மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி! - கே.சி.வீரமணி

மந்திரி தந்திரி!
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி!

ஊரில் இருப்பதைப் போலவே பெங்களூரிலும் சென்னையிலும் அவருக்கு பங்களா இருக்கிறது. அதுதவிர அப்பார்ட்மென்ட் ஒன்றும் இருக்கிறது.

பீடி சுற்றும் தொழிலாளி மகனாகப் பிறந்து இன்று பில்கேட்ஸ் லெவலுக்குக் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி. பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ., இரண்டாவது முறை அமைச்சர் என அதிகாரத்திலேயே தொடர்ந்து இருக்கிறார். ‘நில அபகரிப்பு விவகாரத்தில் அமைச்சர் வீட்டிலேயே வருமானவரி சோதனை நடந்தது’ என்ற அரிய பெருமைக்குச் சொந்தக்காரரான வீரமணியின் வரலாறு என்ன? திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைத் தொகுதிக்கு அவர் செய்ததுதான் என்ன?

ஜோலார்பேட்டை அருகே சின்னகோடியூர் கிராமத்தில், பீடி சுற்றிக்கொண்டிருந்தார் கே.கே.சின்னராசு. அவரின் ஒன்பது பிள்ளைகளில் எட்டாவதாகப் பிறந்தவர் வீரமணி. சாதாரண கூரை வீட்டில்தான் வீரமணி ஓடியாடி வளர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில், வெளியூர்களில் மார்க்கெட்டிங் செய்யும் அளவுக்கு பீடித்தொழில் வளர்ச்சி கண்டது. ‘தங்கவேல் பீடி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட பிராண்ட், வானுயரப் புகைவிட்டுப் பரவியது. தங்கவேல் என்பது வீரமணியின் பெரியப்பா பெயர். தங்கவேல் நடத்தி வந்த பீடி கம்பெனி, காலப்போக்கில் வீரமணி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அதன்பின் பல்வேறு தொழில்களில் வீரமணியின் குடும்பம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. கூரையைப் பிய்த்துக்கொண்டு பணமழை கொட்டியது. நிலத்தரகராகப் பரிணமித்து ரியல் எஸ்டேட் அதிபர் ஆனார். குடிசையிலிருந்து மாளிகை, சைக்கிளிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் என்று சொகுசு வாழ்க்கையின் உச்சத்தை எட்டிப் பிடித்தார்.

மந்திரி தந்திரி! - கே.சி.வீரமணி

பொருளாதார நிபுணரைப் போல் பேசும் வீரமணி, பொருளாதாரம் படித்தவர் இல்லை. பத்தாம் வகுப்பையே சிரமப்பட்டுக் கடந்திருக்கிறார். 2016 தேர்தலில்கூட வேட்பு மனுவில் ‘பத்தாம் வகுப்பு’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். இன்றோ வீரமணியின் பெயருக்குப் பின்னால் ‘பி.ஏ’ என்று போடுகிறார்கள். ‘எங்கே படித்தார்?’ என்பதையெல்லாம் அவரிடமே விட்டுவிடுவோம்.

வீரமணிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மேகலைக்கு இனியவன் என்ற மகனும், யாழினி என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி பத்மாசினி புற்றுநோயால் இறந்துவிட்டார். இரண்டாவது மனைவிக்கு அகல்யா என்ற ஒரே மகள் மட்டும் இருக்கிறார். முதல் மனைவிக்கும் வீரமணிக்கும் பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை.

ஓசூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்
ஓசூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்

வீரமணியின் குடும்பமே திராவிடர் கழகப் பின்னணியுடையது. அப்பா, பெரியப்பா இருவரும் பெரியாரின் தீவிரப் பற்றாளர்கள். தமிழகத்துக்கு வந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவருடன் வீரமணியின் தங்கை தன்மானம் என்கிற சுதாவுக்கு காதல் மலர்ந்தது. காதலனைக் கரம்பிடித்து லண்டனுக்குப் பறந்துவிட்டார் தன்மானம். வீரமணியின் பெரியப்பா தங்கவேலின் மகன்வழிப் பேரன்தான், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன்.

ஏலகிரியில் உள்ள ஹோட்டல்
ஏலகிரியில் உள்ள ஹோட்டல்

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உதவியதால் அ.தி.மு.க-வின் விசுவாசிகளாக மாறினர் வீரமணி குடும்பத்தார். 1994-ல் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைகிறார் வீரமணி. வசதியானவர் என்பதால், வந்த வேகத்திலேயே ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. சசிகலா குடும்பத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டவருக்கு, அதன்பின் ஏற்றம்தான். 2001-ல் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் ஆகிறார். 2006 சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு மோசமான தோல்வி கிடைத்தது. தோல்விக்குக் காரணமான நிர்வாகிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கிய ஜெயலலிதா, வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக வீரமணியை நியமித்தார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து மாவட்டச் செயலாளராக மாஸ் காட்டுகிறார் வீரமணி. வரும் சட்டமன்றத் தேர்தலில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட் தர வேண்டும் என்பதை முடிவு செய்யும் செல்வாக்கான மனிதராக வீரமணியே இருக்கிறார்.

வேளாண் கல்லூரி
வேளாண் கல்லூரி

மாவட்டச் செயலாளர் போன்ற இன்னுமொரு எதிர்பாராத வாய்ப்புதான் அவரை அமைச்சர் ஆக்கியது. 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் வெற்றிபெற்றார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சரான வேலூர் எம்.எல்.ஏ விஜய்மீது புகார்கள் குவியவே, அமைச்சர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. சசிகலா குடும்பத்தின் சிபாரிசால், அதே மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணிக்கு அந்த வாய்ப்பு வந்தது. சில மாதங்களில் சுகாதாரத் துறைக்குப் பதிலாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

‘இரண்டாவது முறை அமைச்சரான இந்தக் காலத்தில்தான் வீரமணி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான மதிப்பில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்’ என்கிற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் அழுத்தமாகவே சொல்லப்படுகிறது.

அமைச்சருக்கு சொந்தமான கல்யாண மண்டபம்
அமைச்சருக்கு சொந்தமான கல்யாண மண்டபம்

நம்மிடம் பேசிய வீரமணியின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘`அமைச்சரின் பல சொத்துகள் முதல் மனைவியின் தந்தை பெயரிலும் இரண்டாவது மனைவி பெயரிலும் இருக்கின்றன. திருமண மண்டபம் மற்றும் ஹோட்டல் பிசினஸில் அவருக்கு ஆர்வம் அதிகம். சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை மற்றும் திருப்பத்தூரில் ஹைடெக்காக இரண்டு ஹோட்டல்களை நடத்திவருகிறார். ஓசூர் மற்றும் அமராவதியிலும் ஹோட்டல் உள்ளது. ஏலகிரி மலையில் பல ஏக்கர் நிலம், திரியாலம் கிராமத்தில் நிலம், ஆந்திராவின் குப்பம் விமான நிலையப் பகுதியில் பல ஏக்கர் நிலம் என பெரும்பாலான சொத்துகளை பினாமிகளின் பெயரிலேயே பதிவு செய்து வைத்துள்ளார். பேரணாம்பட்டில் கல்லூரி நடத்துகிறார். உறவினர்கள் பெயரில் சொத்துகளை வாங்கிவிட்டு, பிறகு அதை தான செட்டில்மென்டாக தன் பெயருக்குத் மாற்றிக்கொள்வது வீரமணியின் டெக்னிக்.

ஊரில் இருப்பதைப் போலவே பெங்களூரிலும் சென்னையிலும் அவருக்கு பங்களா இருக்கிறது. அதுதவிர அப்பார்ட்மென்ட் ஒன்றும் இருக்கிறது. கோவையிலிருந்து கொச்சி செல்லும் பைபாஸில் லாரிகளுக்கு பாடி கட்டும் தொழிற்சாலை, ஆந்திராவில் இரண்டு பால் நிறுவனங்கள் அவர் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பெரியார்தாசன்
பெரியார்தாசன்

சின்ன வயதிலிருந்தே தொழில் நெளிவுசுளிவுகளைத் தெரிந்து வைத்திருப்பவர் என்பதால் ஆந்திரா, கர்நாடகா என்று வெளி மாநிலங்களிலும் ஏகப்பட்ட தொழில்களைச் செய்துவருகிறார். போர்ச்சுக்கல் நாட்டில் கடற்கரையை ஒட்டி ஹோட்டல் ஒன்று வாங்கியிருப்பதாகவும் லண்டனில் வீடும் ஹோட்டலும் இருப்பதாகவும் தொகுதியில் பேச்சு உண்டு’’ என்கிறார்கள் விலாவரியாக.

மலைக்க வைக்கும் அளவுக்குச் சொத்துகள் இருந்தும், சொத்து சர்ச்சையில் வீரமணி சிக்குவது குறையவில்லை. வேலூர்ப் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள 300 கோடி ரூபாய் நில அபகரிப்பு விவகாரத்தில் வீரமணி தன் அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தி நேரடியாகத் தலையிட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தச் சமயத்தில், வீரமணியின் வீடு, திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பேரணாம்பட்டுப் பேருந்து நிலைய விவகாரத்திலும் வீரமணி சர்ச்சையில் சிக்கினார். ‘ரியல் எஸ்டேட் அதிபர்களின் ஆதாயத்துக்காக அவர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு நகருக்கு வெளியே பங்களாமேடு என்ற பகுதியில் பேருந்து நிலையத்தை மாற்றப் பார்க்கிறார்’ என்று அமைச்சரைக் கண்டித்து பேரணாம்பட்டு முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

எதிர்க்கட்சியான தி.மு.க தலைவர்களுடன் இணக்கமாக இருக்கும் அளவுக்குக்கூட குடும்பத்தில் பலருடன் வீரமணி இணக்கம் காட்டுவதில்லை. ‘`ஒரு விபத்தில் இறந்துபோன இரண்டு அண்ணன்கள் குடும்பத்துக்கும் சொத்தில் சரிவரப் பங்கு தராமல் ஒதுக்கி வைத்துள்ளார் வீரமணி. பீடி கம்பெனியில்கூட அவர்களைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மறைந்த அமைச்சரின் அண்ணன் ராவணனின் மகன் இந்தர்ஜித் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பீடி கம்பெனிக்குத் தீ வைத்துவிட்டுத் தப்பிச்சென்றார். வீரமணியின் அக்காள்கள் குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை இல்லாமல் விலகி நிற்கிறார்கள்’’ என நெருங்கிய சொந்தங்கள் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் வீரமணியின் ஊழல்களைத் தொகுதி முழுவதும் பட்டியல் போட்டுப் பிரசாரம் செய்துவருகிறார் அமைச்சரின் மூத்த சகோதரி மகன் பெரியார்தாசன். அவரிடம் பேசினோம். ‘‘என் தந்தையால் அரசியலுக்குள் வந்தவர் வீரமணி. வரும் தேர்தலில், ஜோலார்பேட்டைத் தொகுதியில் அ.தி.மு.க தோல்வியுறும். அதற்குக் காரணம் வீரமணி மட்டுமே. பத்து ஆண்டுகளாகத் தொகுதிக்கு எதையுமே செய்யவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை. சிப்காட் கொண்டுவருவதாக வாக்குறுதி தந்தார். அதையும் மறந்துவிட்டார். இங்கு பேருந்து நிலையம் கிடையாது. ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. காய்கறிச் சந்தையும் இல்லை. குடிநீர்ப் பிரச்னை நிலவுகிறது. ஜோலார்பேட்டை நகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்படவில்லை’’ என்றார் அவர்.

மந்திரி தந்திரி! - கே.சி.வீரமணி

மாமா... மாப்ள!

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர்க்காரர். ஊர்ப்பாசத்தில் அவருடன் நெருக்கம் காட்டுகிறார் வீரமணி. வீரமணியை ‘மாப்ள’ என்றுதான் துரைமுருகன் அழைக்கிறார். வீரமணியும் ‘மாமா’ என்று துரைமுருகனிடம் பணிவு காட்டுகிறார். இருவரின் நெருக்கத்தைப் பார்த்துக் குழம்பித் தவிக்கிறார்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க மற்றும் தி.மு.க நிர்வாகிகள்.

‘‘துரைமுருகனிடம் இவ்வளவு நெருக்கம் ஏன்?’’ என்று அமைச்சரிடம் கேட்டோம். ‘‘துரைமுருகன் நல்ல தலைவர். அரசியல் அனுபவமிக்கவர். செல்வாக்குமிக்கவர் என்பதால் காட்பாடியில் தொடர்ந்து வெற்றிபெறுகிறார். என் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தி.மு.க போன்ற பெரிய கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதால் மதிக்கிறேன். அவரின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் அடிக்கடி போனில் பேசுவார். ‘இதை செய்து கொடுங்க.. அதை செய்து கொடுங்க’ என்று ஏதாவது உதவி கேட்பார். தனிப்பட்ட முறையில் துரைமுருகன் உட்பட யாரையுமே நான் அநாகரிகமாக விமர்சனம் செய்தது கிடையாது. சாதாரண தொண்டர்களைக்கூட நான் திட்டியதில்லை’’ என்றார் வீரமணி.

மந்திரி தந்திரி! - கே.சி.வீரமணி

ரோல்ஸ் ராய்ஸ் மந்திரி!

மிழக அமைச்சர்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர் அநேகமாக வீரமணியாகத்தான் இருக்கும். ஜோலார்பேட்டை அருகில் இடையம்பட்டி கிராமத்தில் உள்ள அவர் வீட்டு வாசலில் கம்பீரமாக நிற்கிறது ரோல்ஸ் ராய்ஸ் கார். ‘`நான் கார் பிரியர். இளம்வயதிலேயே பென்ஸ் கார் வைத்திருந்தேன். என்னிடம் நிறைய பிரீமியம் லக்ஸரி கார்கள் உள்ளன. செல்ப் டிரைவிங்காக கார் ஓட்டிச்செல்வது எனக்குப் பிடிக்கும்’’ என்கிறார் வீரமணி.

குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் வீரமணியிடம் கேட்டோம். ‘‘விவரம் தெரிந்த வயதிலிருந்தே நான் வருமான வரி கட்டுகிறேன். ஆண்டுக்கு வருமான வரி மட்டுமே ஒன்றரைக் கோடி ரூபாய் கட்டுகிறேன். புதிதாக பிசினஸ் தொடங்குபவர்களே ஆண்டுக்குப் பல நூறு கோடி வருமானம் ஈட்டுகிறார்கள். நான் அந்தக் காலத்திலிருந்தே பிசினஸ் செய்கிறேன். அப்படியானால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். எல்லாவற்றையும் வருமானவரித் துறையினரிடம் தாக்கல் செய்துள்ளேன். எதையும் மறைப்பதற்கில்லை. சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை’’ என்றார். (2011 தேர்தலில் போட்டியிட்டபோது, வீரமணி தனது ஆண்டு வருமானமாகக் குறிப்பிட்டிருந்தது, இரண்டு லட்சம் ரூபாய்.)

மந்திரி தந்திரி! - கே.சி.வீரமணி

தொடர்ந்த அமைச்சர், ‘`வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்த பெருமை என்னையே சாரும். ஆசியாவிலேயே பெரிய ரயில்வே யார்டு ஜோலார்பேட்டையில் இருக்கிறது. அந்தப் பகுதியில் போக்குவரத்துச் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக 50 கோடி ரூபாய் செலவில் அண்டர்கிரவுண்ட் பிரிட்ஜ், மிடில் பிரிட்ஜ், ஓவர் பிரிட்ஜ் கட்டிக்கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டின் நவீன நகராட்சியாக ஜோலார்பேட்டையை மாற்றியிருக்கிறேன். பல பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியுள்ளேன். நாட்றாம்பள்ளி புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய நீதிமன்றம் வருகிறது. மாநிலத்தில் வேறெந்த தொகுதியிலும் இல்லாத சிறப்பாக சுமார் 160 கோடி ரூபாயில் என் தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் காவிரிக் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.

என் துறையிலும் சிறப்பாகச் செய்துவருகிறேன். நாட்டிலேயே ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். முதலிடம் செல்லவும் நடவடிக்கை எடுத்துவருகிறேன். பதிவுத்துறையிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். முறைகேடுகளைக் களைந்துள்ளேன். மக்கள் மத்தியில் அ.தி.மு.க-வுக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது. வரும் தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சி அமைப்போம்’’ என்றார்.