
தெருவில் வசிப்பவர்கள்தான் என்றில்லை. என் அப்பார்ட்மென்டில் மொத்தமே ஆறு வீடுகள்தான். அதிலிருப்பவர்கள்கூட பொதுவான பிரச்னைகளைத் தீர்க்க முன்வருவதில்லை.
“அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் கோபம் தலைக்கேறுகிறது’’ என்றார், அன்று என்னைச் சந்தித்த ஒருவர். பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் ஒரு சில ஆண்டுகளே அவருக்கு இருக்கின்றன என்பது அவரைப் பார்த்தபோது தெரிந்தது. அவரின் பிரச்னைதான் என்ன?
‘`ஒருநாள் ராத்திரி 11 மணிபோல கரண்ட் கட்டாகிவிட்டது. யூ.பி.எஸ் வைத்திருக்கும் ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும் துளி வெளிச்சம். மற்றபடி ஏரியாவில் யார் வீட்டிலும் பவர் இல்லை. ஒரு மணிநேரத்தில் கைக்குழந்தைகள் அழத் தொடங்கும் சத்தம் அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து கேட்கத் தொடங்கியது. இனிமேல் பொறுக்கமுடியாது என மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை. JE-க்கு போன் செய்தாலும் பதிலில்லை. அடுத்ததாக AE-க்கு போன் செய்தேன். அவரோ தூக்கம் கலைந்த எரிச்சலில், ‘இதுக்கெல்லாம் எனக்கு போன் பண்ணாதீங்க. லைன்மேனுக்குப் பேசுங்க’ எனக் காட்டமாகக் கூறிவிட்டு கட் செய்துவிட்டார். போராடி ஆளைப் பிடித்து லைனை சரி செய்து மின்சாரம் வாங்குவதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. இதுபோல, தண்ணீர்ப் பிரச்னை, கழிவு நீர் தேங்குவது என எதுவாக இருந்தாலும் ஏரியாவில் நான்தான் இறங்கிப் புகாரளிக்க வேண்டியதாக இருக்கிறது.
தெருவில் வசிப்பவர்கள்தான் என்றில்லை. என் அப்பார்ட்மென்டில் மொத்தமே ஆறு வீடுகள்தான். அதிலிருப்பவர்கள்கூட பொதுவான பிரச்னைகளைத் தீர்க்க முன்வருவதில்லை. பைப்பில் தண்ணீர் அசுத்தமாக வந்தால் நான்தான் உடனே சென்று ஆள் கூட்டிவந்து மேல்நிலைத் தொட்டி, மெட்ரோ வாட்டர் சம்ப் என அனைத்தையும் சுத்தம் செய்கிறேன். சரி அதற்குச் செலவாவது செய்வார்கள் என அவர்களிடம் கணக்கு காண்பித்தால், ‘இதை சுத்தம் செய்ய இவ்வளவு காசா?’ என ஏதோ அவர்களிடம் நான் ஏமாற்றிப் பணம் பறிப்பதைப்போல நடந்துகொள்கிறார்கள். அவர்கள் இப்படி நடந்துகொள்வதைப் பார்த்து என் மனைவி, குழந்தைகள், ‘உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்? இப்படியெல்லாம் அவமானப்படுறதுக்கு நீங்களும் மத்தவங்க மாதிரி சும்மாவே இருக்கலாம்ல?’ எனக் கடிந்துகொள்கிறார்கள். ஆனால் என்னால்தான் சும்மாவே இருக்கமுடிவதில்லை...’’
அவர் மூச்சு வாங்கும் இடைவெளியில் நான் ஒன்று சொல்ல முற்பட, ‘இதோ முடித்துவிடுகிறேன்’ என்கிற உடல்மொழியில் மீண்டும் பேசத் தொடங்கினார். ‘என் குடும்பம் சொல்வதைப் போல நான் வெளியே நடப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறேன் என்றே வைத்துக்கொள்வோம். வீட்டில் நடப்பதை எப்படிக் கண்டும்காணாமல் இருப்பது? வீட்டில் மனைவி, மகன், மகள், மருமகள் என மொத்தம் ஐந்து பேர். ஆனால் அவர்கள் நால்வரில் யாருக்குப் பொறுப்பு ரொம்பக் குறைவு எனப் போட்டியே வைக்கலாம். ஆள் இல்லாவிட்டாலும் ஹாலில் எந்நேரமும் டி.வி-யும் ஃபேனும் ஓடிக்கொண்டே இருக்கும். பைக், கார் சாவிகள் ஒவ்வொரு மூலையில் கிடக்கும். காய்ந்த துணிகளை எடுத்துவந்து சோபாவில் போட்டுவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். மாலை நான் வேலை முடிந்து வரும்போது பார்த்து எடுத்துவைக்கவேண்டும். எனக்கு வீடு தூசியாய் இருந்தால் பிடிக்காது. இதையெல்லாம் நான் சொன்னால், ‘இது வீடா, மிலிட்டரி ஹாஸ்டலா’ என என் மகள் கோபித்துக்கொள்கிறாள்’’ எனச் சொல்லி முடித்தார்.

சரி, மனிதரை இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம் என அவர் அலுவலகச் சூழலைப் பற்றிக் கேட்டேன். மனிதர் அதற்கும் பொங்கித் தீர்த்துவிட்டார். ‘`அதையேன் கேட்கிறீர்கள்? ஒருகாலத்தில் நாங்கள் ஏதோ ஒரு நாள் ஒரு பொழுது சும்மா இருந்தாலே குற்றவுணர்வுக்கு உள்ளாகிவிடுவோம். ஆனால் இந்தத் தலைமுறையோ வேலை பார்க்கவே சலித்துக்கொள்கிறது. முன்போல வேலையைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு மொபைல் போன்தான் உலகம்’’ என அங்கும் குறைகளைப் பட்டியலிட ஆரம்பித்தார்.
ஒருவர் ஆர்கனைஸ்டாக இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. தானே முன்வந்து பொறுப்பேற்று விஷயங்களைச் செய்துமுடிப்பது சிறப்பான பண்பு, இதற்கு இயல்பிலேயே தலைமைப்பண்பு இருக்கவேண்டும். ஆனால் அதேசமயம் அவர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்டாக (Perfectionist) மாறிவிடாமல் இருப்பதும் மிக அவசியம். ஒரு காலத்தில் பெர்ஃபெக்ஷனிஸ்ட்டாக இருப்பது சிறந்த பண்பாகப் பார்க்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப இப்போது பணிசெய்யும், வேலை வாங்கும் முறைகளும் மாறிவிட்டன.
நமக்கு முன்பு Perfectionist, High Achiever என்று இரண்டு சாய்ஸ் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இதில் எந்த குணத்தை நாம் வளர்த்தெடுப்பது, எந்த குணத்தை ஓரங்கட்டுவது?
பெர்ஃபெக்ஷனிஸ்ட்டாக இருப்பவர்களோடு வேலை பார்ப்பது கஷ்டம். காரணம், உடனிருப்பவர்கள் என்ன வேலை செய்தாலும் அவர்கள் அதில் குற்றம் மட்டுமே கண்டுபிடிப்பார்கள். அவர்களின் இயல்பே அதுதான். குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். இவர்கள் தங்கள் டீமுக்குக் கொடுக்கும் இலக்குகளும் அடையச் சாத்தியமில்லாதவையாக இருக்கும். அந்த இலக்கை அடைந்தால்மட்டுமே அவர் முகத்தில் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியும். ஆனால் இதற்கு அப்படியே நேர்மாறான பண்பு ஹை அச்சீவருடையது. அவர் தன் உடனிருப்பவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை பார்க்கத் தூண்டுவார். அவர் வைக்கும் இலக்குகள் எட்டிப்பிடிக்கக் கூடியவையாக இருக்கும். அந்த இலக்கை நோக்கி நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியுமே அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
இதில் இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்திருக்கிறேன். சில பெர்ஃபெக்ஷனிஸ்ட்கள் புதிய பொறுப்புகளை, வேலைகளைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். ‘இதை நம்மால் திறம்படச் செய்யமுடியுமா’ என்கிற சுயத்தின் மீதான சந்தேகமே அவர்களை அந்த வேலையை ஏற்றுக்கொள்ளவிடாமல் தடுக்கும்.

ஓவர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்டாக இருப்பவர் நாளடைவில் OCD (Obsessive-compulsive disorder) என்கிற நிலையை நோக்கியும் நகரக்கூடும். தனக்கென ஒரு நட்பு வட்டம் இருக்காது. ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். எல்லாரைப் பற்றியும் குறைகள் சொல்லும் அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் மட்டுமே சிறந்தவர்கள். கலை, விளையாட்டு போன்றவற்றிலும் பெரிதாக ஆர்வம் செலுத்தமாட்டார்கள். அதனால் அவர்களுக்கென ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்காது.
சரி, இப்போது என்னைச் சந்தித்த பெரியவரின் விஷயத்துக்கு வருவோம். குடிநீரில் கழிவுநீர் கலப்பதைப் பற்றிக்கூட அக்கறை இல்லாத மனிதர்களை சிறந்தவர்கள் எனச் சொல்லவில்லை. ஆனால் எதை யாரிடம் எந்தத் தருணத்தில் சொல்வது என்பது பெரிய கலை. அதையும் சரியாகச் செய்பவர்களே சரியான தலைவராகவும் இருக்கமுடியும். தானாக முன்வந்து வேலையைச் செய்வது மட்டுமே தலைமைப் பண்பில்லையே.
நம் அளவிற்குப் பொறுப்போடு உலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் இருக்கவேண்டும் என நினைப்பது சாத்தியமா என்ன? தான் செய்வது ஒரு Thankless Job என்பதை அவர் உணரவேண்டும். ஊரே உறங்கியபின் இருளில் நகரைச் சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர், எத்தனை பேர் வரிசையாக வந்தாலும் முகம் சுளிக்காமல் அவர்களுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவ ஊழியர்கள் என உலகம் இப்படியான எதையும் எதிர்பார்க்காமல் இயங்கும் மனிதர்களால் மட்டுமே சுழன்றுகொண்டிருக்கிறது. இதை அவருக்கு உணர்த்தவே பெட்டிக்குள் இருக்கும் அந்தக் கதையைச் சொன்னேன். புரிந்துகொண்டார்.
******

தாத்தாவும் பேரனும் வீட்டுக்கு அருகிலிருக்கும் மலைக்குச் சென்றார்கள். உச்சியில் ஏறியவர் அங்கிருக்கும் இயற்கை அழகை எப்போதும்போல ரசித்துக்கொண்டே ஒரு சரளைக் கல்லில் கால் வைக்க, அது இடறிவிட்டது. சட்டென ‘அம்மா’ என அலறியபடி சாய்ந்தவர் கை ஊன்றி, காயமில்லாமல் தப்பித்தார். அவர் அம்மா எனக் கத்தியது பள்ளத்தாக்கில் பட்டு எதிரொலித்தது. தன் தாத்தாவை யாரோ கிண்டல் செய்கிறார்கள் என நினைத்த அந்தப் பேரன், ‘கோழைகளே’ எனக் கத்தினான். அதுவும் எதிரொலித்தது. சிரித்தபடி அவனை அணைத்துக் கொண்ட தாத்தா, ‘நீ ஒரு புத்திசாலி’ எனக் கத்தினார். மலையும் பள்ளத்தாக்கும் அதை எதிரொலித்தன. ‘இப்படித்தான் குழந்தை இந்த உலகமும். நீ எதை அதற்குச் சொல்கிறாயோ அதைத்தான் அது உனக்குத் திரும்பச் சொல்லும். நீ எதை அதற்குக் கொடுக்கிறாயோ அதையே அது உனக்குத் திருப்பிக்கொடுக்கும்’ என்றார். உண்மைதானே இது!