Published:Updated:

ஈரோடு: சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை விபத்தில் வாலிபர் பலி - பெரும் விபத்து தவிர்ப்பு!

சரவணன்
News
சரவணன்

தூக்கி வீசப்பட்ட சிலிண்டரின் ஒரு பகுதி தாக்கியதில் தண்ணீர்க் குழாய் மட்டும் உடைந்தது. ஒருவேளை அருகிலிருந்த எரிவாயுக் குழாய் உடைபட்டிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும்.

Published:Updated:

ஈரோடு: சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை விபத்தில் வாலிபர் பலி - பெரும் விபத்து தவிர்ப்பு!

தூக்கி வீசப்பட்ட சிலிண்டரின் ஒரு பகுதி தாக்கியதில் தண்ணீர்க் குழாய் மட்டும் உடைந்தது. ஒருவேளை அருகிலிருந்த எரிவாயுக் குழாய் உடைபட்டிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும்.

சரவணன்
News
சரவணன்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. நாள் ஒன்றுக்கு 300 டன் எரிவாயு நிரப்பப்பட்டு, அந்த சிலிண்டர்கள் கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த ஆலையில் ஷிஃப்ட் அடிப்படையில் 200 ஒப்பந்தத் தொழிலாளர்களும், 50 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றிவருகின்றனர்.

இந்த ஆலையில் எரிவாயு சிலிண்டர்களை நிரப்பும் பணியில் சேலம் மாவட்டம், ஆத்தூர், தம்மம்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் சரவணன் (25) என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரில் எரிவாயு நிரப்பிவிட்டு அதைச் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்களான அருள், ஜெகன், ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையின் முகப்பு
எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையின் முகப்பு

விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத் தரப்பில் கூறுகையில்,
``தினமும் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுசுழற்சி செய்வதற்காக இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பழுது ஏற்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் சரிசெய்யப்பட்டுக் கொண்டுவரப்படுகிறது. அவ்வாறு கொண்டுவரப்பட்ட ஒரு சிலிண்டரில் எரிவாயு நிரப்பும்போது இந்த விபத்து ஏற்பட்டது” என்றனர்.

19 கிலோ சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் பணியில் சரவணன் ஈடுபட்டிருந்தபோது, சிலிண்டரின் கீழ் பக்கம் தனியே கழன்றுவிட, சிலிண்டரின் மேல் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தனியே சிதறி சரவணனின் நெஞ்சில்பட்டு தெறித்துப் போய் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சரவணன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பெருந்துறை சிப்காட்
பெருந்துறை சிப்காட்

விபத்து நடந்த இடத்தின் அருகே எரிவாயுக் குழாயும், தண்ணீர் செல்லும் குழாயும் அருகருகே இருக்கிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிலிண்டரின் ஒரு பகுதி தாக்கியதில் தண்ணீர்க் குழாய் மட்டும் உடைந்து தண்ணீர் வெளியேறியது. ஒருவேளை அருகிலிருந்த எரிவாயுக் குழாய் உடைபட்டிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் எனப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து பெருந்துறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளும் துறை ரீதியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.