மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 21

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

- சுவாமி சுகபோதானந்தா

’தயவு செய்து என்னைப் புரிஞ்சுக்கோ!’

‘ப்ளீஸ், நீ சொல்றதை நீயே பாலோ பண்ணலாம்ல! நான் சொல்றதைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு!’’

எனக்கு முன்னால் வந்து அமர்ந்த ஒரு இளம் ஜோடி, மனம் திறக்க எடுத்துக்கொண்ட நேரம் பத்து நிமிடங்கள். அதிலிருந்து ஐந்தாவது நிமிடம் இப்படி தங்களுக்குள் சண்டை போடத் தொடங்கிவிட்டார்கள். உணர்ச்சி வேகத்தில் அந்தப் பெண், ‘‘காசு, நேரம்னு எல்லாத்தையும் கணக்கு பார்க்காம செலவு செஞ்சு, உனக்கு பெரிய ஓட்டல்ல பிறந்தநாள் பார்ட்டி கொடுக்கணும்னு நினைச்சேன் பாரு. என்னைச் சொல்லணும்’’ என வார்த்தைகளைக் கொட்ட, ‘‘நானா கேட்டேன் எனக்கு பார்ட்டி வைன்னு? நீயா முடிவெடுத்துப் பண்றதுக்கு எல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும்?’’ என முகத்திலறைவது போல அந்தப் பையன் பதிலுக்குப் பேச, அறையே சூடானது. இருவரும் தங்கள் எல்லையை மீறி இன்னொருவரின் வெளிக்குள் பிரவேசிப்பதை உணர்ந்து மெளனமானார்கள்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 21

சிறிது நேரம் கழித்துத் தன் மெளனம் கலைத்த அந்தப் பெண், ‘‘பர்த்டே அன்னைக்கு பார்ட்டியில் அவன் எப்படி நடந்துகிட்டான்னு நீங்களே அவனைக் கேளுங்க சுவாமி. பார்ட்டிக்கு வந்த எங்க அப்பா அம்மாவை வரவேற்காம, அவன் அக்கா வீட்டுக்காரரோட பேசிட்டு இருந்திருக்கான். பார்ட்டி முடிஞ்சு அவங்க கிளம்பும்போதும்கூட அவங்களை முறையா வழியனுப்பலை’’ என்று சொல்ல, குறுக்கிட்ட அந்த இளைஞன், ‘‘பொய் சொல்லாத, உங்க அப்பா அம்மா வந்த அதே சமயம்தான் என் அக்கா மாமாவும் வந்தாங்க. அவங்களை ‘வாங்க’ன்னு சொல்லிட்டு இந்தப் பக்கம் வர்றதுக்குள்ள உன் அப்பாவும் அம்மாவும் விருட்டுனு என்னைக் கடந்து போய்ட்டாங்க. இதுல என் தப்பு என்ன இருக்கு? என்னைத் தப்பு சொல்றதுலயே இருக்கியே... நீ என் அப்பா அம்மாவைக் காக்க வச்சது மட்டும் சரியா என்ன? அவங்களை ஏழு மணிக்கு டான்னு வரச் சொல்லிட்டு நீயே ஆடி அசைஞ்சு எட்டு மணிக்குத்தானே வந்த. அவங்களோ நானோ இதுக்கு ஏதாவது சொன்னோமா என்ன?’’ எனத் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

‘‘நான் என்ன சும்மா தூங்கிட்டு இருந்தேனா என்ன? உனக்குப் பிடிச்ச கேக் ஆர்டர் பண்ணி அதை வாங்கிட்டு வர்ற வழியில வண்டி மக்கர் பண்ணிடுச்சு. அப்படியும் நீ எதுவும் அபசகுனமா நினைச்சுடக்கூடாதேன்னு அவசர அவசரமா ஆட்டோ பிடிச்சு கேக்கை எடுத்துட்டு வந்தேன். வந்தவுடனே அதுக்கு ஸாரியும் கேட்டேனே!’’ என பதிலடி கொடுத்தார் அந்தப் பெண்.

‘ஸாரி’ என்கிற வார்த்தையில் இருந்த நியாயம் அந்த இளைஞனைக் கொஞ்சம் சாந்தப்படுத்தியது. மெல்ல நிதானத்திற்கு வந்தவர், ‘‘எல்லாம் போகுது விடு. பார்ட்டினு ஒண்ணு ஏற்பாடு பண்ணுனதே எல்லாரும் சந்திச்சு சந்தோஷமா இருக்கணும்னுதானே. ஆனா, நாம சந்தோஷமா இருந்தோமா அன்னிக்கு, யோசிச்சுப் பாரு?’’ என, தணிந்த குரலில் கேட்டார்.

‘‘எனக்கும் எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னுதானே ஆசை. சாப்பாட்டுலதான் இது பெரிய பிரச்னையாகிடுச்சு. ரெண்டு பேர் வீட்லயும் நான் வெஜ் நல்லா சாப்பிடுவாங்கன்னு தான் அன்னிக்கு மெனுவுல நான் வெஜ் நிறைய சேர்த்திருந்தேன். ஆனா உங்கம்மா திடீர்னு வந்து, ‘இன்னிக்கு சனிக்கிழமை. நான்வெஜ் சாப்பிடமாட்டோம்’னு சொல்லுவாங்கன்னு எனக்கென்ன தெரியும்? ரெஸ்ட்டாரன்ட் மூடுற நேரம் வேற. இதுக்கு மேல தனியா சமைக்கமுடியாதுன்னு மேனேஜர் சொல்றாரு. நான் என்ன பண்ணட்டும்? அப்படியும் விட்டுக்கொடுக்காம அவங்களுக்காக மேனேஜர் கூட சண்டை போட்டேன் தானே? அதைப் பத்தியெல்லாம் பேசமாட்றீயே?’’ என ஆதங்கமாகக் கூறினார் அந்தப் பெண்.

‘‘சண்டையா, ரெண்டு பேர் போட்டாதான் அது சண்டை. அவரை நீ அப்படித் திட்டுனதைப் பார்த்து எல்லாருக்குமே தர்மசங்கட மாயிடுச்சு. என் அப்பா அம்மாகிட்ட உன்னை எப்படிப் பெருமையா சொல்லி வச்சிருந்தேன் தெரியுமா? அவங்க உன்னை அந்த நேரத்துல பார்த்த பார்வை எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.’’

‘‘அவங்களுக்காகத்தானே சண்டை போட்டேன். அது அவங்களுக்குப் புரியலனாலும் நீ சொல்லிப் புரிய வச்சிருக் கலாம்ல. அதுக்கும் என்னைப் பொறுப்பாக்குனா நான் என்னதான் பண்றது?’’

இவர்களுக்குள் இந்த உரையாடல் இப்போதைக்கு முடியாது என எனக்குத் தோன்ற அவர்களை நிறுத்தி, சில விஷயங்களைச் சொன்னேன். அவர்களுக்குத் தங்கள் தவறு புரிந்தது. சமாதானமாகிச் சென்றுவிட்டார்கள். ‘அவ்வளவுதான். எல்லாம் சுபம்’ என்று சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்க முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அன்று பார்ட்டியில் நடந்த அத்தனை கசப்பான அனுபவங்களுக்கும் யார் மூல காரணம் என ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதில்தான் இவர்கள் இருவரும் தங்கள் அறிவு, ஆற்றல், ஆளுமை, அனுபவம் என அனைத்தையும் செலுத்திக்கொண்டிருந்தார்களே தவிர, பிரச்னையைத் தீர்க்க அல்ல. இதைச் செய்வது அவர்கள் மட்டுமல்ல, நம்மில் பெரும்பான்மையானவர்களும்தான். அதனால் அவர்களுக்குச் சொன்னதை இங்கேயும் சொல்கிறேன்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 21

சூழலைக் கையாளும் திறன் குறித்து எந்தப் பள்ளியும் பெற்றோரும் கற்றுக்கொடுப்பதில்லை. வாழ்க்கை அனுபவத்தால் சிலர் கற்றுத் தேர்கிறார்கள். மற்றவர்கள் இறுதிவரை இந்த ஜோடியைப் போலத் தடுமாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

நம் வீட்டு விசேஷத்திற்கு ஒரு உறவினர் வருகிறார். அவரை வரவேற்று உபசரித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு முக்கியஸ்தர் வந்தால் பெரும்பாலானவர்கள் உறவினரை அம்போ என்று விட்டுவிட்டு அந்த முக்கியஸ்தரை உபசரிக்கப் போய்விடுவார்கள். இப்போது அந்த உறவினரின் நிலைமை மிகவும் தர்மசங்கடம். ஆனால் சூழலைச் சரியாகக் கையாளும் ஒருவர், அந்த முக்கியஸ்தரை உறவினருக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு, ‘பேசிட்டு இருங்க’ என விலகி அடுத்த ஆளை வரவேற்கப் போய்விடுவார். இது எல்லாருக்குமான Win - Win தீர்வு.

வித்தியாசமான சூழ்நிலைகள் எல்லாருடைய வாழ்க்கையிலும் வந்துகொண்டேதான் இருக்கப்போகின்றன. அதை எப்படிப் பக்குவமாக எதிர்கொள்கிறோம் என்பதுதான் நாம் யார் என்பதைத் தீர்மானிக்கிறது.

காதலிக்கும் பெண் அல்லது மனைவிக்கு நீங்கள் சொன்ன ஒரு பொய் தெரிந்துவிடுகிறது. அப்போது உங்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? எந்தச் சூழ்நிலையில் நீங்கள் அந்தப் பொய்யைச் சொல்ல வேண்டியிருந்தது என்பதை வெளிப்படையாக எடுத்துச் சொல்லி விளக்கம் கொடுப்பீர்களா, அல்லது, ‘நீ மட்டும் ஒழுங்கா?’ என்று கேட்டு இருவருக்குமிடையேயான விரிசலைப் பெரிதுபடுத்துவீர்களா?

பரபரப்பான வேலைநாள் ஒன்றில் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக ஒரு பொருளை வாங்க ஷாப்பிங் மால் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே எதிர்பாராத விதமாக உங்களுக்குக் கீழே பணிபுரியும் ஊழியர் ஒருவரைப் பார்க்கிறீர்கள். ‘`வொர்க் ஃப்ரம் ஹோம்னு சொல்லிட்டு இங்கே என்ன செய்கிறாய்?’’ என்று அதிகார மிடுக்கோடு கேட்பீர்களா, அல்லது, ‘‘நீங்களும் லேப்-டாப்போட இங்க உட்கார்ந்துதான் வேலை செய்றீங்களா?’’ என்று, அவரைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமல், உங்களின் கெளரவத்தையும் விட்டுக்கொடுக்காமல் நடந்து கொள்வீர்களா?

கையில் ஒரு தேநீர்க்கோப்பையுடன் ஒரு மாணவன் நின்றுகொண்டிருந்தான். அப்போது வேகமாக எதிரே வந்த யாரோ ஒருவர் மோதியதில் டீ சிந்திவிடுகிறது. ‘ஸாரி’, என்றுகூடச் சொல்லாமல் அவன் கடந்து சென்றுவிட, பக்கத்தில் இருந்த ஆசிரியர் மாணவனைப் பார்த்து, ‘‘ஏன் டீயைக் கீழே சிந்தினாய்?’’ என்று கேட்கிறார்.

தன்னை மோதிவிட்டுப் போகிறவனைச் சுட்டிக் காட்டி, ‘‘அவன்தான் டீயைச் சிந்தினான்’’ என்று பரிதாபமாக அந்த மாணவன் சொன்னான். ‘‘சரி, மோதிவிட்டுப் போகிறானே... அவனை எதுவும் சொல்லாமல் இருக்கிறாயே... ஏன்?’’ எனக் கேட்டார் அந்த ஆசிரியர். ‘‘நான் திரும்பிப் பார்த்தபோது அவர் நடையில் ஒரு பதற்றம் இருந்தது. அதனால் அவர் வேண்டுமென்றே இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே நான் அவரைத் திட்டுவதிலோ மன்னிப்பு எதிர்பார்ப்பதிலோ பயனில்லை’’ என ஆசிரியருக்கே பாடமெடுத்தான் அந்த மாணவன்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 21

எதிரே வந்து மோதியவனைப் போலத்தான், வாழ்க்கையில் சூழ்நிலைகளும். கையில் வைத்திருப்பதை அந்நேரம் இழக்க நேர்ந்தாலும் நிதானம், பொறுமை ஆகியவற்றைக் கைக்கொண்டால் அந்தச் சூழ்நிலையைப் பக்குவமாகக் கையாளலாம். சொல்வதற்கு எளிதென்றாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வெற்றிகொள்வது கடினம்தான். பயிற்சியால் முடியாதது எதுவுமுண்டோ?

சூழ்நிலைகளை எதிர்கொள்ள இன்னுமொரு உத்தியும் உங்களுக்குப் பயன்தரக்கூடும் என்பதால் அதையும் சொல்கிறேன். ஒரு சவாலான சிச்சுவேஷன் வரும்போது நீங்கள் ஆதர்சமாக நினைக்கும் மனிதர், உங்கள் இடத்தில் இருந்திருந்தால் அவர் அந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வார் என்று கற்பனை செய்து பாருங்கள். உளவியல்ரீதியாக, ‘நாம் தனியாக இல்லை. நம் ரோல்மாடலுக்கும் இப்படி நடக்கும்தான்’ என்கிற எண்ணமே நமக்கு ஒரு பலத்தைக் கொடுக்கும். புதிதாய் ஒரு பாதை பிறக்கும். அந்தப் பாதையே உங்களுக்குத் தேவையான தெளிவையும் நம்பிக்கையையும் கொடுக்கக்கூடும்.

- பழகுவோம்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 21

வாழ்கையில் நிகழும் சூழ்நிலைகளை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் அதில் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறோம் என்பதை நாம் தீர்மானிக்க முடியும். எடுத்தவுடனே ஆபத்தான விளைவுகளை எண்ணிக் குலைந்துபோய்விடக்கூடாது. கிரிக்கெட்டில் நம்மை நோக்கி வரும் பந்து நம்மை அவுட்டாக்கும் பந்தாகவும் இருக்கலாம்; ஆறு ரன்களைக் கொடுக்கப்போகும் பந்தாகவும் இருக்கலாம். எப்படி அடிக்கவேண்டும் என நீங்கள் தீர்மானிப்பதில் இருக்கிறது அந்தப் பந்தின் முடிவு. நம் வாழ்க்கையின் சூட்சுமமும்கூட!