மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 2 - சுவாமி சுகபோதானந்தா

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G

நம்பிக்கைத் தொடர்

நாய்களிடமிருந்து அன்பையும் விசுவாசத்தையும் கற்றுக்கொள்வதைப் போலவே வேறு சில வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம். நாம் செல்லமாக வளர்க்கும் அவையும் நமக்கு குட்டிக் குட்டி போதனைகள் செய்யும் வழிகாட்டிகளே! அவற்றிடம் ஒரு பந்தைக் கொடுத்துப் பாருங்கள். பசி, தூக்கம் மறந்து விளையாடிக்கொண்டே இருக்கும். பந்துக்கு அது பழகியபின் அதனிடம் ஒரு பேப்பரை பந்து வடிவில் சுற்றிக்கொடுத்தால்கூட அதை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும்.

நம்மில் பலரும் அந்த மனநிலையில்தான் இருக்கிறோம். வாழ்க்கையில் சில பிரச்னைகள் தோன்றுகின்றன. அதிலிருந்து நம் முயற்சியால் விடுபடுகிறோம். இப்போது நம் வாழ்க்கையில் பிரச்னைகள் பெரிதாக இருக்காது. ஆனால் பிரச்னைகளுக்குப் பழக்கப்பட்ட மனம் என்ன செய்யும்? அதுவே பிரச்னைகளைப் புதிதாக உருவாக்கி அதோடு நம்மைப் போராட வைக்கும். நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு நிகழ்வது இது. நிஜத்தில், நேர்த்தியாகச் சுற்றப்பட்ட நூல்கண்டைப் போலத்தான் நம் வாழ்க்கை. அதைச் சிதைத்து, விடுபடக் கடினமான சிக்கலாக்குவது முழுக்க முழுக்க நாம்தான்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 2 - சுவாமி சுகபோதானந்தா

ஒரு விடுமுறை நாளில் அரை மணி நேரம் கூடுதலாகத் தூங்கலாம் என்று நினைத்தால், ‘`ஏம்மா... காஸ் சிலிண்டர் தீர்ந்துபோச்சு. புதுசு மாத்திடவா?’’ என்று காபிப் பொடி டப்பாவைக் கையில் வைத்துக்கொண்டு கணவர் எழுப்புவார். ‘சரி’ என்று அரைத் தூக்கத்தில் தலையாட்டிவிட்டுப் போர்வைக்குள் இதமாகத் தலையை இழுத்துக்கொண்டால், ஒரு சில நிமிடங்களில், ‘`புது சிலிண்டரே பதியலையா, அதுவும் காலியாத்தான் இருக்கு?’’ என சமையலறையிலிருந்து அவர் குரல் ஓங்கி ஒலிக்கும். ‘`உங்க போன் நம்பர்ல இருந்துதானே பதிய முடியும். போன வாரமே பதியச் சொன்னேனே... மறந்துட்டீங்களா?’’ என, போர்வையிலிருந்து விலகி, தூக்கம் கெட்டுப்போன எரிச்சலில் மனைவி பதிலளிப்பார். வாக்குவாதம் ஆரம்பமாகிவிடும்.

‘`நீ எங்க சொன்னே? சும்மா என் மேலே பழியைப் போடாதே!’’

‘`உப்புப்பெறாத விஷயத்துக்கெல்லாம் பொய் சொல்ற ஆளு நான் இல்லை.’’

‘`அப்படின்னா நான் பொய் சொல்றேன்னு சொல்றியா?’’

மகள் குறுக்கே புகுந்து, ‘`இரண்டு பேரும் கொஞ்ச நேரம் சத்தம் போடாம இருக்கீங்களா... ஓவர்சீஸ் க்ளையன்ட்டோட நான் ஜூம் மீட்டிங்ல இருக்கேன்’’ என்று இரண்டு பேரையும் அதட்டுவார்.

‘`வீடுன்னா சத்தம் வரத்தான் செய்யும். அப்படி உனக்கு போன் பேசணும்னா உன் ரூம் கதவைச் சாத்திக்கோ’’ என்று மகளிடம் அம்மா எகிறுவார்.

களேபரங்களெல்லாம் ஓய்ந்தபிறகுதான் உண்மை தெரியும். ரெகுலேட்டரை ஆன் செய்யாமலேயே அடுப்பைப் பற்றவைக்க முயன்றிருப்பார் கணவர். காஸ் சிலிண்டர் உண்மையில் தீரவே இல்லை. இருப்பதை இல்லை என்று நினைத்துக்கொள்வதால், இல்லாத பிரச்னைகள் முளைக்கின்றன.

ஒரு பெண்மணி சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் முடித்துவிட்டு, கேஷ் கவுன்ட்டரில் பணம் கொடுப்பதற்கு ஹேண்ட் பேக்கைத் திறந்தபோதுதான், தன் டூ வீலர் சாவியைக் காணவில்லை என்பதை உணர்ந்தார். ‘வழக்கம் போல வண்டியிலேயே சாவியை விட்டுவிட்டேன் போலிருக்கு’ என்று வாசலில் ஓடிப்போய்ப் பார்த்தார். அங்கே வண்டியைக் காணவில்லை. அவருக்கு கணவரிடம் இதைப் பற்றிச் சொல்ல பயம். ‘வண்டியிலேயே சாவியை விடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். எவனாவது வண்டியைத் திருடிட்டுப் போயிடுவான்’ என்று பலமுறை கண்டித்த மனிதர் அவர். இப்போது சொன்னால் இன்னும் மோசமாகத் திட்டுவார்! பயந்துபோன அந்தப் பெண்மணி, சூப்பர் மார்க்கெட் மேலாளரிடம் தன் வாகனம் திருட்டுப் போன விஷயத்தைச் சொல்லி முறையிட்டார். விவரங்களைக் கேட்ட அவர், உடனே செக்யூரிட்டி ஆட்களிடம் தகவல் சொன்னார். ‘`கவலைப்படாதீங்கம்மா... சிசிடிவி கேமராவில் பார்த்துக் கண்டுபிடித்துவிடலாம்’’ என்று நம்பிக்கை கொடுத்தார் அந்த மேலாளர்.

அந்த நேரத்தில் அவர் கணவரிடமிருந்து போன். வாகனம் தொலைந்த விஷயத்தைச் சொல்லியாக வேண்டுமே என்று பயந்து அந்தப் பெண்மணி போனை எடுக்கவில்லை. என்ன ஆனாலும் ஆகட்டும் என போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

இப்போது சூப்பர் மார்க்கெட் மேனேஜரின் செல்போன் அலறியது. போன் பேசியதும் உற்சாகமான மேனேஜர், அந்தப் பெண்மணி பக்கம் திரும்பினார். ‘`உங்க வண்டி கிடைச்சுடுச்சும்மா. அதைத் திருடிக்கிட்டுப் போனவன் வண்டியோட திரும்ப நம்ம கடைக்கே வந்திருக்கான். செக்யூரிட்டிங்க பிடிச்சு வச்சிருக்காங்க. வாங்க போகலாம்’’ என்று கூப்பிட்டார். வாசலுக்குப் போன அந்தப் பெண், அங்கே தன் கணவரைப் பார்த்த அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றார்.

‘`அடியே... உன் ஞாபகமறதியில் இடி விழ! நீ இன்னைக்குக் கடைக்குத் தனியா வரலை. நான்தான் உன்னை இங்கே டிராப் பண்ணிட்டு, பக்கத்துத் தெருவில் இருக்கிற ஏடிஎம்முக்குப் போயிட்டு வர்றேன்னு போனேன். உன்னை அழைச்சுட்டுப் போக இங்க திரும்ப வந்தா, என்னை வண்டி திருடன்னு செக்யூரிட்டிங்க வந்து பிடிக்கறாங்க’’ என்று கணவர் கதறினார். அவரின் மனைவி உடனே ஃபுல் ஃபார்முக்கு மாறினார். ‘`வழக்கம்போல நான் தனியா வண்டியில இங்க வந்திருந்தா இவ்வளவு பிரச்னை வந்திருக்காது. நீங்க ஏடிஎம் போகணும்னு என் கூட வந்ததால்தான் இத்தனை குழப்பமும்’’ என்று கணவரைக் குற்றம் சாட்ட, இன்னொரு புதிய பிரச்னை அங்கே உருவானது. யோசித்துப் பார்த்தால் இங்கே யார்மீதும் தவறில்லை. மறதி மனித இயல்பு. அதனால் ஒரு சிறு பிழை நடக்கிறது. ஆனால் அது இவ்வளவு பெரிய சிக்கலாவது முழுக்க முழுக்க நம் இயல்பினால்தானே!

சமீபத்தில் ஒரு குடும்பத்தோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எளிய வாழ்க்கை முறையில் பெரிதாக நம்பிக்கை இல்லாத குடும்பம் அது. அவர்களின் எண்ணவோட்டம் அறிய ‘`நம் வீடு அமைதியாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று அவர்களிடம் பொதுவாகக் கேட்டேன். ‘`வீட்டின் கதவைச் சாத்திக்கொண்டாலே போதும், சத்தம் வராது’’ என்றார் அந்த வீட்டுப் பையன். ‘`கதவைச் சாத்திவிட்டால் வீட்டுக்குள் காற்றும் வெளிச்சமும் எப்படி வரும்?’’ என்று கேட்டதற்கு, ‘`விளக்கையும் ஃபேனையும் போட்டுக்கொள்ளலாம். போதாதென்றால் ஏ.சி போட்டுக்கொள்ளலாம்’’ என்றார்.

‘`ஃபேன் மற்றும் ஏ.சி-யில் இருந்து சத்தம் வருமே... பிறகு எப்படி அந்த இடம் அமைதியாக இருக்கும்?’’ என்று கேட்டேன். ‘`சென்ட்ரலைஸ்டு ஏ.சி போடலாம். ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களில் இருப்பதைப்போல இரட்டைக் கதவுகளைப் போடலாம். மொத்த வீட்டையும் இன்ஸுலேட் செய்யலாம்’’ என்றார் அவரின் தங்கை. ‘`சரி, அப்போது சுவாசிப்பதற்கு சுத்தமான காற்று இருக்காதே?’’ என்ற கேள்விக்கு, ‘`ஏர் ப்யூரிஃபயர் வாங்கி வைத்துவிடலாம்’’ என்று அவரின் அண்ணன் பதில் சொன்னார். நவீன வாழ்க்கை முறை இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்குத்தான் நம்மைப் பழக்கப்படுத்துகிறது. சத்தத்தை எழுப்பத்தான் நாம் கைகளைத் தட்டி ஒலி எழுப்ப வேண்டும். அமைதியை உருவாக்க நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை.

கம்பங்கூழும் கேழ்வரகு அடையும் அற்புதமான உணவுகள். ஆனால், இவற்றைப் பலரும் சீண்டுவ தில்லை. தெரியாத தொலைதூர தேசத்தில் விளையும் ஓட்ஸ்தான் உயர்ந்தது என்று கருதுகிறோம். இளநீர் என்றால் நம்மில் பலருக்கும் இளக்காரம். பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களைத் தேடுகிறோம். இளநீரைத் தெருவோரமும், குளிர்பானங்களைக் குளிர் சாதனப் பெட்டியிலும் வைத்து விற்கிறார்கள். பைசா செலவில்லாமல் விளையும் கீரைகளை விடவும், பல நூறு ரூபாய் விலை வைத்து விற்கும் ஆரோக்கிய பானங்களே சிறந்தவை என்று நினைக்கிறோம். எல்லா ஆப்பிளும் ஒரே மாதிரி சத்துள்ளவைதான். ஆனால், பார்ப்பதற்கு அழகாக, நசுங்காமல் நல்ல வடிவத்தில் இருப்பதையே தேடி எடுக்கிறோம்.

பண்டங்களாக இருந்தாலும் சரி, எண்ணங்களாக இருந்தாலும் சரி, மனிதர்களாக இருந்தாலும் சரி... சிம்பிளாக இருந்தால் நம்மில் பலருக்குப் பிடிப்பதில்லை. பண்டங்களுக்கும், மனிதர்களுக்கும் பிறகு வருவோம். முதலில் எண்ணங்களை எடுத்துக்கொள்வோம்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 2 - சுவாமி சுகபோதானந்தா

சமீபத்தில் என்னைச் சந்தித்த மாணவர் ஒருவர் சொன்னதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவருக்கு சாதாரண காய்ச்சல்தான். ‘கொரோனாவாக இருக்குமோ’ என்று பயந்து பரிசோதனை செய்துகொண்டார். ‘கொரோனா இல்லை’ என்பது தெரிந்துவிட்டது. ஆனாலும் அவராகவே ‘இது டெங்கு காய்ச்சலா, அல்லது, டைபாய்டு வந்திருக்குமோ? உள்ளுக்குள் மோசமான நோய் ஏதோ இருப்பதன் அறிகுறியோ?’ என்றெல்லாம் பயந்து டாக்டரிடம் போயிருக்கிறார். அவர் இவரின் பயத்தைப் பார்த்து, பிளட் டெஸ்ட் தொடங்கி, ஸ்கேன் வரை சகலவிதமான பரிசோதனை களையும் எடுக்கச் சொல்லியிருக்கிறார். பரிசோதனை களின் முடிவில் அவருக்கு ஒன்றுமில்லை, அது சாதாரண காய்ச்சல்தான் எனத் தெரிந்துவிட்டது. நியாயமாக இதற்கு அவர் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? ஆனால், இவ்வளவு டெஸ்ட் செய்தும் எதுவுமில்லை என முடிவுகள் வந்துவிட்டதே என்பதுதான் அவரின் வருத்தம். முன்பே சொன்னதைப் போல நமக்கு நாமே சிக்கல்களை உருவாக்கி அதை உறுதிப்படுத்த சில காரணிகளையும் தேடியலைகிறோம்.

நம் கண்ணில் தூசு விழுந்தால் தானாகவே கண்ணீர் சுரந்து தூசை வெளியேற்றிவிடுகிறது. சுவாசக்குழாயில் ஒரு சின்னப் பருக்கை போனால்கூட, தும்மல் வந்து அதை வெளியேற்றிவிடுகிறது. கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டுவிட்டால், அதை உடல் கண்டறிந்து வெளியேற்றிவிடுகிறது. நம் உடலுக்குள் ஒரு நோய்க்கிருமி நுழைந்தால், நம் உடலில் இருக்கும் நோய்த்தடுப்பு அமைப்பு அதை எதிர்த்துப் போராடி வலுவிழக்கச் செய்துவிடுகிறது. உடலுக்குக் கேடு தரும் அந்நிய விஷங்களையோ, விஷயங்களையோ நம் உடல் தானாக வெளியேற்றிவிடுவதைப்போல தேவையில்லாத எண்ணங் களைத் தானாகவே வெளியேற்றும் மெக்கானிசம் நமக்கு இல்லை. அந்த எண்ணங்களை பூதாகரமாகப் பெருகச் செய்து தீராத சிக்கலில் நம்மை நாமே தள்ளிவிடுகிறோம்.

உண்மையைச் சொல்வதென்றால், பல நேரங்களில் நமக்குப் பிடித்த ஆடைகளைக்கூட நாம் அணிவதில்லை. நமக்கு வசதியான ஆடைகளைக்கூட அணிவதில்லை. அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பதற்காக அவர்களைக் கவரக்கூடிய ஆடைகளை அதிக பணம் செலவழித்து வாங்கி அணிகிறோம். ஆடைக்குப் பொருந்துவது, ஏற்கெனவே சொன்னதைப்போல உணவுக்கும் பொருந்தும். பெரிய ஹோட்டலில், வாயில் நுழையாத பெயரில் இருக்கும் அந்நிய உணவுகளைச் சாப்பிடுவதுதான் கெளரவம் என்று பலரும் நினைக்கிறோம். உடுத்தும் உடை, உண்ணும் உணவு, இருக்கும் வீடு, பயன்படுத்தும் வாகனம், படிக்கும் படிப்பு, செய்யும் வேலை என்று அனைத்துமே அடுத்தவர்களின் கண்களுக்கு மதிப்பாகத் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நாம் தேர்ந்தெடுக்கிறோம்.

நம் எண்ணங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு மூலகாரணமே, இப்படி ‘அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்று கவலைப்படுவதுதான். Feeling Good, Being Good, Looking Good என்ற மூன்றில் மூன்றாவதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதுதான் முழுப் பிரச்னைக்கும் மூலகாரணம்.

- பழகுவோம்...