
தலையாட்டி பொம்மையைப் போல் இரண்டு ஆண்டுகள் சட்டமன்றம் சென்றுவந்த அன்பழகன், ‘அம்மா’ புகழ் பாடியே ஜெயலலிதா மனதில் இடம்பிடித்தார்.
மாட்டுச்சாணத்திலும் கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது’ - அறிவியல் திருவிழாக்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவு பூர்வமாகப் பேசிய வார்த்தைகள் இவை. ‘தமிழக அமைச்சரவையில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகள்’ என்று பாராட்டப்படும் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோருடன் நெருக்கம் காட்டியதாலோ என்னவோ, அன்பழகன் இப்படி அறிவு பூர்வமாகப் பேசியிருக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே ஆச்சர்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்று 20 ஆண்டுகளாக எம்.எல்.ஏ, இரண்டாவது முறையாக அமைச்சர் என அதிகார மையமாகவே வலம்வருகிறார் அன்பழகன். கொரோனாத் தொற்றைக் காரணம் காட்டி கல்லூரி அரியர் தேர்வுகளை ரத்துசெய்து, ‘மாணவர்களின் மனித தெய்வம்’, ‘அரியர் மாணவர்களின் அரசன்’ போன்ற பட்டங்களை எடப்பாடி பழனிசாமிக்கு வாங்கிக்கொடுத்த அன்பழகன், அமைச்சராக என்ன செய்தார்? தன் தொகுதிக்குச் செய்தது என்ன?

கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரி செல்லும் மெயின் ரோட்டில் இருக்கிறது கெரகோட அள்ளி கிராமம். நெடுஞ்சாலையை கிராமத்துடன் இணைக்கும் குறுகிய பாதையில் வளைந்து நெளிந்து சென்றால் பிரமாண்டமாக வரவேற்கிறது, கே.பி.அன்பழகனின் பங்களா. ஊர் முழுவதும் சொந்த பந்தம் சூழ்ந்திருக்கிறது. அன்பழகனின் அப்பா கே.டி.பச்சியப்பனும், சித்தப்பா கே.டி.கோவிந்தனும் அரசியல் பின்னணி உடையவர்கள். தந்தையிடம் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்த அன்பழகன், அ.தி.மு.க-வில் அன்னநடை போட்டிருக்கிறார். 1996 உள்ளாட்சித் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்தார், அன்பழகனின் சித்தப்பா கே.டி.கோவிந்தன். அவர் மாவட்டக் கவுன்சிலர் பதவிக்குத் துண்டுவிரித்தார். அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. தி.மு.க நிர்வாகி ஒருவரின் சூழ்ச்சியால், கே.டி.கோவிந்தனுக்கு ‘சீட்’ கிடைக்கவில்லை. இந்தக் கடுப்பில், அ.தி.மு.க-வில் இருந்த அண்ணன் மகன் அன்பழகனைக் களத்திலிறக்கி வெற்றிபெறச் செய்தார் கே.டி.கோவிந்தன்.

அதுதான் அன்பழகனின் முதல் தேர்தல் அனுபவம். மாவட்ட கவுன்சிலரான பின்னரே, அ.தி.மு.க உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கிறார் அன்பழகன். அதன்பின்னர், அவருக்கு ஏறுமுகம்தான். கட்சியில், காரிமங்கலம் ஒன்றியச் செயலாளர் பொறுப்புக்கு வருகிறார். கட்சிப்பணி வேகமெடுக்க போயஸ் கார்டனில் அறியப்பட்டார். ஜெயலலிதாவின் பார்வை பட்டதும், தருமபுரி மாவட்டச்செயலாளராக நியமிக்கப்பட்டார் அன்பழகன். 2001 சட்டமன்றத் தேர்தலின்போது, பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தலையாட்டி பொம்மையைப் போல் இரண்டு ஆண்டுகள் சட்டமன்றம் சென்றுவந்த அன்பழகன், ‘அம்மா’ புகழ் பாடியே ஜெயலலிதா மனதில் இடம்பிடித்தார். 2003-ல் செய்தித் துறை அமைச்சராக நியமிக்கப் பட்டவருக்குச் சில மாதங்களில் உள்ளாட்சித்துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. 2006-ல் தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. அப்போதும் பாலக்கோடு தொகுதியில் எம்.எல்.ஏ-வாக நீடித்தார் அன்பழகன். 2011-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, மூன்றாவது முறையாகவும் அன்பழகன் வெற்றிபெற்றார். அந்தச் சமயத்தில், சில சர்ச்சைகளில் சிக்கியிருந்த அவர்மீது ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்தார். ஆட்சி முடியும் வரை அமைச்சரவையில் அன்பழகனுக்கு இடம் கொடுக்க வில்லை.
2016 தேர்தலிலும் வெற்றி தொடர்ந்த நிலையில், ஜெயலலிதாவிடம் முதுகுத் தண்டை வளைத்து, செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார் அன்பழகன். தொடர்ந்து, நான்காவது முறை எம்.எல்.ஏ-வாக நீடிப்பதால், அன்பழகனைக் கண்டிப்புடன் மன்னித்து உயர்கல்வித்துறை அமைச்சராக நியமித்தார் ஜெயலலிதா. வேளாண் அமைச்சராக இருந்த துரைக்கண்ணு மறைந்த நிலையில், அவரது இலாகாவும் அன்பழகனுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தொகுதியில் கல்யாணம், காதுகுத்து, துக்க நிகழ்வு என எல்லா நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி, தன் செல்வாக்கைக் குறையவிடாமல் கட்டிக் காக்கிறார் அன்பழகன். அமைதியும் எளிமையும் அன்பழகனின் அடையாளம்.
என்றாலும், ``அவரின் மறுபக்கம் வேறுமாதிரியானது’’ என்கிறார்கள், நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர். ‘`சாலைப் பராமரிப்பு உள்ளிட்ட பெரிய அளவில் லாபம் கிடைக்கும் ஒப்பந்தப் பணிகள் அமைச்சரின் குடும்ப உறவினர்கள் இரண்டு பேருக்கு நேரடியாக ஒதுக்கப்படுகின்றன. காரிமங்கலத்தி லிருந்து தருமபுரி செல்லும் வழியில் மனைகளாகவும், நிலங்களாகவும் பலர் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்கள். தருமபுரி நகருக்குள் உள்ள சினிமா தியேட்டரையொட்டி சமீபத்தில் 15 கோடி ரூபாயில் நிலம் ஒன்று கைமாறியுள்ளது. அவரைச் சுற்றிலும் பத்து பினாமிகள் இருக்கிறார்கள்.
கெரகோட அள்ளி கிராமத்தில், தாத்தா தானப்ப கவுண்டர் பெயரில் பள்ளி நடத்துகிறார். அதற்கு எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கும் அவர் குடும்பத்துக்குச் சொந்தமானதுதான். இன்னும் சில இடங்களிலும் பினாமிகள் பெயரில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. ஆனால், தன்மீது எந்தச் சர்ச்சையும் வரக்கூடாது என்பதில் அன்பழகன் கவனமாக இருப்பார்’’ என்கிறார்கள் அவர்கள்.
விவசாயிகள் தரப்பிலும் அமைச்சர்மீது பெரும் வருத்தம் இருக்கிறது. ‘`அதிக சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்ட பாலக்கோடு கூட்டுறவுச் சர்க்கரை ஆலை தற்போது செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தெரிந்தும் அமைச்சர் கண்டுகொள்ளவில்லை. தக்காளிக்கும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ரோட்டில் கொட்டிவிட்டுப் போகும் சூழல் இருக்கிறது. தக்காளிக் கொள்முதல் மையம் அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தக்காளியிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்ய ஆலைகள் அமைக்க வேண்டும். நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள அலியாளம்-தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டம், ஒகேனக்கல் மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஆகிய நீர்ப்பாசனத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.
பாலக்கோடு பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பி.கே.முரளி, ‘‘பாலக்கோடு தொகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த அமைச்சர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. விவசாயமும் கைவிடப்பட்டுவருகிறது. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள், ‘நான் கழிவறை கட்டிக்கொடுத்தேன். மருத்துவமனைக்குக் கூடுதல் கட்டடம் கட்டித் தந்தேன்’ என்பார். சின்டெக்ஸ் டேங்க் வைத்தால்கூட அதில் பேனர் வைத்து விளம்பரம் தேடுகிறார். இங்கு சில குக்கிராமங்களில் குடிதண்ணீரில் ஃபுளோரைடு பாதிப்பு இருக்கிறது. அந்தத் தண்ணீரைக் குடிக்கும் மக்களின் பற்கள் நிறமிழந்து கறை படிகிறது. இந்தப் பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு கண்டிருக்கலாம். அமைச்சராக இருந்தும் தொகுதிக்குப் பிரயோஜனம் இல்லை’’ என்கிறார் கொதிப்புடன்.
அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் பேசினோம். ‘`தொகுதி முழுக்க தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்திருக்கிறேன். தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை கிராமந்தோறும் கட்டிக்கொடுத்துள்ளேன். கலைக்கல்லூரி, பாலிடெக்னிக், சட்டக்கல்லூரி, ஆர்.டி.ஓ அலுவலகம், மகளிர் காவல் நிலையம் கொண்டுவந்திருக்கிறேன்.
ஜெர்த்தலாவ் கால்வாயுடன் புலிக்கரை ஏரியை இணைக்கும் திட்டம், அலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள்செட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டுவரும் திட்டம், எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருக்கிறார். அதேசமயம், நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருப்பவர்கள் நிலத்தைக் கையகப்படுத்த விடவில்லை. தக்காளி விலை வீழ்ச்சியடையும் சமயத்தில், அதைச் சேமித்துவைக்க பாலக்கோடு மார்க்கெட்டிங் கமிட்டியில் ஏ.சி குடோன் கட்டிக்கொடுத்திருக்கிறேன். மழைக்காலத்தில் உரிய விலை கிடைக்காமல் போகும்போது யாரோ சிலர் தக்காளியை வீதியில் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். மற்றபடி என் மாவட்டத்தில் தக்காளி விளைச்சலும் வியாபாரமும் நல்ல முறையில் இருக்கின்றன.
‘1,783 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்’ என்று 2013-ம் ஆண்டில் அம்மா அறிவித்தார். இதில் 1,233 ஏக்கர் அரசுக்குச் சொந்தமான நிலம். 550 ஏக்கர் நிலத்தைத் தனியாரிடமிருந்து கையகப்படுத்துவதில் பிரச்னை நீடிக்கிறது. எனவே, சிப்காட் திட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஆயிரம் ஏக்கரில் முதல் தொழிற்பேட்டையை அமைக்க உள்ளோம். இதற்கான அடிக்கல்லை கூடிய விரைவில் முதலமைச்சர் நாட்டுகிறார். தொடர்ந்து, தனியார் இடத்தையும் கையகப்படுத்தி 783 ஏக்கரில் இரண்டாவது தொழிற்பேட்டை தொடங்கப்படும்.
‘அன்பழகன் இதைச் செய்யவில்லை’ என்று தொகுதியில் யாரும் குறை சொல்ல முடியாது. தொகுதியைக் கடந்து மாவட்டத்துக்கும் மனத்திருப்தியுடன் பல திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறேன்’’ என்றார் அமைச்சர்.

உயர்கல்வித்துறை ஊழல்!
‘பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் புரள்கிறது. இதைக் கண்டு வேதனை அடைந்தேன்’ என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு முறை வெளிப்படையாகவே பேசும் அளவுக்குத்தான் இருக்கிறது தமிழக உயர்கல்வித்துறையின் நிலைமை. ‘துணைவேந்தர்களை நியமிப்பதே ஆளுநர்தான்’ என்று பதிலடி கொடுத்தார் அன்பழகன். ஆனாலும், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் புரையோடுவதை இருவருமே மறுக்கவில்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணி நியமனங்களில் ஊழல்புரிந்ததாகக் கைது செய்யப்பட்டார். இன்னொரு பக்கம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக, அந்தத் தேர்வே ரத்து செய்யப்பட்டது. முறைகேடு செய்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டார்கள். உயர்கல்விச் சூழலை விளக்க, இதெல்லாம் ஒரு சோற்றுப் பதம்.
‘உயர்கல்வித்துறையைக் காப்பாற்றவில்லை. அமைச்சர் பதவிக்கான அதிகாரத்துடனும் அவர் செயல்படவில்லை’ என்று அன்பழகனை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், இசைப் பல்கலைக்கழகம் என சமீபகாலங்களில் வெளி மாநிலத்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள். `அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும்' என அமைச்சரைக் கேட்காமலே மத்திய அரசுக்குத் துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சையானது. அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு எம்.டெக் படிப்புகளில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற மறுத்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையையே நிறுத்திய விவகாரமும் நீதிமன்றத்துக்குப் போனது.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாமீதான ஊழல் புகார் விஷயத்தில், எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்த பின்னரே அசைந்துகொடுத்தார் அன்பழகன். ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தார். இந்த விசாரணை நடக்கும் நேரத்தில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அன்பழகன் சந்தித்ததும் சர்ச்சைக்குள்ளானது. சூரப்பா மீதான விசாரணையை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் அப்போது குற்றம் சாட்டின.
அன்புமணியுடன் மோதல்!
கூட்டணியில் இருந்தாலும், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக தைலாபுரம் போகும் அமைச்சர்கள் அணியில் அன்பழகன் இருந்தாலும், அவருக்கும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இருவரும் தரம்தாழ்ந்து மாறி மாறி விமர்சித்துக்கொண்டனர். ‘அடிமை அமைச்சருக்கு ஆண்மை இருக்கா?’ என்று விமர்சித்த அன்புமணியை, ‘ஐந்து அறிவு ஜீவன். தருமபுரியில் மீண்டும் எம்.பி-யாக விடமாட்டேன்’ என்று சவால் விடுத்திருந்தார் அன்பழகன். எதிர்பாராதவிதமாக அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி அமைந்தபோதும், அன்புமணி தோற்றுப்போனார். இந்தத் தோல்விக்கு அன்பழகனும் காரணமாக இருந்தார் என்றும் மாவட்டத்தில் பேச்சு உண்டு.
`அன்பழகன் மீதான கோபம் அன்புமணிக்கு இன்னும் தணியவில்லை' என்கிறது, பா.ம.க தரப்பு. பாலக்கோடு தொகுதியில் வன்னியர் சமூக மக்களே அதிகம் வசிக்கிறார்கள். அன்பழகனும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரின் தொடர் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். என்றாலும், நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு சட்டமன்றத் தேர்தலில் பழிதீர்க்கும் திட்டத்துடன் அன்புமணி காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.