
பெற்றோராக அவனுக்குச் செய்யவேண்டியதை எல்லாம் செய்துவிட்டோம். இதற்கு மேல் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை
கிராமமா, சிற்றூரா என இனம் பிரித்திட முடியாத ஒரு பகுதியிலிருந்து வந்து ஒரு குடும்பம் என்னைச் சந்தித்தது. முப்பது வயதைத் தாண்டியும் மகனுக்கு வரன் அமையவில்லை என்பது அந்தப் பெற்றோரின் வருத்தம். காலம் மாறிவிட்டது. முன்பெல்லாம் பெண்களுக்குக் குறிப்பிட்ட வயதில் திருமணம் நடந்துவிட வேண்டும் என்கிற கற்பிதத்தில் அவர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கியது சமூகம். அந்த வயது நெருங்க நெருங்க, திருமணமாக வேண்டும் எனப் பெற்றோர்கள் பதற்றமாகி தங்கள் பெண்ணைக் கூட்டிக்கொண்டு கோயில் கோயிலாகச் சுற்றுவார்கள். இப்போது ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களும் அந்த வரிசையில் இணைந்துவிட்டார்கள்.
‘‘பையனுக்கு கெளரவமா ஒரு வேலை இல்லை. ‘ஒரு நல்ல வேலையா தேடி செட்டில் ஆகுடா’ன்னு சொல்லிக்கிட்டே இருக்கோம். கேட்கவே மாட்டேங்கிறான். வயசு ஆகிட்டே போகுது. நாளாக நாளாக கல்யாணம் ஆகுமோ ஆகாதோன்னு பயமாவே இருக்கு’’ என மாறி மாறிப் புலம்பினார்கள் அந்தப் பெற்றோர். ஏற்கெனவே மனக்கஷ்டத்தில் இருக்கும் அவர்களிடம் ‘எது கெளரவமான வேலை, எது கெளரவமில்லாத வேலை’ என்கிற அரசியல் விவாதத்தைத் தொடங்க மனம் தடுக்க, மகன் பக்கம் கவனத்தைத் திருப்பினேன்.
‘‘எங்கள் ஊரைச் சுற்றிலும் சில பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கே உதவிப்பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தால் மிகச் சொற்பமான தொகையையே சம்பளமாகத் தருகிறார்கள். சரி, கம்பெனி எதற்காவது வேலைக்குப் போகலாம் எனப் பார்த்தால் இந்த நேரத்தில் பெரு நிறுவனங்களிலுமே சொற்ப சம்பளத்திற்குத்தான் ஆளெடுக்கிறார்கள். எம்.இ படித்துவிட்டு சொற்ப சம்பளத்தில் வேலை பார்க்க என் மனம் இடம்தரவில்லை. நான் இப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். எனக்குத் திருமணம் உள்ளிட்ட எந்த கமிட்மென்ட்டும் வேண்டாம்’’ எனக் கொஞ்சம் சத்தமாகவே கோபம், கவலை கலந்து தன் கருத்தை வெளிப்படுத்தினார் மகன். அந்த நேரம் பார்த்து அவர் செல்போன் சிணுங்க அதைக் காரணமாக வைத்து வெளியே போய்விட்டார்.
‘‘இப்படித்தான் அடிக்கடி கோபப்படுகிறான். இவனோடு படித்தவர்களுக்கெல்லாம் ஓரளவு நல்ல வேலை கிடைத்து அவர்களும் திருமணம், குழந்தைகள் என செட்டிலாகிவிட்டார்கள். இவன் மட்டும் தனிமரமாக நிற்கிறான்’’ என தாய் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது.
சமூகத்தின் மீது அந்த இளைஞனுக்கு இருக்கும் கோபம் நியாயமானதுதான். ஆனால், இத்தகைய சமூகத்திலிருந்து தன்னையே மீட்க முடியாத கையறு நிலையில் இருக்கும் ஒருவரால் எப்படி ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்து தன்னைவிடப் பல படிகள் கீழே இருக்கும் மாணவர்களைக் கைதூக்கிவிட முடியும் என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்தது.
‘‘எங்களுக்குத் தெரிந்தவரையில் அவனுக்கு நாங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை. கிராமத்தில் இருந்தால் பிற மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் இவனுக்குக் கிடைக்காமல் போய்விடக்கூடும் என்பதால், பல கிலோ மீட்டர்கள் தள்ளியிருக்கும் நகருக்குக் குடிவந்தோம். இசை, தற்காப்புக் கலை எனப் பல வகுப்புகளில் அவனைச் சேர்த்துவிட்டோம். சில நாள்கள் ஆர்வத்தோடு அந்த வகுப்புகளில் பங்கேற்பவன், கொஞ்சம் கொஞ்சமாய் அதில் ஆர்வம் இழந்துவிடுகிறான். ப்ளஸ் 2-வில் ஏகப்பட்ட டியூஷன்களில் சேர்த்துவிட்டும் குறைவான மதிப்பெண்களே பெற்றான். அதனால் நிர்வாக ஒதுக்கீட்டில் பணம் கட்டித்தான் இவனைப் பொறியியல் கல்லூரியிலேயே சேர்த்தோம். வளாக நேர்முகத்தேர்விலும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. சரி, வீட்டில் சும்மா இருக்கவேண்டாமே என எம்.இ சேர்த்துவிட்டேன். அதிலும் பாஸாகிவிட்டான். ஆனால் வேலைதான் கிடைக்கவில்லை.
பெற்றோராக அவனுக்குச் செய்யவேண்டியதை எல்லாம் செய்துவிட்டோம். இதற்கு மேல் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை’’ என அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளே வந்தார் அந்த இளைஞர்.

அவரிடம் பேச்சுகொடுக்கத் தொடங்கினேன். சில நிமிடங்களிலேயே அவருக்கு விளையாட்டில் அதீத ஆர்வம் எனத் தெரியவந்தது. உடனே ஒலிம்பிக்ஸ் பற்றிப் பேச்சைத் திருப்பினேன். எந்தெந்தப் போட்டிகளில் எந்தெந்த நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது தொடங்கி ஒவ்வொரு நாட்டின் வீரர்களும் எப்படியெல்லாம் தயாராகிறார்கள், ஸ்பான்சர்களின் வழி கோடிக்கணக்கில் பணம் எப்படிக் கொட்டுகிறது, அவர்கள் எப்படி வீரர்களுக்குப் போட்டி போட்டுக்கொண்டு உதவுகிறார்கள் என்பதுவரை ஏகப்பட்ட தரவுகளை விரல் நுனியில் வைத்திருந்தார்.
‘‘ திறமை மட்டும் போதாதா? கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் உள்கட்டமைப்புகளும், உபகரணங்களும், கணக்கே பார்க்காமல் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஸ்பான்சர்களும் இருந்தால்தான் ஒலிம்பிக்கில் ஒருவர் கலந்துகொள்ள முடியுமா?’’ என அவரிடம் கேள்வி எழுப்பினேன். இருப்பதிலேயே குறைந்த செலவாகும் போட்டி ஓட்டப்பந்தயம்தான். ஓடுவதற்குத் தரமான ஷூக்களும், சாப்பிட சத்தான உணவும், நம்மீது அக்கறையோடு கவனம் செலுத்தும் பயிற்சியாளரும் போதும் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற. இதைத் தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் ரேவதி, தனலட்சுமி, சுபா ஆகிய மூன்று பெண்களும் நிரூபித்துள்ளதாகப் பெருமையோடு சொன்னார் அந்த இளைஞர்.
‘‘இந்த மூன்று பெண்களுமே எளிமையான சமூகப் பின்னணியைக் கொண்டவர்கள். கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். தனலட்சுமி இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். பால் வியாபாரம் மூலம் கிடைக்கக்கூடிய சொற்ப வருமானத்தைக் கொண்டுதான் தனலட்சுமி இத்தனை தூரம் ஓடிவந்திருக்கிறார். ரேவதிக்கோ தாய் தந்தை இரண்டு பேருமே இல்லை. கூலித்தொழிலாளியான பாட்டியின் அரவணைப்பில்தான் வளர்ந்திருக்கிறார். வறுமையும், ‘பெண்களுக்கு எதற்கு விளையாட்டுப்போட்டி’ என்ற ஊரின் ஏச்சுப் பேச்சுகளையும் தாண்டித்தான் அவரும் இவ்வளவு தூரம் ஓடிவந்திருக்கிறார். ரேவதிக்கு ஊக்கம் கொடுத்தது பாட்டி என்றால், சுபாவுக்கு அவரி தாத்தா. கட்டடத்தொழிலாளியின் மகளான இவர், இத்தனை ஆண்டுகளாக போட்ட எதிர்நீச்சல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு வலிகள் கொண்டது. வாழ்க்கை இவர்களைப் புடம்போட்டிருப்பதால் இவர்கள் மூன்று பேருமே இன்று தங்கமாக மாறியிருக்கிறார்கள்’’ என சிலிர்த்துப்போய்ச் சொன்னார் அவர்.
சில நிமிடங்கள் முன்புவரை, ‘சரியான வேலை கிடைக்கவில்லை’ எனப் புலம்பியவரா இவ்வளவு நம்பிக்கையோடு பேசுகிறார் என்கிற ஆச்சர்யத்தோடு அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வையின் அர்த்தம் புரிந்து அவரும் சிரித்தார்.
‘‘காலம் உங்கள் மகனையும் நன்றாகவே புடம் போட்டிருப்பதால் இவருக்குள் இருக்கும் தங்கமும் வெகுவிரைவிலேயே வெளிப்படும்’’ என்று மட்டுமே அந்தப் பெற்றோர்களிடம் சொன்னேனே தவிர, அவர்கள் செய்த தவறுகளைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால், குழந்தை வளர்ப்பில் இவர்கள் செய்த தவறுகளைப் பிற பெற்றோர்களும் செய்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு சில விஷயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
பெரிய பெரிய மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் பளபளக்கும் புறநகர்ப் பகுதி அது. அங்கே ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கும் பொறியாளருக்கு மண்மணம் தவழும் பக்கத்துக் கிராமம் பிடித்துவிட்டது. அதனால், வேலைக்கு வந்த ஒரு சில வருடங்களிலேயே அந்தக் கிராமத்தில் சொந்தமாக ஒரு தனிவீடு வாங்கி அங்கு குடிபுகுந்தார். வீட்டுக்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் ஒரு சில மரக்கன்றுகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தார். மரம் நன்றாக வளர வேண்டும் என்ற ஆர்வத்தில் நாள் தவறாமல் அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றுவார். யார் எந்த உரத்தைப் பரிந்துரைத்தாலும் அதை வாங்கிவந்து அந்தக் கன்றுகளுக்கு இடுவார். அவருக்குப் பக்கத்து வீட்டில் அதிகம் படித்திராத ஒரு கிராமத்து மனிதர் இருந்தார். அவரும் இவரைப் போலவே பல மரக்கன்றுகளைத் தன் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் தோட்டத்தில் வளர்த்துவந்தார். கன்றுகளை நட்ட புதிதில் சில நாள்கள் தண்ணீர் விட்டதோடு சரி. அதன்பின் அவர் அந்தக் கன்றுகளைக் கண்டுகொள்ளவே இல்லை. ஐந்தாறு ஆண்டுகள் ஆயின. பொறியாளரின் தோட்டத்து மரங்கள் செழிப்பாக நெடுநெடுவென வளர்ந்திருந்தன. ஆனால் பக்கத்துவீட்டுக்காரரின் மரங்கள் அவ்வளவு உயரம் வளர்ந்திருக்கவில்லை.
ஒருநாள் அந்த ஊரில் கடும் மழையோடு சூறைக்காற்றும் சுழன்றடித்ததில் பொறியாளர் வளர்த்த மரங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகச் சாய்ந்துவிட்டன. ஆனால் கிராமத்து மனிதரின் தோட்டத்தில் ஒரு மரம்கூட விழவில்லை. தான் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த மரங்கள் சாய்ந்த கவலையைவிட, பக்கத்து வீட்டு மரங்களில் ஒன்றுகூடச் சாயவில்லை என்பதால் பொறியாளருக்குக் கவலை இரட்டிப்பானது.
இதற்கான காரணத்தைப் பக்கத்து வீட்டுப் பெரியவரே இவருக்கு விளக்கினார். ‘‘உங்கள் மரங்களுக்கு தினமும் தண்ணீர் விட்டீர்கள். அதனால் அவற்றின் வேர்களுக்குத் தண்ணீரைத்தேடி பூமியை ஊடுருவிச் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. வேர்கள் மண் பிடிப்பற்று இருந்ததால் வீசிய காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் மண்ணில் சாய்ந்துவிட்டன. ஆனால், நான் என் மரங்களுக்குத் தண்ணீரே விடவில்லை. அதனால் என் தோட்டத்து மரங்களின் வேர்கள் தண்ணீரைத்தேடி பூமியின் அடி ஆழம்வரை ஊடுருவியிருந்தன. அதனால்தான் என் மரங்கள் சூறைக்காற்றுக்குத் தாக்குப்பிடித்து உறுதி குலையாமல் நிற்கின்றன’’ என்றார்.
தங்கள் வேர்களைப் பரப்பித் தேடும் உழைப்பைப் பிள்ளைகள் செய்யட்டும், விடுங்கள்!
பழகுவோம்...
*****

‘’Don’t handicap your children by making their life easy’’ எனச் சொல்வார்கள். இதைத்தான் நம் ஊர் பக்கம் ‘வறுமையைப் போல ஒரு வாத்தியார் இல்லை’ என்று வேறு வார்த்தைகளில் கற்பிக்கிறார்கள். குழந்தைகளுக்கு வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் புரிய வேண்டும். புத்தகங்களில் தொடங்கி புத்தகங்களிலேயே முடிந்துபோவதல்ல அறிவு. ஏட்டு அறிவு எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் பட்டறிவு. உங்கள் குழந்தைகளுக்குப் பட்டறிவு கிடைப்பதற்கு ஒரு போதும் நீங்கள் தடைக்கல்லாக இருந்துவிடாதீர்கள்.
கூடவே இன்னொரு விஷயத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன். கொய்யா, மா, தென்னை என அனைத்துமே மரவகைகள்தான். ஆனால், கொய்யா காய்க்க ஒன்றரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். அதுவே மாமரம் என்றால் மூன்று ஆண்டுகளாகும். தென்னை என்றால் ஐந்து ஆண்டுகள். இதுவே பனைமரம் என்றால் அது காய்ப்பதற்கு இருபது ஆண்டுகள் ஆகும். ஆகவே, உங்கள் பிள்ளைகளை அடுத்தவரோடு தயவுசெய்து ஒப்பிட்டுப் பார்த்துக் கவலைப்படாதீர்கள். அது அவர்களுக்கு எந்த வகையிலும் உதவாது. அவர்களை அவர்களாகவே இருக்கவிடுங்கள். தட்டுத் தடுமாறி ஊன்றி எழுந்து நிமிர்ந்து நடந்து உயரங்கள் தொடுவார்கள்.