
நம்பிக்கைத் தொடர்
தன் ஊழியர் ஒருவர் சமீபகாலமாக அளவுகடந்த சோகத்துடன் நடமாடுவதை அவரின் முதலாளி கவனித்தார். பல ஆண்டுகளாகத் தன் நிறுவனத்தில் கண்ணும்கருத்துமாக வேலை பார்க்கும் ஊழியர் என்பதால் அவரை அழைத்து, ‘என்ன விஷயம்?’ என்று கனிவோடு விசாரித்தார். ‘`வயது ஐம்பதைத் தாண்டியும் சொந்தமாக வீடு வாங்கமுடியவில்லை. ஆனால், என் உறவினர்கள் பலரும் சென்னையில் வீடு வாங்கிவிட்டார்கள். அவர்கள் முன்பு நிற்கும்போது எனக்கே கூச்சமாக இருக்கிறது. ‘நம்மால் ஏன் முடியவில்லை’ என நினைத்துக் கூனிக் குறுகிப் போகிறேன்’’ என்று புலம்பினார் அந்த ஊழியர்.
அந்த ஊழியரால் நிறுவனம் அடைந்த லாபங்கள் மிக அதிகம். நிறுவனம் தொடர்ந்து வெற்றிநடை போடவும் அவரின் இருப்பு முக்கியம் என்பதை நன்றாக உணர்ந்திருந்த முதலாளி அந்த ஊழியருக்கு சென்னையின் வசதியான குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். ஊழியர் முகத்தில் சட்டென சோகம் காணாமல்போய் மகிழ்ச்சி குடியேறியது.
ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் இரண்டே வாரங்கள்தான். அந்த ஊழியர் மீண்டும் வாடிய முகத்தோடு முதலாளி முன்பு வந்து நின்றார். ‘`பணக்காரர்கள் வசிக்கும் நல்ல பகுதியில் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கார் வைத்திருக்காத ஒரே ஆள் நான்தான். என்னிடமும் கார் இருந்தால், நான் அவர்களிடமிருந்து அந்நியப் பட்டிருப்பது போலத் தோன்றாது’’ என்றார். ‘சரி, செலவோடு செலவாகப் போகட்டும்’ என்று முதலாளி ஒரு காரையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்தார். ஆனால், அடுத்த நாளும் அந்த ஊழியர் வாடிய முகத்தோடு வந்து நிற்கவே, முதலாளிக்கு எரிச்சலாகிவிட்டது. வார்த்தைகளைக்கூட இம்முறை விரயம் பண்ண விரும்பாமல் ‘என்ன இப்போது?’ எனப் பார்வையாலேயே அவர் கேட்க, ‘`எனக்கு மட்டும் நீங்கள் கார் வாங்கிக் கொடுக்கவில்லை, நிறுவனத்தில் சக ஊழியர்கள் சிலருக்கும் கொடுத்திருக்கிறீர்கள். அவர்களின் கார்கள் எல்லாம், என் காரைவிடப் பெரியதாக இருக்கின்றன. எனக்கு மட்டும் ஏன் குட்டியான கார்? அவர்களைவிட நான் எந்தவகையில் தகுதி குறைவானவன்?’’ எனக் கேட்டார் அந்த ஊழியர்.

இங்கே அந்த ஊழியர் தன்னைத் தொடர்ந்து மற்றவர்களோடு ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். அவரின் தகுதி, திறமையை மற்றவர்களை வைத்தே எடைபோட்டுக் கொள்கிறார். உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், உடன் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் கைகளில்தான் அவரது மகிழ்ச்சி இருக்கிறது. அவர் மட்டுமில்லை, நம்மில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப்போல, ‘வருங்காலம்’, ‘நிகழ்காலம்’ என்று இரண்டு பொத்தான்களைக்கொண்ட ஒரு இயந்திரம், நம் மனக்கண் முன்பு இருக்கிறது. இந்த நிமிடத்தில் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், ‘நிகழ்காலம்’ என்ற பொத்தானை அழுத்தலாம். ‘வீடு, கார் என்று எல்லாம் வாங்கியபிறகு மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம்’ என்றால், ‘வருங்காலம்’ என்ற பொத்தானை அழுத்தலாம். இதுதான் நம் முன்பு இருக்கும் இரண்டு வாய்ப்புகள். நம்மில் பலரும் ‘வருங்காலம்’ என்ற பொத்தானைத்தான் தேர்ந்தெடுத்து அழுத்துகிறோம். தெரிந்தோ தெரியாமலோ, ‘இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கப்போவதில்லை. இந்தக் கணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கப்போவதில்லை’ என்றுதான் முடிவெடுக்கிறோம். இப்படி முடிவெடுத்துவிட்டால் நம்மால் நிச்சயம் சிறந்த முதலாளியாகவோ, ஊழியராகவோ, காதலனா கவோ, காதலியாகவோ, கணவனாகவோ, மனைவியாகவோ இருக்கவே முடியாது!
பணம் என்பதைத்தானே பலரும் இன்று வெற்றியின் அடையாளமாகப் பார்க்கிறோம். கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் கொட்டினால், ஒருவருக்கு நிரந்தர மகிழ்ச்சி கிடைத்துவிடுமா?
ஆட்டோமொபைல் உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் கார்ல் ஸ்லிம். பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் படித்தது, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில். ரக்பி விளையாட்டில் முரட்டுத்தனமாய் எதிராளிகளோடு மோதி வெற்றிகளைக் குவிக்கும் உடற்தகுதி கொண்டவர். எந்த நாட்டின் எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும், அந்நிறுவனத்தைத் தன் தனித்தன்மையால் பல உயரங்களுக்குத் தூக்கிச் செல்லும் வித்தைக்காரர். தனித்தீவிற்கு மனைவியை அழைத்துப்போய் 25வது மணநாளை டின்னர் டேட்டோடு கொண்டாடும் காதல் மன்னன். இப்படி பணம், அதிகாரம், செல்வாக்கு என ஒரு மனிதன் உலகில் கோலோச்சத் தேவையான அத்தனையும் அவரிடமிருந்தன. ஆனால், தன் 52-வது வயதில், ஒரு நட்சத்திர ஓட்டலின் மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், வெற்றியும் பணமும் மட்டுமே எவருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுத்துவிடுவதில்லை.
வீடு, கார், படிப்பு, பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவை ஒருவருக்கு வெற்றியைத் தரலாம். ஆனால், நிச்சயம் மனநிறைவையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தராது. மும்பை கார்ப்பரேட் உலகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் அவ்வப்போது உரையாற்றும் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற கார்கள் வரும் இடத்தில், ஹோண்டா, மாருதி போன்ற கார்களில் சென்று இறங்குவதைப் பலர் தகுதிக்குறைவாகக் கருதுவார்கள். இதுபோன்ற மனநிலை கொண்டவர்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்தாலும் இவர்களால் பணக்காரர்களாக ஆகவே முடியாது. தங்களைவிடப் பெரிய பணக்காரர்களோடு மட்டுமே தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதால், எப்போதுமே மன தளவில் ஏழைகளாகவே இருப்பார்கள்.
புகழ்பெற்ற கணிதப் பேராசிரியர் ஒருவருக்கும் அவரின் மாணவருக்கும் இடையே நடந்த உரையாடல் இது.
‘`ஒரு வகையில் பார்த்தால், ஏழையும் பணக்காரனும் ஒன்றுதான்’’ என்றார் அந்தக் கணித மேதை.
‘`இதை சாமியார்கள் சொல்ல லாம். ஆனால், நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. ஜீரோவும், இன்ஃபினிட்டியும் (முடிவிலியும்) எப்படி ஒன்றாக முடியும்?’’ என்றான் மாணவன்.
‘`ஒரு அரிசியின் அளவோடு இந்த பூமிப்பந்தின் சுற்றளவை ஒப்பிட்டால், பூமிப்பந்தின் விட்டம் மிகப்பெரியது. அதாவது இன்ஃபினிட்டி. சரியா?’’
‘`சரிதான்.’’
‘`பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தூரத்தோடு, பூமிப்பந்தின் சுற்றளவை ஒப்பிட்டால், அது ஒன்றுமே இல்லை. அதாவது ஜீரோ. சரியா?’’
‘`சரிதான்’’ என்று தலையசைத்தான் மாணவன்.
பூமிப்பந்தின் விட்டம் என்பது, எப்படி ஜீரோவாகவும், அதே சமயம் இன்ஃபினிட்டியாகவும் இருக்க முடியும்?’’ என்று கேட்டார் பேராசிரியர்.
மாணவன் யோசிக்கத் தொடங்கினான்.
‘`பூமிப்பந்தின் விட்டம் என்பது ஜீரோவா, இன்ஃபினிட்டியா என்பது, அதை எதனுடன் ஒப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது. அதேபோலத்தான் ஒருவன் ஏழையா பணக்காரனா என்பது, அவன் தன்னை யாரோடு ஒப்பிட்டுக்கொள்கிறான் என்பதைப் பொறுத்தது. ஒருவனின் தேவையைவிட அவனது வருமானம் அதிகமாக இருந்தால், அவன் பணக்காரன். வருமானத்தைவிடத் தேவை அதிகமாக இருந்தால், அவன் ஏழை’’ என்றார் பேராசிரியர்.
பணத்தைப்போலவே படிப்புக்கும் இது பொருந்தும். அதிகம் படித்துவிட்டதாலேயே ஒருவர் அறிவு முதிர்ச்சிகொண்டவராக மாறிவிட முடியாது. படிப்பதால் ஒருவருக்குக் கிடைப்பது தகவல்கள் மட்டும்தான். பணம் மட்டும் எப்படி ஒருவனைப் பணக்காரனாக்காதோ, அதேபோல தகவல்கள் மட்டும் ஒருவனை அறிவாளியாக்காது.
வீதிகளில் நிறுத்தப் பட்டிருந்த கார்களை அகற்றச் சொல்லி போலீஸார் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தனர். பலரும் அவசர அவசரமாகத் தங்கள் கார்களை எடுத்து விட்டார்கள். ஆனால், நவநாகரிமாக உடை அணிந் திருந்த ஓர் இளைஞன் மட்டும் காரில் சாய்ந்தபடி ஸ்டைலாக போனில் பேசிக்கொண்டிருந்தான். இத்தனை அலட்சியமாக இருக்கிறான் என்றால், நிச்சயம் இவன் யாரோ பெரிய ஆளின் பையனாகத் தான் இருப்பான் என்று நினைத்துக்கொண்ட போலீஸ் அதிகாரி, அவன் அருகே சென்று, ‘`காரை எடுங்கள்’’ என்று கனிவாகச் சொன்னார். அதற்கு அவன், நிமிர்ந்துகூடப் பார்க்காமல், ‘`முடியாது’’ என்றான். அந்த அதிகாரிக்குக் கோபம் வந்தது. ‘`காரை எடுங்கள்’’ என்று உரத்த குரலில் சொல்ல, ‘`முடியாது’’ என்று அவனும் உரக்க பதில் சொன்னான். இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த உயர் அதிகாரி ஒருவர் வந்து, ‘`ஏன் காரை எடுக்க முடியாது?’’ என்று கேட்க... ‘`ஏனென்றால், இது என்னுடைய கார் கிடையாது’’ என்று அவன் பதில் சொன்னான்.
‘`பார்த்தால் படித்தவன் மாதிரி இருக்க. முன்னாடியே இப்படி விளக்கமா பதில் சொல்ல வேண்டியதுதானே’’ என்று அந்த அதிகாரி கோபப்பட்டார். ‘`நான் கம்யூனிகேஷன்ஸ் வொர்க்ஷாப் போய்விட்டு வருகிறேன். யாரிடம் பேசுவதாக இருந்தாலும், ‘டு தி பாயின்ட்’தான் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்’’ என்று தன் மடத்தனத்துக்கு அவன் காரணமும் சொல்லியிருக்கிறான். பேசுவதற்கு வார்த்தைகளை வேண்டுமானால் படிப்பு கொடுக்கலாம். ஆனால் எங்கே, எப்படி, எதைப் பேசவேண்டும் என்கிற சிறந்த கல்வியை அனுபவம் மட்டுமே கற்றுத்தரும்.

இந்தியில் நகைச்சுவையான கவிதை ஒன்று இருக்கிறது. ‘`எனக்கு மட்டும் மும்தாஜ் மாதிரி ஒரு பெண் கிடைத்தால், நான் அவளுக்கு தாஜ்மஹாலே கட்டுவேன்’’ என்றானாம் ஒருவன். ‘`பரவாயில்லையே. இப்படி ஒருவன் உலகில் இருக்கிறானே’’ என்று சாமியார் ஒருவர் தன் தவ வலிமையால், அவனது ஆசையை நிறைவேற்றி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து அவனை மீண்டும் சந்தித்த அந்தச் சாமியார், ‘`என்னப்பா, தாஜ்மஹால் கட்டிவிட்டாயா..?’’ என்று கேட்டார். ‘`அதெல்லாம் இல்ல சாமி’’ எனச் சலிப்பாக பதில் சொல்லியிருக்கிறான் அவன்.
‘`ஏன் இத்தனை வெறுப்பாகப் பேசுகிறாய்?’’ என்று அந்தச் சாமியார் கேட்க, ‘`என் மனைவிக்கு என்மீது அன்பே இல்லை சாமி’’ என்று சொல்லியிருக்கிறான் அவன். அந்தச் சாமியார் அவன் மனைவியை அழைத்து விசாரிக்க, ‘`அவருக்கு என் மேலே கொஞ்சம்கூட அன்பே இல்லை சாமி’’ என்று அதே பாட்டை அவரும் பாடியிருக்கிறார். அன்பு என்ன கடையில் விற்கும் பதார்த்தமா, பற்றாக்குறையானால் வாங்கிப்போட்டு வாழ்க்கையை வளமாக்க?
ஒரு குழந்தையிடம் நாம் காட்டுவது நிபந்தனையற்ற அன்பு. பதிலுக்கு அது நம்மீது அன்பு காட்டும் என்று எதிர்பார்த்தா அன்பு காட்டுகிறோம்? இதைப் போன்ற அன்பைத்தான் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் காட்ட வேண்டும். அன்பை யாசகம் கேட்கும் நிலை இருந்தால், அங்கே மகிழ்ச்சி குடியிருக்காது. அன்பையும் பிற பொருள்கள்போல வணிகமாக்கி அது இல்லை, இல்லை எனச் சொல்வதில் என்ன பயன்? கொடுத்துத்தான் பாருங்களேன். பலமடங்காக உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.
மகிழ்ச்சியாய் இருக்க மகிழ்ச்சியைத் தள்ளிப்போடாத மனம் ஒன்று மட்டும்தான் தேவை. ‘இந்தக் கணம் அழகானது, அற்புத மானது, ஆனந்த மானது’ என்பதை உணர்ந்தாலே போதும். வருடத்திற்கு ஆறுமாத காலம் சூரியனே எட்டிப் பார்க்காத குளிர் தேசங்களில் வேலை செய்யும் நம் ஊர்க்காரர்களிடம் பேசிப் பாருங்கள். சூரியோதயம் எத்தனை அழகானது என்பதைச் சொல்வார்கள். வெயில் எத்தனை சுகமானது என்பதைப் புரியவைப்பார்கள்.
இல்லாதபோது ஒன்றைத் தேடி ஏங்குவதைவிட, இருப்பதில் அடையும் மனநிறைவும் திருப்தியும் மகிழ்ச்சியும் முக்கியம். அதுவே வாழ்வை முழுமையாக்கும்.
பழகுவோம்...