
செல்வம் இல்லாக் குடும்பங்கள் ஏராளம் இங்குண்டு. அதோடு சேர்த்து, கல்வி பயிலும் வாய்ப்பும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்தவன் நான்
“காலம்தான் ஆகச்சிறந்த ஆசான்’ எனப் பல அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அது உண்மையும்கூட. ஆனால் என்னுடன் சமீபத்தில் காணொலி வாயிலாகப் பேசிய ஒரு அன்பர், ‘‘காலத்தைப் போன்ற கல்நெஞ்சம் மிக்க ஒன்று இருக்கவே முடியாது’’ எனப் பேச்சைத் தொடங்கினார். அது படிப்படியாக விரிந்து தான் ஒரு கொடூரமான காலகட்டத்தில் இரக்கமே காட்டப் படாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் நம்பும் ஒரு கதையாக உருமாறியது.
‘‘செல்வம் இல்லாக் குடும்பங்கள் ஏராளம் இங்குண்டு. அதோடு சேர்த்து, கல்வி பயிலும் வாய்ப்பும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்தவன் நான். ஏகப்பட்ட வலிகளைச் சுமந்து, நெருக்கடிகளைக் கடந்து, அவமானங்களுக்கு ஆளாகி, சில மாதங்களுக்கு முன்புதான் நிலையான வருமானம் தரும் ஒரு சிறுகடையைத் திறந்தேன். என்னிடம் இருந்த கடைசி நூறு ரூபாயோடு, இத்தனை வருடங்களாக என்னைத் தெரிந்த வட்டத்தில் நான் சேர்த்து வைத்திருந்த நன்மதிப்பையும் சேர்த்துத்தான் இந்தக் கடையில் முதலீடு செய்தேன்.

கடைக்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்குவதற்கு முன்பே கொரோனா வந்துவிட்டது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் கடையைத் திறந்து வைத்திருந்த நாள்களைவிட மூடி வைத்திருந்த நாள்கள்தான் அதிகம். வருமானம் முற்றிலுமாக இல்லை. ஆனால் கடை வாடகை, பொருள்கள் வாங்கப் பெற்ற கடன், அதன் வட்டி, ஊழியர்களுக்கான சம்பள பாக்கி என நான் பிறருக்குத் தரவேண்டிய பணம் அதிகம். ஊரடங்கு முடிந்து தளர்வுகள் வந்துவிட்டாலும்கூட, கடன் கொடுத்தவர்கள் வந்து கேட்டால் அவமானமாகப் போய்விடுமே என்பதால் கடையை இன்னும் திறக்காமல் இருக்கிறேன். உலகமே இயல்பு நிலைக்கு வந்து இயங்கத் தொடங்கிவிட்டாலும் நான் மட்டும் வீட்டிற்குள் முடங்கிக்கிடப்பது ஏதோ நெருப்பின் மேல் உட்கார்ந்திருப்பதுபோல நொடிக்கு நொடி சுடுகிறது’’ எனச் சொல்லும்போதே அவர் கண்களில் கண்ணீர். வார்த்தைகள் வர மறுத்துத் தொண்டையை அடைக்க, மேலே பேசமுடியாமல் தடுமாறுகிறார்.
‘‘நீங்கள் தனித்து இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல லட்சம் பேர் படும் அவஸ்தைதான் இது. நஷ்டத்தின் விகிதம் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். ஆனால் வலி, அந்த உழைக்கும் வர்க்கம் முழுக்க ஒன்றுதான். உங்கள் வழியே கஷ்டப்படும் அந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ‘சந்தித்த நஷ்டத்தைப் பார்த்துத் துவண்டு முடங்குவதைவிட இந்தக் காலகட்டத்தை சவாலாக எடுத்துக்கொண்டு சமயோசிதமாகச் செயல்படுவது மட்டுமே முக்கியம்’’ என அவருக்கு ஆறுதல் கூறினேன்.
‘‘அட போங்க சாமி! இருக்குறதை எல்லாம் தொலச்சுட்டு தெருவுக்கு வந்துட்டேன். எனக்கு யார்கிட்டயாவது பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு. அதான் சொன்னேன். மத்தபடி இந்த ஆறுதல் எனக்கு எந்தவிதத்திலும் மீள உதவாது’’ என விரக்தி பொங்கச் சிரித்தார்.

‘‘உங்களோட பெரிய பலம் எது தெரியுமா, இதுதான்’’ என்றேன். ‘‘பலமா, எதைச் சொல்றீங்க சாமி?’’ எனப் புருவங்கள் இரண்டும் தலைமுடியை உரசும்படி உயர்த்திக் கேட்டார். அப்போது அவரிடம் நான் சொன்ன கதை இது.
வாட்சண்டையில் தேர்ந்த சாமுராய் அவன். அந்த ஊரில் நடக்கும் குற்றங்களுக்குத் தண்டனை அளிப்பவனும் அவனே. வீடு, நிலமற்ற நாடோடி ஒருவன் பசியில் ஒருநாள் அந்த ஊரின் ஒரு வீட்டில் உணவைத் திருட, வழக்கு சாமுராயிடம் வந்தது. ‘ஏதுமற்ற விவசாயியின் வீட்டில் திருடிய குற்றத்திற்குத் தண்டனை மரணம்தான்’ எனத் தன் வாளை உருவினான் சாமுராய். நிராயுதபாணியாக அவன் முன் மண்டியிட்ட நாடோடி தன் உயிருக்காக மன்றாடினான். ஆயுதமில்லாமல் அழும் அவனை நேருக்கு நேர் நின்று கொல்ல சாமுராயின் வீரம் இடம் தரவில்லை. அவனிடம் ஒரு வாளைத் தூக்கி வீசி, ‘வா, என்னோடு உன் உயிருக்காகப் போரிடு’ என்றான். நாடோடி அந்த வாளைத் தூக்கிய விதத்திலிருந்தே அவனுக்குச் சண்டை செய்து பழக்கமில்லை என சாமு ராய்க்குத் தெரிந்துவிட்டது. ‘அந்த வாளைப் பிடித்து முடிந்தால் உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்’ என்று கூறினான். ‘உனக்குச் சில மணிநேரம் அவகாசம். முடிந்தவரை வாட் பயிற்சி எடுத்துக்கொண்டு வா. வாளைத் தூக்கக்கூடத் தெரியாத உன்னை இப்போதே போரிட்டுக் கொல்வது என் வீரத்திற்கு அழகல்ல’ என அவனிடம் சொன்னான் சாமுராய்.
அந்த ஊரில் வாட்சண்டைக்குப் பயிற்சி அளிப்பதில் சிறந்தவர் யார் என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டு, ‘என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் ஐயா’ என அந்த குருவின் காலில் போய் வீழ்ந்தான் நாடோடி.
‘அந்தச் சாமுராய்தான் இந்நாட்டின் மிகச்சிறந்த வாள்வீரன். அவனோடு போரிட்டால் உனக்கு மரணம் நிச்சயம். ஆனாலும் நீ தேடி வந்து உதவி கேட்பதால் உனக்கு ஒரு சிறு உபாயம் சொல்கிறேன். நீ எவ்வளவு சீக்கிரம் அவனோடு சண்டையிடுகிறாயோ அவ்வளவு சீக்கிரம் நீ அவனை வெல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது’ என்றார் அந்த குரு.
நாடோடி ஒன்றும் புரியாமல் முழிக்க, ‘உன் மரணம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. இழப்பதற்கு உன் உயிரும் இனி உனக்குச் சொந்தமில்லை என்கிற நிலையில்தான் நீ இந்தச் சண்டைக்கே போகப்போகிறாய். ஆனால் அந்தச் சாமுராய் அப்படியல்ல. இந்தச் சண்டையில் அவன் வீரம், உயிர், பதவி, அவன் குடும்பத்தின் வாழ்வாதாரம் என ஏகப்பட்ட விஷயங்கள் பணயத்தில் இருக்கின்றன. எப்பேர்ப்பட்ட உடல் வலிமைமிக்கவனாக இருந்தாலும் இந்த விஷயங்களால் களத்தில் அவன் சிறிது சஞ்சலப்படக்கூடும். அந்த நொடியில் சரியாக நீ அவனைத் தாக்கினால் வெற்றி உனக்கே. நினைவில் கொள். வாள் அல்ல சிறந்த ஆயுதம்; நோக்கம்தான்’ என்றார் அந்த குரு.

விறுவிறுவென அந்தச் சாமுராயின் வீட்டிற்குச் சென்ற நாடோடி, ‘சண்டைக்கு நான் தயார். வா வெளியே. இன்று யார் வீரத்திற்கு வெற்றி முழக்கம் காத்திருக்கிறது எனப் பார்த்துவிடலாம்’ என்று கூக்குரலிட்டான். குழப்பத்தோடு வெளியே வந்த சாமுராய், ‘இதோ பார். உனக்கு இன்னமும் அவகாசம் உள்ளது. நீ போய் பயிற்சியெடுத்துக் கொண்டு வா’ என்றான். ‘வெல்லப்போகும் எனக்குப் பயிற்சி தேவையில்லை. உனக்கு பயமாக இருந்தால் நீ பயிற்சி எடுத்துக்கொள்’ என்றான் நாடோடி. இது சாமுராயின் தன்மானத்தைக் காயப்படுத்தியதோடு, அவன் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியது.
சலனத்தோடு சண்டை செய்யத் தொடங்கினான் சாமுராய். குரு சொன்னதைப் போல ‘தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’ என்கிற நோக்கில் ஒரு கணம்கூட கவனத்தைச் சிதறவிடாமல் சண்டையிட்டான் நாடோடி. காட்டுத்தனமான எந்த இலக்கணங்களுக்குள்ளும் அடைபடாத அவன் சண்டை முறை சாமுராயை சோதித்தது. குழப்பம், எதிராளியின் பலம் ஆகியவை எல்லாம் சேர்ந்து சாமுராயின் கவனத்தை ஒரே ஒரு நொடி சிதைக்க, அதைப் பயன்படுத்தி அவன் வாளை வீசித் தள்ளினான் நாடோடி. சாமுராய் தன் தோல்வியை ஒப்புக்கொண்டான்.
‘இழப்பதற்கு எதுவுமில்லாமல் இருப்பதும்கூட மிகப்பெரிய பலம்தான்’ என்பதை உணர்த்தச் சொல்லப்படும் ஜென் கதை இது.
காணொலியில் என்னிடம் பேசிய அன்பர் இந்த நாடோடியின் கதையைக் கேட்டு சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தார். என்றாலும் அவருடைய கண்களில் இருந்த விரக்தி அப்படியேதான் இருந்தது. அதைப் போக்கவும் கதை சொல்லலைக் கையிலெடுத்தேன்.
இந்த உலகில் வாழ்வதற்குத் தேவை எனத் தான் நம்பிய அத்தனை வித்தைகளையும் தன் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார் ஒரு தந்தை. தன் அந்திமக்காலத்தில், இதுவரை கற்றுக் கொடுத்ததோடு வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் தன் மகன்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்பினார். ‘‘நான் பிறந்து வளர்ந்த ஊருக்கு இதுநாள் வரை உங்களை அழைத்துச் செல்லும் சந்தர்ப்பம் அமையவில்லை. அங்கே என் வீட்டு முற்றத்தில் நான் நட்ட மரம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது எனப் பார்த்து வா’’ என்று தன் இளைய மகனை அனுப்பினார்.
போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது என்பதால் போய்வர அவனுக்கு மூன்று மாதங்கள் பிடித்தன. ‘‘மரம் எப்படி இருக்கிறது?’’ எனத் தந்தை கேட்க, சோகமான குரலில், ‘‘அது காய்ந்து போய் வெறும் சருகுகளோடு காட்சி தருகிறது’’ என்றான் அவன். ‘‘இவன் சின்னப் பையன். வேறு ஏதோ மரத்தைப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறான். நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்’’ என்று மூன்றாவதாய்ப் பிறந்தவன் கிளம்பினான். மூன்று மாதம் கழித்துத் திரும்பிவந்த அவன், ‘‘தம்பி சொன்னது தவறு. இலைகள் துளிர்விட்டு மரம் பசுமையாக இருக்கிறது’’ என்றான். ‘‘ஏன் இந்தக் குழப்பம்? நான் போய் தெளிவாகப் பார்த்துவிட்டு வருகிறேன்’’ என இரண்டாவது மகன் போய்விட்டுவந்து, ‘‘இரண்டு பேர் சொன்னதுமே தவறு. ஊரே மணக்கும் அளவுக்கு அந்த மரத்தில் பூக்கள் பூத்திருக்கின்றன’’ என்றான். மூத்த மகனும் தன் பங்கிற்குக் கிளம்பிப் போய்ப் பார்த்து மூன்று மாதங்கள் கழித்து வந்து, ‘‘அப்பா, இவர்கள் அத்தனை பேர் சொன்னதுமே தவறு. மரம் முழுதும் கொத்தும்குலையுமாகப் பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன’’ என்றான்.
இப்போது தந்தை சொன்னார். ‘‘நீங்கள் நான்கு பேர் சொன்னதும் சரிதான். ஒவ்வொருவரும் மரத்தின் ஒவ்வொரு பருவத்தைப் பார்த்துவிட்டு வந்து சொன்னீர்கள். ஒரே ஒரு பருவத்தை மட்டும் வைத்து மரத்தை அளவிட முடியாது. அதேபோலத்தான் வாழ்க்கையையும். இதை நீங்கள் உணர்ந்துகொள்ளவே உங்களை அனுப்பினேன்’’ என்றார்.
வாழ்க்கையில் இப்போது நாம் கடந்து கொண்டிருப்பதும் ஒரு பருவம்தான். இதை வைத்து மொத்த வாழ்க்கையையும் எடை போடத் தேவையில்லை.
காணொலியில் நான் இந்தக் கதையைச் சொல்ல, அதைப் புரிந்துகொண்டதுபோல மெலிதாய்ப் புன்னகைத்தார் அந்த அன்பர்.
பணம் முக்கியம்தான். ஆனால் அது இவ்வளவு இருந்தால்தான் சந்தோஷம் தரும் என்பதில்லை. அண்மையில் அரசு கொடுத்த நிவாரண நிதியை வாங்கிய மூதாட்டியின் முகத்தில் பெருக்கெடுத்த மகிழ்ச்சியை நீங்களும் பார்த்தீர்கள்தானே? நம் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது நாம் வைத்திருக்கும் பணமல்ல; அந்தப் பணத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.
- பழகுவோம்
*****

‘இந்தக் கொரோனா, வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்த இடத்தில் இருந்தே தொடங்கும்படி செய்துவிட்டதே’ என்பதுதான் இன்றைக்குப் பலரது கவலையாக இருக்கிறது. வாழ்க்கை சூனியமாகிவிட்டதாகப் பலரும் சோர்வடைகிறார்கள். இழப்பதற்குக்கூட என்னிடம் ஒன்றுமில்லை என்று பலரும் வருந்துகிறார்கள். குயவர்கள் வனையும் பானையைப் பாருங்கள். அதில் இருக்கும் வெற்றிடம்தான் அதனைப் பயனுள்ளதாக ஆக்குகிறது. நமது உபநிஷத்துகளில் ஒரு கதை உண்டு. ஒரு பெரிய விருட்சத்தில் இருந்து விழுந்த பழத்தைத் தன் மகனிடம் நீட்டி, ‘இதில் என்ன இருக்கிறது பார்’ என்று சொன்னார், ஞானியான அவன் தந்தை. அதை உரித்துப் பார்த்த மகன், அதில் ஏராளமான விதைகள் இருப்பதாகச் சொல்கிறான். அதில் ஏதாவது ஒரு விதையை உடைத்துப் பார்க்கச் சொல்கிறார் தந்தை. அவ்வாறே செய்த மகன் அதில் எதுவுமே இல்லை என்று சொல்ல, ஞானியான அவன் தந்தை, ‘ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துதான் விதை உருவானது. அதில் இருந்து பழம் உருவானது. அதில் இருந்து மரம் உருவானது. அதில் இருந்து பூ உருவானது. அதில் மீண்டும் பழம் உருவானது. ஒன்றுமே இல்லாத ஒன்றுதான் முடிவே இல்லாமல் மரங்களையும் பூக்களையும் பழங்களையும் விதைகளையும் உருவாக்கி வருகின்றன’ என்றாராம்.
‘ஒன்றும் இல்லாதவர்கள் என்று உலகில் யாருமே இல்லை’ என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் கதை இது.