
- சுவாமி சுகபோதானந்தா
திருமணமாகிச் சில ஆண்டுகளே ஆன இளம் தம்பதி அவர்கள். ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது அவர்கள் என்னை நோக்கி வரும் தோரணையிலேயே தெரிந்தது. என் முன்னால் வந்து அமர்ந்தவர்கள் அவர்களாகவே மனம் திறக்கட்டும் எனக் காத்திருந்தேன். கணவன் இன்னமும் தயங்கியபடி இருக்க, மனைவி பேச ஆரம்பித்தார். ‘‘நாங்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். முதல் சில மாதங்கள் எங்களுக்குள் அன்பும் அந்நியோன்யமும் நிறைந்து வழிந்தது. என்னை விட்டுவிட்டு காபிகூட அவர் தனியாகக் குடிக்கமாட்டார். அந்த அளவிற்கு இருவருக்குமிடையில் நெருக்கம் இருந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கி இப்போது பெரிதாய் விரிசல் விழுந்துவிட்டதுபோல உணர்கிறோம். முன்னெல்லாம் அவர் அம்மா வீட்டுக்கு என்னைக் கூட்டிச் சென்றால் அங்கும் என்னையே முன்னிலைப்படுத்துவார். இப்போதோ தனியாக அவர் அம்மாவிடம் சென்று கிசுகிசுப்பான குரலில் ரகசியம் பேசுகிறார். இதெல்லாம் எனக்கு அச்சம் தருகிறது. அவர் என்னை விட்டு விலகிச் செல்வதுபோல உணர்கிறேன்’’ என்றார்.
உடனே இதற்கு பதில் சொல்லும் தொனியில் பேசத் தொடங்கினார் கணவர். ‘`இதெல்லாம் இவளின் வீண் கற்பனை சுவாமி. நானே எப்போவாவதுதான் என் பெற்றோரைப் பார்க்கப்போகிறேன். அப்போது எங்களுக்குள் நடக்கும் உரையாடல்களை எல்லாம் இவள் ஏதோ இவளைப் பற்றிப் பேசுவதாக நினைத்துக்கொண்டு கோபப்படுகிறாள். என் அப்பாவுக்கு சமீபத்தில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்தேன். ‘அதெப்படி உங்க அப்பாவுக்கு மட்டும் வாங்கித் தரலாம். என் அப்பாவுக்கும் வாங்கித் தந்தால்தானே நீ நியாயஸ்தன். என்னையும் வேலைக்குப் போகவிடாமல், என் பெற்றோருக்கு எதுவும் செய்யவிடாமல் செய்துவிட்டாய். நீயும் அவர்களுக்கு எதுவும் செய்வதில்லை’ என, பொறுக்கமாட்டாமல் சண்டை பிடிக்கிறாள்’’ என்றார்.

‘‘சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் நிஜம் சுவாமி’’ என்று அந்தப் பெண் பொல பொலவென்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
‘‘ஆரம்பத்தில் இந்த அழுகையைக் கண்டு நானும் பதறியிருக்கிறேன். நாம்தான் இவளை வீட்டோடு முடக்கிவிட்டோமோ எனக் குற்றவுணர்வுக்கு ஆளானேன். ஆனால் இவள் ஒவ்வொரு பிரச்னையிலும் அதையே சொல்லி என்னை டார்கெட் செய்யச் செய்ய எனக்கு அலுத்துவிட்டது. நாள் முழுக்க ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் சுற்றும் வேலை என்னுடையது. அசந்துபோய் வீட்டுக்கு வந்து சாப்பிட உட்கார்ந்தால், இவள் இப்படிப் பேசி மனதை நோகடிக்கிறாள். அவளுக்காகவும்தான் இவ்வளவு உழைக்கிறேன். ஆனால், அதைக் கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல் என்னைக் குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பது ரொம்பவே வலிக்கிறது’’ எனக் கலங்கிய குரலில் சொன்னார் கணவர்.
‘‘வேலைக்குப் போவதன் அலுப்பு எனக்கும் தெரியும் சுவாமி. நானும் கொரோனாவிற்கு முன்புவரை வேலை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன், கொரோனாவால் நான் வேலை பார்த்த நிறுவனத்தின் நிலைமை மோசமாயிற்று. சம்பளம் சரியாக வரவில்லை. அதே சமயம் எனக்கும் உடல்நிலை சரியில்லாமல்போகவே, வேலையை விடவேண்டியதாகிவிட்டது’’ என்றார் மனைவி.

உடனே கணவர் வேகமாக, ‘‘உங்களிடம் இவளை அழைத்து வந்ததே அதனால்தான் சுவாமி. ஒன்றுக்கு இரண்டு டாக்டர்கள் இவளுக்கு உடம்பில் ஒரு பிரச்னையும் இல்லை எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இவள் மனதுதான் எதையோ நினைத்துக் குழம்பிக்கொண்டே இருக்கிறது’’ என்றார்.
‘‘இவருக்கு என் பிரச்னை புரியவே மாட்டேங்கிறது சுவாமி. நீங்களாவது புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்’’ எனப் பீடிகையோடு தொடங்கினார் மனைவி.
‘‘குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடலாம் எனச் சொல்லி என்னை ஏகப்பட்ட கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வைத்தார். அதனால் நிகழும் பக்கவிளைவுகளைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். எனக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதில்லை. அது வரும் நேரத்திலும் உயிர் போய் உயிர் வரும் அவஸ்தை. நான் படும் வேதனையை அனுபவிக்க வார்த்தைகளே இல்லை’’ என நெஞ்சிலிருந்து தன் அனுபவ ரணங்களைக் கொட்டினார்.
‘‘என் வீட்டிலும் அக்கா, தங்கை, அம்மா என மூன்று பெண்களோடுதான் நான் வளர்ந்தேன். அவர்களுக்கு மாதவிடாய் இவள் அளவிற்குப் படுத்துவதில்லை. அந்த நேரத்திலும் அவர்கள் தங்கள் வேலைகளைக் குறை வைக்காமல் செய்வதைப் பார்த்தே வளர்ந்திருக்கிறேன். இவள் வீட்டில் பெண்களை மாதவிடாய் காலத்தில் ஒதுக்கிவைக்கும் பழக்கமுண்டு. பல காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அந்தக் கட்டுப்பெட்டித்தனங்களின் கடைசி மிச்சம் இவள். அப்படி வளர்ந்ததால் இப்போதும் மாதவிடாய் நேரத்தில் வேலைகள் செய்யாமல் ஒதுங்கிக்கொள்கிறாள். கேட்டால், ‘என்னால் முடியவில்லை’ என்கிறாள். என் வீட்டிலிருக்கும் பெண்களால் செய்யமுடியும்போது இவளால் செய்யமுடியாதா என்ன? எல்லாம் இவளுக்கு இருக்கும் மனத்தடை மட்டும்தான் சுவாமி. மற்றபடி உடம்புக்கெல்லாம் ஒன்றுமில்லை’’ என கணவர் இதற்கு தர்க்கரீதியாக சாக்குச் சொல்ல நிறையவே முயன்றார்.

இதைக் கேட்டுக் கோபப்பட்ட அந்தப் பெண் சட்டென எழுந்து வெளியே சென்றுவிட, அவரின் கணவர், ‘இப்படித்...’ எனத் திரும்ப ஏதோ சொல்ல வந்தார். அவரை அப்படியே நிறுத்தி ஒரு கதை சொல்லத் தொடங்கினேன்.
‘‘தன் அதிகாரத்தின் கீழ் வரும் ஒரு பள்ளியில் பாடங்கள் சரியாக நடத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கச் சென்றார் ஒரு மூத்த அதிகாரி. ஒன்றாம் வகுப்பிற்குள் சென்ற அவரைப் பதற்றத்தோடு வரவேற்றார் அந்த வகுப்பின் ஆசிரியர். ஒரு மாணவனை எழுப்பிய அதிகாரி, ‘நான் உனக்கு இரண்டு மாம்பழங்கள் தருகிறேன். உன் ஆசிரியர் உனக்கு மூன்று மாம்பழங்கள் தருகிறார். இப்போது உன்னிடம் எத்தனை மாம்பழங்கள் இருக்கின்றன?’’ எனக் கேட்டார். அந்த மாணவன் ‘ஆறு மாம்பழங்கள்’ என்றான். துணுக்குற்ற அதிகாரி மீண்டுமொரு முறை அந்தக் கேள்வியை மெதுவாக நிறுத்தி நிதானமாகக் கேட்க, மீண்டும் ‘ஆறு’ என்கிற பதிலே வந்தது.

இவன் நம் வேலைக்கு உலை வைத்துவிடுவான் போல என நினைத்த வகுப்பாசிரியர், ‘பதற்றப்படாதே கண்ணா, கேள்வியை நன்றாகப் புரிந்துகொள். அவர் உனக்கு இரண்டு ஆப்பிள்கள் தருகிறார். நான் உனக்கு மூன்று ஆப்பிள்கள் தருகிறேன். இப்போது உன்னிடம் எத்தனை ஆப்பிள்கள் இருக்கின்றன?’ எனக் கேட்டார். சரியாக ‘ஐந்து’ எனக் கூறினான் அந்த மாணவன். ஆசிரியரிடம் நிம்மதிப் பெருமூச்சு. ஆனால் அதிகாரியோ இன்னும் சமாதானமாகவில்லை. வகுப்பாசிரியர் ஏதோ சைகை காட்டியிருக்க வேண்டும் என நினைத்தார்.
எனவே எண்களை மாற்றி மீண்டும் கேட்டார். ‘நான் உன்னிடம் மூன்று மாம்பழங்கள் தருகிறேன். உன் ஆசிரியர் உன்னிடம் நான்கு மாம்பழங்கள் தருகிறார். இப்போது உன்னிடம் எத்தனை மாம்பழங்கள் இருக்கின்றன?’ என அவர் கேட்க, மாணவன், ‘எட்டு’ என்கிறான்.
‘அதெப்படிடா வரும்?’ என அந்த அதிகாரி சலிப்பாய் குரலை உயர்த்திக் கேட்க, ‘அட, ஏற்கெனவே என் அம்மா ஒரு மாம்பழம் எனக்குக் கொடுத்து அனுப்பியிருக்காங்க சார்’ என கூலாய்க் கூறினான் அந்த மாணவன்.

உண்மையில் அந்த மாணவன் முதலிலிருந்தே தெளிவாகத்தான் இருந்திருக்கிறான். அவனிடம் ஒரு பழம் இருக்கிறது என்கிற நிஜ நிலவரம் தெரியாமல், தாங்கள் உருவாக்கிய ஒரு பிராபளத்திற்கு அவனை விடை சொல்ல வைத்து அதையும் தப்பு எனக் கணித்திருக்கிறார்கள் ஆசிரியரும் அதிகாரியும். இப்படித்தான் உங்கள் மனைவி விஷயத்தில் நீங்களும் நடந்துகொள்கிறீர்கள். நீங்கள் முன்னரே உங்கள் வீட்டுப் பெண்களை வைத்து ‘இது இப்படித்தான் இருக்கும்போல’ கணித்துவைத்துவிட்டு அதேபோல உங்கள் மனைவியும் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். மாதவிடாய் என்பது எல்லாருக்கும் ஒரே போல இருக்காது. சிலருக்கு மூன்று நாள்கள் மட்டுமே இருக்கும். சிலருக்கு ஆறு நாள்கள் வரை படுத்தியெடுக்கும். ஒவ்வொருவரின் உடல்வாகைப் பொறுத்துதான் அவர் மாதவிடாயில் எவ்வளவு வலியை அனுபவிக்கிறார் என்பது இருக்கும். இதில் உங்கள் மனைவியை எவரோடும் ஒப்பிடும் தவற்றைச் செய்யாதீர்கள். அவருக்குத் தேவை அனுசரணையான வார்த்தைகளே தவிர உங்கள் வீண் தர்க்கங்கள் அல்ல’’ என்றேன். கணவர் புரிந்துகொண்டதுபோலத் தலையாட்டினார்.
‘‘உங்கள் மனைவிக்குக் கோபம் அதிகமாக இருக்கலாம். அது ‘நான் மட்டும் இந்தச் சமூகத்தால் வீட்டோடு முடக்கப்படுகிறேனே’ எனக் காலங்காலமாகப் பெண்களுக்கு இருக்கும் கோபம்தான். அது மிகவும் நியாயமானது. அதை நாம் குற்றம் சொல்லவே முடியாது. நாம் அவர்களுக்குத் தேவையான அங்கீகாரத்தைத்தான் தருவதே இல்லையே’’ எனச் சொல்லி முடித்தேன்.
‘‘புரிகிறது சுவாமி. அவளுக்குத் தேவையான சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார் அந்தக் கணவர். இப்போது உள்ளே வந்த மனைவியைக் கணவர் பார்த்தவிதத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. அதை உணர்ந்துகொண்ட மனைவி என் பக்கமாய் அர்த்தத்தோடு பார்க்க, நான் அவருக்கு ஒரு தகவலைப் படிக்கக் கொடுத்தேன். அது இங்கே பெட்டிச் செய்தியாக!

கண்களில் கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்களின் சமீபத்திய நம்பிக்கை நட்சத்திரம் மீராபாய் சானு. பதக்கம் வென்ற பொழுதின் கதை நம் அனைவருக்கும் தெரிந்ததே. அதற்கு முந்தைய நாள் இரவு மீராபாய் அனுபவித்த வலி அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். சரியாக அன்று மாதவிடாய் வந்துவிட, அவரும் பயிற்சியாளருமே கொஞ்சம் கலங்கித்தான் போயிருக்கிறார்கள்.
ஆனால், போன ஒலிம்பிக்கில் தவறவிட்டதை இந்த முறை பிடித்தே ஆகவேண்டும் என்கிற வைராக்கியம் மீராவை உந்தித்தள்ள, இப்போது வெள்ளி தவழ்கிறது இந்தியாவின் கழுத்தில். முயன்றால் முடியாதது என எதுவுமுண்டோ?