சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

மந்திரி தந்திரி: வெ.சரோஜா

வெ.சரோஜா
பிரீமியம் ஸ்டோரி
News
வெ.சரோஜா

சரோஜா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார்.

“நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுக, ரூவா இருந்தா புடிங்கிக்கிடுவானுக, ஆனா படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது சிதம்பரம்!’’

சாதி வன்மத்தைப் பிரதிபலிக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தனுஷ் பேசும் வசனம்தான் இது. இப்படிச் சொல்லித்தான் மாண்புமிகு தமிழக சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜாவைப் படிக்க வைத்து ஆளாக்கியிருக்கிறார், அவரின் அண்ணன் மாரிமுத்து.

அமைச்சர் சரோஜாவின் பூர்வீகம், நாமக்கல் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள ஊஞ்சானூர் என்ற குக்கிராமம். அப்பா வெள்ளையன், அம்மா கந்தம்மாள். இவர்களுக்கு 5 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 9 வாரிசுகள். சரோஜா இவர்களில் 6வது மகள். ஆதிக்க சமூகத்தினர் நிறைந்த கிராமத்தில், சரோஜாவின் குடும்பத்தினர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். குரலற்றவர்களாகவும் வறுமையிலும் வாழ்ந்த நிலையில், கல்வியை மட்டுமே ஆயுதமாக ஏந்தி மொத்தக் குடும்ப உறுப்பினர்களும் அரசு உயர் பதவிகளில் ஜொலித்தார்கள். எம்.டி., டி.ஜி.ஓ முடித்து வளைகுடா நாட்டில் மகப்பேறு மருத்துவ நிபுணராக இருந்த சரோஜா, தமிழக அரசியலுக்குள் நுழைந்தது எப்படி? சாதித்தது என்ன?

வெ.சரோஜா
வெ.சரோஜா

வளர்ந்த கதை...

‘`சரோஜாவின் அப்பா இந்த கிராமத்துல தலையாரியாக இருந்தார். ரொம்ப வறுமையான குடும்பம். கோரப்பாய் நெஞ்சாதான் சாப்பாடு. அந்த வறுமையிலும் அவுங்க அண்ணன் மாரிமுத்து அனைவரையும் படிக்க வலியுறுத்துவார். சரோஜா சின்ன வயசுல பாவாடை சட்டை போட்டுட்டு, ரெட்ட ஜடை பின்னிட்டு ஒரு கையில் புத்தகப் பையும், மறு கையில பித்தளத் தூக்குல சாப்பாட்டையும் தூக்கிட்டு மூணு மைல் நடந்து போய் சங்ககிரி கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு வரும். படிப்புல கெட்டி. 8-ம் வகுப்பு வரை சங்ககிரியில் படிச்சாங்க. பிறகு சேலம் கோட்டை பெண்கள் ஸ்கூல்ல சேர்ந்து ஹாஸ்டலில் தங்கிப் படிச்சுது.

இந்தக் காலத்துலேயே சாதிப் பாகுபாடு இருக்கும்போது அந்தக் காலத்துல சொல்லவா வேண்டும்? அவுங்க 91-ல் சங்ககிரி எம்.எல்.ஏ ஆனதும், அதை ஜீரணிக்க முடியாத சிலர், சரோஜாவின் குடிசை வீட்டிற்குத் தீ வைத்துக் கொளுத்திய சம்பவமும் நடந்தேறியது. அதையடுத்து ஊர்ல அதைச்செய்த ஏராளமானவங்க கைது செய்யப்பட்டாங்க. தற்போது எங்க ஊரைச் சேர்ந்த அந்தம்மா அமைச்சரா இருப்பது மகிழ்ச்சியா இருக்கு. அவுங்க இந்த கிராமத்திற்கு நல்லதும் செய்யல, கெட்டதும் செய்யல. வருஷம் ஒரு முறை அவங்கம்மா இறந்த நாள்ல தெருக்கூத்து விடுவாங்க, அதைப் பார்ப்பதுதான் மிச்சம்’’ என்கிறார்கள் சரோஜாவின் சொந்த ஊர்க்காரர்கள்.

வெ.சரோஜா
வெ.சரோஜா

அரசியல் ஈடுபாடு

சரோஜா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். அதே கல்லூரியில் படித்த லோகரஞ்சனோடு காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இருவரும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் பிறகு தமிழக அரசு மருத்துவர்களாகவும் பணிபுரிந்தார்கள். அதன்பின்பு சவுதியில் சரோஜா மகப்பேறு மருத்துவ நிபுணராகவும், லோகரஞ்சன் மயக்க மருந்து நிபுணராகவும் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார்கள். அண்ணன் மாரிமுத்துவின் ஆலோசனைப்படி சரோஜா 1989-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆனார். 1990-ல் வளைகுடாவில் போர் மூண்டபோது இருவரும் தமிழகம் திரும்பினார்கள்.

சங்கர்
சங்கர்

1991 சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரித் தொகுதியில் சரோஜா சீட் கேட்டிருந்தார். ஜெயலலிதா அந்தத் தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பியதால் சரோஜாவிற்கு சீட் கிடைத்தது. முதன்முறையாகத் தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபைக்குள் நுழைந்தார். சரோஜா எம்.எல்.ஏ ஆனதை விரும்பாத சில சாதியவாதிகள், அவருடைய வீட்டிற்குத் தீ வைத்தார்கள். இந்தச் சம்பவம் ஜெயலலிதாவின் கவனத்திற்குச் சென்றதும், சங்ககிரி டவுனில் சரோஜாவுக்கு 6 சென்ட் நிலம் வழங்கினார். அதையடுத்து ஜெயலலிதாவுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் அளவுக்கு ஆனார் சரோஜா.

நல்வினை விஸ்வராஜ்
நல்வினை விஸ்வராஜ்

பிறகு 1998 மற்றும் 99 நாடாளுமன்றத் தேர்தல்களில் ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். இடையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல வாரியத் தலைவர், தமிழ்நாடு தகவல் ஆணையர் போன்ற பொறுப்புகளில் இருந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத்திட்டத் துறை அமைச்சர் ஆனார்.

அமைச்சராக சாதித்தது என்ன?

அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வையும் உறுதிசெய்யும் துறையாக சமூக நலத்துறை இருக்கிறது. மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, மாற்றுத் திறனாளிகள் நலன், சமூக சீர்திருத்தம், ஆதரவற்றோர் மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம் மற்றும் சத்துணவுத் திட்டம் ஆகியவை இவரது துறைகளின் கீழ் செயல்பட்டுவருகின்றன.

ராசிபுரம் பேருந்து நிலையம்
ராசிபுரம் பேருந்து நிலையம்

‘’சமூக நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வைப்பு நிதி, வளர் இளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின், திருமணமாகும் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், கருவுற்ற தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு மற்றும் உதவித் தொகை, பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, ஆதரவற்ற விதவை மற்றும் மறுமணம் செய்யும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உதவித் தொகை, பணிக்குச் செல்லும் பெண்களுக்கு 50 சதவிகித மானியத்தோடு கூடிய இரு சக்கர வாகனம், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உதவித் தொகை என இந்தியாவிற்கே முன்மாதிரியாகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அமைச்சரின் புது வீடு
அமைச்சரின் புது வீடு

ஆனால், சரியான தகுதி இருந்தாலும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே இந்த உதவிகளைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது. அதேபோல பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. அமைச்சரின் சொந்தத் தொகுதியான ராசிபுரம் அணப்பாளையத்தில் இரண்டு ஏழைச் சிறுமிகளுக்கு பலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், சமூக நலத்துறையின் அவலத்திற்கு உதாரணம். தமிழகத்திலேயே ராசிபுரத்தில்தான் குழந்தைகள் விற்பனை படுஜோராக நடக்கிறது.

சத்துணவுத்திட்டத் துறைக்குக் கொள்முதல் செய்யப்படும் ஊட்டச்சத்து மாவை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நேரடியாக உற்பத்தி செய்யலாம். பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கும் முட்டைகளை நேரடியாக பண்ணையாளர்களிடம் வாங்கலாம். ஆனால் கிறிஸ்டி என்ற தனியார் நிறுவனத்திடம் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதோடு, இதில் மெகா ஊழல்கள் நடந்தேறிவருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு சமையல் பாத்திரங்கள் வாங்குவதிலும், அங்கன்வாடி மையங்களுக்கு அடிப்படைப் பொருள்கள் வாங்குவதிலும் பல மோசடிகள் நடந்துள்ளன.

எப்போதும் பூட்டியே கிடக்கும் எம்.எல்.ஏ அலுவலகம்
எப்போதும் பூட்டியே கிடக்கும் எம்.எல்.ஏ அலுவலகம்

அரசின் முதுகெலும்புத் துறையாக வர்ணிக்கப்படும் சமூக நலத்துறையில் உள்ள சத்துணவுப் பணியாளர்கள் கால முறை ஊதியம் கேட்டுப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அமைச்சர், மாவட்ட அலுவலர்களின் டிரான்ஸ்பருக்கு 30 லட்ச ரூபாய் வாங்குவதாக தர்மபுரியில் பணிபுரிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜமீனாட்சி என்பவர் பகிரங்கமாகவே அறிவித்த கொடுமையும் நடந்தது. அந்த அளவுக்கு ஊழலும் லஞ்சமும் தலைவிரித்து ஆடுகிறது. இரவலர் காப்பு இல்லங்கள் பேருக்கு மட்டுமே செயல்படுவது, கொரோனா காலத்தில் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

தன் தொகுதிக்கென்று அமைச்சர் தனது துறை சார்ந்த திட்டங்களைக்கூடக் கொண்டுவரவில்லை. தற்போது தேர்தல் நெருங்குவதால் சிலருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கிவருகிறார். ஒரே மாவட்டத்தில் தங்கமணியும் சரோஜாவும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். தங்கமணி நாமக்கல் மாவட்டச் செயலாளராகவும், மின்சாரத்துறை அமைச்சராகவும் இருப்பதால், அவரை மீறி அமைச்சர் சரோஜா தன் தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாது. “அமைச்சர் கட்டப் பஞ்சாயத்தோ, ரவுடியிசமோ செய்வது கிடையாது. தொகுதி மக்கள் சண்டைக்குப் போனால்கூட சிரித்துக்கொண்டே செல்லும் குணமுடையவர்’’ என்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் நல்வினை விஸ்வராஜ்.

தொகுதிக்குச் செய்தது என்ன?

‘`சரோஜா கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துதான் வெற்றிபெற்றார். அதை எதிர்த்து தி.மு.க சார்பில் வழக்கு போட்டோம். துரதிர்ஷ்டவசமாக அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அமைச்சர் பதவியை வைத்துத் தன் குடும்பத்தை வளமாக்கிக்கொண்டாரே தவிர, தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தி.மு.க-வைச் சேர்ந்த காந்திசெல்வன் எம்.பி-யாக இருந்தபோது 100 படுக்கை வசதிகள் கொண்ட இயற்கை முறை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கொண்டு வந்தார். தமிழக அரசு நிலம் கொடுக்காததால் அமைக்க முடியவில்லை. அரசுத் திட்டங்களுக்குத்தான் நிலம் பெறுவதில் பிரச்னை இருக்கிறது. ஆனால், போடிநாயக்கன்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போட்டதிலும், புதுச்சத்திரத்தில் பினாமி பெயரில் நூறு ஏக்கருக்கு மேல் வாங்கியுள்ளதிலும் அமைச்சர் பெயர் அடிபடுகிறது.

சமீபத்தில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அமைச்சர் வீடு வரை தார் சாலை போடப்பட்டது. அந்த கான்ட்ராக்டிலும் கமிஷன் விளையாடியதாக எங்களுக்குத் தெரிய வந்தது. சரோஜா ராசிபுரத்தில் புதிதாக இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டிவருகிறார். அந்த வீட்டைக் கட்டும் கட்டுமானப் பணியாளர்கள் தங்கிக்கொள்ளும் இடமாகத்தான் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் இருக்கிறதே தவிர, மக்கள் குறை கேட்கும் அலுவலகமாக இல்லை. ராசிபுரம் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி தரமற்றது என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இடித்தார்கள். ஆனால், இன்றுவரை புதுப்பிக்கப்படவில்லை. ராசிபுரம் புறவழிச் சாலைத் திட்டமும், பாதாள சாக்கடைப் பணிகளும் பல வருடங்களாகியும் இன்னும் முடிக்கப்படவில்லை. போத மலைக்கு சாலை வசதி, சேகோ விற்பனை மையம், தனிக் குடிநீர்த் திட்டம், மசகாளிப்பட்டியில் மேம்பாலம் எனப் பல வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால், ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை’’ என்றார் ராசிபுரம் நகர தி.மு.க செயலாளர் சங்கர்.

என்ன சொல்கிறார் அமைச்சர்?

இதற்கெல்லாம் விளக்கம் கேட்பதற்காக அமைச்சரைத் தொடர்பு கொண்டோம். அதையடுத்து அமைச்சரின் உதவியாளர் ஆறுமுகம் நம்மைச் சந்தித்து பதில் அளித்தார். ‘`மேடம் அரசுப் பள்ளியில் படித்து தலைசிறந்த மருத்துவராகத் திகழ்ந்தவர். நல்ல வருமானம் தந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு மக்கள் சேவை செய்வதற்காக அ.தி.மு.க-வில் இணைந்தவர். சமூகநலத் துறையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் இருக்கிறது. இத்துறையின் மூலம் தொட்டில் குழந்தை திட்டத்தில் 5,468 குழந்தைகள் வளர்க்கப்படுகின்றன. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம், முதியோர் உதவித் தொகை, அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானியம் என எல்லா உதவிகளுக்கும் பயனீட்டாளர்கள் நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் லஞ்சம், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு 13 அம்சத் திட்டத்தை அறிவித்திருப்பதுடன், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகப்படுத்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளோம். 7,403 குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். உச்ச நீதிமன்ற உத்தரவுபடியே கிறிஸ்டி நிறுவனத்திற்கு சத்துணவு முட்டை மற்றும் ஊட்டச்சத்து மாவுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் லஞ்சம் வாங்குவதாக ராஜமீனாட்சி கூறிய குற்றச்சாட்டும், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக தி.மு.க போட்ட வழக்கும் பொய்யானவை’’ என விளக்கம் தந்தவர், தொகுதிப் பணிகள் குறித்தும் விவரித்தார்.

‘`ராசிபுரத்தில் சமூக நலத்துறை மூலம் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் மகளிர் தங்கும் விடுதி கட்ட அனுமதி பெற்றுள்ளோம். ராசிபுரம் புதிய பேருந்து நிலையப் பணிகளும், புறவழிச்சாலைப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும். போத மலைக்கு ரூ.27 கோடியில் சாலை அமைக்க இருக்கிறோம். ரூ.1,013 கோடியில் ராசிபுரத்திற்கு தனிக் குடிநீர்த் திட்டம் விரைவில் தொடங்க இருக்கிறோம். ஆட்டையாம்பட்டிப் பிரிவு மசகாளிப்பட்டி, ஏ.டி.சி டிப்போ, சேந்தமங்கலம் பிரிவு ஆகிய மூன்று இடங்களில் மேம்பாலத்திற்கு அனுமதி கிடைத்துவிட்டது. விரைவில் தொடங்கப்படும்’’ என்றார்.

ஆக, இத்தனை ஆண்டுகள் எதுவும் செய்யாமல், இனிமேல்தான் செய்யப்போகிறார்கள்!