
ஜெயக்குமாரின் அரசியல் என்ட்ரியே சுவாரசியமானது’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.
“பாக்ஸிங் மேடையில் குத்துச்சண்டை போடுவார். விழா மேடையில் பாட்டும் பாடுவார். நிருபர்களைக் கண்டால் தனது டிரேடு மார்க் சிரிப்புடன் பேட்டி கொடுப்பார். சசிகலா விவகாரம் முதல் விஜய் பட வில்லங்கம் வரை எல்லாவற்றுக்கும் ஆட்சியின் ஊதுகுழலாக இருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். கவனிப்பது என்னவோ மீன்வளமும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறையும். ஆனால், அ.தி.மு.க ஆட்சியின் ஆல் ரவுண்டராக ஒலித்துக் கொண்டிருப்பது ஜெயக்குமாரின் குரல் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
“என்னை எதிர்த்து ஸ்டாலின் போட்டியிடத் தயாரா?’’ என்று சமீபத்தில் கேட்டார் ஜெயக்குமார். ‘அந்த அளவுக்கு தொகுதியைத் தன் பிடிக்குள் வைத்திருக்கிறார்’ என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகளுக்கே ஏற்படுத்திய ஜெயக்குமார், சென்னையின் ராயபுரம் தொகுதியிலிருந்து ஐந்து முறை வெற்றிபெற்றுள்ளார்.

கெமிஸ்ட்ரி படிச்ச வக்கீல்!
“அரசியலில் யாருக்கும் எதுவும் நடக்கலாம். அப்படி அதிர்ஷ்டம் பாதி, உழைப்பு பாதி என்று கலந்ததே ஜெயக்குமாரின் அரசியல் வாழ்க்கை’’ என்று சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். வட சென்னையில் ஒரு தியேட்டரில் டிக்கெட் கிழித்துக்கொடுக்கும் பணியைச் செய்துவந்த துரைராஜின் மகன்தான் இன்று ‘ஆல் ரவுண்டர்’ அமைச்சராக பவனி வருகிறார். ஜெயக்குமாரின் அப்பா துரைராஜ், தீவிர தி.மு.க ஆதரவாளர். காசிமேடு விநாயகபுரம் பகுதியில்தான் குடும்பம் வசித்துவந்தது. வட சென்னையில் உள்ள தியாகராஜா கல்லூரியில் இளங்கலை வேதியியல் படித்து முடித்த ஜெயக்குமார், சிறிய அளவிலான கெமிக்கல் கம்பெனி ஒன்றை சென்னையின் புறநகர்ப் பகுதியில் தொடங்கினார். வட சென்னை வம்புக்கும் பெயர்போனது. அப்படி ஒரு பிரச்னையில் ஜெயக்குமார் சிக்கி, காவல் நிலையம் செல்லவேண்டிய சூழல் வந்தது. ஒரு வழக்கறிஞர் உதவியுடன் அங்கிருந்து வெளியில் வந்தார் ஜெயக்குமார். அப்போது ‘வழக்கறிஞர்தான் பவர்ஃபுல்லானவர்’ என்கிற எண்ணம் அவர் உள்ளத்தில் ஏற்பட, தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கச் சென்றார் ஜெயக்குமார்.

‘ஜெயக்குமாரின் அரசியல் என்ட்ரியே சுவாரசியமானது’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள். “கல்லூரி முடித்தவுடன் ஊர் சுற்றுவது எல்லோருக்கும் வழக்கம். ஆனால், ஜெயக்குமார் நண்பர்களெல்லாம் வித்தியாசமாகச் சிந்தித்தனர். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரத்தில், அ.தி.மு.க பட்டிதொட்டி எங்கும் பவர்ஃபுல்லாக இருந்தது. ஜெயக்குமார் டீம் அ.தி.மு.க-வில் அங்கமாவதற்கு வித்தியாசமான ஐடியா போட்டனர். ஜெயக்குமார் தலைமையில் ‘அ.தி.மு.க பட்டதாரிகள் பேரவை’ என்ற அமைப்பை ஆரம்பித்தனர். அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருந்தவர் ஜேப்பியார். ஜெயக்குமார் டீம் ஜேப்பியாரைச் சந்தித்தது. “நாங்கள் காசிமேடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரிகள். எங்கள் அமைப்பைக் கட்சியுடன் இணைக்க வேண்டும்’’ என்று சொல்லி, இணைந்தனர். இப்படி அ.தி.மு.க-வில் இணையும்போதே ஓர் அணியின் தலைவராகக் நுழைந்தார் ஜெயக்குமார்.

சசிகலாவை எதிர்த்த தில்!
ஜெயலலிதா பொறுப்புக்கு வந்து, 91-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயக்குமாருக்கு ராயபுரம் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா சீட் கொடுத்தார். ஜெயித்த தன்னை ஜெயலலிதா அமைச்சராக்குவார் என ஜெயக்குமாரே எதிர்பார்க்கவில்லை. மீன்வளம், வனத்துறை உள்ளிட்ட ஐந்து துறைகளின் அதிபதியாக அமைச்சரவையில் இடம்பெற்றார். அந்த அமைச்சரவையில் வட சென்னையைச் சேர்ந்த மதுசூதனனும் இடம்பெற்றார். சீனியர் மினிஸ்டராக வட சென்னைக்குள் அவர் உலவ, ‘அமைச்சரில் என்ன சீனியர், ஜூனியர்’ என்று அவரோடு மல்லுக்கு நின்றார் ஜெயக்குமார். அன்று ஆரம்பித்த அரசியல் பகை இப்போதுவரை தொடர்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவைத் தீவிரமாக எதிர்த்தவர்களில் ஜெயக்குமாருக்கு முதல் இடம் உண்டு. தன் அரசியல் பயணத்தின் ஆரம்பம் முதல் இப்போது வரை சசிகலா குடும்பத்தினருடன் முரண்பாடான போக்கையே ஜெயக்குமார் கையாண்டு வந்துள்ளார். 2001-ம் ஆண்டு அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது மின்துறை அமைச்சரானார் ஜெயக்குமார். மன்னார்குடித் தரப்புடன் ஒட்டாமலே தனி ஆவர்த்தனம் செய்தார். அப்போது மதுசூதனன் அமைச்சராகவில்லை. அதைப் பயன்படுத்திக்கொண்டு வட சென்னை அ.தி.மு.க-வின் அதிகார மையமாகவே மாறிவிட்டார். இன்றுவரை அந்த அதிகார மையத்தின் அரியாசனம் யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.

2017-ம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதுசூதனனைப் போட்டியிட வைக்க ஒட்டுமொத்த அ.தி.மு.க தலைமையும் ஒப்புக்கொண்டபோது கடைசிவரை அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஜெயக்குமார். அ.தி.மு.க-வின் அவைத்தலைவராக மதுசூதனன் இருந்தாலும், ஜெயக்குமாரை மீறி வட சென்னையில் அவர் எதுவும் செய்ய முடியாது.
அப்பா பதவி போனது...
மகனுக்குப் பதவி வந்தது!
2011-ம் ஆண்டுத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி வாகை சூடி ஆட்சியைப் பிடித்தது. அடுத்த ஐந்தாண்டுகள் சட்டமன்றத்தை அலங்கரிக்கப்போகும் சபாநாயகர் யார் என்கிற கேள்வி அ.தி.மு.க-வில் பரபரப்பாக இருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக ஜெயக்குமாரின் பெயரை டிக் செய்தார் ஜெயலலிதா. சட்டமன்றத்தில் சபாநாயகர் வந்தால், முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்பது மரபு. ஆனால், சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஜெயக்குமார், முதல்வர் ஜெயலலிதா என்ட்ரி கொடுத்தால் ‘படார்’ என எழுந்து நின்றுவிடுவார்.
சபாநாயகர் நாற்காலியில் முழுவதுமாக உட்காரும் முன்பே அந்தப் பதவிக்கு வேட்டு வந்துவிட்டது. 2012-ம் ஆண்டு ஜெயக்குமாரின் பிறந்தாள் விழாவை விமரிசையாகக் கொண்டாடினார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஓவராக உணர்ச்சிவசப்பட்ட ஒருவர் ஆர்வக்கோளாறில் ‘வருங்கால முதல்வரே!’ என்று வாழ்த்தி போஸ்டர் ஒட்ட, அன்றைய தினமே கார்டனுக்கு அழைக்கப்பட்டார் ஜெயக்குமார். உள்ளே சென்றவர், தொங்கிய முகத்துடன் கோட்டைக்கு வந்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போனார். ‘இனி ஜெயக்குமாருக்கு ஜெயமே இல்லை’ என்று ஒரு டீம் மகிழ்ச்சியில் திளைத்தது. சசிகலா குடும்ப உறவுகள்கூட இதை மகிழ்வுடன் வரவேற்றனர்.

ஆனால், இரண்டே ஆண்டுகளில் இன்னொரு சம்பவம் நடந்தது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில், பாரம்பரியமான தென்சென்னைத் தொகுதிக்கு வேட்பாளராக ‘ஜெ.ஜெயவர்தன்’ இடம்பெற்றிருந்தார். ஆம், ஜெயலலிதாவால் சபாநாயகர் பதவி பிடுங்கப்பட்ட ஜெயக்குமாரின் மகன், அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். “அரசியலில் என்னை யாரும் அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிடமுடியாது” என்று அப்போது வெற்றிச்சிரிப்புடன் சொன்னார் ஜெயக்குமார். அப்பா சட்டமன்ற உறுப்பினராகவும், மகன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அ.தி.மு.க-வில் கோலோச்சினார்கள்.
பட்ஜெட் போட்டார்... பதுங்கிப் பாய்ந்தார்!
2016-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டார் ஜெயக்குமார். பிரசாரத்திற்குச் செல்லும் இடங்களில் குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, குசலம் விசாரிப்பது, பெயர் சொல்லிக் கூப்பிடுவது எனத் தனக்கே உரிய ஸ்டைலில் பிரசாரத்தைக் கலகலப்பாக்கினார் ஜெயக்குமார். ராயபுரம் தொகுதியில் மீனவர்கள், இஸ்லாமியர்கள், தலித்துகள் வாக்கு வங்கியே பிரதானம். இதுவே ஜெயக்குமாரின் பலமும்கூட. வழக்கம்போலவே எளிதாக வெற்றிபெற்றார். அமைச்சரவையில் மீன்வளத்துறை ஜெயக்குமார் வசம் வந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் காரணமாக, அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. அதுவரை முதல்வராக இருந்த பன்னீர் வசம் இருந்த நிதித்துறையை ஜெயக்குமாரிடம் கொடுக்க முடிவெடுத்தார் சசிகலா. அப்போது சசிகலாவுக்குப் புரியவில்லை, தன்னை எதிர்த்து எதிர்காலத்தில் தீவிரமாகக் குரல்கொடுக்கும் நபராக ஜெயக்குமார் மாறுவார் என்று! 2017-ம் ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் வாய்ப்பும் ஜெயக்குமார் வசம் சென்றது. நிதியமைச்சராக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்குச் சென்ற ஜெயக்குமார், மத்திய அரசின் அழுத்தத்திற்கும் பணிந்து போகவேண்டிய நிலை வந்தது. அன்று நிதி அமைச்சராக ஜி.எஸ்.டி கூட்டத்தில் பங்கேற்றவர், இப்போதுவரை நிதியமைச்சராக இல்லாதபோதும் ஜி.எஸ்.டி-யின் அறிவிக்கப்படாத அமைச்சராகவே செயல்பட்டுவருகிறார்.
சசிகலா சிறைக்குச் சென்றபிறகு டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் எடப்பாடி அரசு இருந்துவந்தது. ஒரு கட்டத்தில் தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் முடிவுக்கு அ.தி.மு.க அமைச்சர்கள் வந்தனர். அந்த முடிவை அறிவிக்க, சீனியர் அமைச்சர்களே சேர்ந்து ஜெயக்குமாரை முன்னுக்குத் தள்ளினார்கள். “அதுவந்து...” என்று தடுமாற்றத்துடன் பேச்சை ஆரம்பித்த ஜெயக்குமார், அடுத்த இரண்டு நிமிடங்களில், “தினகரன் உட்பட அனைவரையும் அ.தி.மு.க-விலிருந்து ஒதுக்கி வைக்கிறோம்” என்று தடாலடியாகச் சொன்னார். அப்போது முதல், சசிகலா சென்னை திரும்பியது வரை தொடர்ந்து அந்தக் குரலைப் பதிவு செய்துகொண்டே இருக்கிறார் ஜெயக்குமார்.
தொகுதிக்கு என்ன செய்தார்?
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக அவர் இருக்கும் ராயபுரம் தொகுதியில், சிறு குழந்தைக்கும் அவர் முகம் தெரிகிறது. ஆனால், தொகுதி பின்தங்கிய நிலையில் பல்லை இளிக்கிறது. “வண்ணாரப்பேட்டையில்தான் அவரது எம்.எல்.ஏ அலுவலகம் உள்ளது. அங்கு வந்து மனுக்களைக் கொடுக்கச் சொல்வார். பாதி வேலை நடக்கும்; பாதி வேலை நடக்காது. ஆனால், தொகுதியிலிருந்து அவரைப் பார்க்க யார் சென்றாலும் முகம் சுளிக்காமல் சந்திப்பார். வீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்தால் வந்துவிடுவார். தொகுதியில் எல்லோருக்கும் அவர் பெயர் தெரியும். ஆனால், பெயர் சொல்லும் பெரிய திட்டங்கள் எதையும் அவர் கொண்டுவரவில்லை.
ராயபுரம் தொகுதியின் அடையாளங்களில் ஒன்று காசிமேடு. ஆனால், அங்கு மீனவர் பகுதியைக்கூட இவர் மேம்படுத்தவில்லை. வண்ணாரப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாலம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அது முழுமை அடையவில்லை. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகத் தமிழகத்தின் ஷாகின்பாக் உருவான இடமே வண்ணாரப் பேட்டைதான். இரண்டு மாதங்கள் தொடர் போராட்டம் நடந்தது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் அங்கு வந்து சென்றனர். ஆனால், தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை அமைச்சர். இந்தத் தேர்தலில் அவருக்கு வெற்றி எளிதாகக் கிடைத்துவிடாது” என்கிறார் வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ஜாபர் உசேன் என்ற சமூக ஆர்வலர்.
அமைச்சராக என்ன செய்தார்?
‘`தமிழகத்தில் மீனவர் நல வாரியம் இருந்தாலும், அது சரியாகச் செயல்படவில்லை. இந்தியாவிலேயே மீன்பிடித் தொழிலில் முதல் இடத்தில் உள்ளது தமிழகம். ஆனால், தமிழக மீனவர்களின் நிலை இன்னும் மேம்படவில்லை. குறிப்பாக மானியத்தில் வழங்கப்படும் டீசலை 1,500 லிட்டரிலிருந்து 3,000 லிட்டராக உயர்த்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் தமிழக அரசு 1,800 லிட்டர் மட்டுமே வழங்குகிறது. மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கான முறையான வசதிகள் இதுவரை தமிழகத்தில் இல்லை. அரசு அமைத்துக்கொடுத்துள்ள குளிரூட்டும் மையங்களும் முழுச்செயல்பாட்டில் இல்லை. ஆனால், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான படகுகளை அரசு மானியத்துடன் வழங்கியுள்ளது. அது மீனவர்களுக்கு வரப்பிரசாதம். மீனவர்களை நன்கு அறிந்தவர் இந்தத் துறையின் அமைச்சராக இருக்கிறார். குறைகள் அதிகம் இல்லை என்றாலும், இன்னும் நிறைய செய்திருக்கலாம்” என்கிறார் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த சேசுராஜ்.
சீன இயந்திரங்களைப் பயன்படுத்தி மீன்பிடிப் படகுகளை இயக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னைக் காசிமேட்டுப் பகுதியில், தடைசெய்யப்பட்ட சீன இன்ஜினைப் பயன்படுத்தி சிலர் மீன்பிடித்துவந்தனர். இதற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரிகள் அதைத் தடுக்கவில்லை. உடனே மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அதில் தடியடி நடந்து கலவரமாகக் காட்சியளித்தது அமைச்சரின் சொந்த ஏரியா. ஆனால், சீன இயந்திரத்தைப் பயன்படுத்தியது அமைச்சரின் உறவினர் என்பதால் போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினார்கள். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கக்கூட அப்போது மறுத்துவிட்டார் ஜெயக்குமார்.
ஜெயக்குமார் வசம் உள்ள மற்றொரு துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை. அரசு ஊழியராக ஒருவர் பணிக்குச் சேர்ந்தபிறகு, அவர் நலன் சார்ந்த அனைத்து முடிவுகளையும் கையாள்வது இந்தத் துறையே. பெரும்பாலும் நிதி அமைச்சர் வசமே இந்தத் துறையும் இருக்கும். பன்னீரின் தர்மயுத்தத்தின் பலனாக ஜெயக்குமார் கைக்கு நிதித் துறையோடு இந்தத் துறையும் சேர்ந்து வந்தது. பன்னீர் வசம் மீண்டும் நிதித்துறை சென்றாலும், ஜெயக்குமாரிடம் ஒட்டிக்கொண்ட துறையாக இது இருந்துவருகிறது. ‘அந்தத் துறையின் அமைச்சராக என்ன செய்ய வேண்டும் என்பதே அவருக்குத் தெரியவில்லை’ என்பதே பலரின் புலம்பலாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது, ஜெயலலிதா ஆட்சியில் செய்ததைவிட மிக மோசமாக சங்கத் தலைவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். வழக்குகளும் நடவடிக்கைகளும் பாய்ந்தன. ‘`வழக்குகளில் பல இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் பிரச்னைகள் அப்படியேதான் உள்ளன. காலிப் பணியிடங்கள் அதிகரித்தபடி உள்ளன. புதிய நியமனங்கள் குறைந்துவிட்டன. இதனால் அரசு ஊழியர்களின் பணிச்சுமை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதேபோல், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இதற்காகப் பலகட்டப் போராட்டங்களை ஊழியர்கள் முன்னெடுத்தும் அதற்கும் தீர்வு காணவில்லை’’ எனக் குமுறுகிறார், அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர்.
தொடரும் சர்ச்சைகள்!
கடலோரங்களில் மண் அரிப்பைத் தடுக்க தடுப்புகளை அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட சிலரைப் பயனடையச் செய்ததாக ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சில மாதங்களுக்கு முன்பு கொங்கு மண்டலத்தில் ஸ்ரீபதி நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. கடல் அரிப்பைத் தடுக்க கற்கள் மூலம் தடுப்பு எழுப்பும் ஒப்பந்தம் இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அப்போது வருமானவரித் துறையால் கூறப்பட்டது.
அ.தி.மு.க அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளுநரிடம் தி.மு.க அளித்தது. அதில் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரையும் குறிப்பிட்டு, ‘மீனவர்களுக்கு வழங்கிய வாக்கிடாக்கியில் பெரும் அளவில் முறைகேடு நடந்துள்ளது’ என்ற குற்றச்சாட்டைக் கூறியிருந்தனர். வாக்கிடாக்கி டெண்டரில் எப்படி கோல்மால் நடந்தது என்ற விவரங்களையும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தி்ல் (டி.என்.பி.எஸ்.சி) நடந்த மோசடிகள் அம்பலமாகி, அப்போது சம்பந்தப்பட்ட பலரைப் பணிநீக்கம் செய்தார்கள். அதிலும் அமைச்சரின் தலை உருண்டது.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம், பெண் ஒருவருடன் ஜெயக்குமார் பேசியதாக வெளியான ஆடியோ. இந்த ஆடியோ விவகாரம் வெளிவந்தபோது அதையும் கூலாக எடுத்துக்கொண்டு, “இந்த உலகத்தில் ஜெயக்குமார் என்று நான் மட்டும்தான் இருக்கிறேனா? அது என் குரலே இல்லை” என்று பதிலடி கொடுத்தார். ஜெயக்குமாரின் அரசியல் பயணத்தில் மறையாத வடுவாக அமைந்துவிட்டது அது. அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில் தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி “என்னை சாக்லேட் பாய் என்று சொல்லும் ஜெயக்குமார் ஒரு ப்ளேபாய்” என்று நக்கலடித்தார்.

தைரியத்தில்தான்சவால் விட்டேன்!
“என் பதவிக்காலத்தில், இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு மீன்வளத்துறைக்கு மட்டும் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைத்தது. மீன்பிடித் தடைக்காலத்தில் கொடுக்கப்படும் நிவாரணம் உட்பட, கணவன், மனைவி என ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் இருக்கும் மீனவக் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 19,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கொரானா நேரத்தில் மீனவர்களுக்கு மட்டும் 100 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது. சிறு குறைபாடுகள் இருந்தாலும், அதையும் சரி செய்துகொண்டு இருக்கிறோம்.
பணியாளர் நலத்துறையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவில் டி.என்.பி.எஸ்.சி மூலம் வேலைகள் உருவாக்கப்பட்டது இந்த முறைதான். அரசு ஊழியர்களின் பிரச்னைகளை ஒரே நேரத்தில் முழுமையாகத் தீர்த்துவிட முடியாது. எங்களால் எவ்வளவு சரி செய்யமுடியுமோ, அவ்வளவு சரிசெய்தபடிதான் இருக்கிறோம். டி.என்.பி.எஸ்.சி-யில் முறைகேடு நடந்துவிடக்கூடாது எனப் பல நடவடிக்கைகளை இப்போது மேற்கொண்டுள்ளோம். நான் மூன்று முறை அமைச்சராக இருந்துள்ளேன். என்மீது ஏதாவது முறைகேடு புகாரைச் சொல்ல முடியுமா? என் ராயபுரம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நான் தனிப்பட்ட முறையில் அறிந்தவன். தொகுதிக்குத் தேவையானதை நான் செய்துள்ளேன். அந்த தைரியத்தில்தான் ‘என்னை எதிர்த்து ஸ்டாலின் போட்டியிடத் தயாரா’ என்று சவால் விட்டேன்’’ என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.