அத்தியாயம் 1
Published:Updated:

மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்! - கடல் தொடாத நதி!

Maniratnam
பிரீமியம் ஸ்டோரி
News
Maniratnam

ராமானுஜர் பத்தி பேச ஆரம்பிச்சு... மீன் சாப்பாட்ல முடிச்சிட்டாரே! :-)

கடல் தொடாத நதி - 19

ஆர்.டி.பாஸ்கர் எந்த அறிஞரை அறிமுகப்படுத்தப்போகிறார் என்பது தெரியாமலேயே அவருடன் பயணமானேன். காரில் காரைக்குடி நோக்கிப் பயணம். ஆங்காங்கே நிறுத்தி, சாப்பிட்டு, ஓய்வெடுத்து மத்தியான வேளையில் திருச்சி போய்ச் சேர்ந்தோம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். ‘நாம் பார்க்கப் போவது கோயிலில் ஏதோ பெரியவராக இருக்குமோ’ என்று நினைத்தேன். கோயிலுக்குச் செல்லும்முன் ரகசியத்தை உடைத்தார் பாஸ்கர். ‘‘ராமானுஜர் உடலைப் பச்சைக் கற்பூரத்தால் பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அவரைத்தான் பார்க்கப் போகிறோம்’’ என்று பாஸ்கர் சொன்னார்.

காரில் வெகுதூரம் பயணம் செய்து வந்ததால், ‘‘காலையில் வந்துவிடுங்கள்’’ என்று கோயில் பிரமுகர்கள் சொல்லிவிட்டார்கள். திருச்சியில் என் நண்பன் முத்துகிருஷ்ணனிடம் பேசி, ஆனந்தா லாட்ஜில் ரூம் போடச் சொன்னேன். அவர் ஒரு சமூக சேவகர், வழக்கறிஞர். சென்னையைப் பெருவெள்ளம் மூழ்கடித்தபோது நிவாரணப்பணிகளில் ஈடுபட்டவர். அவர்தான் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். மறுநாள் காலை குளித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாகக் கோயிலுக்குப் போனோம்.

Maniratnam
Maniratnam

தீப ஒளியில் ராமானுஜர் அமர்ந்திருக்கும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். உடம்பெல்லாம் பரவச அலை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீர்திருத்தவாதி. கலைஞர் சொல்வது போல, மதத்தில் புரட்சி செய்த மகான். இவரைத்தான் பார்க்கப் போகிறோம் என முன்பே தெரிந்திருந்தால் இவரைப் பற்றி நிறைய படித்துவிட்டு வந்திருக்கலாமே என யோசனை. பார்க்கப் பார்க்க என் கண்களில் நீராக வழிகிறது. என் மனதில் என்ன ஓடுகிறது என்பதை என்னாலேயே உணர முடியவில்லை. இந்திய மண்ணில் உதித்த மாபெரும் தத்துவஞானிக்கு அருகே நிற்கிறோம் என்கிற பெருமிதம். அமைதியாக வெளியே வந்தோம். நெஞ்சமெல்லாம் ராமானுஜர் நிறைந்து இருந்தார். அங்கு யாரையுமே அனுமதிக்க மாட்டார்கள். அனுமதித்தாலும் சில நிமிடங்களிலேயே போகச் சொல்லிவிடுவார்கள்.

இளையராஜா, ஸ்ரீரங்கம் கோபுரப் பணிக்கு நன்கொடை வழங்கியவன் என்பதால், பாஸ்கருக்கு அந்த அனுமதி எளிதில் கிடைத்தது.அடுத்து காரைக்குடிப் பயணம். காலையிலேயே பஞ்சு வீட்டு விசேஷம். நாங்கள் மாலையில் போய் நின்றோம். ‘‘எப்ப வரச் சொன்னா எப்ப வர்றீங்க?’’ என்றார். ‘ராமானுஜரைப் பார்த்துவிட்டு வந்தோம்’ என்று விஷயத்தைச் சொன்னோம். பஞ்சு சாருக்கு ஏக்கமாகிவிட்டது. ‘‘என்னிடம் சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே?’’ என்றார். இன்று நினைத்தாலும் ராமானுஜரை அத்தனை அருகில் பார்த்த நினைவு பரவசத்தை ஏற்படுத்திவிடும்.

மணிரத்னம் சாருடன் நான் முதன்முதலில் பணியாற்றியது, ‘தாஜ்மஹால்’ என்ற படத்துக்காக. பாரதிராஜா இயக்கம். பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகனாக அறிமுகமான படம். படத்தின் கதை விவாதங்களில் மணிரத்னம் பங்கேற்றபோது, நான் அவருடன் இருந்தேன். எத்தனை பண்பான மனிதர் என்பதை அறிந்தேன்.

அந்தப் படத்தின் கதைக்கான கீற்று, ஒரு சாளுக்கிய மன்னனின் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது. மைசூரையொட்டி ஒரு மலையில் அமைந்திருக்கிறது அந்தக் கோட்டை. தன் காதல் மனைவிக்காக அந்த மன்னன் அதைக் கட்டினான். கட்டி முடித்ததும் தன் மனைவியை அழைத்துச் சென்று காட்டினான். அகமகிழ்ந்து போனாள் மனைவி. பூரித்துப் போன அவள், ‘‘உனக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?’’ என்று கேட்கிறாள்.‘‘என்ன சொன்னாலும் செய்வாயா?” என்கிறான்.‘‘என்ன கேட்டாலும்’’ என்றாள் அவள்.‘‘இதோ... இந்த மலையில் இருந்து குதிக்கச் சொன்னால் குதிப்பாயா?’’கேட்ட அடுத்த வினாடி அங்கிருந்து அவள் குதித்துவிட்டாள். இது அந்த மலை மாளிகையைப் பற்றிச் சொல்லப்படும் கதை. இதைத்தான் ‘தாஜ்மஹால்’ கதையில் வேறு ஒரு மாதிரி சேர்த்தேன்.

அந்தப் படம் முடிந்து ஒருநாள் என்னை மணி சார் அழைத்தார். நான் அவருடைய அலுவலகத்துக்குப் போனேன். என்னை அவருடைய நாற்காலியில் அமரும்படி சொன்னார். ‘‘என்ன சார் இதெல்லாம்... நீங்க உட்காருங்க. நான் இந்தப் பக்கம் உட்காருகிறேன்’’ என்றேன். வற்புறுத்தி என்னை அவருடைய நாற்காலியில் உட்கார வைத்தார்.‘‘எனக்கு ஒரு கதை தரவேண்டும். எவ்வளவு மணி வேண்டும்?’’நான் சொல்லவில்லை.

கார் வரை வந்து வழியனுப்பினார். ஒரு செக்கைக் கொடுத்தார். நான் எதிர்பார்க்காத தொகை.அவருக்காக நான் கலந்துகொண்ட கதை விவாதம் சுவாரஸ்யமானது. ஈ.சி.ஆர் சாலையில் ஓர் அருமையான ஹோட்டலில் தங்கி, கதை விவாதம் நடந்தது. ஒரு நாள்கூட என் அறைக் கதவைத் தட்டி அழைத்ததே இல்லை. இன்டர்காமில் மட்டுமே அழைப்பார். ‘போன் இருக்கிறது, போனில் அழைக்கிறார்’ என்றே நினைத்தேன். அறைக் கதவைத் தட்டுவதுகூட அநாகரிகம் என நினைப்பவர் என்பதை அப்புறம்தான் உணர்ந்தேன். அவர் ஒரு நாளும் என் பிரைவஸியில் தலையிடவில்லை.

அவர் எப்போதும் பிஸிபேலா பாத், தயிர்சாதம் என எளிமையாகத்தான் சாப்பிடுவார். எனக்கு ‘நான்-வெஜிடேரியன்’ சாப்பாடு. எனக்கு மீன் பிடிக்கும் என்பதால் ஒரு நாள் அவர் ‘டெவில் ஃபிஷ்’ ஆர்டர் செய்திருப்பதாகச் சொன்னார். ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட உட்கார்ந்தபோது ஒரு சிறிய வண்டியில் வைத்து அந்த மீனை எடுத்துவந்தனர். ‘டெவில் ஃபிஷ்’ எப்படி இருக்கும் என எனக்கும் தெரியாது; அவருக்கும் தெரியாது. மெனுகார்டைப் பார்த்தால் ‘டெவில் ஃபிஷ்’ எனப் போட்டிருந்தது. பெரிய தொகை வேறு. பத்து பேர் சாப்பிடுகிற மாதிரியான ஒரு முழு மீன் வறுக்கப்பட்டிருந்தது. இதுதவிர சிக்கன் ஃப்ரைட் ரைஸ் போன்ற வேறு சில ஐட்டங்களும் இருந்தன.‘‘இதை அப்படியே பார்சலாகக் கட்டுங்கள்’’ என்றேன் சர்வரிடம். பார்சலை எடுத்துக்கொண்டு, ‘‘வாங்க சார்! கொஞ்சம் வெளியே போய்விட்டு வருவோம்’’ என்றேன். ‘எதற்கு வெளியே அழைக்கிறார்’ என மணி சார் பார்த்தார். அடை மழை பெய்துகொண்டிருந்தது. குடையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.

மீன் என்றால்...

மிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் கண்கூடாக உணர்ந்த சம்பவம் இது. ஒரு மலையாளப்படத் தயாரிப்பாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சாப்பாட்டு நேரம் வந்தபோது, ‘‘உங்களுக்கு மதியம் என்ன வேண்டும்?’’ என்றார். ‘‘எனக்கு மீன்தான் பிடிக்கும்’’ என்றேன்.

சிறிது நேரத்தில் அவர் ஆர்டர் செய்த பார்சல் வந்தது. ஒரு டிபன் பாக்ஸில் ஒரே ஒரு மீன் வறுத்து எடுத்துவந்திருந்தார்கள். சாப்பாடு வரும் எனக் காத்திருந்தேன். அப்படி எதுவும் வருகிற மாதிரி இல்லை. திரும்ப அந்தத் தயாரிப்பாளருக்கு போன் போட்டுக் கேட்டேன். ‘‘நீங்கள் மீன்தானே கேட்டீர்கள்?’’ என்றார். தமிழ் சினிமாவில் காமெடி படம் என்றாலும் அதிலே ஆக்‌ஷன், சென்டிமென்ட் எல்லாமே கலந்திருக்கும். அங்கே காமெடி படம் என்றால் காமெடி மட்டும்தான். மற்ற மசாலாக்கள் குறைவாகவே இருக்கும். ஒரு விஷயத்தை மையப்படுத்தியதாகவே இருக்கும். நமக்கு மீன் என்றால், மீன் குழம்பு, மீன் வறுவல், சாதம் என்று எல்லாம் சேர்ந்த சமையல். அவர்களுக்கு மீன்!

- அன்னக்கிளி ஆர். செல்வராஜ்

சந்திப்பு: தமிழ்மகன்

(14.05.2017 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து...)