Published:Updated:

"நாங்கள் மிகச் சிறிய நாடு... இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் திறன் இல்லை!" - மலேசிய பிரதமர் மகாதீர்

மோடியுடன் மலேசிய பிரதமர் மகாதீர்
News
மோடியுடன் மலேசிய பிரதமர் மகாதீர்

இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் திறன் தங்கள் நாட்டுக்கு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

Published:Updated:

"நாங்கள் மிகச் சிறிய நாடு... இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் திறன் இல்லை!" - மலேசிய பிரதமர் மகாதீர்

இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் திறன் தங்கள் நாட்டுக்கு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

மோடியுடன் மலேசிய பிரதமர் மகாதீர்
News
மோடியுடன் மலேசிய பிரதமர் மகாதீர்

"நாங்கள் மிகச்சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாடு மீது நடவடிக்கை எடுக்கும் திறன் எங்களுக்கு இல்லை'' என்று மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக, 'இந்தியாவிலிருந்து இஸ்லாமிய மக்களைப் பிரிக்கும் செயல்' என்று மலேசிய பிரதமர் மகாதீர் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெயின் அளவையும் குறைத்தது. அதோடு, வேறு சில பொருள்களுக்கும் தடை விதிக்க இந்திய அரசு ஆலோசித்து வருகிறது.

பிரதமர் மோடியுடன் மகாதீர்
பிரதமர் மோடியுடன் மகாதீர்

இதற்கிடையே ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் இரு நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர்கள் சந்தித்து இந்த விவகாரத்தை சுமுகமாக முடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று மலேசிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மலேசிய வர்த்தகத்துறை அமைச்சரை சந்திக்கப்போவதில்லை. பியூஸ் கோயலுக்குப் பதிலாக வர்த்தகத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் மலேசிய வர்த்தகத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது.

மலேசியாவிலிருந்து அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. தற்போது, அங்கிருந்து பாமாயில் இறக்குமதியை மத்திய அரசு குறைத்துவிட்டது. இதனால், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மலேசியாவின் பாமாயில் ஏற்றுமதி கடும் சரிவைக் கண்டுள்ளது. மலேசியாவுக்குப் பதிலாக இந்தோனேசியாவிலிருந்து இந்தியா பாமாயிலை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

மலேசிய முருகன் கோயில்
மலேசிய முருகன் கோயில்

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, ''எங்கள் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எங்களிடமிருந்து பாமாயில் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது. நாங்கள் மிகச்சிறிய நாடு. இந்தியா போன்ற நாட்டுக்கு வர்த்தக ரீதியிலான பதிலடியைக் கொடுக்கும் திறன் எங்களுக்கு இல்லை. இந்த விவகாரத்தை எதிர்கொண்டுதான் நாங்கள் மேலே வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

மலேசியா இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் நாடு. இங்கு 20 லட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்கிறார்கள். இதில், பெரும்பாலேனோர் தமிழர்கள். கடந்த 2019-ம் ஆண்டு மலேசிய நாட்டு கணக்கெடுப்பின்படி 1,17,733 இந்தியர்கள் இந்த நாட்டில் பணிபுரிகிறார்கள். இது மலேசிய வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 6 சதவிகிதம் ஆகும்.

2014-ம் ஆண்டு முதல் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4.4 லட்சம் டன் பாமாயில் மலேசியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. மலேசியாவின் மொத்த பாமாயில் உற்பத்தியில் இந்தியாவுக்கு மட்டும் 24 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது. இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. மலேசியாவை இந்தியா புறக்கணிக்கும் பட்சத்தில் இந்தோனேசியாவிடமிருந்தும் தாய்லாந்து நாட்டிடம் இருந்தும் பாமாயிலை அதிகளவில் கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது. உலகிலேயே சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணையை இறக்குமதி செய்வதில் இந்தியாவுக்குத்தான் முதலிடம். இந்தோனேசியா நாடுதான் உலகிலேயே பாமாயில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. மலேசியாவைவிட குறைவான விலையில் இந்தியாவுக்கு பாமாயில் தர அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளது.

பாமாயில்
பாமாயில்

எனவே, படிப்படியாக மலேசியாவிடமிருந்து முற்றிலும் பாமாயில் இறக்குமதியை நிறுத்திவிட்டு, இந்தோனேசியா பக்கம் இந்தியா சாய வாய்ப்புள்ளது. மலேசியா தன் பாமாயில் சந்தையில் 24 சதவிகிதத்தை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் நிலை உருவாகும். எனவே, இத்தகைய சூழலைத் தவிர்க்க மலேசிய அரசு எல்லாவிதத்திலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்ல, மலேசியாவின் அனைத்துப் பொருள்களையும் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 7-வது இடம் வகிக்கிறது. அதே வேளையில், இந்தியப் பொருள்களை வாங்குவதில் மலேசியா 17-வது இடத்தில் உள்ளது. அதனால், இந்தியாவின் மறைமுகப் பொருளாதாரத் தடையை எப்படி எதிர்கொள்ளலாம் என்று மலேசிய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.