அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஒருங்கிணைத்த டார்க் வெப்சைட்... வழிநடத்திய ஹேண்ட்லர்ஸ்... மங்களூர் குண்டு வெடிப்பில் சர்வதேச சதி?!

மங்களூர் குக்கர் வெடிகுண்டு
பிரீமியம் ஸ்டோரி
News
மங்களூர் குக்கர் வெடிகுண்டு

ரகசிய உரையாடல்களை மேற்கொள்வதற்காக ‘டார்க் வெப்சைட்’ எனப்படும் ரகசிய இணையப் பயன்பாட்டை அவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

கோவை சிலிண்டர் வெடிகுண்டுச் சம்பவத்தின் சூடு அடங்குவதற்குள் கர்நாடக மாநிலம், மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தற்போது, குக்கர் வெடிகுண்டைத் தயாரித்து, வெடி விபத்தில் சிக்கிக்கொண்ட 24 வயதேயான முகமது ஷாரிக் என்ற இளைஞர் தீக்காயங்களுடன் பலத்த போலீஸ் பாதுகாப்பில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். கல்லூரி படிப்பைக்கூட முழுமையாக முடிக்காத ஷாரிக், சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது என்.ஐ.ஏ.

ஒருங்கிணைத்த டார்க் வெப்சைட்... வழிநடத்திய ஹேண்ட்லர்ஸ்... மங்களூர் குண்டு வெடிப்பில் சர்வதேச சதி?!

இது குறித்து என்.ஐ.ஏ உயர்மட்ட அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “கர்நாடகா மாநிலம், ஷிவ்மோகா மாவட்டத்தைச்‌ சேர்ந்த ஷாரிக், இளம் வயதிலேயே தாயை இழந்தவர். தந்தை மறுமணம் செய்ததும் குடும்பத்துடனான தொடர்பைக் குறைத்துக்கொண்டார். கல்லூரியில் படிக்கும் காலத்தில், மத அடிப்படை வாதிகளின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்ட இவர், ‘லஷ்கர்-இ தொய்பா’ என்ற அமைப்புக்கு ஆதரவான வாசகங்களை மங்களூர் சுவரில் எழுதி, கடந்த 2020-ம் ஆண்டு உபா சட்டத்தில் கைதானார். பின்னர், ஜாமீனில் வெளிவந்த ஷாரிக்கை தீவிரவாதப் பின்னணிகொண்ட சிலர் தேடிவந்து சந்தித்திருக்கிறார்கள். மேலும், ரகசிய உரையாடல்களை மேற்கொள்வதற்காக ‘டார்க் வெப்சைட்’ எனப்படும் ரகசிய இணையப் பயன்பாட்டை அவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

ஒருங்கிணைத்த டார்க் வெப்சைட்... வழிநடத்திய ஹேண்ட்லர்ஸ்... மங்களூர் குண்டு வெடிப்பில் சர்வதேச சதி?!

இந்த டார்க் வெப்சைட்டுகள் மூலம் ஷாரிக்கை, ‘ஹேண்ட்லர்ஸ்’ எனப்படும் கட்டளை பிறப்பிப்பவர்கள் வழிநடத்தியிருக்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல் ஆபத்தான வெடிமருந்துகளைக் கையாள்வது, சிறிய, பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தும் வெடிகுண்டுகளைத் தயாரிப்பது போன்ற விவரங்களை டார்க் வெப்சைட் மூலம் கற்றுத் தேர்ந்திருக்கிறார் ஷாரிக். கடந்த ஆறு மாதங்களாக தீவிரவாதச் செயல்களில் ஈடுபடத் தொடங்கிய ஷாரிக், மைசூரில் ‘பிரேம்’ என்ற பெயரில் வீடு வாடகைக்கு எடுத்து யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு மங்களூர் காவல்துறையின் கண்காணிப்பிலிருந்து தப்பியிருக்கிறார். மேலும், தமிழ்நாட்டின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கேரளாவிலும் சுதந்திரமாக நடமாடியிருக்கிறார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கச் சதித்திட்டம் தீட்டிய ஷாரிக், அதற்காக வெடிபொருள்களை வாங்கிக் குவிக்கத் திட்டமிட்டிருந்தார். பல இடங்களில் சல்ஃபர், பாஸ்பரஸ் போன்ற ரசாயனங்களை அவர் வாங்கியிருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது” என்றனர்.

தற்போது, ஷாரிக்குடன் தொடர்பில் இருந்ததாக நான்கு பேரைப் பிடித்து ரகசிய இடத்தில்வைத்து விசாரணை நடைபெற்றிருக்கிறது. அந்த நால்வர் மீதும் தேசியக்கொடியை எரித்தது போன்ற வழக்குகள் ஏற்கெனவே பதிவாகியிருக் கின்றன. மேலும், கோவையில் நடந்த சிலிண்டர் வெடி விபத்தும், இந்த குக்கர் வெடி விபத்தும் கிட்டத்தட்ட ஒரே பாணியில் நடந்திருப்பதால், இருவருக்கும் ஒரே இடத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டதா... என்கிறரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைத்த டார்க் வெப்சைட்... வழிநடத்திய ஹேண்ட்லர்ஸ்... மங்களூர் குண்டு வெடிப்பில் சர்வதேச சதி?!

தீவிரவாத இயக்கத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து சிறைக்குச் சென்ற ஷாரிக் ஜாமீனில் வெளியே வந்த பிறகு தொடர்ந்து கண்காணிக்காமல் கோட்டைவிட்டதும், தேசத்துக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவுசெய்யப்பட்ட நால்வரும் ஷாரிக்குடன் அதே மாநிலத்தில் தொடர்பில் இருந்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும்‌ மங்களூர் காவல்துறையின் மிகப்பெரிய தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.

மங்களூர் காவல்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசியபோது, “கோவை சிலிண்டர் வெடி விபத்தில் நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டதைப்போலவே இந்த குக்கர் வெடிகுண்டு விபத்திலும் ஊட்டியைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரிடம் 60 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறோம்” என்றார்.

ஒருங்கிணைத்த டார்க் வெப்சைட்... வழிநடத்திய ஹேண்ட்லர்ஸ்... மங்களூர் குண்டு வெடிப்பில் சர்வதேச சதி?!

இது குறித்து தெரிவித்த கர்நாடக டி.ஜி.பி பிரவின் ஷூட், “தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த டி.ஜி.பி-க்களுடன் தொடர்பில் இருக்கிறேன். இந்தக் குற்றச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறியும் பொதுவான நோக்கத்தில் கூட்டாகச் செயல்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம், “போலீஸ் விசாரணையில் 18 ஸ்லீப்பர் செல்கள் இருப்பது உறுதியாகியிருக் கிறது. என்.ஐ.ஏ உதவியுடன் விரைவில் அவர்களைக் கண்டுபிடித்து கைதுசெய்வோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

கடும் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் ஷாரிக் வாய் திறந்தால் இன்னும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவரும் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்!