மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 20

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது

- சுவாமி சுகபோதானந்தா

என் அதிகாலைகள் நடைப் பயிற்சிக்கானவை. ஒருபுறம் மழலையின் தயக்கத்துடன் மெதுவாக எட்டிப்பார்க்கும் சூரியன், மற்றொருபுறம் புற்களோடு உறவு கொண்டாடிவிட்டு நாளை வருகிறேன் என்கிற வாக்குறுதியோடு மேலெழும்பும் பனி... இரண்டுக்குமிடையில் நடைபயில்வதன் ஏகாந்தம் வார்த்தைகளில் அடங்காது. அப்படி ஒரு நாள் நான் நடந்துகொண்டிருந்தபோது எதிர்ப்பட்டான் ஒரு இளைஞன். ‘குட்மார்னிங் சாமி’ என அவன் வணக்கம் வைக்க, ஒரு புன்னகையோடு நானும் பதில் வணக்கம் வைத்தேன். பின் எதுவும் பேசாமல் என்னோடு நடக்கத் தொடங்கினான்.

சில பத்தடிகளுக்குப் பின் மெளனம் கலைத்து, ‘‘ஜோசியம் சொல்லுவீங்களா சாமி? எனக்கும் பார்த்துச் சொல்றீங்களா?’’ என்று கேட்டான்.

‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாதே!” என்றேன்.

‘‘அப்படின்னா, கைநிறைய சம்பாதிக்கிற மாதிரி ஒரு நல்ல வேலை கிடைக்க, மந்திரிச்ச தாயத்து, தகடு, கயிறுன்னு எனக்கு ஏதாவது கொடுப்பீங்களா சாமி!” என்று மீண்டும் கேட்டான்.

‘‘அதெல்லாம் என்கிட்ட இல்லவே இல்லையே!’’ என்று கைகளை விரித்தேன்.

‘‘அப்படின்னா, எதுக்கு சாமி, உங்களைத் தேடி நிறைய பேர் வர்றாங்க?’’ என்று நேரடியாகவே ஆர்வம் பொங்கக் கேட்டான்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 20
Matthias Schrader

‘‘இந்தக் கேள்விக்கான பதிலை அவங்க கிட்டதான் கேட்கணும்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘என்னைப் பற்றி இவ்வளவு கேள்விகள் கேட்கிறாயே... நான் உன்னிடம் பதிலுக்கு ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். இங்கு குடிவந்த இரண்டே மாதத்தில் நான்கு வேலைகள் மாறிவிட்டாயே ஏன்?’’ என்று கேட்டேன்.

அவனோ என் கேள்வியைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ‘‘ஞான திருஷ்டின்னு சொல்லுவாங்களே... அது உங்களுக்கு இருக்கா? அதான் உங்களைத் தேடி இத்தனை பேர் வர்றாங்களோ?’’ என்று மீண்டும் என்னைப் பற்றித் தெரிந்துகொள்வதிலேயே ஆர்வம் காட்டினான்.

‘‘ஞான திருஷ்டியெல்லாம் இல்லை. அடிக்கடி உன்னுடைய கம்பெனி யூனிஃபார்ம் மாறிக்கொண்டே இருக்கிறதே. அதை வைத்துத்தான் கேட்டேன்!’’ என்றேன்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 20
Matthias Schrader

‘‘உங்களுக்கு நல்ல அப்சர்வேஷன் பவர் சாமி! தினமும் வேலைக்குப் போகும்போது நான் உங்களைப் பார்த்துக்கொண்டேதான் போவேன். ஆனால், நீங்களும் என்னை கவனிக்கறீங்கன்னு இப்பத்தான் எனக்குத் தெரியும்’’ என்று எனக்குச் சான்றிதழ் கொடுத்துவிட்டு, ‘‘ஆமாம் சாமி. எனக்கு ஒரு வேலையும் செட்டாக மாட்டேங்குது’’ என்று சோகம் தோய்ந்த குரலில் சொல்ல, சடுதியில் அவனது முகத்தில் கவலையின் ரேகைகள் தோன்றின.

‘‘ஆரம்பத்துல ஒரு டிவி ஷோரூமில்தான் சேல்ஸ் பாய் வேலை பார்த்தேன். அங்கே என் செக்‌ஷன்ல இன்னொரு பையனும் இருந்தான். அவன் என்னைவிட ரொம்ப உயரம். ஆளும் சிவப்பா இருப்பான். கடைக்கு வர்றவங்களும் சட்டுனு அவன்கிட்ட போய்டுவாங்க. நான் ஒரு டிவி விக்கிற நேரத்துல அவன் ரெண்டு டிவி வித்துடுவான். இப்படியே போனா சரிப்படாதுன்னு ஒரு பெரிய மொபைல் ஷோரூம்ல வேலைக்குப் போனேன். எனக்கு ஓரளவு இங்கிலீஷ் பேச வரும். பேசன்னுகூடச் சொல்லமுடியாது. சமாளிக்கத் தெரியும் அவ்வளவுதான். ஆனா, அங்கே இருந்த பசங்க எல்லாரும் இங்கிலீஷ் நல்லாப் பேசுவாங்க. அதனால அங்கேயும் அதே கதைதான். மன உளைச்சல் தாங்காம ஒரு நகைக்கடை வேலைக்கு மாறினேன். நகை வியாபாரத்துல பல வருஷ அனுபவம் இருக்கிறவங்ககூட என்னால போட்டி போட முடியல. ஒருகட்டத்துல அவங்களே என்னை வேலையை விட்டு அனுப்பிட்டாங்க. இப்போ ஒரு பைக் ஷோரூம்ல வேலை கிடைக்கிற மாதிரி இருக்கு. அங்கே எப்படி சமாளிக்கப்போறேன்னு தெரியல’’ எனப் புலம்பி முடித்தான் அந்த இளைஞன்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 20
Matthias Schrader

தனக்கு இருக்கும் வசதிகளைப் பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையில் உழலும் பல்லாயிரம் இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்குமான நம்பிக்கை நட்சத்திரமாய் உயர்ந்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. இந்தியாவின் தங்க மகன். ராணுவத்தில் சாதாரண ரேங்கில் வேலை பார்த்துவரும் நீரஜ் ஒலிம்பிக்கிற்குத் தேர்வானது, தன்னைவிட ராணுவ அனுபவத்தில் சிறந்த பல்லாயிரம் பேரைத் தாண்டித்தான். ஈட்டி எறிதல் என்றல்ல, தடகளத்திலேயே ஆசிய வீரர்கள் பெரிதாக சோபிக்க மாட்டார்கள் என்கிற மனநிலை இருக்கிறது. உணவு வழக்கம், உடல்வாகு, உள்கட்டமைப்பு இல்லாதது என இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றையெல்லாம் தாண்டித்தான் இன்று தங்கம் வென்று நம்மை மகிழ்ச்சியில் திண்டாட வைத்திருக்கிறார் நீரஜ்.

இறுதிப்போட்டியில் தன்னைவிட அனுபவம் வாய்ந்த, உடல்வாகில் பெரிதான பலரையும் வென்று வெற்றியை நீரஜ் எட்டிப் பிடித்த காரணம் அவர் கண்ட கனவு. ஈட்டியை எந்த வாக்கில் பிடிக்கப்போகிறேன், எப்படி ஓடப்போகிறேன், எவ்வளவு தூரம் ஓடியபின் கையை உயர்த்தப்போகிறேன், எவ்வளவு டிகிரிக்கு உயர்த்தப்போகிறேன் என அணு அணுவாய்க் கனவு கண்டு அதை நிஜத்தில் திட்டமிட்டு வென்று காட்டியிருக்கிறார்.

தன்னுடைய வெற்றிக்கான ரகசியம் என்று இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நீரஜ் குறிப்பிட்டிருக்கிறார். நன்றாகத் தூங்கி எழுந்தால்தான் போட்டியின் போது சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்பதால் போட்டியின் முந்தைய நாள் இரவு அவர் தூங்க நிறையவே பிரயத்தனப்பட்டிருக்கிறார். ஆனால், அவரால் தூங்க முடியவில்லை. ஒருவழியாக இரவு சுமார் 12.30 மணிக்கு மேல் கண்ணயர்ந்திருக்கிறார். ஆனாலும் உடல் அணுக்கள் முழுக்க ஆட்டம்போடும் பரபரப்பு அவரை 5.30 மணிக்கே உசுப்பி எழுப்பிவிட்டிருக்கிறது. இந்தத் தூக்கம் போதாது என நினைத்தவர் மீண்டும் தூங்க முயன்றிருக்கிறார். ஆனாலும் 6.30 மணிக்கு மீண்டும் முழிப்புத் தட்டிவிட்டது. ‘‘அந்த நொடியில் உடல் முழுக்க நெருப்பு கனன்று பரவியது. பதைபதைப்புக்குள்ளாகிக்கொண்டே இருந்தது உடல். ஆனால் மனம் மட்டும் ‘Have Fun’ எனப் பயிற்சியாளர் சொன்ன இரண்டு வார்த்தைகளில் மையமிட்டிருந்தது. என் எண்ணம் முழுவதும் ‘Lets have fun’ என்பதாக மாற்றிக்கொண்டேன். அதனால் உற்சாகமாகக் களமாடி வெற்றிபெற முடிந்தது’’ எனப் பின்னர் பகிர்ந்துகொண்டார் நீரஜ்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 20

‘நம்மால் முடியுமோ முடியாதோ’ எனப் புறக்காரணங்களால் உந்தப்பட்டு சுயத்தை சந்தேகிக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு நீரஜின் வெற்றிக்கதை நம்பிக்கை அளிக்கக்கூடும். இங்கே நீரஜிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள இன்னொரு முக்கியப் பாடமும் இருக்கிறது. சிறுவயதில் நீரஜ் ஓரிடத்தில் நிற்காமல் துறுதுறுவென ஓடிக்கொண்டே இருந்ததால் அவரை ஓட்டப்பந்தயப் பயிற்சியில் ஈடுபடுத்த மைதானத்திற்கு அழைத்துச் சென்றார் நீரஜின் தந்தை. ஆனால் நீரஜுக்கு ஓட்டப்பந்தயத்தில் ஈர்ப்பு ஏற்படவில்லை. மைதானத்தின் மற்றொருபுறம் நிகழ்ந்துகொண்டிருந்த ஈட்டி எறிதல் போட்டியில்தான் அவர் கவனம் லயித்திருந்தது. தனக்கு எது விருப்பம் என்பதைக் கண்டறிந்து அதில் கடினமாக உழைத்து முன்னேறி உலகம் வியக்கும் இளைஞனாக மாறியிருக்கிறார் நீரஜ்.

ஒருவரின் விருப்பம், ஆற்றல், அதற்கான தேவை மூன்றும் சந்திக்கும்போது வெற்றி பெறும் முனைப்பு பலமடங்காகிறது. வெற்றியும் எளிதாய் வசமாகிறது. நம்முடைய துறை எதுவென்பதைத் தேர்ந்தெடுத்து வெற்றிநடை போட இளைஞர்களுக்கு நீரஜின் கதை ஒரு வழிகாட்டியாய் நிச்சயம் இருக்கும்.

******

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 20

ஆதிமனிதனின் கூடு காடுதான். வாழ்வில் குழப்பம் ஏற்படும்போதெல்லாம் காட்டின் மீது கவனம் குவித்தால் தெளிவு பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனாலேயே எனக்குக் காடுகளின் மீது, குறிப்பாக மனிதன் தோன்றியதாகக் கூறப்படும் ஆப்பிரிக்கக் காடுகளின் மீது அலாதி ஆர்வம். டான்சானியாவில் இருக்கும் செரங்கெட்டி காடுகளில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக்கூட உங்களிடம் பகிர்ந்துகொண்டதாக நினைவு. இப்போதும் காடுகளில் நடந்த ஒரு ஆய்வைப் பற்றிச் சொல்லத்தான் இவ்வளவு பீடிகையும்!

உணவுச்சங்கிலியில் மட்டுமல்லாமல் கானகத்தின் பல்லுயிர்ச்சங்கிலியிலும் முக்கிய இடம் பிடித்திருக்கும் மான் - சிறுத்தை பற்றிய ஆய்வு அது. ஆப்பிரிக்கக் காடுகளின் தலைசிறந்த வேட்டைக்காரன் சிறுத்தைதான். வேகம் வேட்டைக்கு மிக முக்கிய அம்சம் என்பதால் காட்டுராஜா சிங்கத்தைவிட வேட்டையில் தீவிரம் மிக்கது சிறுத்தை. ஆனால் மானை வேட்டையாட சிறுத்தை முனையும் பெரும்பாலான நேரங்களில் அதற்குத் தோல்வியே கிடைக்கிறது என்பதுதான் அந்த ஆய்வின் முடிவுகள். காட்டின் வேட்டைக்களம் சமமான வாய்ப்புகள் உள்ள களமல்ல. காடு எப்போதுமே வேட்டையின் பக்கம்தான். ஆனால் அப்படிப்பட்ட களத்திலேயே தன்னைவிடப் பலமடங்கு பலம் வாய்ந்த சிறுத்தையை ஒரு மான் திரும்பத் திரும்ப வெல்கிறதென்றால் அதன் காரணம்? தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் தேவை அதற்கிருக்கிறது. அந்தத் தேவையே உயிர்வாழும் விருப்பமாக மாறுகிறது. அந்த விருப்பம் சிறுத்தையையே வேகத்தில் விஞ்சும் ஆற்றலை வழங்குகிறது. வெற்றி வசமாகிறது. இவ்வளவுதான் வாழ்க்கை!