மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 22

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது

- சுவாமி சுகபோதானந்தா

சமூகம் நமக்குள் பதிய வைத்திருக்கும் கற்பிதங்களுள் ஒன்று, சொந்தமாக வீடு வாங்கினால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற்றதாக அர்த்தம் என்பது. பலரும் இந்தக் கற்பிதத்தை நம்பி மெய்யாக்கவே பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னைச் சந்தித்த இளைஞர் ஒருவர், ‘சொந்தமா வீடு வாங்கினதுதான் நான் பண்ண பெரிய தப்பு சார்' எனப் புலம்பித் தீர்த்தார்.

‘‘பெரும்பாலான இளைஞர்களைப் போலதான் நானும் பெத்தவங்க, சொந்தக்காரங்க, வளர்ந்த ஊர்னு எல்லாத்தையும் விட்டுட்டு சென்னைக்கு வேலை பார்க்க வந்தேன். கைக்கும் வாய்க்குமே பத்தாத சொற்ப சம்பளம்தான் தொடக்கத்துல. கொஞ்சம் கொஞ்சமா வேலை பிடிபட, வருமானமும் உயர ஆரம்பிச்சது. பையன் நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாலே அடுத்து கல்யாணம்னுதானே பெத்தவங்க யோசிப்பாங்க. எனக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சாங்க. ‘நான் வளர்ந்ததெல்லாம் வாடகை வீடுதான். கல்யாணத்துக்கு அப்புறமாவது நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு இருந்தா நல்லாருக்கும்’னு என் மனைவி கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னாங்க. அதனால அதுபத்தி ஒருபக்கம் யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.

‘ஒரு கேட்டட் கம்யூனிட்டில வீடு புக் பண்ணியிருக்கேன். பக்கத்துலயே ஸ்கூல், ஹாஸ்பிடல், டிபார்ட்மென்டல் ஸ்டோர்னு எல்லாமே இருக்கும். எந்நேரமும் பாதுகாப்புக்கு செக்யூரிட்டிங்க இருப்பாங்க. இதுதவிர நீச்சல் குளம், ஜிம்னு ஏகப்பட்ட வசதிகள் இருக்கு’ன்னு என் நண்பன் ஒருநாள் சொன்னான். மறுநாளே அங்க மாடல் வீட்டைப் பார்க்க நானும் என் மனைவியும் போனோம். ரெண்டு பேருக்குமே அந்த வீடு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா விலை எங்க பட்ஜெட்டைத் தாண்டி இருந்தது. ‘ரொம்ப யோசிக்க வேணாம்ங்க. கல்யாணத்துக்குப் போட்ட நகையை வச்சு டௌன் பேமென்ட் கட்டிடலாம். மீதிப் பணத்துக்கு ஹவுசிங் லோன் வாங்கிட்டா வாடகைப் பணத்துக்குப் பதிலா ஈ.எம்.ஐ கட்டப்போறோம். சமாளிச்சுடலாம் தானே?’ன்னு என் மனைவி கேட்க, எனக்கும் சரின்னுதான் தோணுச்சு. புக் பண்ணிட்டோம்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 22

சொந்த வீட்டுக்குக் குடிபோற நாள் நெருங்க நெருங்க என் மனைவிக்கு இருப்புக் கொள்ளலை. எனக்கும் கடைசியா இவ்வளவு பெரிய ஊருல நமக்குன்னு ஒரு கூடு இருக்கேன்னு சந்தோஷம். ஆனா, சொன்ன தேதியில வீடு கைக்கு வரலை. அதோ இதோன்னு இழுத்து ரெண்டு வருஷம் கழிச்சுதான் வீடு கைக்கு வந்தது. அதுக்குள்ள எங்களுக்குக் குழந்தையும் பொறந்துடுச்சு. ஒருபக்கம் இருந்த வீட்டுக்கு வாடகை, இன்னொருபக்கம் ஈ.எம்.ஐ., குழந்தைக்கான செலவு என அந்த ரெண்டு வருஷமும் ரொம்பக் கஷ்டப்பட்டோம். ஒருவழியா சாவி கைக்கு வந்ததும் கஷ்டம் எல்லாம் காணாமப்போன மாதிரி இருந்தது. ஒருத்தரைக் கூப்பிட்டு இன்னொருத்தரைக் கூப்பிடலன்னா நல்லா இருக்காதேன்னு ரெண்டு பக்கத்துல இருந்தும் சொந்தக்காரங்களைக் கூப்பிட்டோம். கிரகப்பிரவேச செலவே கண்ணைக் கட்டுற அளவுக்கு இருந்தது. ஆனாலும் வாழ்க்கையில ஒருதடவை பண்ற செலவாச்சேன்னு இழுத்துப் பிடிச்சுச் செஞ்சோம்.

புதுவீட்டுக்குப் போன முதல் மூணு மாசம் ஹனிமூன் காலம் மாதிரிதான். சொர்க்கத்துல இருக்குறமாதிரி அவ்வளவு சந்தோஷமா இருந்தோம். நிஜம் எங்க முகத்துல அடிக்க மூணு மாசமாச்சுன்னுகூடச் சொல்லலாம். புதுவீட்டுக்கும் ஆபீஸுக்குமான தூரம் ஒன்றரை மணிநேரம். அதுக்கான பெட்ரோல் செலவே நிறைய ஆச்சு. போக, வர்றதா சொன்ன ஸ்கூலும் வரலை. அதனால ஒரு கட்டத்துல குழந்தையை கிண்டர்கார்டன் அனுப்பவே ரொம்ப தூரம் அனுப்பவேண்டிய நிலைமை. ரொம்ப யோசிச்சு இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு ஸ்கூல் பக்கமா இருக்குற வேற வீட்டுக்குப் போய்டலாம்னு முடிவு பண்ணினோம்.

இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கின வீட்டுல நிம்மதியா சில மாதங்கள்கூட இருக்க முடியலையேங்கிற வருத்தமும் ஏக்கமும் அழுத்த, வேற வீட்டுக்குக் குடிபோனோம். எங்க வீட்டுக்கு வாடகைக்கு வந்தவங்க ஆறே மாசத்துல வீட்டைக் காலி பண்றேன்னு சொல்லிட, நாங்க சாவி வாங்கப் போனோம். அப்போ வீடு இருந்த நிலைமையைப் பார்த்து எங்களுக்கு ரத்தக்கண்ணீரே வந்துடுச்சு. அட்வான்ஸைவிட பலமடங்கு செலவு செய்யுற மாதிரி இருந்தது வீட்டைத் திரும்பப் புதுசாக்க! ‘நல்ல ஆளா பார்த்து வாடகைக்கு விடுற வரை வீடு பூட்டிக் கிடந்தாலும் பரவாயில்ல’ன்னு வீட்டைப் பூட்டிட்டோம்.

அஸோசியேஷனுக்கு மட்டும் மாசாமாசம் ஒரு தொகை கட்ட வேண்டியிருக்கு. அடகு வச்ச நகைக்கான வட்டி, குடியிருக்கிற வீட்டுக்கான வாடகை, புது வீட்டுக்கான மாதாந்திரத் தவணை, ஸ்கூல் பீஸ் என நாலா பக்கமும் கடன் கழுத்தை நெறிக்குது. ‘ஆசையா வாங்கின வீட்டுல இருக்கமுடியலையே’ன்னு தினமும் என் மனைவி ரொம்ப வருத்தப்படுறாங்க. பொருளாதார நெருக்கடி எல்லாம் தாண்டி அவங்க ஆசைப்பட்டதைப் பண்ணமுடியலையேங்கிற வருத்தம்தான் என்னை ரொம்ப மன உளைச்சலுக்கு உள்ளாக்குது. இதனால வேலையிலயும் என்னால கவனம் செலுத்த முடியலை. இதனால குடும்ப வாழ்க்கையே குலைஞ்சிடுமோன்னு பயமா இருக்கு’’ என மழைபோல மனதில் உள்ளதை எல்லாம் கொட்டினார்.

இவர் மட்டுமல்ல, இன்னொரு தம்பதியும் என்னைச் சந்தித்தனர். அவர்கள் வாழ்க்கையிலும் வீடுதான் விளையாடியிருந்தது. கணவர்தான் முதலில் பேசத் தொடங்கினார்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 22

‘‘நான் வேலை பார்க்க சென்னைக்கு வந்திருந்தாலும் மனசளவுல இன்னும் என் சொந்த ஊருலதான் இருக்கேன். இத்தனை வருஷத்துல ஓரளவுக்கு நல்லா சம்பாதிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன். இருக்குற பொழுதுக்கு சந்தோஷமா இருக்கணும். நாளைக்கு பிரச்னை நாளைக்குன்னு நினைக்கிற ஆள் நான். அதனாலேயே வீடு, கார்னு எதுவும் சென்னையில வாங்கல. என் நண்பர்கள் பலரும் வீடு வாங்கி அதுக்கு கஷ்டப்பட்டு ஈ.எம்.ஐ கட்டுறதைப் பார்த்ததால அந்தமாதிரி எந்தப் பெரிய சைஸ் கமிட்மென்ட்குள்ளயும் போகல. ஊருபக்கம்தான் கடைசி காலத்துல செட்டிலாகப்போறேங்கிறதால அங்கேயே கொஞ்சம் நிலம் வாங்கி ஒரு வீடும் கட்டிட்டேன். கடைசிகாலத்துல எனக்குப் பிடிச்ச மாதிரி நிம்மதியா உட்கார ஒரு இடம். இதுல என்ன தப்பு இருக்கு சுவாமி?’’ என அவர் முடிக்க நினைப்பதற்குள் மனைவி பாய்ந்தார்.

‘‘இவர்கிட்ட இருக்குற பெரிய பிரச்னையே இதுதான் சுவாமி. ரொம்ப பிராக்டிக்கலா யோசிக்கிறதா நினைச்சுக்கிட்டு எதையாவது பண்ணுவார். சேமிப்பையெல்லாம் அங்கே ஒரு கிராமத்துல போய்ப் போட்டிருக்காரு. அந்தப் பணத்தைச் சென்னைல முதலீடு பண்ணியிருந்தா அது இந்நேரம் நல்ல லாபம் கொடுத்திருக்கும். யாருக்கும் பிரயோஜனம் இல்லாம தன்னைப் பத்தி மட்டுமே யோசிச்சு இவர் எடுத்த முடிவால எங்க யாருக்குமே நிம்மதியில்ல. அங்கே அந்த வீட்டை வாடகைக்கு விடவும் வழியில்ல. யாராவது சும்மா பூட்டி வைக்கிறதுக்கு வீடு கட்டுவாங்களா? இது எந்த ஊரு நியாயம்?’’ எனக் கொந்தளித்தார்.

சொந்த வீடு வாங்கவேண்டும் என்கிற சுழலில் சிக்கி இறுதிவரை வெளியே வரமுடியாமல் தவிப்பவர்கள் ஏராளம். இதில் சிலரோ, ‘நாம் கஷ்டப்படுவது வெளியே தெரியக்கூடாது’ என்பதற்காகவே வெளியுலகத்திற்காக வேடம் போடுகிறார்கள். வீடு தொடர்பான முடிவெடுக்கும்போது முதலீட்டாளர்கள் அனைவரும் முதலில் கவனத்தில்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயம், ‘எமோஷனலாக எந்த முடிவும் எடுக்காதீர்கள். வீடு சென்டிமென்ட்தான். ஆனால் அதை வாங்கும் முடிவில் சென்டிமென்ட் கலக்கக்கூடாது’ என்பது.

என்னைச் சந்தித்த முதல் இளைஞரும் சரி, அதன் பிறகு சந்தித்த தம்பதியும் சரி, பல லட்ச ரூபாய் தொடர்பான முதலீட்டு முடிவை உணர்ச்சிவேகத்தில்தான் எடுத்தார்கள். இவர்களின் இன்றைய இன்னல்கள் அத்தனைக்கும் காரணம் அதுதான்.

- பழகுவோம்

****

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 22

வீடு போன்ற பெரிய முதலீடுகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் தற்போதைய வருமானம், செலவு, சேமிப்பு, திடீர் செலவுகள், வருங்காலத்தில் இது எப்படியெல்லாம் மாறும், வீட்டுக்கு வெளியே நிலவும் பொருளாதாரச் சூழல் என ஏகப்பட்ட விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். காரணம், பொருளாதாரம் பட்டாம்பூச்சி விளைவைப்போல! வளைகுடாவில் எங்கோ நடக்கும் ஒரு விபத்து உங்களின் மாதாந்திர பெட்ரோல் செலவை எகிற வைக்கலாம். பல்லாயிரம் மைல்கள் தாண்டி ஒரு சந்தையில் உருவாகும் சிறு கிருமி உங்கள் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போடலாம். எனவே, முதலீட்டு முடிவுகளில் எப்போதும் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காதீர்கள்.