
இந்த நெருக்கம் காரணமாக, 2001 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டைத் தொகுதியில் எத்தனையோ சீனியர்கள் இருந்தும் விஜயபாஸ்கருக்கு சீட் கிடைத்தது.
கொரோனாத் தொற்று ஆரம்பித்த நேரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வைத்து ஒரு மீம்ஸ் செம வைரல் ஆனது. ‘7ம் அறிவு’ படத்தில் வரும் ஒரு காட்சியை விஜயபாஸ்கரை வைத்து எடிட் செய்து சமூக வலைதளங்களில் உலாவவிட்டார்கள். ‘இந்தியாவில் ஒரு மாநிலத்தில் மட்டும் என்னால் கொரோனாவைப் பரப்ப முடியல’ என்று அந்த வில்லன் தன் குருவிடம் சொல்ல, ‘அது விஜயபாஸ்கரோட மாநிலம். அதனால்தான் தாக்க முடியலை’ என்பார் குரு.

அ.தி.மு.க-வுக்கு என அஃபிஷியலாக ஓர் ஐ.டி விங் இயங்கிக்கொண்டிருக்க, விஜயபாஸ்கரின் புகழ் பாடுவதற்கென்றே துடிப்பான ஐ.டி விங் ஒன்று தனியாகச் செயல்படுகிறது. ‘வருங்கால முதல்வரே’ என்றெல்லாம் சிலர் ஓவராகப் போக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆனார். இதைத் தொடர்ந்து கொஞ்ச காலம் மீடியாவிடமிருந்து விலகியே இருந்தார் விஜயபாஸ்கர்.

எதுகை, மோனை கதை சொல்வதில் வல்லவரான விஜயபாஸ்கர், 2013-ம் ஆண்டு சட்டசபையில் கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரைக் குறி வைத்து ஒரு கதையைச் சொல்லி ஜெயலலிதாவைச் சிரிக்க வைத்தார். கைமேல் பலனாக அமைச்சர் பதவி கிடைத்தது. அன்றுமுதல் சுகாதார அமைச்சராக வலம்வருகிறார் விஜயபாஸ்கர்.
சட்டசபையில் கதை சொல்லித்தான் மந்திரி பதவியைப் பிடித்தார் விஜயபாஸ்கர். எங்கே மைக் பிடித்தாலும், சுவாரசியமாகவும் உருக்கமாகவும் கதை சொல்வதில் கில்லாடி இவர். ‘‘இப்படி அமைச்சர் பேசுவதற் காகக் கதைகளை ரெடி செய்து தர, கவிஞர் ஒருவர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு இருக்கிறது. அவர்கள்தான் நிகழ்ச்சி களுக்குப் பொருத்தமாகக் கதை, கவிதை, பன்ச் டயலாக், போஸ்டர் வாசகங்கள் என எழுதிக் கொடுக்கிறார்கள். அந்தக் குழுவுக்கு பேக்கேஜ் அடிப்படையில் சன்மானம் சென்று சேர்கிறது’’ என்கிறார்கள் புதுக்கோட்டை அ.தி.மு.க-வினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்தரையர்களுக்கு எதிரான பிரச்னை, குட்கா விவகாரம், ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம், பணி நியமனங்களில் முறைகேடு என அடுக்கடுக்கான புகார்கள் தாக்கினாலும், அமைச்சரவையிலும் அ.தி.மு.க-விலும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து நிற்கிறார் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பியின் மகன் விஜயபாஸ்கர். அந்தக்கால அ.தி.மு.க சீனியர்களான ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர் ஆகியோரின் தீவிர விசுவாசியாக இருந்தவர் சின்னதம்பி. அப்பாவைப் பார்த்து விஜயபாஸ்கருக்கு அரசியல் ஆர்வம் வந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் படித்தார். மனைவி ரம்யா. இரண்டு மகள்கள் உள்ளனர்.

எம்.பி.பி.எஸ் படிக்கும்போது அண்ணாமலை, கெளதம்சிகாமணி, முரளி ஆகியோர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர்களானார்கள். மூன்று பேரும் முறையே முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி, கரூர் சின்னசாமி ஆகியோரின் வாரிசுகள். அப்போது சிதம்பரத்தில் ஒரு விழாவில் கலந்துகொள்ள வந்த ஜெயலலிதாவை வரவேற்று விஜயபாஸ்கர் வைத்த பலூன் பேனரும், உப்பால் செய்யப்பட்ட ஜெயலலிதா சிலையும் அவரை ஈர்த்தது. உடனே கடலூர் மாவட்ட மாணவர் அணி பொறுப்பு விஜயபாஸ்கருக்குப் பரிசாகக் கிடைத்தது.
கல்லூரி முடித்து, தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் அங்கு சிகிச்சைக்கு வந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்தார். அதனால் சசிகலா உறவினரான டாக்டர் வெங்கடேஷ் அறிமுகம் கிடைத்தது. சீக்கிரமே அவர்கள் குடும்பத்தில் பலருக்கும் பரிச்சயம் ஆனார். இந்த நெருக்கம் காரணமாக, 2001 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டைத் தொகுதியில் எத்தனையோ சீனியர்கள் இருந்தும் விஜயபாஸ்கருக்கு சீட் கிடைத்தது. ஜெயித்து எம்.எல்.ஏ ஆனார். ஆனாலும், தொகுதிக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை. சீனியர்கள் பலரும் இவருக்கு எதிராகப் புகார்களைத் தலைமைக்குத் தட்டிவிட, 2006 தேர்தலில் சீட் கிடைக்காமல் போனது.

அப்போது அரசியலிலிருந்து ஒதுங்கி குவாரித் தொழிலைக் கையில் எடுத்தார். தன் பெயரில் ‘ராசி புளூ மெட்டல்’, மனைவி ரம்யா பெயரில் ‘வி இன்ப்ராஸ்ட்ரக்சர்’ என நிறுவனங்களை ஆரம்பித்தார். 36 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட குவாரிகள், இன்று பல மடங்கு பரந்து விரிந்து கிடக்கிறது. அடுத்து கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். இலுப்பூரில் பள்ளி, பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கலைக்கல்லூரி, நர்சிங் கல்லூரி ஆகியவை மதர் தெரசா கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்பட்டுவருகின்றன. விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் இவற்றை நிர்வகித்து வருகிறார். ‘சின்னதம்பியின் மகன் விஜயபாஸ்கர்’ என்று சொன்ன காலம் போய் ‘விஜயபாஸ்கரின் அப்பா சின்னதம்பி’ என்று சொல்லும் நிலைக்கு உயர்ந்துவிட்டார். இந்தத் தொழில்களை எல்லாம் தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் விஜயபாஸ்கர் அபிவிருத்தி செய்திருக்கிறார் என்பது கூடுதல் ஆச்சர்யம். விஜயபாஸ்கருடன் படித்த தி.மு.க பிரமுகர்களின் வாரிசுகள் பலரும் இதற்குக் கைகொடுத்துள்ளதாக புதுக்கோட்டை தி.மு.க வட்டாரத்தில் பேச்சு உண்டு.

2011 சட்டமன்றத் தேர்தலின்போது தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட, விராலிமலைத் தொகுதி புதிதாக உருவானது. தனது சொந்த ஊரை உள்ளடக்கிய விராலிமலைத் தொகுதியில் போட்டியிட விஜயபாஸ்கருக்கு சீட் கிடைத்தது. ‘அப்பா, அப்பா’ என்று அழைத்துக்கொண்டிருந்த தன் நண்பனின் அப்பாவான ரகுபதியை எதிர்த்துத் தேர்தலில் களமாடி வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். அமைச்சர் ஆசை தொற்றிக் கொண்டது. எல்லாருக்கும் பலனளிக்கும் மன்னார்குடி ரூட் இவருக்குப் பலனளிக்கவில்லை. 2012-ல் புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ முத்துக்குமரன் மறைவால் இடைத்தேர்தல் வந்தது. அப்போது ஓடியாடி வேலை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சீனியர்களின் அப்ளாஸ்களை அள்ளினார். அதன்பின் ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை பட்டதால், அமைச்சர் பதவி கிடைத்தது. 2016 தேர்தலிலும் அதே விராலிமலையில் மீண்டும் ஜெயித்தார். சுகாதாரத்துறை அமைச்சராகத் தொடர்கிறார்.

தமிழக அமைச்சர்களில் விஜயபாஸ்கர் அளவுக்கு சர்ச்சை களைச் சந்தித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. கோரிக்கைகளை முன்வைத்துச் சென்ற முத்தரையர் சமூகத்தினரை விஜயபாஸ்கர் இழிவுபடுத்திப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாவட்டம் முழுக்க போராட்டங்கள் நடக்க, வேறுவழியின்றி அப்போது விஜயபாஸ்கரிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவியை மட்டும் ஜெயலலிதா பறித்தார். சில மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி விஜயபாஸ்கருக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு ஜூலை மாதம், தடை செய்யப்பட்ட குட்காவை விற்றதாக சென்னைச் செங்குன்றம் அருகேயுள்ள மாதவராவ் என்பவரின் குடோனில் ரெய்டு நடந்தது. அப்போது சிக்கிய ஒரு டைரி, தமிழக அரசியலையே உலுக்கியது. குட்கா வியாபாரத்துக்காக சுமார் 44 கோடி ரூபாய் அளவுக்கு பலருக்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக அந்த டைரியில் குறிப்பு இருந்தது. அதில் சங்கேத வார்த்தைகளில் பலரைப் பற்றி எழுதி, அவர்களுக்கு எந்தெந்த தேதிகளில் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று எழுதியிருந்தது. இதைத் தொடர்ந்து 2018 செப்டம்பரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கும் விஜயபாஸ்கரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

ஜெயலலிதா மறைந்ததால் 2017-ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் வரையிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. ‘இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் விஜயபாஸ்கர்தான்’ என்று தகவல் வர, சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள், அவருக்குச் சொந்தமான கல்லூரி, கல்குவாரி உட்பட 30 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். துணை ராணுவப்படை வீரர்களுடன் மோதிக்கொண்டு தன் வீட்டு வாசலுக்கு வந்து பத்திரிகையாளர்களுக்கு விஜயபாஸ்கர் பேட்டி கொடுத்த காட்சி, தமிழகத்தையே பரபரக்க வைத்தது. கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கரின் தந்தை, அண்ணன் மற்றும் விஜயபாஸ்கரின் மனைவி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடந்தது.
குட்கா விவகாரம், பணப்பட்டுவாடா புகார் இரண்டும் ஓயாத நிலையில், சத்துணவுப் பணியாளர் தேர்வுக்கு அமைச்சரின் தந்தை லஞ்சம் வாங்கியதாக 2018 செப்டம்பரில் எழுந்த புகாரும் விஜயபாஸ்கருக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
தன்மீது எழும் சர்ச்சைகளுக்கு ‘எதிரிகளின் சூழ்ச்சி’ என்று சொல்லிச் சமாளிப்பது விஜயபாஸ்கரின் வழக்கம். எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் விஜயபாஸ்கர், தன்னை எதிர்ப்பவர்களிடம்கூட நேரடியாகக் கோபத்தைக் காட்டமாட்டார். அவர்களின் தோளில் கை போட்டுச் சமாதானப்படுத்தி, பிறகு வீழ்த்திவிடுவார். அப்படி முன்னாள் அமைச்சர்கள் சுப்பிரமணியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர்கள் பலர் தடுமாறி விழுந்திருக்கின்றனர்.
விஜயபாஸ்கர் தன் துறைக்கு சாதித்தது என்ன? தொகுதிக்குச் செய்தது என்ன? சுகாதாரத் துறையில் இந்திய அளவில் தமிழகம் பல விஷயங்களில் முதலிடம் பிடித்திருப்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் உச்சபட்ச அலட்சியமும் நிலவுகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தை ஓர் உதாரணமாகக் கூறலாம். ஒவ்வொரு வருடமும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் என சீசன் அச்சுறுத்தும். ‘விஷக்காய்ச்சல்’ எனப் பெயர் வைத்து புள்ளிவிவரங்களை சுகாதாரத்துறை குறைக்கும்.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ‘கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழகம்தான் முன்னோடி’ எனச் சொல்கிறார் விஜயபாஸ்கர். வரும்முன் காக்காமல், வந்தபிறகு கட்டுப்படுத்தியதை சாதனை என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? கொரோனா பெயரைச் சொல்லி மாஸ்க், சானிடைசர், துப்புரவுப் பணிகள், பணி நியமனங்கள் என எல்லாவற்றிலும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சியினர் பட்டியல் அடுக்குகின்றனர்.
‘‘அவர் குடும்பம் வளர்ந்த அளவுக்குத் தொகுதி வளரவில்லை. இலுப்பூரில் அவர் குடும்பத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களை வளர்ப்பதற்காகவே, விராலிமலைத் தொகுதிக்குள் அரசுக் கலைக்கல்லூரி வரவிடாமல் பார்த்துக்கொண்டார். தொகுதிக்கு அடிப்படை வசதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. புதுக்கோட்டையைப் பொறுத்தவரை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என அனைத்துத் துறை டெண்டர்களிலும் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி வைத்ததுதான் சட்டம். கடந்த 10 ஆண்டுகளில் அவரின் அப்பா வழியாக மட்டும் ரூ.2,000 கோடிக்கு மேல் டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் பேக்கேஜ் டெண்டராக்கி முறைகேடு செய்கிறார்கள். குவாரித் தொழிலிலும் விஜயபாஸ்கர் குடும்பம் வைத்ததுதான் சட்டம். பல கோடி மதிப்புள்ள கிரஷிங் யூனிட், டிரான்ஸிட் மிக்ஸர், ஏராளமான டிப்பர் லாரிகளை வாங்கிக் குவித்துள்ளனர். மாவட்டத்துக்கே ஜல்லி, மணல், கல் என அனைத்துப் பொருள்களும் இங்கிருந்துதான் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி’’ என்கிறார் தி.மு.க இலக்கிய அணி அமைப்பாளர் எம்.பழனியப்பன்.
சொந்தச் செலவில் பரிசு!
ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாக தொகுதி மக்களைக் கவர்வதற்குச் சில இலவசங்களைக் கொடுப்பது விஜயபாஸ்கரின் வழக்கம். 2016 தேர்தலுக்கு முன்பாக வீட்டுக்கு வீடு காமாட்சி விளக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார். இந்த வருடம் கிராமம் தோறும் `ஒளிமயமான வாழ்வு' என்ற பெயரில் கண் சிகிச்சை முகாம் நடத்தி, முதியவர்களுக்குக் கண்ணாடிகளை இலவசமாகக் கொடுத்துவருகிறார். இந்தப் பொங்கல் நேரத்தில், தன் தொகுதி மக்கள் சுமார் ஒன்றே கால் லட்சம் பேருக்கு சொந்தச் செலவில் பித்தளைப் பொங்கல் பானை, கரண்டி, தட்டு, அரிசி, வெல்லம், நெய் என்று பொங்கல் தொகுப்பைப் பரிசாகத் தந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதற்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறாராம் அமைச்சர்.
ரகசியம் சொல்வாரா?
2011 தேர்தலில் போட்டியிட்டபோது, 2009-10 நிதியாண்டில் தனது ஆண்டு வருமானம், ரூ.18,68,542 எனக் கணக்கு காட்டியிருந்தார் விஜயபாஸ்கர். கடந்த 2016 தேர்தலின்போது கணக்கு காட்டியபடி, 2015-16 நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ.3,12,34,680 ஆக உயர்ந்திருந்தது. ஆறே ஆண்டுகளில் 16 மடங்குக்கும் அதிகமான உயர்வு. அவர் மனைவியின் வருமானமும் இதே காலகட்டத்தில் ஐந்து மடங்கு உயர்ந்திருந்தது.
சட்டபூர்வ வருமானத்தையே இப்படிப் பல மடங்கு உயர்த்தும் ரகசியத்தை அவர் சொல்லிக்கொடுத்தால், தமிழகமே ஆரோக்கியமாக இருக்கும்!

பிடிபடாத கொம்பன் காளை!
ஜல்லிக்கட்டுக் காளைகள்மீது விஜயபாஸ்கருக்கு ஆர்வம் அதிகம். அதனாலேயே விராலிமலை, புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்காளைச் சிலைகளை நிறுவியுள்ளார். அவர் வளர்த்த கொம்பன் காளை, 2018-ல் தென்னலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் வாடிவாசல் கட்டையில் மோதி இறந்து போனது. இப்போது சின்னக் கொம்பன், வெள்ளைக் கொம்பன், கறுப்புக் கொம்பன் என மூன்று காளைகளை வளர்க்கிறார். ஜல்லிக்கட்டில் எந்த வீரரும் கொம்பன் காளைகளை நெருங்கக்கூடாது என்பது எழுதப்படாத விதி. ஒவ்வொரு போட்டியிலும் அமைச்சரின் காளைகள் `பிடிபடாத காளைகள்' எனப் பரிசைத் தட்டிச் செல்லும்.

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசினோம். ‘‘என் அப்பா பூர்வீகமாக விவசாயம் உட்பட பல்வேறு தொழில்களைச் செய்துவருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 160 கிரஷர் வரை இருக்கிறது. மாவட்டத்தின் பிரதான தொழில் அது. அந்தத் தொழிலை நானும் பண்றேன். எல்லாம் முறைப்படிதான் செய்கிறோம். அதில் நல்ல வருமானம் கிடைக்கிறது. வருமானம் உயர்ந்ததில் ரகசியம் என்ன இருக்கிறது?
கஷ்டப்படுற நேரத்துல மக்களுக்கு என்ன தேவையோ அதைத் தொடர்ச்சியா செஞ்சிக்கிட்டு இருக்கோம். என் வருமானத்திலும், நண்பர்களின் உதவியின் மூலமும் கிடைக்கும் பணத்தை வைத்து பொங்கல் பரிசு கொடுத்திருக்கிறேன். எல்லோரும் கொடுக்கிறார்கள். நாங்களும் கொடுக்கிறோம். ‘சி.விஜயபாஸ்கர் அறக்கட்டளை’யை இப்போதான் ஆரம்பிச்சிருக்கோம். கண் பிரச்னை உள்ளவங்களுக்குக் கண்ணாடி கொடுக்கிறோம். அரசு சார்பில், இரண்டு கால்களும் இல்லாதவங்களுக்கு ஸ்கூட்டி கொடுக்கப்படுது. ஒரு கால் இல்லாதவர்களுக்குக் கொடுக்க விதிமுறை இல்லை. அவங்களும் கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கும் கிடைக்க தொடர்ந்து முயற்சி பண்றோம். அதேநேரத்தில், முதல்கட்டமா சொந்தச் செலவில் ஏழு பேருக்கு ஸ்கூட்டி கொடுத்திருக்கிறோம்.
பேக்கேஜ் டெண்டரில் முறைகேடு நடக்கிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். மத்திய அரசு கொண்டு வந்த விதியே அது. விராலிமலை தனி தாலுகா ஆகியுள்ளது. இலுப்பூரை வருவாய்க் கோட்டமாகவும், தனிக் கல்வி மாவட்டமாகவும் மாற்றியிருக்கிறேன். புதுக்கோட்டைக்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்திருக்கிறேன். தமிழகத்தில் இரண்டாவது அரசு பல் மருத்துவக்கல்லூரியைப் புதுக்கோட்டைக்குக் கொண்டு வந்திருக்கிறேன். குடுமியான்மலையில் அரசு வேளாண்மைக் கல்லூரி, விராலிமலையில் அரசு ஐ.டி.ஐ கொண்டு வந்திருக்கிறேன்.
விவசாயிகளின் 100 ஆண்டுக்காலக் கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கி, பணிகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இதன்மூலம் வறட்சி மாவட்டங்களான புதுக்கோட்டையும் ராமநாதபுரமும் பயன்பெறும். விராலிமலையில் ஐ.டி.சி தொழிற்சாலை கொண்டு வந்திருக்கிறேன். 2,800 பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது. சுகாதாரத்துறைக்கு ஏராளமான நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். நல்ல விஷயங்களையும் மக்கள்கிட்ட கொண்டு சேருங்கள்'' என்றார் அவர்.