
துர்கா.செ
ஒரு பெண் குழந்தை தன் முதல் மாதவிடாயைச் சந்திக்கும்போது, ‘பொம்பளப் புள்ள பெருசாயிட்டா’ என்று அதை அனைவருக்கும் அறிவித்து, ஊரும் உறவும் கூடி மஞ்சள் நீராட்டு விழா செய்யும் பழக்கம் இன்றும் நம்மிடம் தொடர்கிறது. ஆனால் இது தேவையா? ஒரு 2கே கிட் ஆக இது குறித்த என் எண்ணங்களை இங்கே பகிர்கிறேன்.
‘வயசுக்கு வர்றப்போ பொம்பளப் புள்ளைக்கு ஓய்வு கொடுத்து, நல்லா சாப்பாடு கொடுக்கணும்னு கொண்டு வந்த சடங்கு இது’ என்பார்கள் சிலர். எனில், பூப்படைந்த தினத்திலிருந்து 16-வது நாள், அல்லது 30-வது நாள் வரை என அந்தச் சிறுமியைத் தனிமைப்படுத்தி, உண்ணத் தனித்தட்டில் இருந்து படுக்கத் தனிப்படுக்கை வரை கொடுத்து அவளை ஒதுக்குவது ஏன்? மேலும், புரோகிதரைக் கொண்டு அவள் தீட்டை கழிப்பதாகச் சொல்லிப் ‘புனிதச் சடங்கு’ செய்வது ஏன்? பெண் பிள்ளையின் முதல் மாதவிடாயை மட்டும் கொண்டாட்டமாக்கிவிட்டு, அதன் பிறகு அவளது ஆயுளுக்கும், ஒவ்வொரு மாதமும் அதைத் தீட்டாக நினைப்பதும், அந்நாள்களில் அந்தப் பெண்ணை தீண்டத்தகாதவளாக நடத்துவதும் நியாயமா?
மேலும், அன்றைய காலகட்டத்தில் பெண்களின் திருமண வயது 15, 16 என்றிருந்த சூழலில், ஒரு வீட்டில் ஒரு சிறுமி பூப்படைந்தவுடன், ‘எங்கள் வீட்டில் திருமணத்துக்குப் பெண் தயாராகிவிட்டாள்’ என்பதை ஊருக்கு மறை முகமாக அறிவிக்கும் சடங்காக இந்த மஞ்சள் நீராட்டு விழா இருந்தது. அதை இன்றைய சிறுமிகளுக்கும் நடத்துவது தேவையா?

செய்ய வேண்டியது, பூப்பெய்தியலிருந்து பதின்பருவப் பெண்களுக்குச் சத்துணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டியது. அதில் கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் இங்கே...
தினமும் ஒரு டம்ளர் பால், கெட்டித் தயிர் போன்றவை கால்சியம் சத்தை அளிக்கும். தினமும் கைப்பிடி பாதாம் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பும் புரதமும் கிடைக்கச் செய்யும். மாதவிடாய் உதிரப்போக்கால் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படாமல் இருக்க இரும்புச்சத்து அதிகமுள்ள பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றை பெண் குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பள்ளி, கல்லூரிக்கு சிறு டப்பாவில் உலர்திராட்சை எடுத்துச் சென்று ஸ்நாக்ஸ் ஆகச் சாப்பிடலாம்.
சடங்கு, சம்பிரதாயங்களைவிட பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிப்போம்!