
- சுவாமி சுகபோதானந்தா
உலக வரைபடத்தில் இந்தியர்கள் இல்லாத நாட்டைக் காட்டுங்கள் எனச் சொல்லிக் கோடிக்கணக்கில் பந்தயமே கட்டலாம். அந்த அளவிற்கு பூமிப்பரப்பு முழுக்க நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் இந்தியர்கள். ஆனால் எந்த நாட்டில் வாழ்பவராக இருந்தாலும் சரி, ‘பிள்ளைகள் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை' என்கிற மன வருத்தம் நம்மவர்களிடையே நிறையவே உண்டு. கல்லூரி போகும் வயதில் பிள்ளை வைத்திருப்பவர்கள் தொடங்கி, இப்போதுதான் நடக்கப் பழகும் குழந்தையை வளர்ப்பவர்கள் வரை சகல பெற்றோர்களும் இதில் அடக்கம். இப்படியான பெற்றோர்களுக்காக ‘Art of Parenting' பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டிய அவசியம் இப்போது எங்களைப் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் அந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட ஒரு தந்தை, பேச ஆரம்பித்த அடுத்த நொடியே உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். ‘‘ஒரே ஒரு பெண்குழந்தைதான் எனக்கு. இப்போது அவளுக்கு 20 வயது ஆகிறது. கல்லூரியில் படிக்கிறாள். நான் பாரம்பரியமிக்க கல்விக்கூடங்களில் படித்தவன் என்பதாலும், நாட்டு நடப்பெல்லாம் தெரிந்தவன் என்பதாலும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள், சொந்தக்காரர்கள் என அனைவருமே தங்கள் பிள்ளைகளின் படிப்பு, வேலை தொடர்பான முக்கிய விஷயங்களை என்னோடு கலந்தாலோசித்துவிட்டுத்தான் முடிவெடுப்பார்கள். ஆனால் என் பெண்ணோ இதற்கு அப்படியே நேரெதிர். அவள் வாழ்க்கையில் நடக்கும் எதுவும் என் கவனத்திற்கு வருவதில்லை. பேசுவதே மிகவும் குறைவுதான். நானாக ஏதாவது பேச முயன்றாலும் முகத்தைக் கடுகடு என வைத்துக்கொண்டு ‘சும்மா ஆரம்பிக்காத டாடி’ எனச் சொல்லி வாயை அடைக்கிறாள்.
வெளியே போனால் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போவதில்லை. ‘எங்கே போற?’ என நான் கேட்டால், ‘அது தெரிஞ்சு என்ன பண்ணப்போற?’ என எரிந்து விழுகிறாள். ‘போற இடத்துல ஏதாவது பிரச்னைன்னா என்ன...’ என நான் முடிக்கும் முன்பே, ‘என்ன, சினிமாவுல வர்ற ஹீரோ மாதிரி பறந்து வந்து காப்பாத்திடுவியா?’ என வார்த்தைகளைக் கொட்டுகிறாள்.
படிப்பு, வேலை, நான் சந்தித்த மனிதர்கள், பயணப்பட்ட ஊர்கள், வடுக்களாகத் தேங்கிப்போயிருக்கும் வாழ்க்கை அனுபவங்கள் என அவளிடம் நான் எதைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தாலும், ‘உன் சுய புராணத்தை ஆரம்பிக்காதே’ என்று சொல்லிவிட்டு, காதில் ஹெட் போனை மாட்டிக்கொள்வாள். என்னிடம் நடந்துகொள்வதைப் போலத்தான் அவள் அம்மாவிடம் நடந்துகொள்கிறாள். ஆனால் என்ன வித்தியாசம் என்றால், என்னைப் போல அவள் அம்மா இவ்வளவு தூரம் பெண்ணைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மகளின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் எல்லையோடு அவள் நின்றுவிடுகிறாள். என்னால்தான் அப்படி இருக்கமுடியவில்லை.
‘சிங்கிள் சைல்டு’ என்பதால் இந்தப் பிரச்னையா? அல்லது, அளவுக்கு அதிகமாக அவள்மீது நான் அக்கறை செலுத்துவதுதான் அவளின் இந்தப் போக்குக்குக் காரணமா?’’ தன்னையும் மீறி வழியும் கண்ணீரைத் துடைத்தபடி என்னிடம் சோகமாகக் கேட்டார் அந்த அப்பா.
அப்போது இருந்த மனநிலையில் அவருக்கு அதிகம் தேவைப்பட்டது ஆறுதல் மட்டுமே என்பதால், அவரிடம் சில வார்த்தைகள் தேற்றுதலாய்ப் பேசிவிட்டு, என் மாணவர் எனக்கு அனுப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை அவரது தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி அதை அவரையே உரக்கப் படிக்கச் சொன்னேன்.
‘‘தொலைதூர நாடுகளுக்குப் பறக்கும் விமானங்கள் பெரும்பாலும் நடுநிசியில்தான் புறப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த என் மேலதிகாரியைத் திருப்பி அனுப்புவதற்காக நான் விமான நிலையம் போயிருந்தேன். அங்கே ஒரு தாய் தன் மகளைக் கட்டியணைத்து, ‘ஆண்டவன் உனக்கு எதைக் கொடுத்தாலும் அளவோடு கொடுக்கட்டும்’ எனக் கண்கலங்கியபடி உச்சிமுகர்ந்து வாழ்த்தி வழியனுப்புவதைக் கண்டேன். அந்தப் பெண்ணின் தலை மறையும் வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்த தாயின் கண்களில் பிரிவின் தடங்கள். தளர்ந்த நடையில் திரும்பி நடக்கத் தொடங்கிய அவருக்கு நடை தடுமாற, சட்டென அருகில் சென்று அவரைத் தாங்கிப் பிடித்து ஒரு நாற்காலியில் அமர வைத்தேன். ‘நல்லாருப்பா’ என்று வாழ்த்துவதைப் போல என்னைப் பார்த்த அவர், ‘அவ்வளவுதான் வாழ்கை’ என்று விரக்தியோடு சொன்னதைக் கேட்டபோது என் மனம் என்னவோ செய்தது. ஆறுதலுக்காக நானும் அவரது பக்கத்தில் அமர்ந்தேன்.
என்ன நினைத்தாரோ, நான் எதுவும் கேட்காமலேயே அவராகவே பேச ஆரம்பித்தார். ‘எனக்கும் என் பொண்ணுக்கும் நடக்கிற கடைசிச் சந்திப்பு இதுதான். அவளை நான் இன்னொரு முறை பார்க்கமட்டேன். ஏன்னா எனக்கு இருக்கும் நோய் அப்படி’ என்று நாத் தழுதழுக்கச் சொன்னார். ‘எங்களுக்கு ஒரே பொண்ணுதான். அதனால் செல்லமாகவும் வசதியாகவும் வளர்த்தோம். என் கணவருக்கு அவளை வெளிநாட்டிற்கு அனுப்பிப் படிக்க வைத்து செட்டில் செய்ய ஆசை. அது நிறைவேறும் முன்பே காலம் அவரைக் கொண்டுபோய்விட்டது. அவரது ஆசையை நிறைவேற்றத்தான் என் நோயையும் பொருட்படுத்தாமல் அவளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கிறேன்’ எனப் பெருமூச்சுகளுக்கு இடையே சொற்களைச் சிந்தினார்.
ஒரு டாக்ஸி பிடித்து அவரை ஏற்றிவிட்டு, ‘உங்கள் மகளை வழி அனுப்பும்போது, ‘ஆண்டவன் உனக்கு எதைக் கொடுத்தாலும் அளவோடு கொடுக்கட்டும்’ என்று சொல்லி வழி அனுப்பி வைத்ததைக் கவனித்தேன். இதற்கு முன்பு இப்படி ஒரு வாழ்த்தை நான் கேட்ட தேயில்லை’ என்று என் வினாவை வியப்பாக வெளிப் படுத்தினேன்.
‘அவளோட அப்பா இப்படித்தான் வாழ்த்துவார். அவரிடமிருந்து எனக்கு அந்தப் பழக்கம் வந்துவிட்டது’ என்றவர் அதற்கான விளக்கத்தையும் கூறினார்.
‘அளவு என்பது ஓர் எல்லைக்கோடு. மனிதனுக்கு இன்றியமையாதது மழை. ஆனால் அதுவும் அளவோடு தான் பெய்யவேண்டும். அப்போதுதான் உலகம் செழிக்கும். மழை என்றல்ல, வெயில், வெற்றி, வெறுப்பு, விருப்பு, லாபம், மகிழ்ச்சி, துயரம் என எல்லாமே அளவோடுதான் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாய்க் கிடைத்தால் சலித்துவிடும். குறைவாய்க் கிடைத்தால் வலிக்கும். இது இரண்டில் எது நடந்தாலும் வாழ்க்கை சுவைக்காது. அதனால்தான் ஆண்டவன் உனக்கு என்ன கொடுத்தாலும் அளவோடு கொடுக்கட்டும் என்று வாழ்த்துகிறோம்’ என்றார்.

‘இப்படி ஒரு முதிர்ச்சியான விளக்கத்தை நான் எதிர்பார்க்கவில்லை’ என்பதை என் முகபாவமே அவருக்குக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். ‘மகிழ்ச்சி அதிகமாய் இருந்தால் அதில் என்ன பிரச்னை?’ என உங்களுக்குக் கேள்விகள் எழலாம். அளவுக்கதிகமான மகிழ்ச்சி, உங்களுக்குள் தேடல் உணர்வைக் குறைக்கும். தேடல் குறைந்தால் சலிப்பு மேலிடும். அது வெறுப்பு, வக்கிரம் என எல்லாவற்றுக்கும் வழிவகுக்கும்’ எனச் சொல்லிவிட்டு விடை பெற்றார் அந்தத் தாய்.’’
என் மாணவரின் மெசேஜைப் படித்துவிட்டுத் தொலை பேசியிலிருந்து கண்களை எடுத்த அந்தப் பாசக்கார அப்பா, இப்போது என்னைப் பார்த்தார். ‘‘உண்மைதான் சுவாமி. நான் என் மகளுக்குத் தேவைக்கு அதிகமாகவே பணத்தைக் கொடுக்கிறேன். வசதிகள் செய்து கொடுக்கிறேன். இன்னொரு புறம் அவள்மீது நான் கொண்டிருக்கும் அதீத ஈடுபாட்டால், எனக்குத் தெரிந்த எல்லா விஷயங் களையும் அவளுக்குச் சொல்லிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் அளவுக்கு அதிகமாகவே தகவல்களைக் கொடுக்க முற்படுகிறேன். நான் சிரமப்பட்டுக் கற்ற வாழ்க்கைப் பாடங்களை அவள் சிரமம் இல்லாமல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்கெனவே சொன்ன அனுபவங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல முற்படுகிறேன். அதனால்தான் நான் பேச ஆரம்பித்தாலே அவளுக்கு அலுப்பும் சலிப்பும் உண்டாகிறது.
அவள் எதைப் பற்றிப் பேசினாலும், அதுபற்றிப் பாரா பாராவாகச் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன என்பது அவளுக்கும் தெரியும். அதனால், ‘எதற்கு தானாகவே இவரிடம் சிக்க வேண்டும்’ என்று அவள் என்னிடம் எந்த விஷயத்தைப் பற்றியும் பேசுவதில்லை என்பது எனக்கு இப்போது புரிகிறது. அமிர்தமாகவே இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் விஷமாக மாறிப்போகும் என்பது உண்மையே!’’ என்று சொன்ன அந்தத் தந்தை, தனக்குள்ளேயே ஏதேதோ அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டார்.
- பழகுவோம்
******

உலகின் சிறந்த சொல் - செயல். வசனமாய்க் கேட்டபோது நம்மில் நிறைய பேருக்கு சிலிர்த்திருக்கும். நாம் பேசுவதை நம்மைச் சுற்றி இருப்பவர்கள், ஏன் உலகம் முழுக்க இருப்பவர்கள் கேட்க வேண்டுமென்றால், அதற்கு இருப்பதிலேயே சிறந்த சொல்லைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆம், செயலில்தான் காட்டவேண்டும்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த ஆஷா கண்டரா இதற்கு மிகச்சிறந்த உதாரணம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஆஷா. திருமணமான சில ஆண்டுகளில் கணவன் பிரிந்து போய்விட, ஏற்கெனவே ஒடுக்கப்பட்டவர் இன்னும் ஒடுங்கிப்போனார்.
படித்துப் பட்டம்பெற்றவர்களுக்கே வேலை கிடைப்பது சிரமம் என்கிற சூழ்நிலையில், பள்ளிப்படிப்பை முடித்திராத ஆஷாவுக்கு எங்கிருந்து வேலை கிடைக்கும்? சென்ற இடங்களில் எல்லாம் வசவுகளும் புறக்கணிப்புகளுமே பதிலாகக் கிடைத்தன.
இந்தத் துயர்க்குழியிலிருந்து வெளியே வர கல்வி மட்டுமே உதவும் என்பதை உணர்ந்த ஆஷா, விட்ட இடத்திலிருந்து பள்ளிக்கல்வியையும் பின் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். ஆனாலும் பெரிதாக வாழ்க்கை மாறிவிடவில்லை. கிடைத்ததோ தூய்மைப் பணியாளர் வேலைதான். இரண்டு பிள்ளைகளுக்கும் தன் பெற்றோருக்கும் ஒரு வேளைச் சாப்பாடாவது போட வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் அந்த வேலையில் ஆஷா சேர்ந்தார். என்றாலும், சோர்ந்துவிடவில்லை.
கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு ராஜஸ்தான் மாநில அரசு நடத்தும் RAS தேர்வை எழுதி, அதில் தேர்ச்சிபெற்றார். எந்த நகராட்சியில் குப்பை கூட்டினாரோ, அதே நகராட்சியில் இப்போது ஒரு டெபுடி கலெக்டர் அந்தஸ்தில் அதிகாரியாக அமர்ந்திருக்கிறார் ஆஷா. அவரது வெற்றிக்கதையைக் கேட்க, அத்தனை தொலைக்காட்சி சேனல்களும் இப்போது காத்திருக்கின்றன. உலகின் சிறந்த சொல் - செயல்!