
ராம்கி, மகாபெரியவராகவே மாறியிருந்தார். கோபம், கருணை, நகைச்சுவை ஆகியவை அவர் முகத்தில் மிக இயல்பாக வெளிப்பட்டன.
காஞ்சி மகான் மகா பெரியவர்... 19-ம் நூற்றாண்டு மனித குலத்துக்குத் தந்த ஆன்மிகப் பொக்கிஷம். அவர் வாழ்க்கை குறித்த பல்வேறு பதிவுகள் நூல்களாக, ஓவியங்களாக, சொற்பொழிவுகளாக வந்துள்ளன. மகாபெரியவர் வாழ்க்கை வரலாற்று நாடகங்களும் அவற்றில் அடக்கம். அந்த வரிசையில் முக்கியமான நாடகம் ஒன்றை இயக்கியிருக்கிறார் ராம்கி.
ஐ.டி. துறையில் பணியாற்றி வரும் ராம்கி நாடகத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் 2016 - ம் ஆண்டு, ‘மகாபெரியவா' என்னும் நாடகம் ஒன்றை எழுதி இயக்கி அதில் தானே மகாபெரியவராகவும் நடித்தார். வாழ்க்கை வரலாறாக இல்லாமல் அவருக்கும் அவர் பக்தர்களுக்குமான சுவாரஸ்ய உரையாடல்கள், வழங்கிய அருளுரைகள் என உணர்வுபூர்வமான தருணங்களை இது பேசியது. இது மகாபெரியவரின் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனா காரணமாக இடையில் தடைபட்ட நிலையில் செப்டம்பர் 18-ம் தேதி மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் இது மேடையேற்றப்பட்டது.

நாடகத்தின் தொடக்கக் காட்சியிலேயே மகாபெரியவரிடம் பக்தர் ஒருவர், ‘‘வடநாட்டில் நடக்கிற இந்து முஸ்லிம் மோதல் மனசுக்குக் கவலையைக் கொடுக்குது’’ என்கிறார். அதே காட்சியில் ஒரு இஸ்லாமியப் பெரியவர் தன் மனைவியோடு மகாபெரியவரை வந்து பார்க்கிறார். தன் நிலத்தைத் தோண்டியபோது கிடைத்த புதையுண்டுபோயிருந்த சிவலிங்கம் குறித்த தகவலைச் சொல்லி அங்கே மீண்டும் சிவன்கோயில் எழுப்பத் தன்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன் என்கிறார். முதலில் இந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றிக் கேட்ட பக்தரை அர்த்தபுஷ்டியோடு பார்க்கிறார் மகாபெரியவர். இப்படி நாடகம் முழுவதும் தெறிப்பான வசனங்கள். நெகிழ்ச்சியான தருணங்கள்.
நாடகத்தில் நூற்றுக்கும் அதிகமான கதாபாத்திரங்கள். ஆனால் குழுவில் மொத்தம் பத்துப்பேர். அவர்களே மின்னல்வேகத்தில் வேடம் மாறி நடிக்கிறார்கள். அனைவரும் தங்களின் துள்ளலான நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் இடம்பிடிக்கிறார்கள். குறிப்பாக பிச்சைக்காரராக, அப்பாவி இளைஞனாக, பொய்சாட்சி சொல்பவனாக மூன்று வேடங்கள் ஏற்று நடித்திருக்கும் எஸ்.நாராயணனின் நடிப்பு கைத்தட்டல்களை வாரிச்சென்றது.
ராம்கி, மகாபெரியவராகவே மாறியிருந்தார். கோபம், கருணை, நகைச்சுவை ஆகியவை அவர் முகத்தில் மிக இயல்பாக வெளிப்பட்டன. கடைசிக்காட்சியில் தளர்ந்த நடையோடு அவர் நடந்துவந்த தருணத்தில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கண்ணீர் பெருகக் கைகளைத் தட்டினர். இன்னும் பல நூறு மேடைகளை இந்த நாடகம் காணப்போவதற்கான அச்சாரமாக அந்தக் கைத்தட்டல் இருந்தது.