
#Motivation
அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ‘டெட் டாக்ஸ் (TED Talks)’ ரக பேச்சுக்கான மேடை உலகம் முழுக்க பிரபலமானது. பல்வேறு துறைசார் நிபுணர்கள் தங்கள் துறை சார்ந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், விளையாட்டு, இசை, திரை சார்ந்த பிரபலங்கள் தங்களது வெற்றிக்கதைகளையும் பகிரும் விதமான மேடை அது. தமிழ் மொழியிலும் அது போன்ற முயற்சியாக ‘மன்றம்’ என்கிற பேச்சுக்கான மேடையைத் தன் நண்பருடன் இணைந்து தொடங்கியிருக்கிறார் மரகதவல்லி. மூன்றாண்டுகளாகச் செயல்பட்டு வரும் ‘மன்றம்’ மேடைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்துறை வல்லுநர்களும் கலந்துகொண்டு பேசிவருகிறார்கள்.
“இந்தியாவில் செயல்பட்டு வரும் ‘டெட் டாக்ஸ்’ போன்ற மேடைகளில் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இங்கு பெரும்பான்மையாக இருக்கும் எளிய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இந்த நிலையில்தான், ‘டெட் டாக்ஸ்’ போன்ற மேடைகளில் தமிழில் பேசுவதற்கான வெளியை உருவாக்க வேண்டும், எளிய மக்களுக்கும் வெற்றியாளர்களின் கதைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு ‘மன்றத்’தைத் தொடங்கினோம்” என்கிறார்.
காரைக்குடியைச் சேர்ந்த மரகதவல்லி கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார். மென்பொருள் பொறியாளராகவும், தனியார் தொண்டு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பிலும் அங்கம் வகித்த இவருக்குத் தமிழில் ஈடுபாடு அதிகம். அதற்கான தன் பங்களிப்பாகவே இம்முயற்சியை எடுத்திருக் கிறார்.
‘`பெண்களின் சுய முன்னேற்றம் சார்ந்து இயங்கும் தொண்டு நிறுவனம் ஒன்றில் இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தேன். அப்போது பள்ளி மாணவிகள் மத்தியில் உரையாடியபோது, தொழில்நுட்பம் சார்ந்த சொற்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் கடினமாக இருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். அறிவியல் தொடங்கி எதுவாக இருந்தாலும் அவரவர்களின் தாய் மொழியிலேயே கற்றுக்கொடுத்தால்தான் எளிமையாக இருக்கும் என்று நண்பர் வெங்கட்ராமன் ராமச்சந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான் ‘மன்றம்’ தொடங்கு வதற்கான யோசனை எழுந்தது.
பேச்சுப்போட்டிகள் முதல் பட்டிமன்றம் வரை ஏற்கெனவே தமிழ் மணக்கும், தமிழை வளர்க்கும் மேடைகள் பல இருந்தாலும், ‘டெட் டாக்ஸ்’ வகை உரைகளுக்கான தமிழ் மேடையாக ‘மன்றம்’ அவசியம் என்று நினைத்தோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்களையும் அழைத்து எளிமையான பேச்சுத் தமிழில் பேச வைத்து அக்கருத்துகளை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவெடுத்தோம். இதன் மூலம் தமிழில் பேசுவதையும் ஊக்குவிக்க முடியும் என்கிற அடிப்படையில் ‘மன்றத்’தைத் தொடங்கினோம்’’ என்பவர், முதல் நிகழ்ச்சியை 2018 ஜனவரியில் நடத்தியிருக்கிறார்.
‘`சென்னை, அமெதிஸ்டில் நடந்த அந்த நிகழ்ச்சியில் ஆறு நிபுணர்கள் பேசினார்கள். அதில் ஒருவராகப் பேசிய நடிகை ரேவதி, தாய்மை மூலமாக அவரது வாழ்வியல் எப்படி மாற்றம் அடைந்தது என்பது பற்றிப் பேசினார். பொதுப் பிரச்னைகளுக்குக் குரல்கொடுத்து வரும் சென்னையைச் சேர்ந்த 90 வயது காமாட்சி பாட்டி, சம்பந்தப்பட்ட துறைகளில் புகார் அளித்து நம் உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்று பேசிய உரைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது’’ என்று சொல்லும் மரகதவல்லி, தொடர்ந்து பலரை ‘மன்றம்’ மேடைகளில் பேச வைத்திருக்கிறார். அந்த வீடியோக்களை எல்லாம் யூடியூப் சேனல் மூலம் எளிய மக்கள் வரை சேர்த்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டு வந்த ‘மன்றம்’ நிகழ்ச்சிகள், கொரோனா பொதுமுடக்கத்தால் இப்போது இணையவழிக்கு மாறியிருக்கின்றன.

“பெரும் சாதனைகள் புரிந்தவர்கள் தொடங்கி அன்றாட வாழ்வாதாரத்துக்கே அல்லாடும் சூழலில் சிக்கி உழன்று தன்முனைப்போடு அதிலிருந்து மீண்டவர்கள் வரை பல தரப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப்பின் வலியும் நம்பிக்கையும் நிறைந்த கதைகள் இருக்கின்றன. பல்வேறு துறைகளில் தீவிரமாகச் செயல்படுகிற வர்களையெல்லாம் ‘மன்றத்’தின் மூலம் பெரும் பரப்புக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
துளசிச் செடியின் மருத்துவ குணங்களை ஆராய்ச்சி செய்து அறிவியல் பூர்வமாக நிரூபித்த பேராசிரியர் சௌதாமினி, அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். எதிர்கால உலகின் தவிர்க்க முடியாத அம்சமான செயற்கை நுண்ணறிவு குறித்து ராஜேந்திரன் என்பவர் பேசினார். இதுபோன்று இன்றைய சமூகத்துக்குத் தேவையானவற்றை பேசக் கூடியவர்கள், மாற்றுச் சிந்தனையுடன் இயங்கக் கூடியவர்களைக் கொண்டு தொடர்ந்து கூட்டம் நடத்தி வருகிறோம்’’ என்று சொல்லும் மரகதவல்லி, பிழையின்றித் தமிழில் பேச கற்றுக்கொடுக்கும் ‘மன்றம் பட்டறை’யையும் தொடங்கியிருக்கிறார்.
“கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஒரு மொழியைக் கைவிடுகையில் அது அழிந்துபோகும். மொழியை வளப்படுத்தவும் அழியாமல் பாதுகாக்கவும் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கான எங்கள் பங்களிப்பு இது’’ என்கிறார் மரகதவல்லி.
‘மன்றம்’ ஒலிக்கட்டும்!