மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்றபோது நடந்த போலீஸ் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டம் நடந்து 20 வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனாலும், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் இன்னும் கிடைத்தபாடில்லை.

பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் வசம் இருக்கும் 8,373 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தைப் `பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி’ எனத் தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதனால், 2028-ம் ஆண்டு பிப்ரவர் 11-ம் தேதி வரை மட்டுமே குத்தகை காலம் இருப்பதால் அதன் பின்னர் தேயிலைத் தோட்டம் இருக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனால் 1929 முதல் பல தலைமுறைகளாக இங்கு பணியாற்றிவரும் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.
இதுபற்றிப் பேசிய தொழிலாளர்கள், ``கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் இருக்கும் குதிரைவெட்டி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலை ஆகிய இடங்களில் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள மலைப்பகுதி என்பதால் வனத்துறையின் கட்டுப்பாடு அதிகம் இருக்கிறது.
இந்த மலைப்பகுதியானது பார்ப்போரைக் கவரும் வகையில் ரம்மியமானதாக இருப்பதால் வனத்துறையின் அனுமதியுடன் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வரும் கூட்டமும் அதிகம் உள்ளது. அத்துடன், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இங்குள்ள பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள் எனப் பலரும் பயன்படுத்தும் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது.
நெல்லை மற்றும் அம்பாசமுத்திரம் பகுதியிலிருந்து மூன்று பேருந்துகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது. மோசமான சாலைகள் காரணமாக அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதடைகின்றன. 15 அடி மட்டுமே கொண்ட சாலையில் கொண்டை ஊசி வளைவுகளைக் கடப்பதற்காக அரசு சார்பாக மினி பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன.
இங்கு மருத்துவ வசதி இல்லாததால் மலையில் இருந்து கீழே செல்ல வேண்டியதிருக்கிறது. பேருந்து வசதி இல்லாததால் சிரமப்படுகிறோம்.தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள்
அடிக்கடி பேருந்துகள் பழுதடைவதால் தற்போது இரு அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மற்றொன்று மாற்றுப் பேருந்தாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம். மாஞ்சோலையில் இருக்கும் மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லாததால் அம்பாசமுத்திரம் அல்லது திருநெல்வேலி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மணிமுத்தாறு செக் போஸ்ட் பகுதியைக் கடந்ததும் சாலை முழுவதும் கல் கொட்டப்பட்டுக் கிடக்கிறது. புதிய சாலை அமைக்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டன. அதனால் இரு சக்கர வாகனங்களில்கூட செல்ல முடியாத நிலை இருக்கிறது. ஏற்கெனவே எங்களின் எதிர்காலம் குறித்த கவலை சூழ்ந்திருக்கும்போது அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்படுகிறோம்’’ என்று வேதனைப்பட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். ``சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்கின்றனர்.
` மருத்துவ வசதி, குழந்தைகளுக்கான கல்வி வசதி உள்ளிட்டவற்றைச் செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்' என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.