
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த காலத்திலேயே, ஜெயலலிதாவின் ஆதரவாளராக வலம்வருகிறார் செங்கோட்டையன்.
ஜெயலலிதா மறைந்த நேரம். கூவத்தூர் களேபரங்களுக்கு மத்தியில், ‘தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்’ என எழுந்த பரபரப்பான பேச்சுகளில் அப்போது அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர், கே.ஏ.செங்கோட்டையன். ஆட்சியையோ, கட்சியின் அதிகாரத்தையோ கைப்பற்ற செங்கோட்டையன் தலைமையில் ஒரு டீம் கலகம் செய்யும் என அ.தி.மு.க-வினர் பலருமே ஆரூடம் சொன்னார்கள். ஆனால், ‘அம்மா கட்டிக் காத்த இயக்கத்திற்கு உறுதுணையாக என் உயிர்மூச்சு உள்ளவரை இருப்பேன்’ என செங்கோட்டையன் அறிக்கையைத் தட்டிவிட்டார். தன்னைவிட கட்சியில் ஜூனியரான எடப்பாடி பழனிசாமி முதலமைச்ச ரானாலும், அவருடைய தலைமையின் கீழ் எந்தவித சலசலப்பும் இல்லாமலும், கட்சிக்குள்ளிருந்து கல்லெறியாமலும் இருக்கிறார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து எடப்பாடியார் காலம் வரை அ.தி.மு.க-வின் அக்மார்க் விசுவாசி செங்கோட்டையன்.

செங்கோட்டையனின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள குள்ளம்பாளையம். பாரம்பர்யமான, வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக்காலங்களில் பெற்றோருக்கு உதவியாக விவசாயம் பார்த்தும் சர்க்கரை வியாபாரம் செய்தும் வந்திருக்கிறார். 1970-களில் குள்ளம்பாளையம் சுற்றுவட்டாரத்திலேயே செங்கோட்டையன் ஒருவர் தான் ராஜ்தூத் பைக் வைத்திருந்தாராம். பட்பட்டென மைனர் கணக்காய் பைக்கில் அவர் வலம்வந்தால் ஊரே திரும்பிப் பார்க்குமாம்.
தி.மு.க-வில் கிளைச்செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய செங்கோட்டையன், 1971-ல் குள்ளம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக வலம்வந்த செங்கோட்டையன், 1972-ல் எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியபோது, அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிறார். அப்போது கோபிசெட்டி பாளையம் அ.தி.மு.க-வில் செல்வாக்கோடு வலம்வந்த கே.என்.கே.ராமசாமி மற்றும் கோவை மாவட்ட அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளான அரங்கநாயகம், முத்துமாணிக்கம் போன்றோரின் ஆதரவாளராக அறியப்படுகிறார். கோபி நாடாளுமன்ற எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் பொறுப்பு செங்கோட்டையனுக்குக் கிடைக்கிறது.

1975-ல் கோவை பிரசிடென்சி ஹாலில் எம்.ஜி.ஆர் தலைமையில் அ.தி.மு.க பொதுக்குழு நடக்கிறது. ‘இந்தப் பொதுக்குழுதான் தன் அரசியல் வாழ்விற்கு முக்கியக் காரணமாக இருக்கும்’ என செங்கோட்டையனே அப்போது நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். அந்தப் பொதுக்குழுவை நடத்தும் குழுவின் தலைவராக அரங்கநாயகம், செயலாளராக திருப்பூர் மணிமாறன் மற்றும் பொருளாளராக செங்கோட்டையன் நியமிக்கப்படுகின்றனர். அனைத்து ஏற்பாடுகளையும் செங்கோட்டையனே செலவுசெய்து கவனித்துக் கொள்கிறார். பொதுக்குழு சிறப்பாக நடந்துமுடிகிறது. சிலநாள்களில் சென்னை சத்யா ஸ்டூடியோவிற்கு செங்கோட்டை யனை வரச் சொன்ன எம்.ஜி.ஆர், ஒரு பிளாங்க் செக்கை எடுத்து, ‘பொதுக்குழுவுக்கு எவ்வளவு செலவு ஆச்சோ, அதை எடுத்துக்கோ’ என நீட்டுகிறார். ‘உங்க மேல உள்ள அன்புலதான் பொதுக்குழுவை எடுத்துச் செஞ்சேன். பணமெல்லாம் வேணாம் அண்ணா’ என மறுக்கிறார் செங்கோட்டையன். அவர்மீது எம்.ஜி.ஆருக்குத் தனிப் பிரியம் உண்டாகிறது.
அதன் பலனாக 1977 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக சத்தியமங்கலம் தொகுதியில் செங்கோட்டையனுக்கு சீட் கிடைக்கிறது. முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகிறார். கோபி தொகுதியில் வெற்றிபெற்றிருந்த கே.என்.கே.ராமசாமிக்கு சீக்கிரமே கட்சியில் முக்கியத்துவம் குறைகிறது. அந்த வெற்றிடத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட செங்கோட்டையன், 1980 தேர்தலில் கோபி தொகுதியில் சீட் வாங்குகிறார். செங்கோட்டையனுக்கு எதிராக அவரின் சித்தப்பா சுப்பிரமணியம் காங்கிரஸ் சார்பில் களமிறங்குகிறார். கிட்டத்தட்ட 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரைத் தோற்கடித்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ ஆகிறார் செங்கோட்டையன். அதன்பின் ஆறு முறை கோபி தொகுதியில் அவர் ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்.

சொந்தத் தொகுதியின் ராசியோ என்னவோ, அதன்பிறகு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட அ.தி.மு.க செயலாளர், ஈரோடு ஆவின் சேர்மன் எனப் பல பதவிகள் செங்கோட்டையனுக்குக் கிடைக்கிறது. 1980-லிருந்து 17 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த காலத்திலேயே, ஜெயலலிதாவின் ஆதரவாளராக வலம்வருகிறார் செங்கோட்டையன். ஜெயலலிதாவை ஈரோட்டிற்கு அழைத்துவந்து பிரமாண்டமான கூட்டங்கள், பேரணிகள் எனப் பலவற்றை நடத்துகிறார். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு கட்சி இரண்டாக உடைந்தபோதும், எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் புறக்கணிக்கப்பட்டபோதும் ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக இருந்தார். 1989 தேர்தலில் ஜெ., அணி 33 இடங்களைப் பிடிக்கிறது. அப்போது ஈரோடு மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 7 தொகுதிகளின் வெற்றியை ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்கிறார் செங்கோட்டையன். அதேபோல சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு தி.மு.க-வினரால் சிக்கல் உண்டானபோது, அவர்கள்மீது செங்கோட்டையன் பாய்ந்தார். இப்படித் தொடர்ந்து தனக்கு உதவியாக இருந்த செங்கோட்டையனைத் தனது நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் வைத்துக்கொண்டார் ஜெயலலிதா. இதற்குக் கைம்மாறாக 1991-ல் அ.தி.மு.க ஆட்சி அமைத்ததும், செங்கோட்டையனுக்குப் போக்கு வரத்துத்துறையைப் பரிசாகக் கொடுத்தார் ஜெயலலிதா. அதன்பிறகு செங்கோட்டையன் கிராஃப் ஜெட் வேகத்தில் எகிறியது. ஆட்சி முடியும் நேரத்தில் வனத்துறையும் அவர் பொறுப்பில் வந்தது.

மீண்டும் 2011 ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். அடுத்தடுத்து, வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளும் அவர் வசமாகின்றன. ஆனால், இடையில் அவர் செல்வாக்கு சரியத் தொடங்கியது. தனிப்பட்ட குடும்ப விவகாரம் காரணமாக செங்கோட்டை யனின் அமைச்சர் பதவியும், கட்சியில் தலைமை நிலையச் செயலாளர் பதவியும் பிடுங்கப்பட்டதாக தகவல் கசிந்தது. குடும்ப விவகாரம் என்று சொல்லப்பட்டாலும், பெரும் அரசியல் லாபி செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கைக்கு மூடுவிழா நடத்தத் திட்டமிட்டது. இதில் செங்கோட்டையன் மிகவும் நொந்துபோனார். ஆனாலும், அ.தி.மு.க-வின் உண்மை விசுவாசியாகவே இருந்தார்.
2016 தேர்தல் சமயத்தில் ‘தேர்தலில் போட்டியிட பணம் கட்டுங்கள்’ என ஜெ-விடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தது. வெற்றிபெற்ற பின்னர் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பதவியேற்ற அமைச்சரவையில் செங்கோட்டையனுக்குப் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் செயல்பாடுகள் பற்றி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். “1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத் திட்டத்தை மாற்றியிருப்பது, பாட நூல்களின் வடிவமைப்பு, பாடங்களின் இறுதியில் கொடுக்கப்பட்ட இணையதள இணைப்பு, க்யூ.ஆர் கோடு ஆகியவை வரவேற்கத்தக்கவை. அதேபோல மாணவர்களுக்கு வண்ண வண்ணச் சீருடைகள் கொடுத்திருப்பது, கல்விச் சேனல் போன்ற பல முன்னோடியான விஷயங்களும் பாராட்டத்தக்கவை. பள்ளிக்கல்வித் துறையில் ஏதோ மாற்றங்கள் நடக்கப்போகின்றன என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் இருந்தது. தொடக்கத்தில் காட்டப்பட்ட ஆர்வம், போகப் போகக் குறைய ஆரம்பித்துவிட்டது.

5 மற்றும் 8-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டு, பிறகு பின்வாங்கியது போன்ற பல விஷயங்கள் நடந்தன. மாணவர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பதற்காக ஆசிரியர்களைக் குறைப்பது, மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களை மூடப்போவதாக அறிவிப்பது எல்லாம் புத்திசாலித்தனமான நடவடிக்கையா? ‘அரசால்தான் ஆபத்துக்காலங்களில் உதவ முடியும்’ என்கிற மிகப்பெரிய பாடத்தை கொரோனா புரியவைத்தது. அரசு மருத்துவமனைகள் போலவே அரசுப்பள்ளிகள் மீதும் இப்போது நம்பிக்கை வந்திருக்கிறது. நடப்புக் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக ஐந்து லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். இப்படி அரசுப்பள்ளிகளை நம்பி வந்த மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுதாக நிறைவேற்றப்படவில்லை. இதையெல்லாம் செய்யாமல் நீட் பயிற்சி, ஜே.இ.இ பயிற்சி மற்றும் பட்டயக் கணக்காளர் பயிற்சி கொடுக்கிறோம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. கொரோனா சமயத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கல்வியைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் பள்ளிக்கல்வித்துறை பெருந் தோல்வியடைந்தி ருக்கிறது.
‘அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வருவோம்’ என்பது, 2016 அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதி. ‘தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்’ என்ற ஆசிரியர்கள் செய்த போராட்டம் எப்படி அரசுக்கு எதிரானதாக இருக்க முடியும்? போராடிய ஆசிரியர்களைக் கூப்பிட்டுப் பேசுவதில் அரசுக்கு என்ன கௌரவக் குறைச்சல். ஏன் பேசவில்லை? அமைச்சர் செங்கோட்டையன் நல்ல மனிதர். அவருக்கு என்ன சிக்கல் என்றே புரியவில்லை. சுதந்திரமாக அவரால் இயங்க முடிகிறதா என்பதே தெரியவில்லை’’ என்றார் அவர்.
கோபி தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையனின் செயல்பாடு எப்படியிருந்தது? தி.மு.க மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணியிடம் பேசினோம். “விவசாயக் குடும்பத்தில் பிறந்த அமைச்சர் செங்கோட்டையன், தொகுதியின் பிரதான தொழிலான விவசாயத்தின் மேம்பாட்டிற்கு எதையும் செய்யவில்லை. கோபி தொகுதியில் இன்ஜினீயரிங் கல்லூரி, வேளாண் கல்லூரி என எதையும் கொண்டு வரவில்லை. கோபியை ஒட்டி பவானி ஆறு ஓடியும் தொகுதி மக்களுக்குப் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் அவருடைய தொகுதிக்காகக் கொடிவேரி அணையிலிருந்து சுமார் 200 கோடி ரூபாய் செலவில் குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். ஆனா, 30 வருஷமாக கோபி மக்களோட ஓட்டை வாங்கிய செங்கோட்டையன் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க எதையும் செய்யலை. கோபி நகரில் சாலைகள் படுமோசமாக இருக்கின்றன. கோபி பஸ் ஸ்டாண்ட் இன்னும் விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கு. கோபி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதியில்லாததால், கூடுதல் சிகிச்சைகளுக்கு ஈரோட்டிற்கும், கோவைக்கும் செல்ல வேண்டியதாய் இருக்கிறது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாளர்கள் சிலர் இருக்காங்க. அவங்களைத் தாண்டி செங்கோட்டையனைப் பார்க்கிறது சிரமமான காரியம். தேர்தல் வந்தா செங்கோட்டையனுக்கு ஜுரம் வந்துடும். இத்தனை வருஷமா எதுவும் செய்யாம, நம்பியூரில் கலைக்கல்லூரி, கோபி மார்க்கெட் மேம்பாட்டுப் பணி போன்றவற்றை இப்ப அவசர அவசரமா செஞ்சுகிட்டிருக்காரு. தொகுதிக்கான எந்தத் தொலைநோக்குத் திட்டங்களையும் செங்கோட்டையன் கொண்டு வரவில்லை. பணத்தைக் கொடுத்தா மக்கள் ஓட்டு போட்டுடுவாங்கன்னு நினைக்கிறாரு” என்றார்.

ரூட்டு தல!
அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் எனப் பல பொறுப்புகளில் செங்கோட்டையன் இருந்திருக்கிறார். ஜெயலலிதாவின் அனைத்துத் தேர்தல் பிரசாரங்களுக்கும் ரூட் போட்டுக் கொடுக்கும் ‘ரூட்டு தல’ செங்கோட்டையன்தான். தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா செல்லும் இடங்களில், முக்கிய பாயின்டுகளில் இரட்டை இலைச் சின்னம் பொறித்த அட்டையைக் கையில் தாங்கிக்கொண்டு நிற்பார் செங்கோட்டையன். அவர் எந்த இடத்தில் நிற்கிறாரோ, அந்த இடத்தைத் தாண்டி ஜெயலலிதாவின் வண்டி ஒரு அங்குலமும் நகராது. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், தேர்தல் சாரதியாகவும் செங்கோட்டையன் இருந்தார்.

அறிவிப்பு அமைச்சர்!
110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளை விஞ்சும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வித்துறையில் பல நூறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் செங்கோட்டையன். சென்னையில் ஒன்று சொல்வார், ஈரோடு போனதும் வேறொன்று சொல்வார், மறுநாள் கோபியில் பேட்டி கொடுக்கும்போது அது தலைகீழாக மாறிவிடும்.
செருப்புக்குப் பதிலாக ஷூ வழங்கப்படும், 6 - 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும், ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் மாணவர்கள் குடிநீர் அருந்த நேரம் ஒதுக்கப்படும், பள்ளி தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி அளிக்கப்படும், மாணவர்கள் மரம் வளர்த்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும், ரோபோக்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படும் என ஏகத்துக்கும் அறிவிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு, நீட் தேர்வு விவகாரம், ஆசிரியர்கள் போராட்டம், குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது போன்ற சர்ச்சைக்குரிய பல அறிவிப்புகளால் பள்ளிக்கல்வித் துறை பெரும் பரபரப்பானதாகவே இருந்தது. கொரோனா நாள்களில் பள்ளி திறப்பது தொடர்பாகவும் பல குழப்ப அறிவிப்புகள் வெளியாகின.
இதுகுறித்து செங்கோட்டையனிடம் பேசியபோது, ‘`நாங்கள் வெளியிடும் ஒரு அறிவிப்பிற்குப் பெற்றோர்கள் மத்தியில் விமர்சனம் வரும்போது, அதை மதித்து அறிவிப்பைத் திரும்பப் பெறுகிறோம். அதற்காகப் பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புகளில் குழப்பம் இருப்பதாகச் சொல்ல முடியாது’’ என்றார்.

அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசினோம். “கொடிவேரி அருகே ஐ.டி.ஐ, நம்பியூரில் அரசு கலைக் கல்லூரி கொண்டுவந்திருக்கிறோம். கோபி நகரின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க 17,000 வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு கொடுத்திருக்கிறோம். 2.63 கோடியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். கொளப்பலூர் அருகே டெக்ஸ்டைல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதனால் 7,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 3,248 வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறோம். மாக்கினாம் கோம்பையில் 440 வீடுகளைக் கட்ட டெண்டர் விட்டிருக்கிறோம்.
ரூ. 1,532 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அத்திக்கடவு - அவினாசித் திட்டத்தால், கோபி தொகுதியில் பல பகுதிகள் பாசன வசதி பெறவிருக்கின்றன. தடப்பள்ளி - அரக்கன்கோட்டைப் பாசன வாய்க்கால் சீரமைப்புப் பணியால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 35 கோடியில் மூன்று தடுப்பணைகளைக் கட்டவிருக்கிறோம். நம்பியூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனித் தாலுகா கொண்டு வந்திருக்கிறோம். 320 கோடி மதிப்பீட்டில் சித்தோடு - கோபி வரை நான்கு வழிச்சாலை அமைக்க டெண்டர் விட்டிருக்கிறோம். கோபி மருத்துவமனையைத் தரம் உயர்த்தியிருக்கிறோம். மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவிற்காக 3 மாடிக் கட்டடம் கட்டவிருக்கிறோம். 11.55 கோடியில் பெரிய கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தையும், 5.59 கோடியில் நம்பியூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தையும் கொண்டுவந்திருக்கிறோம். ரூ. 4.5 கோடியில் நம்பியூர்ப் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்திருக்கிறோம்” என, தொகுதிக்குச் செய்தவற்றைப் பட்டியலிட்டார்.
தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்திய திட்டங்கள் பற்றிப் பேசுகையில் “12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டத்தினை மாற்றியிருக்கிறோம். என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில்கூட இல்லாத க்யூ.ஆர் கோடு வசதியுடன் கூடிய, தரமான புத்தகத்தை வடிவமைத்திருக்கிறோம். மாணவர்களுக்குப் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்த ரேங்க் சிஸ்டம் நீக்கப்பட்டிருக்கிறது. அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்திருக்கிறோம். இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாடங்களை, ஒரே தாளாக மாற்றியிருக்கிறோம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கியிருக்கிறோம். கல்வி சேனல் கொண்டு வந்திருக்கிறோம். ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு, அதிநவீன ஆய்வுக்கூடங்கள் போன்ற வசதிகள் கொண்டுவந்திருக்கிறோம். மாணவர்களுக்கு இலவசமாக நீட், ஜே.இ.இ, பட்டயக் கணக்காளர் தேர்விற்கான பயிற்சிகளைக் கொடுத்துவருகிறோம். நாட்டிலேயே முதல்முறையாக எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவந்திருக்கிறோம். இப்படிப் பள்ளிக்கல்வித் துறையில் எடுத்த முன்னெடுப்புகள் அனைத்தும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன” என்றார்.
அமைச்சர்கள் பலரும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி சர்ச்சைகளில் சிக்கிவரும் வேளையில், தன்னுடைய துறையைத் தவிர வேறு எந்தச் சர்ச்சைகளிலும் சிக்காத சைலன்ட் அரசியல்வாதியாக செங்கோட்டையன் வலம்வருகிறார். இதுகுறித்துக் கேட்டபோது, “இமயமே தலைமீது விழும் ஆபத்து ஏற்பட்டாலும் சலனம், சறுக்கல், வழுக்கல் இல்லாதவர் செங்கோட்டையன்’ என என்னைப் பற்றி அம்மா குறிப்பிட்டதைப்போல, விசுவாசியாக என்றும் பணியாற்றிவருகிறேன். என் துறையிலும் தொகுதியிலும் ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால் அதைத் தவிர மற்ற எதையும் பேச நினைப்பதில்லை” என்றார் அவர்.