
சம்பத்தின் மகன் பிரவீன் குமார்தான் நிழல் அமைச்சராக வலம்வந்து அனைத்தையும் கவனித்துக்கொள்கிறார்.
``கடலூர் ஜவான் பவன் சாலை விவகாரத்தில் ஒரு கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். ஊழல் பேர்வழியான அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.” இப்படித் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை செய்தியாளர்கள் முன்பு துவைத்துத் தொங்கவிட்டது வேறு யாருமல்ல. ஆளுங்கட்சியைச் சேர்ந்த விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன்தான். சொந்தக் கட்சியினரே வெளுக்கும் அளவுக்குத்தான் கடலூர் மாவட்டத்தில் அமைச்சரின் செல்வாக்கு இருக்கிறது.
மூன்றாவது முறை எம்.எல்.ஏ-வாகவும், பத்தாண்டுகளாக அமைச்சராகவும் இருந்தாலும், உள்ளூர் நிர்வாகிகளுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம். கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் அமைச்சர் சம்பத் தனியாகவும் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித் தேவன் தலைமையில் சிதம்பரம் எம்.எல்.ஏ பாண்டியன், காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ முருகுமாறன், பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் போன்றவர்கள் மற்றொரு அணியாகவும் தற்போதுவரை செயல்பட்டுவருகின்றனர். அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சிக்கும் அவர்கள் வருவதில்லை.

அதிர்ந்தும் சிரித்தும் பேசாத இவரை ‘தமிழகத்தின் நரசிம்மராவ்’ என்று பிரியத்துடன் அழைக்கும் ரத்தத்தின் ரத்தங்கள், ‘அமைதிப்படை’ அமாவாசை கதாபாத்திரத்துடன் இவரை ஒப்பிடுகிறார்கள். அரசியலில் தன்னை அடையாளம் காட்டியவர்களை அட்ரஸ் இல்லாமல் செய்துவிட்டு, அமைச்சர் பதவி வரை உயர்ந்திருக்கிறார். அம்மா, சின்னம்மாவைத் தாண்டி தனது அசுர வளர்ச்சிக்குக் காரணமாக இவர் நினைப்பது கண்டரக்கோட்டை `அரசியம்மன்’தான். முக்கிய வேலையாக வெளியில் கிளம்பும்போது, சுமங்கலிப்பெண் ஒருவரை எதிரில் வரச் சொல்லிவிட்டு காரில் ஏறும் அளவுக்கு சகுனம் பார்க்கும் மனிதர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி குட்டி கோணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் நிலத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தினார். அதன்பிறகு மேல் குமாரமங்கலத்தில் குடியேறினார். அவரின் மகன்கள், எம்.சி.தாமோதரன், எம்.சி.சம்பத்.
1986 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாகத் தேர்வு செய்யப்பட்ட தாமோதரனுக்குத் துணையாக வந்தவர்தான் சம்பத். பி.எஸ்ஸி முடித்துவிட்டு சில நாள்கள் வேலையில்லாப் பட்டதாரியாகச் சுற்றியவர், அதன்பிறகு காலி தகர டப்பாக்களை மொத்தமாக வாங்கி விற்றுவந்தார். அரசியல்வாதிகளின் ஆரம்பக் களமான ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் பதித்தார். அண்ணன் சேர்மன் ஆனதும், ஏரியை ஆக்கிரமித்திருக்கும் மரங்களைக் குத்தகை எடுத்து வெட்டி விற்கும் வனத்துறை ஒப்பந்ததாரர் ஆனார். இவரது கோடாரி தமிழகம் முழுவதும் இருக்கும் மரங்களைக் குறிபார்க்க ஆரம்பிக்க, விரைவில் தமிழ்நாடு மரம் வெட்டுவோர் சங்கத்தின் துணைத் தலைவரானார். அண்ணன் தாமோதரன் எம்.எல்.ஏ., எம்.பி என அடுத்தடுத்த படிகளில் ஏற, அந்தச் செல்வாக்கையும் அதிகாரத்தையும் ருசிக்க ஆரம்பித்தார் தம்பி. ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக்காலம் முடிய 10 மாதங்கள் இருந்தபோது, தாமோதரன் கால்நடைத்துறை அமைச்சரானார்.

`அமைச்சரின் தம்பி மரம் வெட்டுவதா?’ என்று கோடாரியைக் கீழே போட்ட சம்பத், அதே வேகத்தில் மண்வெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு பணம் கொழிக்கும் மணல் குவாரி தொழிலில் களமிறங்கினார். கண்டரக்கோட்டை தென்பெண்ணையாறு, செங்கல்பட்டு பாலாறு, விருத்தாசலம் மணிமுத்தாறு, அரியலூர் வெள்ளாறு எனத் தமிழகத்தின் முக்கிய ஆறுகள் அனைத்தையும் பதம் பார்த்தது சம்பத்தின் மண்வெட்டி. மணல் குவாரியில் குவித்த பணத்தை அரசியலில் முதலீடு செய்ய நினைத்தார் சம்பத். பண்ருட்டி முந்திரியையும் பலாப்பழத்தையும் சசிகலாவின் மன்னார்குடி உறவுகளுக்கு வீடு வீடாக சப்ளை செய்து கிச்சன் கேபினட்டில் இடம் பிடித்தார்.

1998-ம் ஆண்டு தன் தம்பி சம்பத்தை, அண்ணா கிராமம் ஒன்றியச் செயலாளர் ஆக்கினார் தாமோதரன். சம்பத்தின் அரசியல் என்ட்ரியும் சூழ்ச்சிகளும் தொடங்கியது அங்கிருந்துதான். 1999-ம் ஆண்டு நெல்லிக்குப்பம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில் போட்டியிட தாமோதரனின் மனைவி ரமாதேவியின் பெயரை டிக் அடித்தார் ஜெயலலிதா. ஆனால், ‘அவர் குடும்பப் பெண். அரசியலுக்கெல்லாம் வரமாட்டார்’ என்று ஜெயலலிதாவிடமே தாமோதரன் மறுக்க, அன்று தொடங்கியது அவரது அரசியல் வீழ்ச்சி. அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி சொரத்தூர் ராஜேந்திரன் என்பவருக்குச் சென்றது. இதுதான் தனக்கான நேரம் என்று நினைத்த சம்பத், மன்னார்குடி குடும்பத்தின் உதவியால் மாவட்டச் செயலாளர் பதவியை வசப்படுத்தினார். அதற்குக் கைமேல் கிடைத்த பலனாக 2001 தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் சீட் கிடைத்து எம்.எல்.ஏ ஆனார். அண்ணனுக்கும் தம்பிக்கும் அரசியல் உரசல் ஆரம்பித்தது.
2003-ல் வீட்டு வசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி சம்பத்துக்குக் கிடைத்தது. முதல் முறையாக அமைச்சர் ஆன அதே வேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கினார். அப்போது சம்பத்தின் அண்ணன் தாமோதரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பண்ருட்டி அ.தி.மு.க ஒன்றிய மாணவரணிச் செயலாளர் நடராஜன் கூலிப் படையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். சம்பத் ஆள் வைத்து தன்னைத் தாக்கியதாக போலீஸில் புகார் அளித்தார் நடராஜன். அதே காலகட்டத்தில் கடலூரைச் சேர்ந்த அ.தி.மு.க-வின் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்த கங்கா என்ற பெண்மணியும் அமைச்சர் சம்பத்மீது தலைமைக்குப் புகார் அனுப்பினார். இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்க, திண்டுக்கல் சீனிவாசனை அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. விசாரணை முடிந்த மறுநாளே சம்பத்தின் அமைச்சர் பதவி பறிபோனது. இப்படி ஒன்பதே மாதங்களில் அவரின் அமைச்சர் பதவி முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, 2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சீட் வழங்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார்.

ஆனாலும், சசிகலா குடும்ப ரூட் பிடித்து, 2007-ல் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றார். அடுத்துவந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர்த் தொகுதியில் சம்பத்தின் அண்ணன் தாமோதரன் தே.மு.தி.க வேட்பாளராகக் களமிறக்கப்பட, அ.தி.மு.க சார்பில் களமிறங்கினார் சம்பத். `வெற்றி எனக்குத்தான்’ என்று அண்ணனும், ‘நாங்கள் தோல்வியே கண்டதில்லை’ என்று தம்பியும் போட்டிப் பிரசாரத்தால் கடலூரைக் கலகலக்க வைத்துக்கொண்டிருந்தபோது, சத்தமில்லாமல் வெற்றிபெற்று எம்.பி-யாக டெல்லிக்குப் பறந்தார் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி.
தோற்றாலும் அவருக்கு சுக்கிர தசை சூப்பராக அடித்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் வென்று வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் ஆனார். 2016 முதல் தற்போதுவரை தொழில்துறை அமைச்சராக இருக்கிறார்.
2012-14-ம் ஆண்டில் அமைச்சர் சம்பத், கடலூர் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை அமைப்பதற்குத் தன் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 கோடியே 40 லட்சத்தை, விதிகளை மீறி நகராட்சியின் அனுமதி பெறாமலே பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கினார். ``நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் அமைக்கும் பணியைப் பொதுப்பணித்துறை மேற்கொள்ள முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தாலும், நகராட்சியின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, செய்யாத வேலையைச் செய்ததாகக் கூறி அமைச்சர் அந்தத் தொகையை ஊழல் செய்துவிட்டார்” என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சரின் செல்வாக்கால் அந்த விவகாரம் அமுக்கப்பட்டுவிட்டது.
சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டதும், ‘சேகர் ரெட்டியின் டைரியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பெயர் இருக்கிறது. அதனால் அவர் பதவி விலக வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

சம்பத்தின் மகன் பிரவீன் குமார்தான் நிழல் அமைச்சராக வலம்வந்து அனைத்தையும் கவனித்துக்கொள்கிறார். கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத அவரது பிறந்தநாளுக்கு மாவட்டம் முழுவதும் பேனர்கள், கோயில்களில் அர்ச்சனைகள் என்று சம்பத்தின் ஆதரவாளர்கள் செய்த அலப்பறை, எடப்பாடியையே கடுப்படைய வைத்தது. சமீபத்தில் காட்டுக்குப்பம் பகுதியில் நடைபெற்ற அமைச்சர் சம்பத் குடும்பத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சுமார் 600 காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியதும் சர்ச்சையானது.
முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வான புகழேந்தி, “கடந்த பத்தாண்டுகளாக இது அமைச்சர் தொகுதி. ஆனால் சொல்லிக்கொள்ளும்படி எந்தத் திட்டத்தையும் அமைச்சர் செயல்படுத்தவில்லை. மாவட்டம் முழுவதும் குண்டும் குழியுமாகக் கிடக்கும் சாலைகளை அமைச்சர் நினைத்தால் சரிசெய்யலாம். ஆனால் அவருக்கு மனமில்லை. சிதம்பரத்திற்குக்கூடப் புறவழிச்சாலை இருக்கிறது. ஆனால் கடலூருக்குப் புறவழிச்சாலை இல்லை. தி.மு.க ஆட்சிக் காலத்தில் புறவழிச்சாலை அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு அதுகுறித்துப் பேசவோ, யோசிக்கவோ அமைச்சருக்கு நேரமில்லை. தொழில்துறை அமைச்சராக இருக்கும் இவர் ஏதாவது தொழிற்சாலையைக் கடலூருக்குக் கொண்டு வந்திருக்கிறாரா? கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் இந்த மூன்று ‘க’ தான் அமைச்சரின் தாரக மந்திரம். பணம் கொடுத்தால் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் மக்களைச் சந்திக்காமல், எம்.எல்.ஏ அலுவலகத்தைக்கூடத் திறக்காமல், அதிகாரிகள் கூட்டத்தில் மட்டும் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்” என்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரான மாதவன், “கடலூர்த் துறைமுகத்தை ஆழப்படுத்தி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. அதற்கு எந்த முயற்சியையும் அமைச்சர் செய்யவில்லை. அதேசமயம் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி சில தனியார் கம்பெனிகள் மட்டும் தங்களின் பயன்பாட்டுக்காக செயற்கைத் துறைமுகங்கள் அமைத்துக்கொள்கின்றன. பல மாவட்டங்களை இணைக்கும் கடலூர்ப் பேருந்து நிலையம் குப்பைத் தொட்டியைப்போலக் கிடக்கிறது. ஆட்சி முடியப்போகும் நேரத்தில் புதிய பேருந்து நிலையத்துக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டியிருப்பதை என்னவென்று சொல்வது?
தானே புயல் பாதிப்புக்குப் பிறகு குடிசை வீடுகள் அனைத்தும் கான்க்ரீட் வீடுகளாக மாற்றப்படும் என்றும், குடிசையில்லாத மாவட்டம் என்றும் கடலூரை அறிவித்தார்கள். அதற்காக ஒரு நபருக்கு அரசு அளித்த நிதி வெறும் ஒரு லட்சம்தான். அந்தத் தொகையில் எப்படி வீடுகட்ட முடியும்? அதனால் அந்தத் திட்டத்தின் கீழ் கடலூருக்கு ஒதுக்கப்பட்ட 90,000 வீடுகளில் எதுவும் முழுமையடையாமல் கிடக்கின்றன. கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்தை இன்றுவரை செயல்படுத்த முடியாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. வடிகால் மாவட்டம் என்பதால் வெள்ளச் சீற்றத்தை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் பரவனாற்றை நேரடியாகக் கடலில் கலக்கும் விதமாக அருவாமூக்குப் பகுதியில் ஆற்றை வெட்டிக் கடலில் விட்டால் வெள்ள பாதிப்பைக் குறைக்கலாம். ஆண்டுக்கணக்கில் கிடப்பில் கிடக்கும் இந்தத் திட்டத்தையும் அமைச்சர் கண்டுகொள்ளவில்லை.
இந்த மாவட்டத்தின் பெரிய சர்க்கரை ஆலைகளான அம்பிகா, ஆரூரான் இரண்டும் கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய 500 கோடி ரூபாயைத் தராமல் ஆலையை மூடிவிட்டார்கள். விவசாயிகளுக்கான பணத்தைத் தொழில்துறைதான் தலையிட்டுப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால் அந்தத் துறையைக் கையில் வைத்திருக்கும் அமைச்சர், தன் சொந்த மாவட்ட விவசாயிகளுக்கு அதைச் செய்யவில்லை. கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய மாநில அரசின் பரிந்துரை ஊக்கத் தொகை சுமார் ரூ.500 கோடியை மாவட்டத்தில் இருக்கும் நான்கு தனியார் சர்க்கரை ஆலைகளும் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தரவில்லை. விவசாயிகளை இழுத்தடிக்கும் அந்த ஆலைகளை அமைச்சர் கண்டுகொள்ளவில்லை. 100 ஆண்டுகளாக வீராணம் ஏரி தூர் வாராமல் கிடக்கிறது. அதைத் தூர் வாருவதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.44 கோடியை ஒதுக்கினார். சேகர் ரெட்டிதான் அதற்கான ஒப்பந்ததாரர். அவரின் கைதுக்குப் பிறகு அந்தப் பணி மேற்கொள்ளப்படவில்லை. அதன்பிறகு அந்தத் தொகை என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு மாவட்டம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது கடலூர் மாவட்டம்” என்கிறார்.
கைமாறிய கல்லூரி!
ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் இளவரசன், அவர் மனைவி சந்திரவடிவு, மகன் செந்தில் ஆகியோர் இணைந்து `செந்தில் அறக்கட்டளை’ தொடங்கி விருத்தாசலத்துக்கு அருகேயுள்ள பெரியவடலாடி கிராமத்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, சுகாதார ஆய்வாளர் பயிற்சி நிலையம் போன்றவற்றை நடத்தி வந்தனர். ‘அமைச்சர் சம்பத்தின் மகன் மற்றும் மகள் இருவரும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கல்லூரி வளாகத்தை விற்றுவிடும்படி பிரச்னை செய்கின்றனர்' என்று 2019-ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இளவரசன். அது தொடர்பாக நடைபெற்ற பிரச்னையில் இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எஃப்.ஐ.ஆர் விழுந்தது. கல்லூரி வளாகம் இப்போது அமைச்சர் சம்பத்தின் உறவினர்கள் வசம் இருக்கிறது.
அமைச்சரிடம் இதுபற்றிக் கேட்டால், ``செந்தில் அறக்கட்டளை பள்ளியில் 2004-ல் இருந்து நானும் பங்குதாரர். 13 வருடங்களாக இளவரசனின் கட்டுப்பாட்டில் விட்டிருந்தேன். ஆனால், எந்தக் கணக்கையும் அவர் ஒழுங்காகக் காட்டியதில்லை. இப்போதுகூட எனக்குச் சேர வேண்டிய பகுதியைக் கொடுத்துவிட்டால் நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன்'' என்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற அமைச்சர் எம்.சி.சம்பத்தைச் சந்தித்தோம். “துறைமுக விரிவாக்கப் பணி நீண்ட நாள்களாகக் கிடப்பில் இருக்கிறது. நானும் அதுகுறித்துப் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். தற்போது அங்கு 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கான்க்ரீட் கல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ. 30 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி தளத்தை விரிவாக்கம் செய்திருக்கிறோம். தாழங்குடா பகுதியில் தடுப்பணை அமைத்திருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 16 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. நகராட்சியில் நிதி இல்லாததால், தனியார் கூட்டு முயற்சியில் பேருந்து நிலையம் அமையவிருக்கிறது. தாமதத்திற்கு அதுதான் காரணம். கடலூரில் டைடல் பார்க் அமைப்பதற்காக கேப்பர் குவாரி பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே செயல்பட முடியாமல் இருக்கும் நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனத்தை, ஹால்தியா பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம் நடத்துவதற்கான துறைரீதியிலான பேச்சுவார்த்தைகள் முடிவு பெற்றுவிட்டன. அது செயல்படத் தொடங்கினால் கடலூரில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும். அருவாமூக்குத் திட்டத்தைச் செயல்படுத்த 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதை விரைந்து செயல்படுத்த முயற்சி செய்துவருகிறேன்.
சரியான நிர்வாகமின்மை காரணமாக ஆரூரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. அந்த நிறுவனங்களின் சொத்துகளை ஏலத்தில் விட்டுதான் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுக்க வேண்டும். மாநில அரசின் பரிந்துரைத் தொகையையும் இந்தச் சர்க்கரை ஆலைகள் தரவில்லை. மற்ற ஆலை நிர்வாகங்கள் காலதாமதாகத் தருகின்றன. அவ்வளவுதான்’’ என்றார்.