மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 12- சுவாமி சுகபோதானந்தா

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

‘‘இருந்திருந்து என் பிள்ளை பிளஸ் 2 போகும் போதுதானா லாக்டௌன் வரவேண்டும்? என் பிள்ளைக்கு எப்படி மதிப்பெண் கொடுப்பார்கள்’’

தேர்வுகள் குறித்து ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பார்வைகள் இருக்கலாம். தேர்வுகளால் மட்டுமே ஒரு மாணவரின் செயல்திறனை அளவிட்டுவிட முடியாது என்பதில் நானும் உடன்படுகிறேன். மதிப்பெண்களைத் தாண்டியும் ஒரு வாழ்க்கை உள்ளது. ஆனால், ஏற்கெனவே எதிர்காலம் குறித்த கேள்விகளும் வாழ்வாதாரம் குறித்த குழப்பங்களும் பெரும்பாலானோரைச் சூழ்ந்துள்ள நிலையில் மாணவர்களின் தேர்வுகளாவது ஒரு ஒழுங்குமுறையோடு நடக்கட்டும் எனப் பெற்றோர்கள் எதிர்பார்ப்பது இயல்புதான். அவை நடைமுறைச் சிக்கல்களினால் ரத்தாகும்போது குழந்தைகளைவிட மேலும் பயத்திற்கு உள்ளாகிறார்கள் பெற்றோர்கள்.

‘‘இருந்திருந்து என் பிள்ளை பிளஸ் 2 போகும் போதுதானா லாக்டௌன் வரவேண்டும்? என் பிள்ளைக்கு எப்படி மதிப்பெண் கொடுப்பார்கள்’’ - இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளோடு பிள்ளைகளைப் பெற்றவர்கள் பொழுதைக் கழித்துவருகிறார்கள். இவர்கள் மட்டுமில்லை. எல்.கே.ஜி மாணவனின் பெற்றோர்கள்கூட அவன் பள்ளி அனுபவத்தை இழப்பது குறித்த ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 12- சுவாமி சுகபோதானந்தா

ஒரு காணொலியை சமீபத்தில் காண நேர்ந்தது. கல்லூரியில் படிக்கும் அண்ணனும், பள்ளியில் படிக்கும் பதின்பருவத் தங்கையும் கடைக்குச் செல்கிறார்கள். கடையை அடைந்ததும் தங்கையை வெளியிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, அண்ணன் மட்டும் கடைக்கு உள்ளே செல்கிறான். அவன் திரும்பி வந்து பார்க்கும்போது அங்கே பைக் மட்டும்தான் இருக்கிறது. தங்கையைக் காணவில்லை. அக்கம்பக்கம் விசாரித்து அவர்கள் காட்டிய திசையில் ஓட்டமும் நடையுமாக வந்தால் அவன் தங்கை ஒரு பாழடைந்த கட்டடம் முன்னால் நின்று வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இவனைப் பார்த்ததும் அவள் பார்வையில் ஒரு மாற்றம். ‘‘ண்ணா... இதைப் பாரேன். இந்த பில்டிங்கை எல்லாம் எப்பவோ இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி இருக்கு’’ என்கிறாள். அவன் அண்ணன் சிரித்தபடி, ‘‘இது விவரம் தெரிய ஆரம்பிச்ச வயசுல நீ படிச்ச ஸ்கூல். கொஞ்சநாள்தான் படிச்ச. அப்புறம்தான் நியூ நார்மல் வந்துடுச்சே’’ என்கிறான்.

இந்த FOMO எனப்படும் ‘Fear Of Missing Out’ இன்றைய இளம்பருவத்தினரிடையே மட்டுமல்ல, எல்லாரிடமும் இருக்கிறது. சமூக வலைதளங்களில், மீடியாக்களில் தொடர்ந்து சொல்லப்படுவதுபோல, பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதால் மாணவர்கள் ஒன்றும் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருப்பதில்லை. மழை காரணமாக பள்ளி விடுமுறை என்றால் சந்தோஷத்தில் ஆடுவது, ரெகுலராகச் செய்துகொண்டிருக்கும் ஒரு வேலைக்கு நடுவே கிடைக்கும் ஒரு சின்ன ஆசுவாசம் நமக்குக் கொடுக்கும் மகிழ்ச்சியைப் போன்றதுதான். அந்தந்த நேரத்துக் கொண்டாட்டங்கள். அதற்காக பள்ளி மூடப்பட்டே இருப்பதால் அவர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்கள் என்பதெல்லாம் பெரியவர்கள் நாம் கட்டிக்கொண்டிருக்கும் மாயை. கடந்த லாக்டௌனின்போதான் நெடிய விடுமுறை அவர்களுக்கு முதல் தடவை அனுபவிக்கும் ஒரு எக்ஸைட்மென்ட்டாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அது ‘ஆபீஸ் போகத் தேவையில்லை’ என்கிற நிலையிலிருந்த ஐ.டி ஊழியருக்குமே இருந்ததுதானே.

உண்மையில் முன்னைவிட இப்போதுதான் கல்லூரி மாணவர்களுக்கும் பதின்பருவத்துப் பள்ளி மாணவர்களுக்கும் கற்றலில் ஆர்வம் அதிகமாக உள்ளது. தேர்வுகளின் நெருக்கடி இல்லாத நிலையில் தாங்கள் விரும்பியதை, முன்னெப்போதோ கற்க நினைத்த Life skill-ஐ இப்போது இணையம் வழியே கற்கும் வாய்ப்பு கொட்டிக்கிடக்க, அதை முடிந்த அளவிற்குப் பயன்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். கூடவே, செயல்முறைக் கல்வியின் முக்கியத்துவமும் பள்ளி சென்று கற்கும் அனுபவத்தின் அவசியமும் நட்பின் மதிப்பையும் சேர்த்தே கற்றுக் கொள்கிறார்கள்.

ஆனாலும், பெற்றோர்கள் பலரும் ஏகப்பட்ட பயத்தோடு இருக்கிறார்கள். காலையில் எட்டு மணிக்கு வகுப்பறையில் இருக்க வேண்டிய பிள்ளைகள் மணி எட்டரையானாலும்கூட படுக்கை விட்டு எழுந்திருக்காமல் தூங்குகிறார்களே... நேரத்துக்குச் சாப்பிடுவது, குளிப்பது, உடை மாற்றிக்கொள்வது... என்று எல்லா ஒழுங்கும் காற்றில் பறந்துவிட்டதே... இதுவே இவர்கள் பழக்கமாகிவிட்டால் என்ன செய்வது. இப்படிக் கவலைப்படுவதற்கு அவர்களிடம் காரணங்களும் இருக்கின்றன.

Arowana என்ற ஒரு வகை மீன் ஒரே சமயத்தில் ஐம்பது முட்டைகள்வரை இடுமாம். முட்டைகளை இடுவது பெண் மீனாக இருந்தாலும் பெரிய மீன்கள் இவற்றைச் சாப்பிட்டுவிடாமல் காப்பாற்றும் பொறுப்பு அப்பா மீன்களுக்குத்தான். அதனால், அப்பா மீன் அந்த முட்டைகளைப் பல வாரங்களுக்கு வாய்க்குள்ளேயே வைத்துப் பாதுகாக்கும். அது மட்டுமல்ல, முட்டையிலிருந்து மீன்குஞ்சுகள் வெளியே வந்த பிறகும்கூட கொஞ்ச காலத்துக்கு இந்த அப்பா மீன்தான் தன் குஞ்சுகளை வாய்க்குள் வைத்துப் பொத்திப் பொத்தி வளர்க்கும்.

சில பெற்றோர்களைப் பார்க்கும்போது, இந்த Arowana மீன் எவ்வளவோ பரவாயில்லை என்று படுகிறது. அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் போற்றிப் பாதுகாக்க நினைக்கிறார்கள். மொத்தமாய் மாணவச் சமுதாயமே இந்த இன்னலுக்கு ஆட்பட்டு இருக்கும் நிலையில் நிச்சயம் அந்தப் பிள்ளைகள் தனித்து விடப்படவில்லை. அப்புறம் ஏன் இந்தப் பதற்றம்?

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 12- சுவாமி சுகபோதானந்தா

அவர்களுக்கு நான் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம் இதுதான்...

உங்கள் மடிக்கணினியை நீங்கள் சிறிது நேரம் இயக்காமல் இருந்தால் அது தானாகவே ‘ஹைபர்னேட் மோடு’க்குச் சென்றுவிடுகிறது இல்லையா? அதை மீண்டும் இயக்க ஆரம்பித்துவிட்டால் அது முழு பலத்தோடு மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. இந்த உலகில் போராடுவதற்குத் தேவையான யுக்தியையும் சக்தியையும் உங்கள் பிள்ளைகள் தாங்களாகவே வளர்த்துக்கொள்வார்கள். உலகிலிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு Defence mechanism இருக்கிறது. தேவையானபோது அது தானாகவே வெளிப்படும், பலத்த தூசிப்புயலின்போது தன்னாலே மூடிக்கொள்ளும் இமைகளைப் போல.

பஞ்ச பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் இருந்ததாலோ அல்லது ஒரு வருட காலம் அஞ்ஞாத வாசம் இருந்ததாலோ, அவர்கள் தங்கள் பலத்தை இழந்துவிடவில்லை. அவர்கள் தங்கள் பலத்தை முழுவதும் உணர்ந்து கொண்டதும், பலவீனத்தைப் புரிந்துகொண்டதும் இந்தக் காலத்தில்தான்.

உங்கள் கண்களுக்கு இப்போது தெரியும் காட்சியை வைத்து, நீங்களாகவே பிள்ளைகளின் எதிர்காலம் பாழாய்ப்போய்விட்டது என்று தேவையில்லாமல் கற்பனை செய்து மன அமைதியைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் மன அமைதி கெட்டுப்போனால், உங்கள் குடும்பத்தினர் மன அமைதியும் கெட்டுப்போகும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஏதோ உங்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக சுவாமிஜி இப்படியெல்லாம் சொல்வதாக நீங்கள் நினைத்தால், இதோ இந்தப் புதிருக்கு பதில் சொல்லுங்கள்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 12- சுவாமி சுகபோதானந்தா

நியூயார்க்கிலிருந்து கடல் தாண்டி, குறுகிய நேரத்தில் நேர்வழியில் மாஸ்கோ செல்ல ஆகாயமார்க்கமாக ஒரு பாதையை வரையச் சொன்னால் முதல் படத்தில் காட்டியிருப்பதைப் போலத்தான் பலரும் வரைவார்கள். ஆனால் பலரும் கருதுவதைப்போல அது நேர்ப் பாதையல்ல. இரண்டாம் படத்தில் காட்டியிருப்பதைப்போல வளைவான பாதையில் செல்வதுதான் நேர்வழி. ஆம், வளைவாகத் தெரியும் இந்த வழியாகத்தான் நியூயார்க்கில் இருந்து விமானங்கள் மாஸ்கோ செல்லும். அப்படிச் சென்றால் இரண்டு நகரங்களுக்கும் இடையே இருக்கும் தூரம் வெறும் 7,500 கி.மீட்டர்கள்தான். ஆனால் முதல் படத்தில் காட்டியிருப்பதைப்போல நேர்ப் பாதையைப் போல இருக்கும் பாதையில் சென்றால் விமானம் 8,910 கி.மீட்டர்கள் பயணிக்க வேண்டியதாக இருக்கும். தூரமும் அதிகம். பயண நேரமும் அதிகமாகும்.

பூமி உருண்டை என்கிற சிம்பிள் அறிவியல் விளக்கத்திலிருந்து பிறக்கும் உண்மை இது. கண்ணிலே தெரியும் காட்சியை மட்டும் வைத்து நீங்களாகவே எதை எதையோ கற்பனை செய்துகொண்டு அஞ்ச வேண்டாம். உண்மை என்பது நம் கண்களுக்கும் காதுகளுக்கும் அப்பாற்பட்டது.

பத்து கி.மீட்டர் தூர மராத்தான் ஓட்டத்தை மாறன் ஒரு மணி நேரத்தில் கடந்தான். ஆனால், செழியனோ பத்து கி.மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒன்றரை மணிநேரம் எடுத்துக் கொண்டான். இருவரில் யார் மனோ பலமும் திடமும் கொண்டவர்?

மாறன்தான் இல்லையா.

மாறன் கடந்த பத்து மீட்டர் பாதை, சமன் செய்யப்பட்ட சமவெளிப் பாதை. ஆனால், செழியன் கடந்த பாதையோ கரடுமுரடான செங்குத்தான மலைப் பாதை.

இருவரில் யார் மனோதிடம் கொண்டவர் என்று கேட்டால் இப்போது நம் பதில் செழியனாகத்தான் இருக்கும்.

மாறனின் வயது 25, செழியனின் வயதோ 50 என்றால் அதிக மனோ திடம் கொண்டவர் யார் என்ற கேள்விக்கு இப்போது நம் பதில் மீண்டும் செழியன் என்பதாகத்தான் இருக்கும்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 12- சுவாமி சுகபோதானந்தா

மாறனும் செழியனும் ஓடிய மராத்தான் ஓட்டங்கள் வெவ்வேறு பந்தயங்கள். அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளும் சரி, சந்தித்த சவால்களும் வெவ்வேறானவை. சவால்களை சமாளிக்கப் பயன்படுத்திய யுக்திகளும் வெவ்வேறானவை. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், மாறன், செழியன் இருவருமே மனோதிடம் கொண்டவர்கள்தான். ஆனால் வாழ்கை அவர்களுக்குக் கொடுத்த அனுபவம் வெவ்வேறானது. அவரவர் அனுபவம் மற்றும் அளவீடுகளின்படி எல்லாருமே வெற்றிக் கோட்டைத் தொடக் கூடியவர்கள்தான்.

- பழகுவோம்

*****

விடியும் போதே... ஒரு நாளை எப்படி மகிழ்ச்சியானதாகவும் நம்பிக்கை நிறைந்ததாகவும் மாற்றுவது? இதற்கு ராணுவத்தில் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை நமக்கு நிச்சயம் உதவும். ராணுவத்தில் பணிபுரிகிறவர்கள் அனைவருமே காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் முதல் வேலையாக படுத்த படுக்கையைச் சுற்றி வைக்க வேண்டும். போர்வையை முறைப்படி மடித்து அழகாக வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் ‘காலையில் எழுந்த உடனேயே அன்றைய தினம் செய்ய வேண்டிய முதல் டாஸ்க்கைச் செய்துமுடித்துவிட்டோம்’ என்ற மனநிறைவு கிடைத்துவிடுமாம். அந்த மன நிறைவோடு நாளைத் தொடங்கினால் அடுத்தடுத்து செய்ய வேண்டிய மற்ற வேலைகளைச் செய்ய அது உந்துசக்தியாக இருக்கும் என்கிறார்கள். இதுவரை இந்த யுக்தியை நீங்கள் முயற்சி செய்ததில்லை என்றால், நிச்சயம் முயற்சி செய்துபாருங்கள். பலன் நிச்சயம்.