கட்டுரைகள்
Published:Updated:

மக்களைத் தேடி மருத்துவம்... சர்ச்சையா, சாதனையா?

மக்களைத் தேடி மருத்துவம்.
பிரீமியம் ஸ்டோரி
News
மக்களைத் தேடி மருத்துவம்.

இந்தத் திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. நோயாளிகளை ஒரு முறை பார்த்து மருந்து, மாத்திரை கொடுப்பதோடு போய்விடுகிறார்கள் சுகாதாரத்துறைப் பணியாளர்கள்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கும் வகையில் `மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி எனும் கிராமத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின். திட்டத்தின் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியாக, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், சன்னாசிப்பட்டியிலுள்ள மீனாட்சி என்பவர் கண்டறியப்பட்டு, அவருக்கு மருந்துப் பெட்டகம் கடந்த மாத இறுதியில் வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘‘இந்தத் திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. நோயாளிகளை ஒரு முறை பார்த்து மருந்து, மாத்திரை கொடுப்பதோடு போய்விடுகிறார்கள் சுகாதாரத்துறைப் பணியாளர்கள். அதன் பிறகு, நோயாளிகள் பக்கமே அவர்கள் தலைகாட்டுவதில்லை எனத் தெரியவருகிறது. ஒரு கோடிப் பேருக்கும் மேலானவர்களுக்கு மருந்துப் பெட்டகங்கள் கொடுத்ததாக எந்தவிதமான புள்ளிவிவரக் குறிப்பும் இல்லை எனச் செய்திகள் வந்திருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்தைத்தான், இந்த விடியா அரசு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று மீண்டும் புது ஸ்டிக்கர் ஒட்டிச் செயல்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு இதுவரை எவ்வளவு செலவிடப்பட்டிருக்கிறது என்பதோடு ஒரு கோடிப் பயனாளிகளின் முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மக்களைத் தேடி மருத்துவம்...
சர்ச்சையா, சாதனையா?

அதற்கு பதிலடியாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், ‘‘வயிற்றெரிச்சல் காரணமாக இப்படியான செய்திகளைப் பரப்புகிறார்கள். நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகளைத் தொடர்ச்சியாக அளித்துவருகிறோம். அதற்கான புள்ளிவிவரங்களும் எங்களிடம் இருக்கின்றன. இதில் எடப்பாடிக்குச் சந்தேகமிருந்தால், டி.பி.எச் அலுவலகத்துக்கு வந்து பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்” எனத் தெரிவித்திருக்கிறார். இவர்களின் காரசார விவாதத்தைத் தொடர்ந்து ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படுகிறதா என்கிற சர்ச்சையும் வாதங்களும் உருவாகியிருக்கின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா, ‘‘நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, பெண் தன்னார்வலர்கள் பரிசோதனை செய்கிறார்கள். பிறகு, ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மருந்துகளைப் பெற்று நோயாளிகளிடம் நேரில் வழங்குகிறார்கள். இது கிராமப்புறங்களில் அத்தியாவசியமான திட்டமாக இருக்கிறது. தற்போது சில இடங்களில் மருந்துப் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால்தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மருத்துவக் கட்டமைப்புகளை இன்னும் பலப்படுத்த வேண்டும். மற்றபடி, பெரிய பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.

மக்களைத் தேடி மருத்துவம்...
சர்ச்சையா, சாதனையா?

சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில்குமாரிடம் பேசினோம். ‘‘ஒவ்வோர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலமாகப் பயன்பெறும் நோயாளிகளின் விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் நோயாளிகளுக்கு மருந்து கிடைக்கவில்லை எனப் புகார் ஏதும் வரவில்லை. அவ்வப்போது, சென்னையிலிருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆய்வுக்காகச் சென்றுவருகிறார்கள். அவர்களிடமும் புகார்கள் வரவில்லை. தமிழகத்தில் எந்தவிதமான மருந்துக்கும் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தட்டுப்பாடு இல்லை” என்றார்.

`திட்டத்தில் குளறுபடி’ என்கிறது எதிர்க்கட்சி... `திட்டம் பிரமாதமாகச் செயல்படுகிறது’ என்கிறது ஆளுங்கட்சி. இவர்களுக்கிடையே நடக்கும் அரசியலில், திட்டத்தைச் சொதப்பிவிடாமல் கொண்டுபோனால் சரி!