மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி: நிலோஃபர் கபில்

நிலோஃபர் கபில்
பிரீமியம் ஸ்டோரி
News
நிலோஃபர் கபில்

சிலருக்கு அதிக சிரமம் இல்லாமலே எல்லாம் அடுக்கடுக்காக எல்லாம் கிடைத்துவிடும். நிலோஃபருக்கும் அப்படித்தான்!

ருக்கிற இடம் தெரியாதபடி ஒரு குழந்தை இருந்தால், ‘சமத்து’ என்பார்கள். ஒரு மந்திரி அப்படி இருந்தால்? ‘இப்படியொரு மந்திரி இருக்கிறாரா?’ என்பதே தமிழகத்தில் பலருக்குத் தெரியாது. அப்படியிருந்தும், ஐந்து வருடங்களை அசால்ட்டாகக் கடந்துவிட்டார், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில். அவருக்கு வாக்களித்த தொகுதி மக்களில் பலரே, அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் தேடிக்கொண்டிருப்பது தனிக்கதை! ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும் தொகுதியாக உளவுத்துறையால் அடையாளம் காணப்பட்டிருப்பது, நிலோஃபர் கபிலின் வாணியம்பாடித் தொகுதி.

சமீபத்தில் தன் தொகுதியில் காரில் போனபோது, சாலையோரம் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு அமைச்சர் சால்வை போர்த்தி உணவு வழங்கியதாகச் செய்தி வெளியானது. மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் போல ஆதரவாளர்கள் அவரைக் கொண்டாட, ‘தேர்தலுக்கு ரெடியாகிவிட்டார் மந்திரி’ எனச் சொல்கிறார்கள் தொகுதி மக்கள்.

மந்திரி தந்திரி: நிலோஃபர் கபில்

சிலருக்கு அதிக சிரமம் இல்லாமலே எல்லாம் அடுக்கடுக்காக எல்லாம் கிடைத்துவிடும். நிலோஃபருக்கும் அப்படித்தான்! நிலோஃபரின் தந்தை, வாணியம்பாடியின் கைராசி மருத்துவர் அஜீம். தன் மகளையும் மருத்துவராக்க நினைத்தார். ஆனால், நிலோஃபர் எம்.பி.பி.எஸ் படிக்க இயலவில்லை. மாற்று மருத்துவம் படித்து டாக்டர் ஆகிவிட்டார். தந்தையின் மருத்துவமனையிலேயே சிகிச்சை பார்த்தார். மாற்று மருத்துவம் படித்த நிலோஃபர், அலோபதி சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. தந்தை புகழ்பெற்ற டாக்டர் என்பதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் கனிவு காட்டினர். நிலோஃபரின் கணவர் கபிலும் மருத்துவர்தான்.

தந்தையின் செல்வாக்கு, நிலோஃபருக்கு அரசியல் பாதையைப் போட்டுக் கொடுத்தது. அ.தி.மு.க-வில் இணைந்தார். இஸ்லாமியர்கள் நிறைந்த வாணியம்பாடியின் நகராட்சித் தலைவராக பத்து ஆண்டுகள் பதவியில் இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போனபோது நிலோஃபர் வாணியம்பாடி வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி, பழக்கடைகளைச் சூறையாடுவதுபோல ஒரு வீடியோ வைரல் ஆனது. அதை வைத்தே கார்டன் ரூட் பிடித்து 2016 சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கினார். ஜெயித்தும்விட்டார்.

நிலோஃபர் கபில்
நிலோஃபர் கபில்

அவர் மந்திரி ஆனதும் ஒரு விபத்து போன்றதுதான். அந்த அதிர்ச்சியிலிருந்தே நிலோஃபர் இன்னும் மீளவில்லை. 2016 தேர்தல் முடிந்து ஜெயலலிதா அமைச்சரவை பதவியேற்றது. அமைச்சரவைப் பட்டியலைப் பார்த்துவிட்டு, ‘முஸ்லிம்களுக்கும் சில சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் தரவில்லை’ என்று சர்ச்சை எழுந்தது. உடனடியாக இதைச் சரிசெய்ய நினைத்தார் ஜெயலலிதா. நிலோஃபரின் அதிர்ஷ்டம், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு ஜெயித்திருந்த ஒரே முஸ்லிம் எம்.எல்.ஏ-வாக இருந்தது. அமைச்சரவை பதவியேற்ற அடுத்த சில மணி நேரத்தில், ‘இன்னும் நான்கு பேர் அமைச்சர்கள் ஆகிறார்கள்’ என ஓர் அறிவிப்பு வெளியானது. அதில் நிலோஃபர் பெயர் இருந்தது.

ம.விமலன்
ம.விமலன்

அந்த நேரத்தில் சென்னையிலிருந்து அமைதியாகக் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் நிலோஃபர். வேலூரைக் கடந்து பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகில் சென்றபோது, தலைமையிலிருந்து செல்பேசிக்கு அழைப்பு வந்தது. உடனடியாக சென்னைக்குத் திரும்புமாறு கூறினர். நிலோஃபருக்குத் தலைகால் புரியவில்லை. சென்னை சென்ற அவர் மாண்புமிகு மந்திரியாக ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மகுடம் சூட்டப்பட்டார். தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. எஸ்கார்டு வாகனம் பின்தொடர, சைரன் வைத்த காரில் வாணியம்பாடிக்குப் பறந்தார் நிலோஃபர். அமைச்சரான அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன.

ஒரு உறையில் இரண்டு கத்திகள்கூட இருக்கலாம். ஒரே மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தால் பிரச்னை. பக்கத்துத் தொகுதியான ஜோலார்பேட்டை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் கோட்டை. அவர் சீனியர், மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். திடீரென நிலோஃபர் மந்திரி ஆனதை எதிர்பார்க்காத அவர், பல முனைகளில் குடைச்சல் கொடுத்துவந்தார். இதனால் தனது வாணியம்பாடித் தொகுதிக்கு ள்ளேயே வீரமணியை நுழைய விடாமல் தடுத்தார் நிலோஃபர். இடையில் நிலோஃபர் இல்லாமலே வாணியம்பாடியில் வந்து கட்சிக்கூட்டத்தை வீரமணி நடத்திவிட்டுப் போனதெல்லாம் வரலாறு! இந்த அதிகார மோதலால் வாணியம்பாடி அ.தி.மு.க-வில் நிலோஃபர் பக்கம் பெரிதாக யாருமில்லை.

மந்திரி தந்திரி: நிலோஃபர் கபில்
பயன்படுத்தப்படாத புதிய பேருந்து நிலையம்
பயன்படுத்தப்படாத புதிய பேருந்து நிலையம்

தந்தை அஜீம் காலமான பின்னர் மகன் மற்றும் மருமகனைப் பக்கபலமாக வைத்துக் கொண்டார் நிலோஃபர். மகன் டாக்டர் சையத் இக்ரிஸ் கபில், அ.தி.மு.க-வில் மாவட்ட மருத்துவ அணி துணைச்செயலாளராக இருக்கிறார். மருமகன் முகமது காசிப், நகர வீட்டுவசதி வங்கியின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

நிலோஃபருக்கு சரளமாகத் தமிழ் பேச வராது. சட்டமன்றத்தில்கூட சரமாரி ஆங்கிலத்தில் பேசுவார். அதனால் கட்சிக் கூட்டமோ, பிரசாரமோ, சுருக்கமாக முடித்துக்கொள்வார். கோபம் வந்தால், ‘துக்கடா பசங்க’ என்று ஆரம்பித்துக் கண்டிப்பு காட்டுவார்.

பத்து ஆண்டுகள் நகராட்சித் தலைவர், ஐந்து ஆண்டுகள் அமைச்சர்... வாணியம்பாடிக்கு அவர் என்ன செய்தார்?

வாணியம்பாடி நகர்மன்ற முன்னாள் கவுன்சிலரும், தி.மு.க நெசவாளர் அணியின் மாவட்ட அமைப்பாளருமான ம.விமலன், ‘‘வேலூரிலிருந்து பிரித்து புதிதாக திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப் பட்டது. இதனால் வாணியம் பாடி அரசு மருத்துவ மனையைத் தரம் உயர்த்த முடியும். ஆனால், அதற்குத் தடையாக இருப்பதே நிலோஃபர்தான். தன் தந்தை தொடங்கிய சிறிய மருத்துவமனையை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக பிரமாண்டமாக மாற்றியுள்ளார் நிலோஃபர். அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டால் தனது மருத்துவமனைக்கு முக்கியத்துவம் போய்விடும் என்று தடுக்கிறார்.

மருத்துவமனையாக மாறிய சமுதாயக் கூடம்
மருத்துவமனையாக மாறிய சமுதாயக் கூடம்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யோரம் அமைக்கப்பட்ட வாணியம்பாடி புதிய பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தாமலேயே பத்து வருடங்களைக் கடத்திவிட்டார். இதைக் கட்டியதில் நகராட்சிக்கு மூன்று கோடியே முப்பது லட்ச ரூபாய் பணம் விரயமானது. இந்தத் தொகைக்கு நகராட்சி நிர்வாகம் இன்றுவரை வட்டி கட்டிவருகிறது. இந்த விவகாரத்தை தனக்கான கௌரவப் பிரச்னையாகக் கருதுகிறார் நிலோஃபர்.

நியூடவுன் ரயில்வே கேட் அருகில் ஏழை, எளிய மக்கள் சுப காரியங்கள் நடத்துவதற்காக அரசாங்கப் பணத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. அதை அமைச்சர் குடும்பம் ஆக்கிரமித்து மருத்துவமனை நடத்திவருகிறது. நகராட்சியில் கேட்டால், சமுதாயக் கூடத்தை நிலோஃபர் குடும்பத்தினர் லீஸுக்கு எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அமைச்சரே அதிகார மீறலில் ஈடுபடலாமா?

நியூடவுன் ரயில்வே கேட்
நியூடவுன் ரயில்வே கேட்

நகருக்குள் இருக்கிற நீதிமன்றங்கள் மூன்றையும் லாலா ஏரிப்பகுதியில் இடமாற்றம் செய்ய முயற்சி செய்கிறார் அமைச்சர். அந்தப் பகுதியில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர் சிலர். அந்த இடங்களின் மதிப்பைக் கூட்டி புரொமோட் செய்வதற்காக இந்த முயற்சி நடக்கிறது. வாணியம்பாடி நகர மக்களின் நீண்டகாலக் கோரிக்கை... நியூடவுன் ரயில்வே கேட் இடத்தில் பாலம் கட்டுவது. அதையும் அரசியல் காழ்ப்புணர்வால் நிறுத்தி வைத்துள்ளார். தொகுதிக்குள் அரசுக் கலைக்கல்லூரி, இன்ஜினீயரிங், பாலிடெக்னிக் கல்லூரி என்று எதுவுமே இல்லை. கொண்டுவரவும் முயற்சி செய்யவில்லை. இங்கிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என்று நினைக்கிறாரோ என்னவோ! ‘அமைச்சர் தொகுதியா இது’ என்று வாணியம்பாடி மக்கள் வேதனைப்படுகிறார்கள்’’ என்கிறார் கொதிப்புடன்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில பொதுச்செயலாளர் பாலாறு வெங்கடேசன், ‘‘எம்.எல்.ஏ அலுவலகத்தில் அவர் இருப்பதில்லை. மனுவுடன் வருபவர்களை வீட்டுப்பக்கமும் அனுமதிப்பதில்லை. தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி ஆயிரம் முறை கோரிக்கை வைத்துவிட்டோம். கண்டுகொள்ளவே இல்லை’’ என்றார் குமுறலாக!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு வேலூர் மக்களவைத் தொகுதிக்குத் தனியாக இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வெறும் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். தி.மு.க-வின் இந்த வெற்றிக்குக் கைகொடுத்தது நிலோஃபரின் வாணியம்பாடித் தொகுதிதான். இங்கு மட்டும் சுமார் 22,000 வாக்குகளை தி.மு.க அதிகமாக அள்ளியது. வாணியம்பாடி பிரியாணி தனக்கு சரிப்படாது என இதன்மூலம் உணர்ந்து, வரும் தேர்தலில் ஆம்பூர் பிரியாணியைத் தேடி நிலோஃபர் செல்லக்கூடும் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

அமைச்சர் நிலோஃபர் கபிலைச் சந்தித்துப் பேசினோம். “இஸ்லாமியப் பெண்மணி என்பதால், என் வளர்ச்சியைப் பிடிக்காமல் தி.மு.க-வினரும், அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் லீக் கட்சியினரும் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டனர். பல தடைகளைக் கடந்து துறைக்கும், தொகுதிக்கும் திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றினேன். தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கொண்டுவந்துள்ளேன். அரசுத் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுவருகிறது. லாலா ஏரிப்பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புப் பணி நடந்துவருகிறது. நீண்டகாலக் கோரிக்கையான நியூடவுன் பிரிட்ஜ் பணியும் விரைவில் தொடங்கும். காவிரி கூட்டுக்குடிநீர் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சேர்கிறது. துறையைப் பொறுத்தமட்டில், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழித்துள்ளேன்” என்றவர், முறைகேடு புகார்களுக்கும் கூலாக பதிலளித்தார்.

“புதிய பேருந்து நிலையம் திறக்கப்படாததற்கு நான் காரணமில்லை. 2006-ல் நகராட்சித் தலைவராக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த சிவாஜிகணேசன் என்பவர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை மதிப்புக்கூட்டி விற்பதற்காக, எந்த அனுமதியும் பெறாமல் பேருந்து நிலையம் கொண்டுவந்தார். அதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை பேருந்து நிலையம் செயல்படத் தடை விதித்தது. தேவையில்லாமல் என்மீது வீண்பழி சுமத்தவேண்டாம். இப்போது, புதிய பேருந்து நிலையத்தைக் கறி மார்க்கெட்டாக மாற்றலாமா என்று மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து வருகிறேன்.

நானே சொந்தமாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வைத்துள்ளேன். அப்படியிருக்க நகராட்சிக்குச் சொந்தமான சமுதாயக் கூடத்தை நான் ஏன் வாடகைக்கு எடுக்கப்போகிறேன்? மீண்டும் வாணியம்பாடித் தொகுதியிலேயே போட்டியிட விரும்புகிறேன். ஆம்பூர்த் தொகுதியைக் குறி வைத்துள்ளேன் என்பதெல்லாம் பொய். பிறந்தது இங்கே, இறப்பதும் இங்கேதான்! வாணியம்பாடி மக்களுக்காகத் தொடர்ந்து சேவையாற்றக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

வேலையும் வாய்ப்பும் இல்லை!

வே
லைவாய்ப்புத் துறைக்கும் இவரே அமைச்சராக இருக்கிறார். தலைமைச்செயலகத்தில் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு ஆள் எடுத்தபோது, பி.இ., எம்.பி.ஏ படித்தவர்கள் எல்லாம் அதற்கு விண்ணப்பம் செய்தார்கள். மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று, ‘வளர்ந்த மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம்’ என்கிறது. ‘இங்கிருக்கும் தனியார் நிறுவனங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும்’ என சட்டமன்றத்தில் கோரிக்கை எழுந்தபோது, ‘குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய நம் இளைஞர்கள் தயாராக இல்லை. அதனால்தான் வட மாநிலங்களிலிருந்து ஆள் எடுக்கிறார்கள்’ என அதிர்ச்சி பதில் கொடுத்தார் அமைச்சர்.

வாய்ஸ் கொடுத்த கபில்!

பா.
ஜ.க-வை எதிர்த்துப் பேசுவதற்கு முதல்வரே தயங்குகிறார். ஆனால், ‘`பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றோம்’’ என மேடையிலேயே பேசினார் நிலோஃபர் கபில். அதன்பின் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, ‘’இப்போது பா.ஜ.க எங்கள் கூட்டணியில் இல்லை’’ என்று பிரசாரம் செய்தார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய முஸ்லிம்களை சந்தித்தபோது, ‘`ஒரு முஸ்லிமாக எனக்கும்கூட இந்தச் சட்டம் குறித்து அச்சம் இருக்கிறது. முதல்வரிடம் முஸ்லிம்களின் அச்சம் குறித்துத் தெரிவித்தேன்’’ எனப் பேட்டி கொடுத்தார்.

வாரிய சர்ச்சை!

மிழக வக்ஃபு வாரியத்துக்கும் இவரே அமைச்சர். தாங்கள் நினைத்தவர்களை இதில் உறுப்பினர்களாகக் கொண்டுவர முடியவில்லை என்பதால், வக்ஃபு வாரியத்தை தமிழக அரசு கலைத்தது. ‘இப்படிக் கலைத்தது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே தமிழக அரசைக் குட்டியது. இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், மதுரையில் இருக்கும் வக்ஃபு வாரியக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் விளையாடியதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு போடப்பட்டது. ‘இதில் அமைச்சருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவு போட்டது.