மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 40

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

- சுவாமி சுகபோதானந்தா

கல்லூரிகளுக்கு நான் உரையாற்றச் செல்லும்போதெல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்வது வழக்கம். அதிலிருந்து மீள எனக்குக் குறைந்தது இரண்டு நாள்களாகும். காரணம், இசை, நடனம், புகைப்படம் என ஏதேனும் ஒரு கலையின் வழியே டிஜிட்டல் உலகின் மூலை முடுக்குகளையெல்லாம் போய்ச் சேர்ந்துவிடும் திறமைசாலிகளை நான் கல்லூரிகளில் அதிகம் சந்திக்கிறேன். கிரிக்கெட், கால்பந்து என ஸ்போர்ட்ஸில் கலக்குபவர்கள், பல்வேறு மொழிகளைப் பேசக்கூடியவர்கள், நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசித்து அறிவைத் தேக்கி வைத்திருப்பவர்கள், உலக சினிமாக்களைப் பார்த்து விவாதிப்பவர்கள் எனக் கலவையான கூட்டம் அது. ஆடை வடிவமைப்புக் கலைஞர்கள், தேர்ந்த சமையல் நிபுணர்கள் போன்றோரைச் சந்தித்த அனுபவமும் உண்டு.

இவர்களுக்கு மத்தியில்தான் ‘படிப்பதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை’ எனச் சொல்பவர்களும் இருப்பார்கள். கல்லூரிக்குப் போவதன் பிரதான நோக்கமே படிப்பதுதான். ஆனால் அதுமட்டும் போதுமா? எப்படி ஒரு சிலரால் மட்டும் படிப்பைத் தாண்டிப் பிற துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த முடிகிறது? இருக்கும் 24 மணி நேரத்தை எப்படித் திட்டமிட்டுப் பிரித்து இவ்வளவு விஷயங்களைச் செய்துவிட்டு ஓய்வும் எடுக்கமுடிகிறது?

உங்களுக்குப் பரிச்சயப்பட்ட கதைதான். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தை எடுத்துக்கொள்வோம். அதைப் பெரிய கருங்கற்கள், சின்னக் கூழாங்கற்கள், ஆற்று மணல் ஆகியவற்றைக் கொண்டு நிரப்பவேண்டும். முதலில் மண்ணை அதில் போட்டால் கற்கள் போடமுடியாதபடி மணல் இடத்தை அடைத்துக்கொள்ளும். அதனால் முதலில் கருங்கற்களைப் போட்டுவிட்டு பின்னர் கூழாங்கற்கள், அதன் பின் மணல் என உள்ளே போட்டால் அந்தக் கண்ணாடிப் பாத்திரம் மூன்றையுமே உள்வாங்கிக்கொள்ளும்.

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 24 மணிநேரம்தான் இந்தக் கண்ணாடிப் பாத்திரம். பொழுதுபோக்கிற்காக நாம் செய்யும் அனைத்து விஷயங்களுமே ஆற்று மணலைப் போல. அதை முன்னிலைப்படுத்தினால் வேறு உருப்படியான விஷயங்களை முன்னெடுக்கவே முடியாது. ஆபீஸ் வேலை, நண்பர்கள் ஆகியவை கூழாங்கற்கள். நம் உடல்நலன், இல்வாழ்க்கை, லட்சியம் ஆகியவை எல்லாம் கருங்கற்கள்போல. ஆக, முதலில் நாம் நம்மீது போதுமான அளவுக்குக் கவனம் செலுத்தவேண்டும். அதன்பின் அலுவலக வேலை, அதன்பின் பொழுதுபோக்கு என வரிசைப்படுத்திக்கொண்டால் ஒரு நாளின் அத்தனை மணிநேரத்தையும் வீணடிக்காமல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 40

பணத்தை உதாரணம் காட்டிச் சொன்னால் இன்னும் எளிமையாகப் புரியும். ‘அருணாசலம்’ படத்தில் வருவதைப் போலத்தான். உங்கள் வங்கிக் கணக்கில் தினமும் 1,440 ரூபாய் போடப்படுகிறது. இந்தப் பணத்தை நீங்கள் அன்றே செலவழித்துவிட வேண்டும். யாருக்கும் கடனாகத் தரக்கூடாது. இதில் எதைச் செய்தாலும் பணம் செல்லாமல் போய்விடும். இப்போது இந்த 1,440 ரூபாயை எப்படியெல்லாம் செல்வழிக்கிறோம் என்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. இந்த 1,440 என்பது ஒருநாளின் மொத்த நிமிடங்கள். இதை எப்படிச் செலவு செய்கிறோம் என்பது மிக முக்கியம். வாழ்க்கை வெளிச்சத்தில் வசந்தமாய் இருப்பதும் இருட்டில் பயத்தில் இருப்பதும் இந்தச் செலவைப் பொறுத்தே அமைகிறது.

ஆனால் பெரும்பாலான சமயங்களில் நாம் இந்த 1,440 நிமிடங்களில் அதிக நேரத்தை குறைப்பட்டுக்கொள்ள மட்டுமே செலவு செய்கிறோம். ‘என் அப்பா என்னை சமமாக நடத்தவில்லை. என் அண்ணன் என்னை சரியாக கவனிக்கவில்லை. அலுவலக அரசியலால் எனக்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது, என் மனைவியின் செயல்களால் எங்களுக்குள் இருக்கும் காதல் மறைந்துகொண்டே வருகிறது’ என எப்போதும் எதிர்மறை எண்ணத்திலேயே பேசி வாழ்க்கையைக் கழிக்கப் பார்க்கிறோம்.

அப்படியான ஒரு நபருக்கு ஒரு பெரிய அறிஞரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அறிஞரை ஒரு பெருங்கூட்டம் சூழ்ந்து அமர்ந்திருந்தது. எதற்கெடுத்தாலும் புலம்பக்கூடிய நம்மாளோ, ‘வரும் வழியில் தன் காரில் எப்படி ஒரு பைக் மோதியது, அதனால் காரில் ஒரு சின்ன நெளிவு எவ்வாறு ஏற்பட்டது’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அறிஞரைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் இப்படி சந்தித்த விபத்துகளைப் பற்றியெல்லாம் பட்டியல் போடத் தொடங்கிவிட்டனர்.

சூழ்நிலையை மாற்ற நினைத்த அந்த அறிஞர், ஒரு நகைச்சுவைச் சம்பவத்தை விவரித்தார். உடனே நம்மாள் உட்பட எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். சிரிப்பு நின்றதும் இரண்டாவது முறையும் அதே நகைச்சுவையைச் சொன்னார் அந்த அறிஞர். இப்போது அதிகம் பேர் சிரிக்கவில்லை. மூன்றாவது முறையும் அதே நகைச்சுவையை அறிஞர் சொல்ல, கனத்த அமைதி. ‘சிறந்த நகைச்சுவையாகவே இருந்தாலும் இரண்டாவது தடவை சொன்னால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கும்போது நமக்கு நடந்த மோசமான அனுபவத்தைப் பற்றி மட்டும் திரும்பத் திரும்ப ஏன் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்? சோகம் ஒரு தொற்றுநோய். இதை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் நாம் அந்த நோயைப் பிறருக்கும் பரப்புகிறோம்’ என்றார் அந்த அறிஞர்.

ஒவ்வொரு நாளையும் அதன் நிமிடங்களையும் இப்படிப் பழையதைப் பேசுவதன் மூலம், பிறரைக் குறைகூறுவதன் மூலம் கழிப்பது எவ்வளவு பெரிய அறியாமை?

இதில் இன்னொரு ரகத்தினரும் உண்டு. கொஞ்சமும் ரசனை இல்லாமல் நேரத்தை விரயம் செய்பவர்கள். அப்படிப்பட்டவர்களைப் பற்றி விளக்க ஒரு கதையுண்டு.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 40

சிறுவன் ஒருவன் ஆற்றங்கரையில் தன் நாய்க்குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவன் பந்தைத் தூக்கி வீசினால் அதை ஓடிப்போய் எடுத்து வந்து கொடுத்தது நாய். ஒருமுறை சிறுவன் வீசிய பந்து ஆற்றில் விழ, அதன் பின் நிகழ்ந்தது அந்த அதிசயம். நாய் நீரின் மேல் நடந்து சென்று அந்தப் பந்தை எடுத்து வந்தது. நம்பமுடியாமல் மீண்டும் அந்தச் சிறுவன் நீருக்குள் பந்தை எறிய மீண்டும் அதேபோல நீரின் மேல் நடந்து சென்று பந்தை எடுத்து வந்தது நாய். பிரமித்துப்போன சிறுவன் அந்த வழியே வந்த வழிப்போக்கனிடம் இதைச் சொல்லி அவரை நம்ப வைக்க மீண்டுமொரு முறை செய்து காட்டினான். அதைப் பார்த்த வழிப்போக்கன், ‘உன் நாய்க்கு ஒழுங்காக நீந்தத் தெரியவில்லை. அதற்காகக் கவலைப்படாமல் அது நீரின் மேல் நடப்பதற்காக மகிழ்ச்சியடைகிறாயே’ என அந்தச் சிறுவனின் பிரமிப்பை உடைத்தான். சோகத்தில் ஆழ்ந்தான் அந்தச் சின்னப்பையன். தானும் ரசிக்காமல் பிறரின் ரசனையையும் கெடுக்கும் இப்படியான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘ரசனையாக மகிழ்ச்சியாக வாழத்தான் ஆசை. ஆனால் என்னைச் சுற்றியிருப்பவர்கள் அவநம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் வலிந்து குற்றம் கண்டறியும் குணம் கொண்டவர்கள் அவர்கள். அதனாலேயேதான் அந்தக் குணம் எனக்கும் தொற்றிக்கொள்ள நானும் அவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறேன் இப்போது. வாழ்க்கை இப்படியே கழிந்துவிடும்போல’ என என்னிடம் புலம்பினார் ஒரு சமையல் கலைஞர்.

‘சரி வாருங்கள்’ என அவரை சமையல்கூடத்திற்கு அழைத்துச் சென்றேன். மூன்று பாத்திரங்களில் அவரைத் தண்ணீர் நிரப்பிக்கொள்ளச் சொன்னேன். ஒன்றில் உருளைக்கிழங்கையும், இரண்டாவதில் முட்டையையும், மூன்றாவதில் காபிக் கொட்டைகளையும் போட்டுக் கொதிக்கவிடச் சொன்னேன். அப்படியே செய்தார் அவர். சிறிது நேரம் கழித்து அவரைத் திறந்து பார்க்கச் சொன்னேன். முதல் பாத்திரத்தில் கடினமான உருளைக்கிழங்கு சூட்டில் நன்றாக இளகியிருந்தது. உள்ளுக்குள் திரவமிருந்த முட்டையோ சூட்டில் கெட்டியாகி இறுகியிருந்தது. மூன்றாவது பாத்திரத்திலிருந்த காபிக் கொட்டையோ அப்படியே இருந்தது மட்டுமல்லாமல் தன்னைக் கொதிக்க வைத்த நீரின் தன்மையை மாற்றி சுவை சேர்த்திருந்தது. பாத்திரங்களையும் என்னையும் மாறி மாறிப் பார்த்த அவர், ‘புரிந்தது’ எனத் தலையாட்டினார்.

படிக்கும் உங்களுக்கும் இது புரிந்தால் சூழ்நிலையின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க நினைக்காமல் அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மேலும் மேலும் முன்னேறி வெற்றிகளைக் குவிப்பீர்கள். வாழ்த்துகள்!

- நிறைவு

எழுத்தாக்கம் - வேல்ஸ்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 40

உலகத்தையே கட்டி ஆளப்போகிற முக்கியமான இரண்டு விஷயங்கள் என்றால் ஒன்று எலெக்ட்ரிக் கார்; அடுத்தது விண்வெளிப் பயணம். எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னோடியாக இருப்பது டெஸ்லா நிறுவனம். விண்வெளிப் பயணம் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் பிரமிப்பூட்டும் சாதனைகளைச் செய்துவருவது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்த இரண்டையுமே நிர்வகிப்பவர் எலான் மாஸ்க். செய்வதற்குப் பல வேலைகள், கலந்துகொள்வதற்குப் பல கூட்டங்கள், சந்திப்பதற்குப் பல வி.ஐ.பி-க்கள் என்று ஆயிரம் வேலைகள் இருந்தாலும், தினமும் ஆறு மணி நேரம் தூக்கம், வார இறுதிநாள்களில் குடும்பத்தோடு இருப்பது என்ற இரண்டு விஷயத்திலும் எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை அவர். அந்த அளவுக்கு நேர்த்தியாகத் தன் நேரத்தை நிர்வகிக்கிறார். சிலர் இந்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவோம். சிலர் இந்த மாதம், இந்த வாரம், இந்த நாள் என்று திட்டமிடுவோம். எலான் மாஸ்க் எப்படித் தெரியுமா? தன் வேலை நேரத்தை ஐந்து ஐந்து நிமிடங்களாகப் பிரித்துக்கொண்டு அதில் என்ன செய்யப்போகிறோம் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறார். அதனால் எல்லா நேரமும் அவருக்கு நல்ல நேரமாக அமைகிறது.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 40