மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 24

இனியும் இனிது
பிரீமியம் ஸ்டோரி
News
இனியும் இனிது

- சுவாமி சுகபோதானந்தா

என்றைக்கும்போல அன்றும் ஒரு சாதாரண நாள்தான் அந்த இளைஞரை நான் சந்திக்கும் வரையில். எங்களின் வழக்கமான சத்சங்கம் முடிந்து எல்லாரும் கலைந்து சென்றிருந்தனர். அப்போதுதான் கவனித்தேன், ஒரே ஒரு இளைஞர் மட்டும் இருந்த இடத்திலேயே இருந்தார். எல்லாரும் போய்விட்டார்கள் என நன்றாகத் தெரிந்தபின்பு என்னருகே வந்தார். ‘எப்போதுமே உங்கள் உரையும் சத்சங்கத்தில் நடத்தும் விவாதமும் மிகச் சிறப்பாக இருக்கும்’ என்றார். லேசாக முறுவலித்து அவருக்கு நன்றி சொல்ல நான் வாயெடுப்பதற்குள், ‘ஆனால் இன்று அப்படி இல்லை’ என உறுதியான குரலில் சொன்னார்.

உடனே மனம் அன்றைக்கு சத்சங்கத்தில் நான் பகிர்ந்துகொண்ட கருத்துகளை வேகமாக அசைபோட்டுப் பார்த்தது. ‘ஒரு நல்ல ஆசிரியர் எப்போதும் நல்ல மாணவனாக இருப்பார்’ என்பதைத்தான் அன்றைய தினம் பல்வேறு உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருந்தேன். அந்தப் புள்ளியிலிருந்துதான் அந்த இளைஞரும் தொடங்கினார்.

‘`மாதா, பிதா, குரு, தெய்வம் என நான்கு பேரையும் சமமாகக் கருதவேண்டும் என, பள்ளிக்கூடத்தில் சேர்ந்த முதல்நாள் எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் அந்த நால்வரும் மற்றவர்களையும் சமமாகக் கருதவேண்டுமே. எனக்கு குருவாக இதுவரை பயிற்றுவித்தவர்களை எல்லாம் நினைத்தால் கோபமாக வருகிறது. வசதி படைத்த பெரிய வீட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எளிய வீட்டுப் பிள்ளைகளுக்கு அவர்கள் கொடுப்பதேயில்லை. ஆரம்பப் பள்ளியில்தான் என்னை இப்படி நடத்துகிறார்கள், வேறு பள்ளி மாறினால் நிலைமை மாறிவிடும் என நினைத்தேன். ஆனால் அடுத்து போய்ச் சேர்ந்த நடுநிலைப் பள்ளியும் நடுநிலையாக நடந்துகொள்ளவில்லை. ஒன்று, உங்களிடம் வசதி இருக்கவேண்டும், இல்லையெனில் முதல் மதிப்பெண் வாங்கவேண்டும். இவை இரண்டுமில்லாத என்னைப் போன்றவர்களிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகும்படியே அவர்கள் நடந்துகொண்டார்கள்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 24

உயர்நிலைப்பள்ளியில் நான் அனுபவிக்காத தண்டனைகளே இல்லை. என்னை நினைத்து நானே அவமானப்படும் வகையில் என் தன்னம்பிக்கையைச் சிதைத்தார்கள். ‘நாம் ஒருவேளை எதற்குமே லாயக்கில்லையோ?’ என்று எனக்கே என் மேல் சந்தேகம் வந்துவிட்டது. அது அடுத்தடுத்த நிலைகளிலும் தொடர்ந்தது. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஒருவேளை தோல்வியடைந்துவிடுவேனோ என நினைத்து என்னை வேறு பள்ளிக்கூடத்திற்கு மாறிக்கொள்ளச் சொன்ன கொடுமையெல்லாம் நிகழ்ந்தது. அப்படி நான் ஃபெயிலாகிவிட்டால் சென்ட் பர்சென்ட் ரிசல்ட் இல்லாமல் போய் அடுத்த ஆண்டின் அட்மிஷன் பாதிக்கப்படுமாம்.

கிளிப்பிள்ளை போல பாடப்புத்தகங்களில் இருப்பதை ஒப்பித்து பரீட்சைத் தாளில் கிறுக்கினால் போதும். மற்றவையெல்லாம் தேவையில்லை என என்னை ஒதுக்கியவர்களை நான் எப்படி மனமார ஆசிரியர்களாக ஏற்றுக்கொள்ள முடியும்? ஒவ்வொரு மாணவனின் சுயத்தையும் சந்தேகத்திற்குள்ளாக்காமல் அவர்கள் விருப்பப்பட்ட துறையில் வளர்தெடுப்பதுதானே ஒரு நல்லாசிரியர். எனக்கு அப்படியொரு ஆசிரியர் அமையவே இல்லையே’’ என அந்த இளைஞர் தன் ஆதங்கத்தை அடைமழைபோலக் கொட்டிவிட்டு ஓய்ந்தார்.

அந்த இளைஞரின் ஏக்கம் எனக்குப் புரிந்தது. தான் சுயமாய் தொழில் செய்துவருவதாகவும் இப்போது தனக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடித்து வைத்திருப்பதாகவும் சொன்னார். தன்னைப் பட்டை தீட்டியிருக்கக்கூடிய ஆசிரியர்கள் மட்டும் கிடைத்திருந்தால் இதைவிட உயரங்களைத் தன்னால் தொட்டிருக்கமுடியும் என அந்த இளைஞர் உறுதியாக நம்பினார்.

‘`ஒருகாலத்தில் மருத்துவர்களைக் கடவுளின் அவதாரமாகக் கருதினார்கள். ஆனால் பின்னாள்களில் சிலர் மருத்துவத்தைப் பணம் பார்க்கும் தொழிலாக மாற்றியபின் மொத்த மருத்துவர்களையும் அப்படிக் கருதும் தவறான மனவோட்டம் பெரும்பான்மையானவர்களுக்கு வந்துவிட்டது. ஆசிரியர்களையும் அப்படித்தான் நான் தவறாகப் பார்க்கத்தொடங்கிவிட்டேனோ என்னவோ’’ எனத் தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக்கொண்டார்.

`‘ஆனாலும் நடப்பவையும் அப்படித்தான் இருக்கின்றன. கல்விக்கட்டணம் எகிறிக்கொண்டே போகிறது. காசிருந்தால்தான் கல்வி என்கிற நிலைக்கு மெல்ல மெல்ல நம்மை நகர்த்திச் செல்கிறார்கள். கல்வி நிலையங்கள் கமர்ஷியல் சென்டர்கள் போல மாறிக்கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் யோசிக்கும்போது எப்படி மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற வரிசையை ஏற்றுக்கொள்ளமுடியும், நீங்களே சொல்லுங்கள்?’’ என என்னிடம் திரும்பினார். அவர் மனம் அலைபாய்ந்துகொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

தர்க்க ரீதியாகப் பார்த்தால் அந்த இளைஞரின் கூற்று சரியானது போலத்தான் தோன்றும். கல்வியும் பொருளாதார நிலையும் இன்றைய தேதியில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆனால் அதற்கு ஆசிரியர்களை மட்டுமே குற்றஞ்சாட்டிவிட முடியாது. உண்மையில் ஒரு சமூகத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. ‘மிகச்சிறந்த ஆசிரியர் மிகச்சிறந்த மாணவராகவும் இருப்பார்’ என நான் சொல்வது இதைத்தான். ஒரு நல்லாசிரியரிடம் எப்போதும் ஒரு அறிவுத்தேடல் இருந்துகொண்டே இருக்கும். மேலும் மேலும் கற்றுக்கொள்ள முனைந்துகொண்டே இருப்பார்கள். பிறர் கருத்துகளைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளவும் அசைபோடவும் ஆராய்ந்துபார்க்கவும் ஏற்ற பக்குவம் அவர்களிடம் இருக்கும். அப்படியான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் தனித்திறனையும் வளர்தெடுப்பார்கள். நானே இப்படி ஏராளமான ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். அவருக்கு இதைச் சொல்ல ஒரு கதையைத் துணைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தனக்குச் சொல்லிக்கொடுத்த பள்ளி ஆசிரியரைத் தேடி மாணவர் ஒருவர் போனார். கண்பார்வை மங்கி தளர்ந்துபோய் அமர்ந்திருந்த அந்த ஆசிரியரிடம் தன் பெயரைச் சொல்லி, ‘என்னைத் தெரிகிறதா?’ எனக் கேட்டான். உற்றுப்பார்த்த அந்த முதியவர், ‘இல்லையப்பா, எனக்கு நீ யாரென அடையாளம் தெரியவில்லை’ என்றார். அவருக்கு நினைவூட்டும் பொருட்டு அந்த மாணவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 24

‘ஒருமுறை நம் வகுப்பில் ஒரு மாணவனது விலையுயர்ந்த கைக்கடிகாரம் காணாமல் போய்விட்டது. அவன் அதைத் தேடித் தேடி அழுது ஓய்ந்துவிட்டான். அவன் நிலையைப் பார்த்து நீங்கள் வகுப்பின் மொத்த மாணவர்களையும் சோதனை செய்ய முடிவெடுத்தீர்கள். எங்கள் அனைவரையும் சுவர்ப்பக்கமாகத் திரும்பி நிற்க வைத்துவிட்டு எங்கள் பாக்கெட்டுகளை சோதனை செய்தீர்கள். அப்போது ஒரு மாணவனின் சட்டைப் பாக்கெட்டில் கைக்கடிகாரம் இருந்தது. அவன் பாக்கெட்டிலிருந்து அதை எடுத்த நீங்கள் தொலைத்த மாணவனிடம் அதைக் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் அதைத் திருடிய மாணவனை நீங்கள் கடைசிவரை காட்டிக்கொடுக்கவே இல்லை. அன்று திருடிய அந்த மாணவன் நான்தான். நீங்கள் என்னை சோதனை செய்தபோது நான் உள்ளான குற்றவுணர்ச்சி ஆயுளுக்கும் மறக்காது. ஆனால் அதன்பின் நீங்கள் என்னைக் காட்டிக்கொடுக் காமலிருந்த போது என் குற்றவுணர்ச்சி பலமடங்கு அதிகரித்தது. அதன்பின் எப்போதும் திருடக் கூடாது என அப்போதே முடிவெடுத்துவிட்டேன்’ என்றார்.

இதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர், ‘இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. ஆனால், அந்தக் கடிகாரத்தைத் திருடியது நீதான் என்று எனக்கும் இதுநாள் வரை தெரியாது. அன்று உங்களை சோதனையிடும்போது உங்களை மட்டும் கண் மூடச் சொல்ல வில்லை. நானுமே கண்களை மூடிக்கொண்டுதான் சோதனை செய்தேன். ஒரு திருட்டு ஒருவர் மீதான நம் வாழ்நாள் அபிப்ராயமாக மாறிவிடக்கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருந்தேன். அதனால்தான்’ என்றார். இதைக் கேட்ட மாணவர் அப்படியே அந்த ஆசிரியரின் கால்களில் விழுந்துவிட்டார்.

இத்தகைய ஆசிரியர்களைப் பற்றித்தான் நான் சத்சங்கத்தில் பேசினேன் என அந்த இளைஞரிடம் சொல்ல, அவர் புரிந்துகொண்டது ஆமோதிப்பின் தலையசைப்பில் தெரிந்தது.

- பழகுவோம்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 24

இறைவன் எப்போதும் தனக்குப் பின்னால் ஒளிவட்டத்தோடு தோன்றுவதில்லை. பசிக்கு உணவளிக்கும் கைகளாக, ஆபத்தில் தோள்கொடுக்கும் அறிமுகமற்ற நபராக இறைவன் எப்போதும் நம்மைச் சுற்றித் தன் இருத்தலை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். ஆசிரியர்களும் அப்படித்தான். நம்மைச் சுற்றி நிகழும் இயற்கை அற்புதங்கள் தொடங்கி நம்மிடையே வாழும் ஒவ்வொரு மனிதர் வரை நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்தான். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ளும் அனுபவக் கல்விதான் நம் ஆதார சுருதியாக விளங்கி நம்மைச் செலுத்திக்கொண்டே இருக்கிறது.

பார்க்கும் அனைத்தும் பரம்பொருளே என்பார்கள். என்னைக் கேட்டால், காணும், கேட்கும், உணரும் அனைத்துமே கல்வி அறிவே!