சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

எலிப்படைக் காவலர்!

எலி
பிரீமியம் ஸ்டோரி
News
எலி

உலகெங்கும் 59 நாடுகளில் சுமார் ஆறு கோடி மக்கள், கண்ணிவெடி அபாயத்துக்கு மத்தியில் வாழ்கிறார்கள்.

எலி ஒன்று தன் பணியிலிருந்து ஓய்வுபெற்றது’ என்ற வரியைப் படிக்கும்போது உங்களுக்கு ஆச்சர்யமும் திகைப்பும் ஒருசேரக் கிளர்ந்தெழும். மகாவா என்ற அந்த எலி செய்த வேலை, நம் உயிர் காப்பது. மகாவாபோலவே பல எலிகள் அந்தப் பணியைச் செய்தன; செய்துவருகின்றன.

சர்வாதிகாரிகளை எதிர்த்தும், விடுதலை வேண்டியும் உலகெங்கும் பல குழுக்கள் ஆயுதம் ஏந்திப் போரிட்டுவருகின்றன. வலுவான படையை எதிர்க்கும் சிறு குழுக்கள், தந்திரங்களையே போர்நெறியாகக் கையாளும். அந்தத் தந்திரங்களில், கண்ணிவெடியை பூமியில் புதைத்து வைப்பதும் உண்டு. எதிரிப் படைகளைச் சிதறடிப்பதற்காக இப்படிப் புதைப்பார்கள். ஆனால், இவை வீரர்களை மட்டுமே கொல்வதில்லை. ஒரு வெடிபொருளுக்குத் தன்மீது கால் வைப்பது போர்வீரரா, அப்பாவியா என்று பிரித்தறியத் தெரியாது. நிறைய பேர் கால்களை இழந்துவிடுவார்கள்; பலருக்கு உயிரே போயிருக்கிறது.

போர் முடிந்தபிறகும், புதைத்தவர்களே இறந்துபோனபிறகும் இந்தக் கண்ணிவெடிகள் நிலமெங்கும் உயிர்ப்புடன், யாரோ ஒருவர் தன்னை மிதிப்பதற்காகக் காத்திருக்கும். நிலத்தில் உழைப்பதற்காக இறங்கும் விவசாயி, கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கூட்டிப் போகும் உழைப்பாளி, நண்பர்களுடன் ஓடியாடி விளையாடும் குழந்தைகள் என யாரோ ஒருவர் இதன் இலக்காகிவிடுகிறார்கள்.

எலிப்படைக் காவலர்!

உலகெங்கும் 59 நாடுகளில் சுமார் ஆறு கோடி மக்கள், கண்ணிவெடி அபாயத்துக்கு மத்தியில் வாழ்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் மூன்றாயிரம் பேரைக் கண்ணிவெடிகள் காவு வாங்குகின்றன. அதைவிட அதிகம் பேர் காயமடைகிறார்கள். உலகிலேயே கண்ணிவெடி ஆபத்து அதிகம் நிறைந்த நாடு கம்போடியா. இங்கு இன்னமும் ஆயிரம் கிலோமீட்டர் சதுரப் பரப்பளவு ஆபத்தான பிரதேசமாக இருக்கிறது. சுமார் 40,000 பேர் கண்ணிவெடிகளால் கால்களை இழந்திருக்கிறார்கள்.

கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைச் சில தொண்டுநிறுவனங்கள் சேவையாகச் செய்துவருகின்றன. வெடிபொருள்களால் சேதமடையாத கவச உடை அணிந்துகொண்டு, மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு நிலத்தை அங்குலம் அங்குலமாக ஆராய வேண்டும். நேரமும் உழைப்பும் அதிகம் தேவைப்படும். இதற்குத்தான் ஒரு புதுமை ஐடியாவைச் செய்திருக்கிறது APOPO என்ற பெல்ஜியம் நாட்டுத் தொண்டு நிறுவனம். விலங்குகளை வைத்துக் கண்ணிவெடிகளைக் கண்டறியும் முயற்சிதான் அது. இதில் ஆபத்தும் செலவும் குறைவு. இதில் African giant pouched rat என்ற வகை எலி நன்கு தேறியது. எட்டு ஆண்டுகள் வரை வாழும் இவை, ஒன்றே கால் கிலோ எடையில் இருக்கும். எடை குறைவாக இருப்பதால், இது மிதித்தாலும் கண்ணிவெடி வெடிப்பதில்லை என்பது கூடுதல் பலன். வெடிகளில் கலந்திருக்கும் ரசாயனங்களுக்கு ஒருவித வாசனை உண்டு. அந்த வாசனையை வைத்தே இவை அவற்றைக் கண்டறிகின்றன.

‘ஹீரோ ரேட்’ எனப்படும் இவற்றுக்கு பிறந்த நான்காவது வாரத்திலிருந்து பயிற்சிகள் ஆரம்பிக்கும். வெடிமருந்து கலந்த உலோகப் பொருள்களை மண்ணில் புதைத்து வைத்து, எலிக்குட்டியை நடமாட விடுவார்கள். அது மோந்துபார்த்து மிகச் சரியாக உலோகத்தை உணர்ந்ததும், அதற்குப் பரிசாக உணவு தரப்படும். ‘நாம் இதைக் கண்டுபிடித்தால் நல்ல உணவு கிடைக்கும்’ என்று அதன் ஆழ்மனதில் உணர்வை ஏற்படுத்துவார்கள். ஒன்பது மாதப் பயிற்சிக்குப் பிறகு ஓர் எலி நன்கு தேறிவிடும்.

அதன்பின் அதைக் களத்தில் இறக்குவார்கள். ஒரு வழிகாட்டி கயிறு கட்டி எலியைப் பிடித்துக்கொள்ள, அது மண்ணில் மோப்பம் பிடித்தபடி முன்னேறும். எங்காவது கண்ணிவெடி இருப்பதை உணர்ந்தால், அங்கு மண்ணைத் தோண்ட ஆரம்பிக்கும். உடனே அந்த இடத்தில் கவனமாகத் தோண்டி, கண்ணிவெடியை எடுத்துச் செயலிழக்கச் செய்வார்கள். இதுவரை சுமார் ஒரு லட்சம் கண்ணிவெடிகளை எலிகள் கண்டுபிடித்துள்ளன.

எலிப்படைக் காவலர்!

இதில் மகாவா ரொம்பவே ஸ்பெஷல். கடந்த ஐந்து ஆண்டுகளாக கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டறியும் பணியைச் செய்துவந்தது இது. வெறும் 20 நிமிடங்களில் ஒரு டென்னிஸ் மைதானம் அளவுக்கான பரப்பை அலசி, வெடிகளைக் கண்டறிந்துவிடும். இதை மனிதர்கள் செய்வதற்கு அதிகபட்சம் நான்கு நாள்கள் ஆகும். மகாவா இதுவரை 71 கண்ணிவெடிகளையும், 38 வெடிபொருள்களையும் கண்டறிந்துள்ளது. இதற்காக மகாவா, தீரச்செயல் புரிந்த விலங்குக்கான பிரிட்டிஷ் விருதை கடந்த ஆண்டு பெற்றது. நாய்களும் குதிரைகளும் மட்டுமே 77 ஆண்டுகளாகப் பெற்றுவந்த இந்த விருதை அடைந்த முதல் எலி, மகாவா.

‘‘மகாவா ரொம்பவே வேகம். சமீபகாலமாக அதன் செயல்பாடு மந்தமாகிவிட்டது. ஓய்வுப் பருவத்தை அடைந்துவிட்டதன் அறிகுறி இது. அதற்கு ஓய்வுக்கால நிம்மதியைத் தர வேண்டும்’’ என்கிறார், மகாவாவுக்குக் கண்ணிவெடிகளைக் கண்டறியும் பணியில் வழிகாட்டியாக இருந்த பெண்மணி மாலென்.

புதிதாக 20 ‘ஹீரோ ரேட்’கள் இந்தப் பணியைச் செய்ய வந்துள்ளன. அவற்றுக்குச் சில நாள்கள் கண்ணிவெடி கண்டறியும் பணியில் பயிற்சி கொடுத்துவிட்டு மகாவா ஓய்வு பெறும்.

‘அற்ப எலி’ என்று இனி சொல்லக்கூடாது!