
ஆரம்பக்காலங்களில் சைக்கிளில் ஊர் ஊரா போயி பருத்தி வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருந்தாரு.
“நான் அமைச்சராவேன்னு கனவுல கூட நினைச்சுப் பார்த்தது கிடையாது. ஆண்டவன் இந்தப் பதவியை எதுக்காக நமக்குக் கொடுத்துருக்கான்? நாலு பேருக்கு முடிஞ்ச அளவுக்கு உதவி செய்யணும்னுதான். இல்லைன்னா அந்தப் பாவம் நம்மளைத்தான் சேரும்...’’ கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கசிந்துருகிப் பேசிய வார்த்தைகள் இவை. இப்படிப் பேசும் கருப்பணன் நிச்சயமாக அவர் துறைசார்ந்து நாலு நல்ல திட்டங்களையாவது கொண்டு வந்திருப்பார் என நினைத்தால், நொய்யலாற்றில் மிதந்து வரும் சோப்பு நுரையே எகிறி வந்து நம்மை அடிக்கும். அந்த அளவிற்குச் சீர்கெட்டுக் கிடக்கிறது தமிழகத்தின் சுற்றுச்சூழல்.
சோப்பு நுரை முதல் குத்தாட்டம் வரை!
மூத்த விஞ்ஞானி செல்லூர் ராஜூவைத் தமிழகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய வேளையில்தான், சத்தமில்லாமல் அடுத்த விஞ்ஞானியாக அவதாரம் எடுத்தார் கருப்பணன். 2017 செப்டம்பரில், சாயக் கழிவுகளால் நொய்யலாறு நுரைத்துப் பொங்கியது. அப்போது அமைச்சர் கருப்பணன், ‘‘மக்கள் சோப்பு போட்டுக் குளித்ததால்தான் நுரை வந்திருக்கிறது. மற்றபடி அதில் வேறெந்தக் குறையும் இல்லை’’ என ரைமிங்காக விஞ்ஞான விளக்கம் கொடுத்தார். அப்போதுதான் கருப்பணன் என்று ஓர் அமைச்சர் இருக்கிறார் என்பதே தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிய வந்தது. அதன்பிறகு அமைச்சரின் பேட்டிகளும் பேச்சுகளும் எப்போதுமே ‘வைரல் ஹிட்’தான்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயம். திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து பவானி பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம். அப்போது அரசின் திட்டங்களையெல்லாம் பட்டியலிட்ட கருப்பணன், ‘‘நாங்க மட்டும் அம்மா காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கலைன்னா, இந்தக் கூட்டத்துல இருக்கும் பாதிப் பேர் செத்துப்போயிருப்பாங்க’’ என்று சொல்ல, கூட்டத்தில் இருந்தவர்கள் வெலவெலத்துப் போயினர். ஒருமுறை ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கச் சென்றவர், ‘‘ஒரு வருஷம் கழிச்சு வந்து பார்ப்பேன். மரத்தை சரியா வளர்க்கலைன்னா பெயில் போட்டுடுவேன்’’ எனச் சொல்ல, குழந்தைகள் மிரண்டுபோயினர்.
‘நீர் நிலைகளில் சாயக் கழிவுகளைக் கலந்தால் மிசா சட்டத்தில் கைது செய்வோம்’ என நடைமுறையில் இல்லாத சட்டத்தைச் சொல்லி காமெடி செய்வார். ‘ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தா போதும்... அடுத்த ரெண்டே நிமிஷத்துல நம்ம முதலமைச்சரைச் சந்திச்சிப் பேசலாம். இந்தியாவிலே இப்படி வேற எந்த முதலமைச்சரையும் நீங்க சந்திக்க முடியாது. சந்தேகம் இருந்தா நீங்க ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்துப் பாருங்க. இதுவரைக்கும் அப்படி ஒரு கோடிப் பேர் அவரைச் சந்திச்சிருக்காங்க’ எனக் கிச்சுகிச்சு மூட்டுவார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பலரும் சீரியஸாகப் பிரசாரம் செய்ய, கருப்பணனோ பிரசாரத்தோடு இலவச இணைப்பாகக் குத்தாட்டத்தைப் போட்டு அதகளம் செய்தார். இப்படி குபீர் சிரிப்பை வரவழைக்கும் அமைச்சரின் பேச்சு, சில சமயங்களில் சர்ச்சைகளையும் உண்டாக்கியிருக்கிறது.

ஈரோட்டில் நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க பணிமனைத் திறப்பு விழாவில் பேசிய கருப்பணன், ‘‘கொடநாடு எஸ்டேட்ல வேலை செஞ்ச ஆட்களைக் கொலை பண்ணிட்டு, ஜெயலலிதா ரூம் சாவியை எடப்பாடி எடுத்துட்டு வந்துட்டாருன்னு ஸ்டாலின் பேசுறாரு. மூளையில்லாம பேசுறியே ஸ்டாலினு! எடப்பாடி எதுக்காக கொடநாடு போய் கொலை பண்ணிட்டு சாவியை எடுத்துட்டு வரணும்? நாங்க கேட்டா சென்னைக்கே சாவியை எடுத்துட்டு வந்து கொடுக்கப்போறாங்க. என்ன வேணுமோ அதை எடப்பாடி போய் எடுத்துக்கப் போறாரு. அப்படியிருக்க எடப்பாடி கொலை செஞ்சாருன்னு சொன்னா என்ன அர்த்தம்?’’ என்று பேச, மேடையிலிருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணியே அதிர்ந்து போயினர்.
ஒயின்ஷாப் முதல் அரசியல் வரை!
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகிலுள்ள காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பணன். சாதாரண விவசாயக் குடும்பம். 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். பெரிதாக வசதியில்லாத, அரசியல் பின்புலமில்லாத குடும்பத்திலிருந்து கருப்பணன் எப்படி அமைச்சரானார்? கருப்பணனின் சொந்தத் தொகுதியான பவானியில் விசாரித்தால் பல தகவல்களைக் கொட்டுகின்றனர்.

‘‘ஆரம்பக்காலங்களில் சைக்கிளில் ஊர் ஊரா போயி பருத்தி வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருந்தாரு. எப்படியோ அவினாசியைச் சேர்ந்த சாராய சக்கரவர்த்தி ஈஸ்வரமூர்த்தியுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு இவர் பிசினஸும் மாறிவிட்டது. கர்நாடகாவிலிருந்து சரக்கை இறக்குமதி செய்து லோக்கலில் படுஜோராக சப்ளை செய்துவந்தார். அப்படி ஒருமுறை சாராய வழக்கில் மாட்டி, அப்போதைய கோபி ஏ.எஸ்.பியாக இருந்த சைலேந்திரபாபு கருப்பணனை கவுந்தப்பாடியில் வளைத்துப் பிடித்தார். கருப்பணன்மீது வழக்கு பதியப்பட்டதாகவும், பிற்காலத்தில் அரசியல் செல்வாக்கு வந்தவுடன் அந்த வழக்கைத் தடம் தெரியாமல் அழித்ததாகவும் தகவல் உண்டு. (கருப்பணன் அரசியலில் வளர்ந்து கல்லூரி கட்டியபிறகு, அந்தக் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சைலேந்திரபாபுவே வந்தது தனிக்கதை). ஒரு கட்டத்தில் கவுந்தப்பாடி, ஒத்தக்குதிரைப் பகுதியில் ஒயின்ஷாப் நடத்தி வந்தார்.
அந்த பிசினஸ் தொடர்புகள் மூலமே அரசியலுக்கும் அடி போட்டார். 1972-ல் காட்டுவலசு அ.தி.மு.க கிளைச் செயலாளராக அரசியலில் அடியெடுத்து வைத்தவர், 1999-ல் பவானி ஒன்றியச் செயலாளராக ஆனார். கர்நாடகத் தொடர்புகள் மூலம் கார்டனில் ரூட் பிடித்து, 2001-ல் பவானித் தொகுதியில் எம்.எல்.ஏ சீட் வாங்கி வெற்றியும் பெற்றார். அடுத்த தேர்தலில் தோற்றுப்போனார். 2011 தேர்தலிலும் பவானித் தொகுதியில் கருப்பணனுக்கு ஜெயலலிதா சீட் கொடுத்தார். உடனே லோக்கல் நிர்வாகிகள் 10 பஸ்களில் போயஸ் கார்டனுக்குச் சென்று குமுறித் தள்ள, கருப்பணனுக்குக் கொடுத்த சீட்டைப் பிடுங்கி பி.ஜி.நாராயணன் என்பவருக்குக் கொடுத்தார் ஜெயலலிதா. கருப்பணனுக்கு ஆறுதல் பரிசாக பவானி நகராட்சித் தலைவர் பதவி கிடைத்தது. மறுபடியும் 2016 தேர்தலில் சசிகலா குடும்பம் மூலமாக பவானி சீட் வாங்கி, அமைச்சரும் ஆனார். மகன் யுவராஜிற்கு பெண் எடுத்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உறவினரும் ஆனார். இப்படித்தான் இன்றைக்கு கருப்பணன் வளர்ந்து நிற்கிறார்’’ என்கின்றனர் தொகுதிவாசிகள்.

கரிசனவாதி கருப்பணன்!
எம்.எல்.ஏ ஆனபிறகு கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் பிசினஸ், பெட்ரோல் பங்க் என கருப்பணன் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார். ஆனாலும் அவர் எளிமையானவராகவே இருக்கிறார். லோக்கல் ஹோட்டலில் மக்களோடு மக்களாக சாப்பிடுவார். பெரிதாகக் கோபப்பட மாட்டார். அடாவடி, அட்ராசிட்டி எதையும் செய்யாதவர். இரவு 11 மணியானாலும் தொகுதி மக்கள் எளிதாக வீட்டில் அவரைச் சந்திக்கலாம்.
தனக்கு எதிரானவர்களைக் கூட கரன்சியால் அடித்து நண்பராக்கிக்கொள்வார். எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களுடன்கூட அவருக்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. சொந்தக் கட்சியிலும் அரசியல் எதிரிகள் என யாரும் இல்லை, பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்தைத் தவிர!
கருப்பணனுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தின் ஒரே அமைச்சராக ஆதிக்கம் செலுத்தி வந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016 தேர்தலுக்குப் பின்னர் அவரின் அமைச்சர் பதவி மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி என அனைத்தும் பிடுங்கிக் கருப்பணனுக்கு கொடுக்கப்பட்டது. இதில்தான் இருவருக்கும் பஞ்சாயத்து ஆரம்பமானது. கருப்பணனைத் திட்டி தோப்பு காட்டமாக அவ்வப்போது பேட்டி கொடுப்பார். ‘மாவட்டச் செயலாளராக இருந்தாலும் என் தொகுதிக்குள்ள வரக்கூடாது’ என கருப்பணனை கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னுடைய தொகுதிக்குள் நுழைய விடாமல் வைத்திருக்கிறார் தோப்பு வெங்கடாசலம். கருப்பணன் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
துறையும் தொகுதியும்!
ஸ்டெர்லைட் பிரச்னை, ஹைட்ரோகார்பன் திட்டம், நியூட்ரினோ ஆய்வு மையம், கொங்கு மண்டலத்தில் சாயக்கழிவு பிரச்னைகள் என கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் திரும்பும் இடங்களிலெல்லாம் சுற்றுச்சூழல் பிரச்னைகள்தான். அமைச்சரின் பவானித் தொகுதி மற்றும் சொந்த மாவட்டமான ஈரோட்டில்கூட சுற்றுச்சூழல் பிரச்னைகள் எதுவும் சரிசெய்யப்படவில்லை.
‘`மோடி அரசாங்கத்தோட சேர்ந்துக்கிட்டு சுற்றுச்சூழலுக்கு எதிரான அத்தனை விஷயங்களையும் இந்த அரசாங்கத்துல செஞ்சிருக்காங்க. எந்தத் திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதில்லை. மக்களிடமும் கருத்து கேட்கப்படுவதில்லை. சீனாவில் போடப்பட்ட ஒரு சாலையின் சுற்றுச்சூழல் அறிக்கையை, சேலம் எட்டுவழிச் சாலைக்கு காப்பியெடுத்திருந்தாங்க. அப்படிப்பட்ட அறிவாளிங்க இவங்க. பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்பட்ட தடையைக்கூட ஒழுங்கா நடைமுறைப்படுத்தலை. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மாநில பல்லுயிர்க் குழுவையே உருவாக்காமல் இருக்கிறார்கள்” என்றார், தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி.
தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பு (எ) முத்துச்சாமி, “பெருந்துறை சிப்காட் பிரச்னை, ஈரோடு தோல், சாய மற்றும் சலவை ஆலைகள் ஏற்படுத்தும் மாசுபாடு, காவிரி நீர் மாசுபாடு என எதற்கும் அமைச்சர் கருப்பணன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் ஓடும் காவிரி, பவானி, நொய்யலாறு என அனைத்து நீர் ஆதாரங்களும் மாசுபட்டிருக்கின்றன. ஈரோட்டை ஒட்டியே காவிரி ஆறு ஓடியும், இங்கு நீர் மாசுபட்டிருக்கிறதென ஈரோட்டிலிருந்து 35 கி.மீ மேலே காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுக்கின்றனர். காவிரி நீர் மாசுபட்டுக் கிடக்கிறது என்பதற்கு அரசே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது போன்றது இது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலை அதிபர்களின் பாக்கெட்டுகளில்தான் அதிகாரிகளும் அமைச்சர்களும் இருக்கின்றனர்’’ என்கிறார்.
தி.மு.க வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சேகர், “பவானித் தொகுதியில் சாயக்கழிவுப் பிரச்னை கடுமையாக இருக்கிறது. இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற கருப்பணன் சுற்றுச்சூழல் துறை அமைச்சரானதும் ஏதாவது சரி செஞ்சிடுவாருன்னு மக்கள் நம்புனாங்க. துரதிர்ஷ்டவசமா அவர் அந்தப் பிரச்னையைக் கண்டுக்கவே இல்லை. சாயப் பிரச்னைக்குத் தீர்வான பொதுச் சுத்திகரிப்பு நிலையத்தை இன்றுவரை அமைக்கவே இல்லை. பவானி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே குப்பைக்கிடங்கு இருக்கு. அதை எரிக்கிறப்ப அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறி, சுவாசிக்கவே பிரச்னையை ஏற்படுத்துகிறது. பவானியின் பிரசித்திபெற்ற ஜமக்காளத் தொழில் அழிஞ்சுபோச்சு. அதன் வளர்ச்சிக்கு அமைச்சர் எதுவும் செய்யலை. கொரோனா சமயத்துலயும் மக்களுக்காக எதுவும் செய்யலை. தாளவாடியில் அவர் தோட்டத்துல விளைஞ்ச அழுகிப்போன முட்டைக்கோஸைக் கொடுத்து மக்கள்கிட்ட கெட்டபேர்தான் வாங்கினாரு. 24 மணி நேரமும் சரக்கு, லாட்டரிச் சீட்டு எனத் தொகுதியே சீர்கெட்டுக் கிடக்கிறது” என்றார்.

அமைச்சர் கருப்பணனிடம் பேசினோம். “கூட்டுக் குடிநீர்த் திட்டம், தடுப்பணைகள், நீர்நிலைப் பராமரிப்பு, சாலை வசதி என என் தொகுதிக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செஞ்சிருக்கேன். எங்களோட துறை மூலமாக தமிழகத்தில் நிறைய மரங்கள் நட்டிருக்கிறோம். ஸ்டெர்லைட் எல்லாம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டம். அதை நாங்க நிறுத்தியிருக்கோம். மக்களை பாதிக்கும் திட்டங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆக்கியிருக்கோம். தமிழ்நாட்டுல இவ்ளோ இலவசம் கொடுக்குறோம்னா, அதுக்கான வருவாய் வேணும்ல. புதிதாகத் திட்டங்களைக் கொண்டுவரக் கூடாதுன்னு சொல்வது சரியானதல்ல. ஈரோடு, திருப்பூர்ல ஆற்றில் சாயக்கழிவுகளைக் கலக்க நான் அமைச்சருக்குப் பணம் கொடுத்தேன்னு யாரையாவது சொல்லச் சொல்லுங்க, இப்பவே நான் பதவியை ராஜினாமா செஞ்சிடுறேன். ஈரோட்டுல சாயக்கழிவுப் பிரச்னைக்காக 800 கோடியில் 7 இடங்களில் பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பியிருக்கிறோம். அது வந்தவுடன் சாயப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்” என்றார்.