருவாக்கினார். யாரும் தன்னை எதிர்த்து போட்டியிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

இது பற்றியெல்லாம் எட்வர்டு மன்ற மீட்பு இயக்கத்தினர் அதிகாரிகளுக்குப் புகார் மனுக்கள் அனுப்பத் தொடங்கியதும், வரவு, செலவு அறிக்கை ஒன்றை இஸ்மாயில் வெளியிட்டார். அதில் நூலகத்துக்கு 3 லட்சம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியதாகவும், அவற்றுக்கு அட்டை போட 5 லட்சம் ரூபாய் செலவானதாகவும் கணக்கு எழுதியிருந்தார். புத்தகமே வாங்காமல், அவற்றுக்கு அட்டை வேறு போட்டதாகவும் ஊழல் செய்திருக்கிறார். மன்ற வளாகத்திலுள்ள 27 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு அவற்றிலிருந்து பெருமளவு வருமானம் வருகிறது. ஆனால், அதில் பாதியளவுதான் கணக்கில் காட்டப்படுகிறது. தங்க ரீகல் தியேட்டரை வெறும் 30,000 ரூபாய் மாத வாடகைக்கு விட்டிருப்பதாகக் கணக்கு எழுதியிருக்கிறார்.
பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்கள் எதையுமே நடத்து வதில்லை. ஆண்டுதோறும் புதுப்பிக்கவேண்டிய சங்கத்தின் பதிவைக்கூட புதுப்பிப்பதில்லை. இது பற்றி கலெக்டர் தொடங்கி முதலமைச்சர், ஆளுநர் வரை புகார் அனுப்பினோம். அந்தப் புகார் மனுக்கள், மதுரை மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பப்பட்டு விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பதிவாளர் விசாரித்து, கடந்த ஏப்ரல் 24-ம் தேதியன்று, ‘புகார் உண்மைதான். இந்த அமைப்பைக் கலைத்துவிட்டு தனி அதிகாரியை நியமிக்கலாம்’ என்று பரிந்துரைத்து, கலெக்டருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். கலெக்டரும் கடந்த மே மாதம் அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். ஆனால், இதுவரை தனி அதிகாரி நியமிக்கப்படவில்லை” என்றார் விளக்கமாக.
எட்வர்டு மன்ற மீட்பு இயக்கச் செயலாளரான முத்துக்குமார், ‘‘கணக்கு கேட்டதற்காக சங்கத்தின் மூத்த நிர்வாகிகளான நவமணி, ஜெயராமன் உள்ளிட்டவர்களை இஸ்மாயில் நீக்கிவிட்டார். அவ்வளவு பெரிய தங்க ரீகல் தியேட்டருக்கு 30,000 ரூபாய் மட்டுமே வாடகை வாங்குபவர், என்னைப் பழிவாங்குவதற்காக மன்ற வளாகத்தில் நான் வைத்திருக்கும் எட்டுக்கு பத்து அளவுள்ள கடையின் வாடகையை 50,000 ரூபாயாக உயர்த்திவிட்டார். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். கடந்த ஆட்சியில் அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்து, தன்மீது நடவடிக்கை வராதபடி பார்த்துக்கொண்டார். தற்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கடந்த 2019-ம் ஆண்டிலேயே இஸ்மாயில் மீது புகார் தெரிவித்து கலெக்டருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்’’ என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்மாயிலிடம் பேசினோம். ‘‘மன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டவர்களை 2018-ம் ஆண்டில் பொதுக்குழு ஒப்புதலின்படி நீக்கினோம். அதனால், சிலர் `மீட்பு இயக்கம்’ என்று நடத்திக்கொண்டு எனக்கு எதிராகப் பொய்ப் புகார்களை அனுப்பினார்கள். அதன் அடிப்படையில், 2018-ம் ஆண்டு, ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வுசெய்த மதுரை மாவட்ட பதிவாளர், ‘இஸ்மாயில் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்’ என்று சொல்லி புகார் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டார். எதிர்ப்பாளர்கள் செய்த மேல்முறையீட்டையும், உதவி பதிவுத்துறைத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டார். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
தற்போது உயரதிகாரி ஒருவரின் அழுத்தத்தால், ‘தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்’ என்று அதே மாவட்டப் பதிவாளர் பரிந்துரை செய்திருக்கிறார். சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிர்வாகத்தையும், சொத்துகளையும் கைப்பற்ற, திட்டமிட்டு இப்படிச் செய்கிறார்கள். நான் உருவாக்கிய துணை விதிகள், அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘மன்றப் பதிவை புதுப்பிக்கவில்லை’ என்று சொல்வதும் பொய். 2018 வரை புதுப்பித்துள்ளேன். 2019 வரை ஜி.எஸ்.டி செலுத்தியுள்ளேன். 2020 வரை அனைத்து ரசீதுகளும் உள்ளன. நூல்கள் வாங்கச் செலவு செய்தது உண்மை. தங்க ரீகல் தியேட்டர், நீண்ட நாள் குத்தகை என்பதால் 30,000 ரூபாய் வாடகை வாங்குகிறோம். அவர்கள் மன்றத்துக்குப் பல உதவிகளைச் செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக விக்டோரியா எட்வர்டு மன்ற வளாகம் 1912-ல் ஜில்லா போர்டிடமிருந்து 7,000 ரூபாய்க்கு கிரையம் வாங்கப்பட்ட சொத்து. இது அரசுக்குச் சொந்தமானதோ அல்லது பொதுச் சொத்தோ அல்ல. அதேபோல அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் என்மீது புகார் தெரிவித்திருப்பதாகக் கூறுவதும் பொய்’’ என்றவரிடம், ‘‘புகார் கடித நகல் நம்மிடம் இருக்கிறது’’ என்று சொன்னவுடன், ‘‘அனைத்துச் சங்கங்களிலும்தான் பிரச்னை இருக்கிறது’’ என்று மழுப்பினார்.

பதிவுத்துறை துணைத் தலைவர் ஜெகதீசனிடம் பேசினோம். ‘‘விக்டோரியா மன்றம் பற்றி பதிவுத்துறையின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். அரசாணை வெளியிட்ட பிறகு, நடவடிக்கை எடுக்கப்படும். இதில் வேறு பிரச்னைகள் இருந்தால், கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்’’ என்றார். மதுரை கலெக்டர் அனீஷ் சேகரிடம் பேசியபோது, ‘‘மாவட்டப் பதிவாளரின் பரிந்துரையை அரசின் நடவடிக்கைக்கு அனுப்பியிருக்கிறோம். எதிர்த்தரப்பிலும் விசாரணை நடத்துவோம். தனி அதிகாரி நியமிப்பது சம்பந்தமாக அரசு விரைவில் முடிவெடுக்கும்’’ என்றார்.
நூற்றாண்டு கண்ட விக்டோரியா எட்வர்டு மன்றம், தனி நபர்களிடமிருந்து விடுபட்டு, பழையபடி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே மதுரை மக்களின் விருப்பம்!