மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 11 - சுவாமி சுகபோதானந்தா

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G

நம்பிக்கைத் தொடர்

கடந்த இதழில் Fortune Favours the Brave பற்றிப் பேசும்போது, அதுதொடர்பாக ஒரு கதை சொல்லிவிட்டு அதைத் தாண்டிப் போய்விட்டேன். இதை உங்களில் பலர் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். நன்றி. நான் சொல்ல விழைந்தது ஒரு கதை அல்ல; பல கதைகள். அனைத்துமே நம்மைச் சுற்றி நடக்கும் நிஜக் கதைகள். ‘உடல் பலம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் துணிச்சல் வரும்’ என்பதைப்போல ஒரு சித்திரத்தை இந்தச் சமூகம் பலரது மனதில் அழுத்தமாக எழுதிவிட்டது. அது உண்மையில்லை.

ஓர் எலி உங்கள் அறைக்குள் நுழைந்துவிடுகிறது. அதைப் பிடித்து தூரத்தில் எங்கோ விட்டுவிடவேண்டும் என்பது உங்களின் எண்ணம். ஆனால், எலியைப் பொறுத்தவரை நீங்கள் அதை நெருங்கினால் உங்களை அது அச்சுறுத்துலாகத்தான் பார்க்கும். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த எலியை அறையின் ஒரு மூலையில் அடைக்கிறீர்கள். அதுவரை உங்களிடமிருந்து தப்பிக்கப் பார்த்த அந்த எலி, அந்த நொடியிலிருந்து உங்களை எதிர்த்துப் போராடத் தொடங்கும். இழப்பதற்கு எதுவுமில்லாத நிலையில் வரும் துணிச்சல் அது. நிறைய பேரிடம் இதைப் பார்த்திருப்போம். பயணத்தின் போது சந்தித்த ஒரு பாதசாரி நினைவிற்கு வருகிறார். நடந்துகொண்டே இருப்பது, அந்த வழியாக வரும் வண்டிகளில் கேட்டு hitchhiking செய்வது என இந்தியா முழுக்கப் பயணிக்கும் மனிதர். ‘பயமாக இல்லையா?’ என அவரிடம் கேட்டதற்கு ‘பெரிதாக உடைமைகள் இல்லை என்னிடம். ஒவ்வொரு நாளையும் கிட்டத்தட்ட பூஜ்யத்திலிருந்துதான் தொடங்குகிறேன். எனக்கென்ன பயம்?’ என்றார். துறவிக்கு வேந்தனும் துரும்பு என்பது வெறும் பழமொழி அல்ல.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 11 - சுவாமி சுகபோதானந்தா

இப்போது வேறொரு மனிதரைச் சந்திப்போம். மணிமாறன் என்கிற மணி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர். மாறிவரும் சந்தையின் சூழலுக்கு ஏற்ப, ஒவ்வொருவரும் தங்களைத் தொடர்ந்து எப்படித் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அன்றைய பிரெயின் ஸ்டார்மிங் கூட்டத்திற்கான கருப்பொருள். ஜூம் மீட்டிங் சீரியஸாகப் போய்க்கொண்டிருந்த அந்த வேளையில், மணிமாறனைப் பார்த்து நிறுவனத்தின் எம்.டி ஏதோ கேட்க, அதற்கு அவன் ஒரு நீண்ட விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான்.

பின்னணியில் மணிமாறனின் குழந்தைகளின் விளையாட்டு சத்தம் தொடர்ந்து கேட்க, எம்.டியின் முகபாவம் மாறியது. இருந்தபோதும், குரலில் ஓரளவு கனிவை வரவழைத்துக்கொண்டு, ‘‘உங்கள் குழந்தைகளின் குரல் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்போதைக்கு அவர்களை தயவுசெய்து வேறு இடத்துக்குப் போகச் சொல்கிறீர்களா?’’ என்று கேட்டார். மணிமாறன், குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேறு இடத்துக்குச் செல்லுமாறு அருகில் இருந்த தன் பாட்டிக்கு ஜாடை காட்டினான்.

எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த பாட்டி, மணிமாறனின் அருகில் வந்து, ‘‘உன் எம்.டியோடு நான் பேச வேண்டும்!’’ என்று சொன்னார். அதைச் சற்றும் எதிர்பாராத மணிமாறன் திகைக்க, பாட்டி தயக்கமே இல்லாமல் அருகில் வந்தார். ‘‘ஐயா, நீங்க ஆபீஸ் சம்பந்தமா பேசும்போது குறுக்கிடுவதற்கு மன்னிக்கணும்’’ என்று லேப்டாப் கேமராவுக்கு முன்னால் கரம்கூப்பியப்படி வந்து சொன்னார். பாட்டி என்ன சொல்லப்போகிறார் என்பதை எம்.டி புரிந்துகொண்டார். சடுதியில் சுதாரித்துக்கொண்ட அவர், ‘‘காலையிலிருந்து நிறைய மீட்டிங், வேலைன்னு நேரம் ஓடிட்டே இருக்குமா, ஆனால், இன்னும் பாதி வேலையைக்கூட முடிக்கவில்லை. அதான் கொஞ்சம் பதற்றமாக இருக்கோம்’’ என்று சமாளிக்கப் பார்த்தார்.

ஆனால், பாட்டி விடவில்லை. ‘‘உங்கள் பிரச்னைக்கு என்னிடம் ஒரு தீர்வு இருக்கிறது. அனுமதி கொடுத்தால் சொல்கிறேன்’’ என்று பணிவோடு சொன்னார். தன்னைப் பெருந்தன்மை யானவனாக முன்னி றுத்திக்கொள்ள, ‘‘பிரச்னை இல்லை பாட்டி, பேசுங்க’’ என்று அனுமதி கொடுத்தார் எம்.டி. பாட்டி என்றாலே கதைதானே சொல்லு வார்கள். அந்தப் பாட்டியும் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். கதைக்குள் கதை!

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 11 - சுவாமி சுகபோதானந்தா

பல நூறு ஆண்டு களுக்கு முன்பு, துறவறம் பூண்ட ஒருவர் அங்கங்கு சுற்றி ஒரு மரத்தடிக்கு வந்து அமர்ந்தார். நல்ல நிழல், பசுமையான பிரதேசம், உடல் தழுவும் குளிர்காற்று என அந்த இடம் அவரை இழுக்க, இங்கிருந்து தவம் செய்யலாம் என முடிவெடுத்தார். கண்களை மூடித் தவம் தொடங்கிய சில நிமிடங்களில் மரத்தின் மீதிருந்த குருவி தொடர்ந்து கூவ, துணுக்குற்று விழித்தார். ‘குருவியின் சத்தம் அமைதியைக் குலைக்கும்’ என நினைத்த அவர் அதை விரட்ட முனைந்தார். அவரை மேலிருந்து ஏளனமாகப் பார்த்த குருவி, ‘நானிருக்கும் இந்தக் கூடு, அதைத் தாங்கி நிற்கும் இந்த மரம் எல்லாம் உங்களுக்கு முன்பே எங்களுக்குச் சொந்தம். எங்கள் இடத்தில் நீங்கள் அமர்வதால் எங்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால் நான் சத்தம் போடுகிறேன் என என்னை நீங்கள் விரட்டினால், பின்னால் ஆர்ப்பரிக்கும் அருவி இருக்கிறது. அதன் சத்தத்தை உங்களால் நிறுத்தமுடியாது. அதிகாலை வேளைகளில் எண்ணற்ற பறவைகள் இந்தப் பகுதியில் கூவித்திரியும். அவை எல்லாவற்றையும் உங்களால் விரட்ட முடியாது. அமைதியை உங்களுக்குள் தேடுங்கள். வெளியே இருக்கும் காரணங்களால் தவம் கலைகிறது என சாக்கு சொன்னால் நீங்கள் என்றும் சாதாரண மனிதன்தான், துறவியல்ல’ எனப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியது.

இதைச் சொல்லிவிட்டு அடுத்து பாட்டி அடித்ததுதான் ஃப்ரீ ஹிட் சிக்ஸர். ‘சந்தையின் சூழலுக்கு ஏற்ப உங்கள் கம்பெனி தன்னை எப்படித் தகவமைத்துக்கொள்வது என்பதில் கவனம் செலுத்தும் நீங்கள், WFH (வொர்க் ஃப்ரம் ஹோம்) சூழலுக்கு ஏற்ப நீங்கள் உங்களை எப்படித் தகவமைத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதிலும் கவனம் செலுத்துங்கள். என் பேரனைப் பார்க்க நாங்கள் உங்கள் ஆபீஸுக்கு வந்தால், அதிர்ந்துகூடப் பேசமாட்டோம். அறுந்த வால்களான என் கொள்ளுப்பேரன்கள்கூட உட்கார்ந்த இடத்தை விட்டு நகரமாட்டார்கள். உங்கள் ஆபீஸுக்கு வந்தால் நாங்கள் எப்படி நடந்துகொள்கிறோமோ, அதேபோலத்தான் நீங்களும் எங்கள் வீட்டுக்கு வந்தால் நடந்துகொள்ள வேண்டும். அதுதான் நியாயம். மிக்ஸியில் அரைப்பது, டிவியை சத்தமாக ஓடவிடுவது போன்றவற்றை நாங்கள் நீங்கள் பேசும்போது செய்வதில்லை. ஆனால், குழந்தைகள் கூச்சலிட்டபடி திரிவதுதான் ஒரு வீட்டின் இயல்பு. விருந்தாளியாக எங்கள் வீட்டிற்கு ஜூம் கால் வழியே வரும் நீங்கள் எங்கள் வீட்டின் இயல்பையே குலைக்க நினைப்பது நியாயமல்ல’ காட்டமாகவும், அதே சமயம் கனிவாகவும் முடித்தார் பாட்டி. சிக்ஸர் அடித்தால் பார்ப்பவர்கள் ஆரவாரம் செய்வது நியாயம்தானே. பாட்டியின் பேச்சுக்கும் ஜூம் மீட்டிங்கில் பலத்த வரவேற்பு.

இந்தத் துணிச்சல் இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையிலிருந்து வருவதல்ல; வாழ்க்கை அனுபவங்களின் வழியே தோன்றும் முதிர்ச்சி ஒரு துணிச்சலைப் பரிசாகக் கொடுக்குமில்லையா, அந்தத் துணிச்சல்!

‘துணிவு வரும்போது பணிவும் வரவேண்டும்’ என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். பொருள் நிறைந்த இந்த வார்த்தைகளை விளக்கச் சொல்லப்படும் கதை இது.

‘ஆடுகளம்’ படத்தின் பேட்டைக்காரர் ஞாபகம் இருக்கிறதா? அவரைப் போலவே சேவல் சண்டையில் பித்துகொண்ட ஒரு ஆசாமி இருந்தான். ‘பதினெட்டுப் பட்டியிலும் இல்லாத சிறப்பான சேவல் நம்மிடம் இருக்கவேண்டும்’ என ஒரு சேவலைத் தேர்ந்து அதற்குப் பயிற்சியாளர்கள் வைத்துப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த ஊருக்குப் பறவைகளைப் பற்றி நன்கறிந்த சாமியார் ஒருவர் வந்திருந்தார். அவரைத் தன் வீட்டுக்கு அழைத்த அவன், ‘‘சாமி, என் சேவலை சண்டைக்கு விட்டா ஜெயிச்சுடுமா?’’ என்று ஆவலோடு கேட்டான். சேவலைப் பார்த்தார் சாமியார். அது கூரைமீது நின்றபடி ஊரையே சண்டைக்கு அழைத்துக் கொக்கரித்துக் கொண்டிருந்தது. ‘‘இன்னும் பயிற்சி வேண்டும்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் சாமியார். அதன்படியே சில வாரங்கள் கழித்து மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்தான். இம்முறை சேவல் மூர்க்கமாக மண்ணைக் கிளறித் தூற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்த சாமியார், ‘‘இன்னமும் பயிற்சி வேண்டும்’’ எனச் சொல்லிச் சென்றார். அடுத்த சில வாரங்கள் பயிற்சியெடுத்த அந்தச் சேவல், ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்டது. எப்போதும் சாந்தமாக இருந்த அதைப் பார்த்து, ‘இது சண்டை செய்யாது போலயே... சாமியாரை நம்பி ஏமாந்துவிட்டோமே’ என வருந்தத் தொடங் கினான் அந்த ஆசாமி.

அன்று வீட்டிற்கு வந்த சாமியார் சேவலைப் பார்த்துவிட்டு, ‘‘இப்போது களத்தில் இறக்கு உன் சேவலை. வெற்றிகள் குவியும்’’ என்றார். அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ‘‘தன் வீரத்தின் மீது, திறமையின் மீது நம்பிக்கை வராத எந்த உயிரும் வீண் சச்சரவுகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். தன் மேல் நம்பிக்கை கொண்ட உயிர், போராடும் நேரம் வரும்வரை சாந்தமாகவே இருக்கும். அதன் கவனம் எல்லாம் வெற்றியின் மீதுமட்டும்தான்’’ என்றார் அந்த சாமியார்.

இதுதான் நிஜம். துணிந்து வெற்றி பெறுபவர்கள் அதைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பதில்லை. அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். பணிவின் பயன் இது. வெற்றிக்கோட்டைத் தொட இயலாதவர்கள்தான் வெற்றியைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

****

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 11 - சுவாமி சுகபோதானந்தா

என்னதான் கொரோனா காலமாக இருந்தாலும், இந்தக் கொடுமைகளுக்கு நடுவிலும் பல நல்ல விஷயங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. பணத்தை வாரி இறைத்து, பந்தல் போட்டுப் பகட்டை வெளிப்படுத்தும் திருமணங்கள் எல்லாம் இப்போது இல்லை. திருமணங்கள் எளிமையாக நடக்கின்றன. என் நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் வருகை தரும் அன்பர் ஒருவரின் மகன் திருமணம் அண்மையில் இப்படி எளிமையாக நடைபெற்றதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். அவரைத் தொலைபேசியில் அழைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்த நான், விளையாட்டாக, ‘’கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடாமல் விட்டுட்டீங்க பார்த்தீங்களா?” என்று சீண்டினேன். ‘‘இல்ல, ரொம்ப வேண்டப்பட்ட உறவுகளை மட்டும்தான் கூப்பிட்டேன். எதுக்கு மத்தவங்களுக்கு சிரமம்னு கூப்பிடல. உங்களையும் அதனாலதான் கூப்பிடல. நீங்க தப்பா நினைக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்’’ என்றார். என்மீது அவருக்கு மரியாதை இருக்கிறது. அதேசமயம் அவர் தரப்பில் நியாயமிருப்பதால் அந்த மரியாதை பயத்தைக் கொடுக்காமல் நம்பிக்கையைக் கொடுக்கிறது. எண்ணித் துணிக கருமம்!