சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

மந்திரி தந்திரி: திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
திண்டுக்கல் சீனிவாசன்

மாயத்தேவரும் சீனிவாசனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கட்சி மேலிடத்தில் செல்வாக்குடன் இருந்த மாயத்தேவர், சீனிவாசனின் அரசியல் பயணத்தில் முக்கிய நபராக இருந்தார்.

திண்டுக்கல்லுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இருக்கும் பந்தம் மிக ஆழமானது. தி.மு.க-விலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் தேர்தல், 1973 திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல். அ.தி.மு.க சார்பில் மாயத்தேவர் போட்டியிட்டார்.

கட்சியைப் பதிவு செய்து சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்வு செய்து போட்டியிட்டார் மாயத்தேவர். அந்தத் தேர்தலில் மாயத்தேவர் மாபெரும் வெற்றிபெற்றார். அ.தி.மு.க-வுக்கு இப்படி முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல். இரட்டை இலையே அதன் சின்னமானது. ‘`மாயத்தேவருடன் இருந்த நான்தான் அப்போது இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்வு செய்தேன்’’ என திண்டுக்கல் சீனிவாசன் தன் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்வாராம்.

மந்திரி தந்திரி:  திண்டுக்கல் சீனிவாசன்

அந்த மாயத்தேவரே எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தி.மு.க-வுக்குப் போன சூழலிலும், மாறாமல் அ.தி.மு.க-வில் இருந்தவர் சீனிவாசன். சிறுவயது முதலே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். தன் கையில் அ.தி.மு.க கொடியைப் பச்சை குத்தியிருப்பார். அ.தி.மு.க-வினரைத் தூக்கத்தில் எழுப்பிப் பேசச் சொன்னாலும் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பற்றி ஆபத்தாக எதையும் பேச மாட்டார்கள். ஆனால், ‘மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார்’, ‘ஜெயலலிதா கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தை தினகரன் எடுத்துக்கொண்டார்’ என்றெல்லாம் கலவரப்படுத்தும் பேச்சுக்குச் சொந்தக்காரர் சீனிவாசன்.

முதல்வருடன் சீனிவாசன், மகன்கள் பிரபு, சதீஷ்
முதல்வருடன் சீனிவாசன், மகன்கள் பிரபு, சதீஷ்

சீனிவாசனின் சீனியாரிட்டி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைவிட கட்சியில் சீனியர்; அ.தி.மு.க பொருளாளர் என்ற அடையாளத்துடன் பொதுக்குழு மேடைகளில் ஜெயலலிதா அருகே அமர்ந்தவர்; தற்போதைய வனத்துறை அமைச்சர்... இப்படி அடையாளங்கள் இருந்தாலும், ‘காமெடி மேடைப் பேச்சுக்குச் சொந்தக்காரர்’ என்றுதான் தமிழக மக்களுக்குத் திண்டுக்கல் சீனிவாசன் அறிமுகம். பிரதமராக நாட்டை ஆள்வது நரசிம்ம ராவா, மன்மோகன் சிங்கா, நரேந்திர மோடியா என்பதில் இன்னமும் அவருக்குக் குழப்பம். ‘நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி’ என்பார். ‘ஔவையார் எழுதிய திருக்குறள்’ என்பார். ‘நாங்கள் என்ன இயேசுநாதரைச் சுட்ட கோட்சேவின் வாரிசுகளா?’ என்று கேட்பார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கூட்டணிக் கட்சியான பா.ம.க வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்திற்குப் பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்களிக்குமாறு ஓட்டு கேட்டார். சீனிவாசன் கூட்டத்துக்குப் போனால், கலகலப்புக்கு கியாரண்டி.

ஞாபகமறதியும் குழப்பமுமாக வலம் வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்குக் கட்சிக்காரர்கள் மத்தியில் இருக்கும் பெயரே வேறு! ‘`ஒருமுறை தன்னிடம் அறிமுகம் ஆகும் நபரை, எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்த்தாலும் மறக்காமல் பெயர் சொல்லி அழைக்கும் குணம் கொண்டவர். திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த ஊருக்குப் போனாலும், உள்ளூர் நிர்வாகிகள் அனைவரது பெயரையும் சரியாகக் கூறக்கூடியவர்’’ என்று கட்சியினரிடையே ஒரு பேச்சு உண்டு. அதற்குக் காரணம், அமைச்சரின் சாமர்த்தியம்தான். யாரைச் சந்தித்தாலும், ஏற்கெனவே அறிமுகமான நபரைப் போல உடனே அழைத்துப் பேசி அன்புடன் நலம் விசாரிப்பார். பேச்சுவாக்கில், ‘‘ஆமா, உங்க பெயர் என்ன சொன்னீங்க’’ எனக் கேட்டுக்கொள்வார். பிறகு அந்தப் பெயரையே சொல்லிச் சொல்லிப் பேசுவார். தினமும் காலை 8 மணிக்கு தனது வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு, கட்சியினரைச் சந்திப்பது சீனிவாசனின் வழக்கம். அப்போது வருபவர்களையும், ஏற்கெனவே அறிமுகமான நபர்போல உரிமையோடு அழைத்து அமரச் செய்வார். அன்பாகப் பேசுவார்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

இதையெல்லாம் தவறாகப் புரிந்துகொண்ட கட்சியினர், இப்படி ஒரு வதந்தியை ஊருக்குள் கிளப்பிவிட்டுள்ளனர். அது சரி, அபார ஞாபகசக்தி இருந்தால், மேடையில் மாற்றிப் பேசி ஏன் வம்பில் சிக்கப்போகிறார் அவர்?!

வாயால் வரும் வம்பு!

தன் வாயால் வம்பில் சிக்குவதும் அவருக்குப் புதிதில்லை. கடந்த 1996-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க-வில் சீனிவாசனும், தி.மு.க-வில் ஐ.பெரியசாமியும் முக்கிய நபர்களாக இருந்தனர். அப்போது சீனிவாசன் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி. ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, “இந்த முறை தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றால், நான் அ.தி.மு.க கரை வேட்டி கட்டமாட்டேன்” என்று பேசினார் சீனிவாசன். அந்தத் தேர்தலில், தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றது. “கரை வேட்டியை எப்போது கழற்றுவீர்கள்?’’ என ஐ.பெரியசாமி கேட்க, மாவட்ட அரசியலில் சிரிப்பலை எழுந்தது.

ராஜ் மோகன்
ராஜ் மோகன்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு போனபோது, 14 வயது பழங்குடியினச் சிறுவனை அழைத்து தன்னுடைய காலணிகளைக் கழற்றவைத்து பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். விஷயம் போலீஸ் புகார் வரை போகவே, ‘`என் பேரன் மாதிரி நினைச்சு செய்யச் சொன்னேன்’’ எனச் சிறுவனிடம் வருத்தம் தெரிவித்தார். அதற்குமுன்பே சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாம் ஒன்றில், அதிகாரி ஒருவரை அழைத்துத் தன் காலணியை திண்டுக்கல் சீனிவாசன் கழற்றச் சொன்னதும் வீடியோப் பதிவாகச் சுற்றி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தாறுமாறாகப் பேசி வம்பில் மாட்டிக்கொள்ளும் 72 வயது சீனிவாசன், அடிப்படையில் எளிமையான மனிதர். திண்டுக்கல் மாவட்டம் குட்டியபட்டிதான் அவரது பூர்வீகம். மேட்டுப்பட்டியில் சிலகாலம் வாடகை வீட்டில் வசித்தார். அங்கே கறிக்கடை நடத்திவந்தார். அதை அடிக்கடி மேடைகளில் நினைவுபடுத்திப் பேசுவார்.

திண்டுக்கல்லும் நத்தமும்!

மாயத்தேவரும் சீனிவாசனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கட்சி மேலிடத்தில் செல்வாக்குடன் இருந்த மாயத்தேவர், சீனிவாசனின் அரசியல் பயணத்தில் முக்கிய நபராக இருந்தார். திண்டுக்கல் ஒன்றியச் சேர்மனாக சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

பாலு
பாலு

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர் கட்சி பிளவுபட்டபோது, ஜெயலலிதா பக்கம் நின்ற கட்சி நிர்வாகிகளில் சீனிவாசனும் ஒருவர். அவரது விசுவாசத்தைப் பார்த்த ஜெயலலிதா, 1989 நாடாளுமன்றத் தொகுதியில் திண்டுக்கல் தொகுதியில் சீனிவாசனைக் களம் இறக்கினார். அத்தேர்தலில் வெற்றிபெற்று முதல்முறையாக எம்.பி ஆனார் சீனிவாசன். அதனைத் தொடர்ந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரானார். கடந்த 1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய பா.ஜ.க அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்கும் நிலை இருந்தது. மத்திய அரசு கவிழ்ந்ததால், அந்த வாய்ப்பைத் தவற விட்டார் சீனிவாசன்.

தொடர்ந்து டெல்லி ஃப்ளைட்டே ஏறிக்கொண்டிருந்ததால், தமிழக அரசியலில் அவருக்கு இடமே கிடைக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் பலர் அவரைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தார்கள். சீனிவாசனின் ஆஸ்தான சிஷ்யராக இருந்தவர் நத்தம் விசுவநாதன். ஒரு கட்டத்தில் குருவைக் கீழே தள்ளிவிட்டு கட்சியில் வேகமாக வளர ஆரம்பித்தவர், ஜெயலலிதா அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக வலம் வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கட்சியில் ஓரம்கட்டப்பட்டார் சீனிவாசன். விசுவநாதன் ஏற்பாட்டில் நடக்கும் கட்சிப் பொதுக்கூட்டங்களில், சீனிவாசனுக்கு நாற்காலி கூட போடாத சம்பவங்களும் திண்டுக்கல்லில் நடந்தது. ஃப்ளெக்ஸில் பெயர் போட்டு, அதன்மீது வெள்ளைப் பேப்பர் ஒட்டி மறைத்த சம்பவங்களும் நடந்ததுண்டு. ‘`கட்சிக்காக உழைக்கிறேன். கட்சி என்னைக் கைவிடாது’’ எனக் கடைசி வரை கூறிவந்த சீனிவாசனுக்கு, அவர் நினைத்தது போலவே ஒரு வாய்ப்பும் கிடைத்தது. ஐவர் அணிமீதான அதிருப்தி காரணமாக, நத்தம் தொகுதியிலிருந்து மாற்றி ஆத்தூர்த் தொகுதியில் விசுவநாதனை நிறுத்தினார் ஜெயலலிதா. விசுவநாதன் தோற்றுப்போக, திண்டுக்கல் தொகுதியில் சீனிவாசன் வெற்றிபெற்றார். அமைச்சர் பதவியும் கட்சிப் பதவியும் அடுத்தடுத்து சீனிவாசனுக்குக் கொடுத்தார் ஜெயலலிதா.

குடும்பமும் சீனிவாசனும்!

திண்டுக்கல் சீனிவாசனுக்கு இரண்டு மனைவிகள். கண்ணாத்தாள் என்ற முதல் மனைவிக்கு ராஜ்மோகன், பாலு, வெங்கடேசன் என்ற மகன்களும் லெட்சுமி, தனம் என்ற மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவி நாகேஷ்வரிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திண்டுக்கல் நகரில் உள்ள ஆர்.எம்.காலனியில் உள்ள வீட்டில் வசித்துவருகிறார் சீனிவாசன். சமீபத்தில் கண்ணாத்தாள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். மகன் ராஜ்மோகன், திண்டுக்கல் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக இருந்தபடி கட்சி வேலைகளையும் கவனித்துவருகிறார். இளைய மகன் வெங்கடேசன், அமைச்சர் சார்பில் மாவட்டத்தைத் தன் கண்காணிப்பில் வைத்திருக் கிறார். வனத்துறை முதல் வருவாய்த்துறை வரை மாவட்ட அளவில் நடக்கும் அரசு காண்ட்ராக்ட் வேலைகள், குவாரிகள் என சகலத்தையும் ‘கவனித்து’க்கொள்வது இவர்தான்.

டாஸ்மாக் பார் டெண்டர் தொடங்கி, முறைகேடாக பார் நடத்துவது வரை பல விஷயங்களிலும் அமைச்சர் பெயரைச் சொல்லி குடும்பம் தலையிடுவதாக கட்சிக்காரர்களே பேசுகிறார்கள்.

மந்திரி தந்திரி:  திண்டுக்கல் சீனிவாசன்

ராஜ்மோகனுக்கு அரசியலில் தனது தந்தையின் வாரிசாக வர வேண்டும் என்று ஆசை. ஆனால், சீனிவாசனின் தம்பி மகனான ராஜசேகர், தீவிரமாக கட்சி வேலைகளைப் பார்த்து, ‘சீனிவாசனுக்குப் பின்னர் ராஜசேகர்தான்’ என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளார். அதுமட்டு மல்லாமல், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட விருப்பமும் தெரிவித்துவருகிறார் ராஜசேகர். இதனால், குடும்பத்திற்குள் சிறு பிரச்னையும் ஏற்படவே, மகன்களை சமாதானப் படுத்தி வைத்திருக்கிறார் சீனிவாசன்.

மந்திரியின் இரண்டாவது மனைவி நாகேஷ்வரிக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பிரபு, இளையவர் சதீஷ். சென்னையில் உள்ள வீட்டில் வசித்துவரும் இவர்கள், திண்டுக்கல் வருவதில்லை. அதேபோல, திண்டுக்கலில் உள்ள முதல் மனைவி பிள்ளைகள் சென்னை செல்வதில்லை. சென்னையில் உள்ள இரண்டு மகன்களும், அமைச்சரின் வனத்துறை சார்ந்த மாநில அளவிலான விஷயங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள்.

திண்டுக்கல்லும் சீனிவாசனும்!

தன் பெயரிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்கு, சீனிவாசன் ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்து என்ன செய்தார்? மாநகராட்சி ஆகிவிட்ட திண்டுக்கல்லில் பாதாள சாக்கடைத் திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் ஏராளமான பிரச்னைகள். மாநகராட்சி குப்பைக் கிடங்கு, நகருக்குள்ளேயே அமைந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலைச் சந்திக்கின்றனர். நகருக்கு வெளியே புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ள அணைகள் எதுவும் தூர்வாரப்படவில்லை. ஒட்டன்சத்திரம் சந்தைத் திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. நத்தம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரியே வருகிறது. ஆனால், ஒரு பாலிடெக்னிக்கூட அங்கு இல்லை. இப்படி ஏராளமான விஷயங்களைப் பட்டியல் போடுகிறார்கள் மக்கள். இந்த விஷயங்கள் குறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்டபோது, கருத்து கூற மறுத்தார்.

கட்சியில் மூத்தவர், கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் இடம் பிடித்திருக்கும் தலைவர், முதல்வர் எடப்பாடியின் ஆதரவாளர் என்று இருந்தாலும், ‘இந்தத் தேர்தலில் திரும்பவும் அவருக்கு சீட் கிடைப்பது சந்தேகம்’ என்று கட்சியில் பேச்சு இருக்கிறது. இதுகுறித்து கேட்டபோது மட்டும், ‘`நான் எதற்கும் ஆசைப்பட மாட்டேன். இதய அறுவை சிகிச்சை செய்தும் கட்சிக்காக ஓடிக்கொண்டி ருக்கிறேன். எனக்குக் கட்சி முக்கியம். சாகும் வரை கட்சிக்காக உழைப்பேன். யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனம் வைத்தாலும் எனக்குக் கவலை இல்லை’’ என்றார் சீனிவாசன்.

திகுதிகு திண்டுக்கல் டயலாக்ஸ்!

தமிழக அரசு வழங்கிவரும் பொங்கல் பரிசுத் தொகை ரூ. 2,500 டாஸ்மாக் மூலம் அரசு கஜானாவுக்கே திரும்ப வந்துவிடும்.

பெண்களே! ஆட்சியைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் தண்ணீர்க் குடத்தால் முகத்தில் குத்து விடுங்கள்.

மாணவர்களே! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்குப் பாட்டி முறை. எம்.ஜி.ஆர் உங்களுக்குத் தாத்தா முறை.

மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய். சசிகலா குடும்பம் சொல்லச் சொன்னதையே நாங்கள் சொன்னோம்.

அமெரிக்காவிலிருந்து ட்ரம்ப்பே வந்தாலும் எங்கள் ஆட்சியைக் கலைக்க முடியாது.

காய்கறி, கீரைகளில்தான் சத்து அதிகம். சிக்கன், மட்டன் எல்லாம் வேஸ்ட்.

மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்குகளைப் பத்திரமாக மேடான பகுதியில் கொண்டுபோய் வைத்துவிட்டோம்.

எம்.ஜி.ஆரைத் தமிழகத்தைத் தவிர்த்து யாருக்குத் தெரியும்? அதனால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வெளிமாநிலத் தலைவர்களை அழைக்கும் திட்டம் இல்லை.

அயல்நாடுகளில் நடுக்கடலில் பாலம் கட்டும்போது நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா? அதற்கான டெக்னாலஜியைக் கண்டுபிடியுங்கள்.