
ஜெயலலிதா அம்மாகிட்ட ரமேஷ்னு ஒரு பி.ஏ இருந்தார். அவர் எனக்கு நண்பர். அவர் மூலமா நான் ஜெயலலிதா அம்மாவுக்கு அறிமுகமானேன். ஆரம்பத்துல அரசியல் பத்தி அவங்களுக்கு அப்பப்ப ஐடியா கொடுப்பேன்.
ஏற்கெனவே அ.தி.மு.க-வில் இரட்டைத்தலைமை, தர்மயுத்தம் 2.0 என்று எடப்பாடியும் பன்னீரும் படபட பட்டாசு கொளுத்துகிறார்கள். ‘நான்தான் அக்காவின் வாரிசு' என்று, அணைந்துபோய் அவ்வப்போது சுற்றும் சங்குச்சக்கரமாக சசிகலா கிளம்பி வருவார். டி.டி.வி.தினகரனோ ‘என் வெடி தனி வெடி' என்று தனிரூட்டில் போய்விட்டார். சட்டப்படி ஜெயலலிதாவின் வாரிசு என்று அங்கீகரிக்கப்பட்ட தீபாவோ ரெஸ்ட் எடுத்து டயர்டு ஆகி ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் சம்பந்தமே இல்லாமல் ‘போயஸ் கார்டன் எனக்குத்தான் சொந்தம். ஜெயலலிதாவே உயில் எழுதி வெச்சிருக்காங்க. அந்த உயிலை வெளியிடச் சொல்லி உண்ணாவிரதம் இருக்க அனுமதி வேண்டும்' என்று கொடி பிடித்து கோர்ட் படி ஏறியிருக்கிறார் ஒருவர். அவர் பெயர் மாங்காடு சௌந்தர்ராஜன். ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லாத புது உருட்டா இருக்கே' என்று மாங்காடு போய்ப் பேசினேன்.
‘‘என் பெயர் செளந்தர்ராஜன். சென்னை மாங்காட்டில் குடியிருக்கேன். அதனால மாங்காடு செளந்தர்ராஜன்னு எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (ஆரம்பமே இப்படியா?!) ரயில் பெட்டி தயாரிக்கிற ஃபேக்டரில சீனியர் டெக்னீஷியனா வேலை பார்த்தேன். இப்போ ரிட்டயர் ஆகிட்டேன். விஷயத்துக்கு வர்றேன். என்னைப் பத்தி நீங்க கேள்விப்பட்டது அனைத்தும் அக்மார்க் உண்மையே. (நான் ஒண்ணும் சொல்லவே இல்லையே!)

ஜெயலலிதா அம்மாகிட்ட ரமேஷ்னு ஒரு பி.ஏ இருந்தார். அவர் எனக்கு நண்பர். அவர் மூலமா நான் ஜெயலலிதா அம்மாவுக்கு அறிமுகமானேன். ஆரம்பத்துல அரசியல் பத்தி அவங்களுக்கு அப்பப்ப ஐடியா கொடுப்பேன். (பார்ரா!) காலப்போக்குல அவங்களுக்கு நம்பிக்கையான ஆளா மாறிட்டேன். அதனால அம்மா இறக்குறதுக்கு முன்னால தமிழக மக்களுக்கு நல்லது செய்யச் சொல்லி என் பேர்ல பல உயில் சாசனங்களை எழுதி வெச்சிருக்காங்க. (மறுபடியும் பார்ரா!) அப்படி அவங்க எழுதின விஷயம் எனக்கே தெரியாது. அம்மா இறந்த பின்னால சசிகலா அக்காதான் இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னாங்க. பெங்களூரு ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னால தனியா என்னைச் சந்திச்சு ‘ஜெயா உனக்கு எதுவும் செய்யலேன்னு நினைக்காதப்பா. உனக்குத் தெரியாமலே பல கோடி மதிப்புள்ள சொத்துகளை உன் பேர்ல உயில் எழுதி வெச்சிருக்காங்க. போயஸ் கார்டனே இப்போ உன் பேர்லதான் இருக்கு. அந்த உயில் மட்டும் கிடைச்சிட்டா அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளரே நீதான்'னு சொன்னாங்க.
இந்த விஷயம் தெரிய வந்ததுல இருந்து எனக்குத் தூக்கமே இல்ல, சரியா சாப்பிடவும் முடியல. எப்பவும் அந்த உயில் நினைப்பாதான் இருக்கு. அந்த உயிலைத்தான் இப்போ தீவிரமா தேடிக்கிட்டு இருக்கேன். இதுல காமெடி என்னன்னா, இந்த உயில் விஷயத்தைச் சொன்னா யாருமே நம்ப மாட்டேங்குறாங்க. உயில் கிடைக்காததைவிட இதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. (எனக்கும்தான் சிரிப்பை அடக்குறது கஷ்டமா இருக்கு!)

அந்த உயிலைக் கண்டுபிடிச்சு வெளியிடச் சொல்லி கமிஷனர் ஆபீஸ்ல இருந்து ஜனாதிபதி வரைக்கும் புகார் அனுப்பிட்டேன். யாருமே முறையான பதில் கொடுக்க மாட்டேங்குறாங்க. அதனால அம்மா சமாதியில உண்ணாவிரதம் இருக்க முடிவு பண்ணிக் கிளம்பினேன். உடனே உளவுத்துறை அதை மோப்பம் பிடிச்சு, வண்டி நிறைய என் வீட்டுக்கு போலீஸ அனுப்பிட்டாங்க. அவங்க நாலுநாள் என்னை ஹவுஸ் அரெஸ்ட்ல வெச்சிருந்தாங்க. அதுக்கப்புறம்தான் சட்டப்படி இதைச் சந்திக்க நீதிமன்றம் போனேன்.’’
``ஆச்சர்யமா இருக்கே, ஆமா, ஜெயலலிதா உங்ககிட்ட எப்படிப் பழகுவாங்க?’’
‘‘என்ன இப்படிக் கேட்டுட்டீங்க, எனக்குத் தெரியாம என்னைக் கண்காணிக்க க்ரைம் பிராஞ்ச்காரங்களை அம்மா நியமிச்சிருந்தாங்க. அவங்க நான் தம்மடிச்சாக்கூட அம்மாகிட்ட போட்டுக் கொடுத்திடுவாங்க. உடனே அம்மா எனக்கு போன் பண்ணி, ‘ஏம்பா இப்படி உடம்பைக் கெடுத்துக்கிற’ன்னு திட்டுவாங்க. ‘உங்களுக்கு எப்படிம்மா தெரியும்’னு கேட்டா, ‘தமிழ்நாட்டையே கண்காணிக்கிற நான் உன்னைக் கண்காணிக்க மாட்டேனா’ன்னு சிரிப்பாங்க. அதே மாதிரி ஒருமுறை எனக்கு உடம்பு சரியில்லாதப்போ ஆஸ்பத்திரிக்கே வந்து யாருக்கும் தெரியாம ரகசியமா பார்த்துட்டுப் போனாங்க.
அப்படி சந்தேகமாப் பார்க்காதீங்க... நான் சொல்றதெல்லாம் சத்தியமான உண்மைங்க! ஆனா, இதையெல்லாம் வீட்ல வந்து சொன்னா என் பொண்டாட்டிகூட நம்ப மாட்டேங்குறா! நான் ஒருமாதிரி திரியிறேன்னு என் குடும்பமே என்னைக் கடத்தி பெங்களூர் மனநலக் காப்பகத்தில் அடைச்சு வெச்சாங்க. அப்படியிருந்தும் நான் வெளியே வந்து கஷ்டப்பட்டு இப்படிப் போராடுறேன்னா, அதுக்குக் காரணம் அம்மா என் மேல வெச்ச நம்பிக்கையைக் காப்பாத்தணும், இந்தத் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் காப்பாத்தணும்ங்கிற நல்ல நோக்கம் மட்டும்தான்.’’

``ஒருவேளை அந்த உயில் உங்க கைக்குக் கிடைச்சா அதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’
‘‘உயில் கைக்கு வந்த உடனே முதல் வேலையா போயஸ் கார்டனைக் கைப்பற்றுவேன். அடுத்து அ.தி.மு.க-வுக்குத் தலைமை ஏற்பேன். ‘சிவாஜி' படத்துல வர்ற ரஜினி மாதிரி ஊருக்கு ஒரு காலேஜ் கட்டுவேன். ஏழைகளை எல்லாம் பணக்காரங்களா மாத்துவேன். மிச்ச மீதி காசு இருந்தா அதை என் செலவுக்கு வச்சிக்குவேன்.
எனக்கு உயில் கிடைக்கக்கூடாதுன்னு ஒரு கூட்டமே தீயா வேலை செய்யுது. டி.டி.வி.தினகரன் குரூப், ஓ.பி.எஸ் குரூப், எடப்பாடி குரூப், சி.பி.சி.ஐ.டி இவங்கெல்லாம் என் வீட்டை 24 மணி நேரமும் வாட்ச் பண்றாங்க. இவங்க தொல்லை தாங்காம டிஜிட்டல் முறைல போராடலாம்னு ‘அம்மா உயில் எங்கே?'ன்னு டைட்டில் வெச்சு வாட்ஸப்ல வீடியோ விட்டேன். உடனே என் எதிரிகள் ஏர்டெல் கம்பெனிகூட கூட்டுச் சேர்ந்துக்கிட்டு என் நெட் ஸ்பீடைக் குறைச்சாங்க. அப்பறம் என் வாட்ஸப் அக்கவுன்டையே தடை பண்ணிட்டாங்க. இப்போ அதுக்கும் சேர்த்து ஹைகோர்ட்ல ஒரு கேஸ் போட்டிருக்கேன்.’’

``ஜெயலலிதாவுடனான உங்கள் நட்பில் மறக்க முடியாத ஒரு சம்பவம் சொல்லுங்க...’’
‘‘அம்மாவுக்கு ஸ்நாக்ஸ் ரொம்பப் பிடிக்கும். அவல், மிக்சர் மாதிரி அயிட்டங்களை என்கிட்ட ஆசையா வாங்கித் தரச் சொல்லிக் கேட்பாங்க. நானும் வாங்கிக் கொடுப்பேன். ஆனா, இப்போ அவல் வாங்கிக் கொடுக்க அம்மா இல்லையேன்னு நினைக்கிறப்போ என் கண்ணெல்லாம் கலங்குது’’ என எமோஷனல் மோடுக்குப் போனவர் ஒரு கேப் விட்டுத் தொடர்ந்தார்.
‘‘என்னைப் பேட்டி எடுக்கச் சொல்லிப் பல மீடியாக்களுக்கு மெயில் போட்டேன். யாரும் என்னைக் கண்டுக்கவே இல்ல. நீங்க ஒருத்தர்தான் என்னை மதிச்சுத் தேடி வந்திருக்கீங்க. இந்தப் பேட்டி மூலமா உயில் மட்டும் கைக்கு வரட்டும். முதல் வேலையா போயஸ் கார்டனைக் கைப்பற்றி அங்கே உங்களைக் கூப்பிட்டு பெருசா ட்ரீட் கொடுக்குறேன்’’ என்றார்.
‘ஐயா மாங்காடு... இனிமே தாங்காது' என்று ஓட்டமெடுத்தேன்.
மாங்காடு சௌந்தர்ராஜனின் பேட்டியை Timepass online யூடியூப் சேனலில் கீழ்க்கண்ட லிங்க் மூலம் பார்க்கலாம்.