மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 13- சுவாமி சுகபோதானந்தா

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G

மனிதர்கள் தோன்றிய வரலாறு குறித்து ஒவ்வொரு மதமும் ஒவ்வொருவிதமாகச் சித்திரிக்கலாம். அறிவியல் ஏகப்பட்ட கோட்பாடுகளை முன்னிறுத்தலாம்

நடுத்தர வயதில் இருக்கும் பலருக்கும் ரத்த அழுத்தம் வர முக்கியமான காரணமாக இருப்பது பதின்பருவத்தில் இருக்கும் அவர்கள் பிள்ளைகள்தான். சமீபத்தில் என்னிடம் உரையாடிய ஒரு தந்தையின் குரல் இது.

‘`லாக் டௌன் தளர்த்தப்பட்டிருப்பதால், ஒரு வேலை விஷயமாக நீண்டகால நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் வந்து அரை மணி நேரம் ஆன பிறகும் மரியாதை நிமித்தமாகக்கூட தன் அறையில் இருந்து என் மகள் வெளியே வந்து, அவரை நலம் விசாரிக்கவில்லை. ‘அவ ஆன் - லைன் கிளாஸில் பிஸியாக இருக்கிறாள்!’ என்று என் மனைவி அவரோடு சேர்த்து என்னையும் சமாதானப்படுத்தினாள். இதுமட்டும்தான் என்றில்லை. விசேஷ தினங்களில் வாழ்த்துவதற்காக உறவினர்கள் போன் செய்தாலும் கவனமாகத் தவிர்த்துவிடுகிறாள். அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடமும் இதேரீதியில்தான் பழகுகிறாள். நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் ஆகியோரின் முக்கியத்துவத்தை அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை சுவாமி’’ என்று சொல்லி வருத்தப்பட்டார்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தத் தந்தையின் மனக்குமுறல், எனக்கு ஓரளவு ஆறுதலாகவே இருந்தது. சுற்றத்தின் அருமையை, நட்பின் பெருமையை உணராத ஒரு தலைமுறையல்லவா இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறது. அவற்றைப் புரிய வைக்க ஒருவர் சிறிதேனும் முயற்சிகள் எடுக்கிறாரே என்கிற ஆறுதல் அது.

உறவினர்களைப் பற்றிய தப்பான அபிப்ராயம் உண்டாக நாமும் ஒரு காரணம். சமூகத்தின் பல அடுக்குகளிலும் உறவினர்கள் என்றாலே புறம் பேசுபவர்கள், ஒட்டுண்ணிகள் போன்ற சித்திரத்தை நகைச்சுவையாகவோ சீரியஸாகவோ திரும்பத் திரும்பப் பேசி நிறுவிவிட்டோம். சரி, சினிமா தொடங்கி சோஷியல் மீடியா வரை கொண்டாடப்படும் நட்பையாவது கவனத்தோடு பேணுகிறோமா என்றால் அதுவுமில்லை. Clubhouse-ல் மணிக்கணக்கில் பரிச்சயம் இல்லாதவர்களோடு உரையாட முடிந்த, சமயங்களில் அவர்கள் சொல்வதைக் கேட்க மட்டுமே முடிந்த நம்மால் நம் நண்பர்களிடம் இதே சிரத்தையோடு பேச முடியவில்லையே... ஏன்? என்ன தடுக்கிறது? பெரும்பாலான மனிதர்களின் சிக்கலே அவர்களைக் காதுகொடுத்துக் கேட்க யாருமில்லை என்பதுதான். நம் நண்பர்களுக்கு ஆதரவாய் நாம் காது கொடுத்தது எப்போது?

மனிதர்கள் தோன்றிய வரலாறு குறித்து ஒவ்வொரு மதமும் ஒவ்வொருவிதமாகச் சித்திரிக்கலாம். அறிவியல் ஏகப்பட்ட கோட்பாடுகளை முன்னிறுத்தலாம். ஆனால் அத்தனை மதங்களும், கோட்பாடுகளும் ஒன்றுபடுவது ஒரு விஷயத்தில். தோன்றிய காலந்தொட்டே மனித இனம் கூட்டம் கூட்டமாகத்தான் வசித்துவந்திருக்கிறது. அதன்பிறகு அந்த வடிவம் சிதைந்து கூட்டுக் குடும்பம் என்ற பெயரில் தாத்தா பாட்டி, பெரியப்பா, சித்தப்பா என்கிற சிறுவட்டமாக மாறியது. பின் அதனினும் குறுகித் தனிக்குடித்தனம் என்றானது. இப்போது அதுவும் அருகி, திருமணத்திற்கு முன்பே பெற்றோர்கள் ஒருபுறம், பிள்ளைகள் மறுபுறம் என்றாகிவிட்டது. இந்தத் தனிமைதான் நிறைய பதின்பருவப் பிள்ளைகளின் பெற்றோரை பயமுறுத்துகிறது.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 13- சுவாமி சுகபோதானந்தா

வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒன்றோடு ஒன்று போட்டி போடும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களே ஒன்றிணைதலின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு ‘Longterm Relationship’ என்கிற கோணத்தில் பிசினஸ் செய்கிறார்கள். ஆனால், சொந்தங்களிடமும் இப்போது பிசினஸ் மனநிலையில் ‘பேசுவதால் என்ன லாபம்’ என்பதை யெல்லாம் கணக்கிட்டுத்தான் பேசுகிறார்கள் பலரும்.

சரி, அறுந்து கொண்டிருக்கும் உறவுச் சங்கிலியை எப்படி மீண்டும் இணைப்பது? உறவுகளோடு நாம் ஒட்டாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று புரிந்துகொண்டாலே பல உறவுகளை ஓரளவு புதுப்பித்துக்கொள்ள முடியும். உறவினர்களோடு நெருக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டால்... ‘எவ்வளவு சம்பாதிக்கற, எவ்வளவு சேர்த்து வச்சிருக்கற?’ என்று ஆரம்பித்து அத்தனை விஷயங்களையும் குடைந்து குடைந்து கேட்டுத் தெரிந்துகொண்டு நம்மைப் பற்றிப் புறம்பேச ஆரம்பித்துவிடுவார்களோ என்ற அச்சம்தான் பலரையும் உறவினர்களை விட்டுத் தள்ளி நிறுத்தியிருக்கிறது.

உண்மைதான். வகுப்புத் தோழர்களாக இருந்தாலும் சரி, அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் சக ஊழியர்களாக இருந்தாலும் சரி, அக்கம் பக்கத்து வீட்டாராக இருந்தாலும் சரி... உறவினர்களைப் போலவே அவர்களிடம் நமக்குப் பிடித்த குணங்களும் இருக்கின்றன. பிடிக்காத குணங்களும் இருக்கின்றன. அன்னப்பறவைபோல பிடித்தவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு பழகவேண்டியதுதான். முடியவே முடியாதெனில் விலகுவதுதான் தீர்வு. ஆனால் ஒட்டுமொத்தமாக விலக்குவது சரியல்ல என்பதே என் வாதம்.

எனக்குத் தெரிந்த பிரமுகர் ஒருவர் தன் சக்திக்கு அதிகமாகப் பணத்தைத் திரட்டி, சென்னையில் பல்பொருள் அங்காடி ஒன்றை ஆரம்பித்தார். அதில் மளிகைச் சாமான்கள் தொடங்கி காய்கறி, கனிகள் என்று அனைத்தையும் விற்பனைக்காக வைத்தார். ஆறு மாதம் ஆன பிறகும்கூட கடையில் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை. தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு நஷ்டம். கடையை மூடிவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்த வேளை, வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல, ஒரு பெண்மணி கடை வாசலுக்கு அருகே பூக்கடை போட்டார். அவரைத் தொடர்ந்து ஒரு இளநீர்க்காரர், பானிபூரிக்காரர் என்று பலரும் கடை போட்டார்கள். இப்படி ஒவ்வொருத்தராக வந்து நம் கடையின் முன்னால் கடை போட்டு வியாபாரத்தைக் கெடுக்கிறார்களே என்கிற கோபத்தில் அந்தப் பிரமுகர் போலீஸில்கூடப் புகார் செய்தார். போலீஸ் வந்து விரட்டும்போது கடையை எடுப்பதும் போலீஸ் சென்ற ஒரு சில மணிநேரத்தில் மீண்டும் அதே இடத்தில் கடை போடுவதும் அவர்களது வழக்கமாக இருந்தது. அதன் பிறகு நடந்ததுதான் ஆச்சரியம்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 13- சுவாமி சுகபோதானந்தா

இந்தப் பூக்கடைக்கும், பானிபூரிக் கடைக்கும், இளநீர்க்கடைக்கும் வருபவர்கள் அப்படியே இவரின் கடைக்குள்ளும் வர ஆரம்பித்தார்கள். சும்மா வந்தார்கள், பின்னர் பொருள்கள் வாங்கினார்கள். பின் இவர் கடைக்கு வரத் தொடங்கி அப்படியே முன்னாலிருக்கும் கடைகளுக்கும் செல்லத் தொடங்கினார்கள். இப்படியே கூட்டம் கூடக் கூட வியாபாரம் சூடுபிடித்தது. வணிக முறையில் இதை நெட்வொர்க்கிங் எனச் சொல்லலாம். நம் பாரம்பரிய முறையில் இது ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல்.

இது ஏதோ பானிபூரிக் கடைக்கும் பூக்கடைக்குமான தொடர்பு மட்டுமல்ல, ஒரே தொழிலில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகளும் இத்தகைய சார்ந்திருத்தலையே முன்னிலைப்படுத்துகிறார்கள். ஊர்ப்பக்கம் நகைக்கடைகள் மொத்தமும் ஒரே வீதியில் இருக்கும். பக்கத்துத் தெரு முழுக்கத் துணிக்கடைகளாகவே இருக்கும். இவை தற்செயலாக நிகழ்ந்ததல்ல.

என்னதான் போட்டியாளர்களாக இருந்தாலும் ஒன்றாகச் சேர்ந்தும் - இயைந்தும் செயல்பட்டால்தான் பலம் என்பதைப் புரிந்துகொண்டதால்தான் பின்னலாடைத் தொழிற்கூடங்கள் அனைத்தும் ஒரே நகரத்தை மையமாகக்கொண்டு இயங்குகின்றன. தீப்பெட்டித் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் என்று Cluster-ராகச் செயல்படும் போட்டியும் ஒற்றுமையும் ஒருசேர இருக்கும் வெற்றிகரமான பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போக முடியும்.

சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையிலும் இந்த நேசமுறை இருக்கிறது. SAARC, ASEAN, BRICS, G7 என முன்னேறிய, முன்னேறும் நாடுகள் கூட்டாகச் செயல்படுவதன் நோக்கமும் ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான். அதுவும் பேரிடர் காலமான இப்போது இந்த ஒன்றிணைதல் மிகவும் அவசியம்.

இந்தச் சமூகத்தில் அடுத்தவரின் உதவி இல்லாமல் யாரும் இருந்துவிடமுடியாது. வியாபாரத்துக்கே இப்படியான கொடுக்கல் வாங்கல் தேவை என்றால், குடும்பத்துக்கும் தனி மனிதர்களுக்கும் இது எவ்வளவு முக்கியம்?!’ என்று எடுத்துச் சொல்லி, இந்தச் சமூகத்தோடு நட்பு பாராட்ட வேண்டியதன் அவசியத்தை முதல் பாராவில் புலம்பிய தந்தையின் MBA படிக்கும் மகளுக்கு எடுத்துரைத்தேன். அவரிடம் மாற்றத்தை உணரமுடிந்தது. அதற்கு என்னோடு அவர் உரையாடியதே சாட்சி.

‘`உறவினர்களோ அக்கம்பக்கத்தினரோ என்னைக் கண்டு பொறாமைப்பட்டால் பட்டுவிட்டுப்போகட்டும். அப்படிப் பொறாமைப்படுபவர்களை ஒதுக்கிவிடுவேன். மற்றவர்களிடம் பேசுவேன். என்னைப் பார்த்து ஒருவேளை என் வட்டத்தில் யாராவது உந்தப்பட்டு என்னைப்போலவே மேன்மேலும் கல்வியில் கவனம் செலுத்த விரும்பினால் அதற்கு நானும் அணுகக்கூடியவளாக இருக்கவேண்டும்தான். மாற்றம் என்னால் நிகழ்ந்தால் எனக்குத்தானே பெருமை!’’ என்றார் அவர்.

- பழகுவோம்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 13- சுவாமி சுகபோதானந்தா

லாக்டௌனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடைகள் திறந்துவிட்டன. மூடிவைத்திருந்த கடைக்கு வாடகை கட்டுவது தொடங்கி, பல வாரங்களாகக் கடைகளை மூடி வைத்திருந்ததால் பாழான பொருள்கள் எனப் பலவகையிலும் வியாபாரிகள் லட்சத்திலும் கோடியிலும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் நம்பிக்கையோடு மீண்டும் வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம் - வியாபாரத்தில் லாபமும் நஷ்டமும் இயல்புதான் என்று அவர்களுக்குத் தெரியும். வியாபாரத்தில் லாப நஷ்டங்கள் எவ்வளவு சாதாரணமோ அதேபோலத்தான் வாழ்க்கையிலும் கஷ்டநஷ்டங்கள் சாதாரணம் என்று தெரிந்துகொண்டால் நாமும் ‘இதுவும் கடந்து போகும்’ என்று சவாலான காலகட்டங்களைக் கொஞ்சம் எளிதாகக் கடந்துபோய்விடலாம். தண்ணீர் யார் உயிரையும் குடிப்பதில்லை. தண்ணீருக்குப் பழகாமல் அதை அணுகாமல் விலகியிருப்பவர்கள்தான் அதைப் பார்த்துத் திணறுகிறார்கள். பழகுதல் நலம்!