
நம்பிக்கைத் தொடர்
பல வருடங்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து மும்பை சென்றிருந்தபோது, நான் படித்த சின்மயா மிஷன் போக ஒரு டாக்ஸி பிடித்தேன். டிரைவர் படு வேகமாக டாக்ஸியை ஓட்டிக் கொண்டு போனார். டாக்ஸியின் மீட்டர் கட்டணம் வேகமாக உயர்ந்ததைப் பார்த்தபோது, ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது.
சீனாவிலிருந்து இந்தியா வந்த ஒருவர், விமான நிலையத்தில் டாக்ஸி பிடித்தார். ஹோட்டலுக்குப் போகும் வழியில் டாக்ஸி டிரைவரிடம் இந்தியாவைக் கிண்டல் செய்துகொண்டே வந்தாராம். டாக்ஸிக்கு முன்னால் போன ஒரு பேருந்தைப் பார்த்துவிட்டு, ‘‘சீனாவில் பேருந்துகள் அதிவேகமாகச் செல்லும். இந்தியாவில் பேருந்துகள் ஆமைபோலப் போகின்றன’’ என்றார் அந்தச் சீனர். ஒரு மேம்பாலத்துக்குக் கீழே டாக்ஸி போனபோது, மேலே ரயில் கடந்து சென்றது. அதைப் பார்த்துவிட்டு, ‘‘சீனாவில் சாதா ரயில்களே புல்லட் ட்ரெயின் போல வேகமாகப் போகும். இங்கே ரயில் என்ன மாட்டு வண்டிபோல நகர்கிறது?” என்றாராம். இப்படியே வழிநெடுக சீனாவுடன் ஒப்பிட்டு இந்தியாவைக் கிண்டல் செய்திருக்கிறார் அவர். டாக்ஸி டிரைவர் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகக் கார் ஓட்டினார்.
டாக்ஸி ஹோட்டலை அடைந்தது. ‘‘கட்டணம் எவ்வளவு?” என்று சீனர் கேட்டதும், ‘‘ஐந்தாயிரம் ரூபாய்” என்றார் டாக்ஸி டிரைவர். சீனர் அதிர்ச்சியாகி, ‘‘என்ன அநியாயம் இது... உங்கள் ஊரில் கார், பஸ், ரயில் எல்லாமே மெதுவாக ஓடுகின்றன. ஆனால், டாக்ஸி மீட்டர் மட்டும் இவ்வளவு வேகமாக ஓடுகிறதே?” என்று கேட்டாராம். ‘‘ஏனெனில், அது மேட் இன் சைனா’’ என அமைதியாகச் சொன்னாராம் டாக்ஸி டிரைவர்.

மனிதர்களிடமிருந்தே கதைகள் பிறக்கின்றன. பல்வேறு நிலைகளைச் சேர்ந்த மனிதர்களை நித்தமும் தங்கள் பணிக்காக சந்திக்கும் ஓட்டுநர்கள் உண்மையில் சிறந்த கதைசொல்லிகள்! ஆனால், டாக்ஸியில் ஏறும் பலர், ஓட்டுநர்களோடு பேசுவதுகூட இல்லை. குறைந்தபட்சம் பெயரைக் கேட்பதுகூட இல்லை. போக வேண்டிய இடத்தைச் சொல்வதுடன் உரையாடல் முடிந்துவிடுகிறது. அதற்குமேல் அவர்களுடன் பேச எதுவுமே இல்லை என்பதே பெரும்பான்மையானவர்களின் மனவோட்டமாக இருக்கிறது. விளைவு, காதில் ஹெட்போன்கள் குடியேறிவிடுகின்றன.
நான் பயணம் செய்த டாக்ஸியின் டிரைவர், சமீபத்தில்தான் ஒரு கிராமத்திலிருந்து மும்பை வந்திருந்தார். மனிதர்களின் இந்த அணுகுமுறையையும், டாக்ஸி ஓட்டுவதில் இருக்கும் கஷ்டங்களையும் பட்டியல் போட்டுவிட்டு, ‘‘எவ்வளவு வருமானம் கிடைத்தாலும், இந்தத் தொழில் வேண்டாம். சம்பளம் குறைவாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சொந்த ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன்’’ என்றார். விருப்பமே இல்லாமல், குடும்பத்தினரின் வற்புறுத்தலால் டாக்ஸி ஓட்ட வந்திருக்கிறார்.
மாற்றத்தை மனித மனம் ஏற்பதில்லை. இருப்பதற்கு சொகுசாய்ப் பழகிவிட்ட மனித மனம் ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்தால்கூட நிம்மதி இழந்துவிடுகிறது. வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள்கூட பதவியுயர்வை ஏற்றுக்கொண்டால், வேறு இடத்துக்கோ ஊருக்கோ மாறுதல் செய்துவிடுவார்கள் என்று அஞ்சி, ‘புரமோஷனே வேண்டாம்’ என்று எழுதிக்கொடுத்துவிட்டு, சாதாரண அலுவலராகவே பணிபுரிந்து ஓய்வு பெறுவார்கள். ‘ட்ரான்ஸ்ஃபர்’ அதாவது, மாறுதல் என்பதே ஒரு தண்டனை என்பதுபோன்ற ஒரு சித்திரத்தை இடைப்பட்ட காலத்தில் நம் சமூகம் தவறுதலாக உருவாக்கிவிட்டதே முக்கியக் காரணம்.
‘மாற்றம் வேண்டாம். இருப்பதே போதும்’ என்று நம்மில் பலரும் நினைப்பதற்கு, ‘இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம்’ என்பதுபோன்ற அறிவுரைகளைச் சொல்லி வளர்க்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இதுபோன்ற பல பழமொழிகள் காலப்போக்கில் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன என்றே நினைக்கிறேன். ‘கையில் வைத்திருக்கும் வெற்றிக்கோப்பையைப் பத்திரப்படுத்திவிட்டு அடுத்த வெற்றியை நோக்கி நடைபோடு’ என்பதே அந்தப் பழமொழி சொல்ல வருவது. அதாவது ‘திட்டமிட்டுப் படிப்படியாக அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி நடைபோடு’ என்பதுதான் அது சொல்லும் உள்ளர்த்தம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ‘பெரிதினும் பெரிது கேள்’ என்று அதன்பிறகு பாரதி சொன்னதைப் பலரும் மறந்துவிட்டோம்.
‘மாற்றம்’ என்பதைப் பற்றிப் பேசும்போது ‘மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, அதாவது 25 வருடங்களுக்குப் பிறகு நாம் சந்தித்துக் கொள்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் நெடிய மானுட சரித்திரத்தில் இந்த இடைவெளி என்பது மிக மிகச் சொற்பமானதுதான். ஆனால், இந்த 25 ஆண்டுகளில்தான் அசாத்தியமான வேகத்தில் பல மாற்றங்கள் நடைபெற்றதாக நான் நினைக்கிறேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு, சமூக வலைதளங்கள் இல்லை. பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதுவதைத் தவிர ஒருவர் தன்னுடைய கருத்துகளைத் தெரிவிக்க வேறு வழியே இல்லை. காடு, மலை தாண்டும் பயணங்கள் இன்று எளிய வழிகளாகிவிட்டன. ருசியான உணவகம் தேடி அலைந்த காலம்போய் இன்று நினைத்த இடத்தில் நினைத்ததை வாங்கிச் சாப்பிடும் ஆப்கள் வந்துவிட்டன. கண்ணுக்குத் தெரியாத மாயவலையாய் அறிமுகமாகி இன்று ஆளுயர நம்மை டேட்டா புள்ளிகளாய் மாற்றிவிட்டது இன்டர்நெட்.
புஜ பலத்தை மட்டுமே நம்பியிருந்த மனிதர்களின் வாழ்க்கையை, தொழிற்புரட்சி காலத்தில் அறிமுகமான இயந்திரங்கள் முற்றிலுமாக மாற்றியமைத்தன. ஆனால், இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் டிஜிட்டல் புரட்சி, தொழிற்புரட்சியைவிடப் படுவேகமாக மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது.
புதுக் கார் வாங்கினால், இரண்டே வருடங்களில் புதிய மாடல் விற்பனைக்கு வந்து, நாம் வாங்கிய காரைப் பழைய காராக்கிவிடுகிறது. செல்போன் வாங்கினால், ஆறே மாதங்களில் அடுத்த மாடல் வந்து, நாம் வாங்கிய போனைப் பழைய மாடலாக்கிவிடுகிறது. இன்னொருபுறம், ‘உங்கள் போனை அப்டேட் செய்துகொள்ளுங்கள்’ என்று வாரா வாரம் நோட்டிபிகேஷன் வந்துவிடுகிறது. ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும், தன்னை அப்டேட் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இப்போது இருக்கிறார். அதைச் செய்யாவிட்டால், அவர் இரக்கமின்றி ஒதுக்கப்படுவார் என்பதே யதார்த்தம்.
பேரலையைப்போல நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் புரட்சி நமக்குத் தரும் படிப்பினைகள் ஏராளம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை பிலிம் சுருள்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த உலகம் தழுவிய மாபெரும் நிறுவனம், கோடக். புகைப்படக் கலை என்பது படச்சுருளில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியபோது... ‘வந்திருப்பது ஒரு Disruptive Technology’ என்பதைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல அது தன்னைத் தகவமைக்கத் தவறியது. அதனால், அந்த நிறுவனம் இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் 1975-ம் ஆண்டிலேயே அந்த நிறுவனம் டிஜிட்டல் கேமராவை உருவாக்கிவிட்டது என்றாலும், நிறுவனம் மாறவில்லை. மாற்றத்துக்கு பயந்து ஒதுங்கி நின்றதால் அது இன்று ஓரங்கட்டப்பட்டுவிட்டது.
பல லட்சம் முறை எழுதப்பட்டு, பல கோடிமுறை படிக்கப்பட்ட ஒரு சொற்றொடர் என்றால் அது, ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதாகத்தான் இருக்கும். சாலையில் சட்டென நாம் கடக்கும் எந்த மரமும் அதற்கு முன் நாம் பார்த்த அதே நிலையில் இருப்பதில்லை. இலை உதிரும், மீண்டும் துளிரும். துளித்துளியாய் வேர்கள் வழி நீர் மேலேறும். அடிமரத்திலும் கிளைகளிலும் இருக்கும் பட்டைகள் உரிந்து கீழே விழுந்து, அதன் தழும்புகள் ஆறும் முன்பே அங்கே புதிதாய் பட்டைகள் உருவாகும். இவையெல்லாம் யாருக்காகவும் காத்திராமல் இயற்கை தன் போக்கில் நிகழ்த்தும் மாற்றங்கள்.
மரத்தில் நடக்கும் மாற்றம் மனிதனிலும் நடந்துகொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு நாம் இருந்த உடம்பு என்பது, வேறு செல்களால் ஆன உடம்பு. இப்போது இருப்பது முற்றிலும் வேறு புதிய செல்களினால் ஆன உடம்பு. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக நம் உடல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ‘ஒரே ஆற்றில் நீ இரண்டு முறை நீராட முடியாது’ என்ற ஜென் வார்த்தைகளை இந்தக் கோணத்திலிருந்து படித்தால் உண்மை மேலும் நன்றாகப் புரியும். நம் முயற்சி ஏதுமின்றி, உடல் தன்னை மாற்றிக்கொள்ளும். மனதையும் அறிவையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.

கடந்த காலத்திற்கு அவ்வப்போது ஒரு நடை போய்விட்டுவருவதில் சுகம் காண்பது இயல்புதான். ஆனால் கடந்தகாலத்திலேயே உழல்வது ஆரோக்கியமானதில்லை. ஒரு புதிய வேலைக்கு வந்த நாள் முதல், பழைய வேலையைப் பற்றியே பேசுவார்கள். ‘‘அந்த ஆபீஸ் மாதிரி வருமா?” என்பார்கள். ஆனால், அந்தப் பழைய அலுவலகத்தில் இருந்த நாள்வரை அந்த வேலையைப் பற்றி நல்லவிதமாகப் பேசியிருக்க மாட்டார்கள். இப்படிக் கடந்த காலத்திலேயே வாழ்பவர்கள், மாற்றங்களில் சுருண்டு போகிறார்கள்.
மகத்தான மாற்றங்களின் தொடக்கப்புள்ளி என்பது மாபெரும் குழப்பமான சூழலாகவே இருக்கும். ஆனால், அதைக் கடக்காமல் மாற்றம் சாத்தியம் இல்லை. மாற்றத்துக்கு அஞ்சுகிறவர்கள், புதிய தொடக்கங்களைச் சந்திப்பதில்லை. அவர்களின் வானத்தில் புதிய விடியல்கள் தோன்றுவதில்லை.
மாற்றங்கள் வரும்போது... சவால்கள் குறுக்கிடும்போது... அதைப் பேராபத்தாக நினைத்து ஒதுங்கலாம். அல்லது, பெரும் வாய்ப்பாகக் கருதி அடித்து ஆடலாம். மனநிலையே மாற்றத்தை உறுதி செய்கிறது. நம்மில் பலரும் கிரிக்கெட் ரசிகர்கள் என்பதால் அதிலிருந்தே உதாரணம் எடுத்துக்கொள்வோம். சூப்பர் ஓவர்தான் வெற்றியைத் தீர்மானிக்கப்போகிறது என முடிவான பின், களத்தில் இறங்குவது பயமென்பதை அறியாத இரு பேட்ஸ்மேன்களாகவே இருப்பார்கள். உலகின் தலைசிறந்த பௌலர்தான் அந்த ஓவரைப் போடப்போகிறார் என்பது தெரிந்தும் துளியும் தயக்கமின்றி எதிர்கொள்வார்கள். அப்படித்தான் வெற்றி சாத்தியப்படும்.
மோட்டோ ஜிபி போன்ற பைக் பந்தயங்களில் அடிக்கடி உச்சரிக்கப்படும் தாரக மந்திரம் என்ன தெரியுமா? Races are won not in straight lines. It is won only in corners. நேர்க்கோட்டில் வேகமாக பைக் ஓட்டுவது பெரிய விஷயமில்லை. திருப்பங்கள், அதுவும் திடீர்த் திருப்பங்கள்தான் சிறந்த பைக் ரைடர் யார் என்பதை நிர்ணயிக்கும். பைக் ரேஸுக்குப் பொருந்துவது வாழ்க்கைக்கும் பொருந்தும். ரேஸ் வீரர் கார்னரிங் செய்யும் போது இரண்டு நொடிகளில் இருபது முடிவுகள் எடுத்தாக வேண்டும். அதாவது எங்கே த்ராட்டிலை அதிகப்படுத்துவது, பாடி பொசிஷன் எப்படி இருக்க வேண்டும், எங்கே பிரேக் பிடிக்க வேண்டும், எந்த அளவுக்கு பிரேக் பிடிக்க வேண்டும் என்று நொடிகளில் முடிவெடுத்து அதைச் செம்மையாகச் செயல்படுத்த வேண்டும். மாற்றத்தைச் சரியாகக் கையாளாவிட்டால் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும்.

‘மாற்றங்களைக் கண்டு மக்கள் அஞ்சுவதே இதுபோன்ற இழப்புகளுக்கு பயந்துதான்’ என்று சிலர் வாதிடக்கூடும். அதனால்தான் பலரும் தங்கள் கம்ஃபோர்ட் ஜோனைத் (Comfort Zone) தாண்டி வெளியே வருவதில்லை. ஆனால், இன்றைய மேனேஜ்மென்ட் குருக்கள் என்ன சொல்கிறார்கள்... ‘‘வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றால் Come out of your Comfort zone.’’
திருமணம் செய்துகொண்டால், வாழ்க்கை முறை மாறிவிடும் என்பது எல்லாருக்கும் தெரியும்தானே! பெரும்பாலானோர் திருமணம் செய்ய முற்படுவது அந்த ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியே! போலவே, வாழ்க்கையில் என்ன மாறுதல்கள் வந்தாலும், அவற்றை முன்கூட்டியே கணித்து அதற்குத் தகுந்தாற்போல நாம் தயாராகிவிட்டால்... மாற்றம் என்பதும் திருமண வாழ்க்கையைப் போல இனிமையானதாகவே இருக்கும்.
- பழகுவோம்...