மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி: ஓ.எஸ்.மணியன்

ஓ.எஸ்.மணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.எஸ்.மணியன்

தஞ்சைப் பகுதியில் மன்னார்குடி குடும்பத்தின் ஆசி இல்லாமல் அ.தி.மு.க-வில் யாரும் மேலே வரமுடியாது.

அப்படி ஒன்றும் அவர் வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை. சாதாரண கூரை வீட்டில் வாழ்ந்த சோமுத்தேவர் - காசாம்பாள் தம்பதிக்கு நான்கு மகன்கள், ஒரு மகள். மூன்றாவது மகன்தான் தற்போது தமிழ்நாடு துணிநூல் துறை மற்றும் கைத்தறித்துறை அமைச்சராக இருக்கும் ஓ.எஸ்.மணியன்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் தலைஞாயிறு அருகேயுள்ள ஓரடியம்புலம் கிராமம்தான் பூர்வீகம். பி.யூ.சி வரை படித்தார். ‘‘தமிழக அமைச்சர் போன்ற மிகப்பெரிய பதவியை அடைந்த ஓ.எஸ்.மணியன் நினைத்தி ருந்தால் அவர் பிறந்து வளர்ந்த தலைஞாயிறு மற்றும் சுற்றுப்பட்ட பகுதிகளுக்கு எவ்வளவோ நலத்திட்டங்களைச் செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்திருக்கும் ஒரே காரியம், பல கோடி ரூபாய் செலவில் ‘சிவசக்தி இன்டர்நேஷனல் ஸ்கூல்’ என்ற ஒரு பள்ளியைச் சொந்தமாக ஆரம்பித்திருப்பதுதான். அவர் தம்பி மூர்த்தி அதே ஊரில் இன்றுவரை ஒரு வெல்டிங் பட்டறை வைத்துதான் வாழ்க்கை நடத்திவருகிறார்’’ என்கின்றனர் அமைச்சர் குடும்பத்தை அறிந்த உள்ளூர்வாசிகள்.

ஓ.எஸ்.மணியன் இல்லம்
ஓ.எஸ்.மணியன் இல்லம்

வளர்ச்சியும் வீழ்ச்சியும்!

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோதே அ.தி.மு.க-வில் சேர்ந்த சீனியர்களில் ஒருவர் ஓ.எஸ்.மணியன். கிளைக் கழகச் செயலாளர் பதவியிலிருந்து சீக்கிரமே ஒன்றியச் செயலாளர் ஆனார். அப்போது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க-வில் செல்வாக்குப் பெற்றிருந்த எஸ்.டி.சோமசுந்தரம் இவரது சாதிக்காரர். அவருக்குக் கவரி வீசி மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத் தகராறில் ஓ.எஸ்.மணியன் உள்ளே புகுந்து, பிரச்னை அடிதடியாகிவிட, மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

இறால் பண்ணை
இறால் பண்ணை

எம்.ஜி.ஆர் இறந்தவுடன் எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்ட நால்வர் அணியினர் உருவாக்கிய ‘நமது கழகம்’ கட்சியிலும் கொஞ்ச காலம் வாசம் செய்த மணியன், அங்கிருந்து திரும்பி வந்து ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்தார். 1989 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.

ரூட் போட்ட மன்னார்குடி!

தஞ்சைப் பகுதியில் மன்னார்குடி குடும்பத்தின் ஆசி இல்லாமல் அ.தி.மு.க-வில் யாரும் மேலே வரமுடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு காட்ஃபாதர் கிடைக்க, மணியனுக்குக் கிடைத்தவர் சசிகலாவின் சகோதரர் மன்னார்குடி திவாகரன். ஓ.எஸ்.மணியனைவிட திவாகரன் வயதில் மிகவும் இளையவர் என்றபோதிலும், அவரை ‘பாஸ்’ என்றே அழைத்து அடிபணிவார். அந்தச் சமயத்தில் தஞ்சையிலிருந்து நாகை மாவட்டம் பிரிய, ஓ.எஸ்.மணியனை நாகை மா.செ. ஆக்கினார் திவாகரன். ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் அதிகாலையில் திவாகரனுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிப்பது மணியனின் வழக்கம். அந்த விசுவாசத்தை இன்னும் அவர் மறக்கவில்லை.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

1991-ல் ஜெயலலிதா ஆட்சி அமைந்தபின் திவாகரன் சிபாரிசால் ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்தது. கட்சியில் ஜெயலலிதா முதன்முதலில் வகித்த கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் ஓ.எஸ்.மணியனுக்குக் கிடைத்தது. இப்படி உச்சத்திலிருந்த ஓ.எஸ்.மணியன் ஒரு கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டார். காரணம் என்ன?

தற்காலிக முதல்வர் ஆசை!

2011 தேர்தலுக்குப் பின் போயஸ் கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டார். அப்போது அவரின் உறவினர்கள் மற்றும் தீவிர ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களில் ஓ.எஸ்.மணியனும் ஒருவர். சில மாதங்களில் பலரும் மீண்டும் பவருக்கு வந்தனர். ஆனால், ஓ.எஸ்.மணியனுக்கு மறுபடியும் ஒரு சறுக்கல் ஏற்பட்டது. 2001-ம் ஆண்டில் முதன்முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோது, தற்காலிக முதல்வர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் உட்பட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது ஓ.எஸ்.மணியனை திவாகரன் தரப்பு முன்மொழிந்தது. இந்தச் செய்தியை மணியனே பலரிடம் சொல்லிவிட, அந்த விஷயம் தலைமைக்குத் தெரிந்ததால் கட்டம் கட்டப்பட்டார்.

ராஜேந்திரன், செந்தில்
ராஜேந்திரன், செந்தில்

அதன்பிறகும் பீனிக்ஸ் பறவை போல அவர் மீண்டு வந்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தோற்றாலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து, அதில் ஜெயிக்கவும் செய்தார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேதாரண்யம் தொகுதிக்கு வழக்கறிஞர் கிரிதரன் என்பவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மன்னார்குடி குடும்பத்தின் செல்வாக்கால், இரண்டே நாளில் அதை மாற்றி வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்ற ஓ.எஸ்.மணியன் வெற்றிபெற்று தற்போது அமைச்சராக உள்ளார். ‘‘இப்போது அரசியலில் அவர் அடியெடுத்து வைத்து ஐம்பதாண்டுக் காலம் ஆகிறது’’ என்கின்றனர் கட்சிக்காரர்கள்.

சுவர் ஏறிக் குதித்தார்!

கஜா புயல் தாக்கியபோது டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்தன. ஆயிரக்கணக் கானவர்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து நிர்க்கதியாகி நடுரோட்டுக்கு வந்துவிட்டனர். அப்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிலவரம் தெரியாமலே, “புயலால் பெரிய அளவில் பாதிப்பில்லை. வேதாரண்யம் மட்டுமே சிறிதளவு பாதித்தி ருக்கிறது. மற்றபடி ஒன்றுமில்லை’’ என்று பேட்டி கொடுத்துவிட்டார். இது தொகுதி மக்களைக் கொந்தளிக்க வைத்தது.

அமைச்சரின் நிலம்
அமைச்சரின் நிலம்

இச்சூழலில் வேதாரண்யம் அருகேயுள்ள விழுந்தமாவடி என்ற கிராமத்தில் அமைச்சர் தன் உறவினர் இறப்பிற்கு துக்கம் விசாரிக்கச் சென்றார். பகுதி மக்கள் அப்போது அவரிடம், ‘`உணவு இல்லை... மின்சாரம் இல்லை...’’ என்று நிவாரணப் பணிகள் சரியாக நடக்காததைப் பற்றி முறையிட்டனர். ‘`அந்தக் காலத்தில் நாமெல்லாம் தீப்பந்தங்களை வைத்து வாழ்ந்தவர்கள்தான். ரெண்டு நாள் கரன்ட் இல்லையென்றால் குடியா மூழ்கிடும்’’ என்று அமைச்சர் அசால்ட்டாகக் கூறியிருக்கிறார்.

அடுத்ததாக இவர் வேட்டைக்காரனிருப்புப் பகுதிக்கு வந்தபோது பொதுமக்கள் சுற்றி வளைத்து சரமாரியாகக் கேள்வி கேட்டனர். போராட்டத்தில் இறங்கினர். அமைச்சரை நேருக்கு நேர் சிலர் கேள்வி கேட்டு வாக்குவாதம் அதிகமானது. மக்கள் ஆவேசமடைந்து ஓ.எஸ்.மணியனைத் தாக்க முற்பட, அவர் மதில் சுவர் ஏறிக் குதித்துத் தப்பித்தார். அமைச்சரின் காரை சிலர் அடித்து நொறுக்கினர். அன்று பொதுமக்களுக்காக வாதாடிய இளையராஜா என்ற இளைஞர், கடந்த வாரம் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

சொன்னார்... ஆனா செய்யலை!

“வேதாரண்யம் பகுதியில் சுமார் 10,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யறாங்க. அவங்க வாழ்வாரத்தை உயர்த்த, சோடா ஆஷ் தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டு வரப்போறதா சொன்னார். இங்க மல்லிகைப்பூ சாகுபடி அதிகம். அவர்களுக்காக, சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டு வருவேன்னு சொன்னார். இங்கு அதிகமாக விளையும் மாம்பழங்களுக்காக மாம்பழக்கூழ் தொழிற்சாலை கொண்டு வருவோம்னு சொன்னார். எதையும் செய்யல. பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள கோடியக்கரையைச் சிறந்த சுற்றுலாத்தலமா மேம்படுத்துவேன்னு சொன்னார். அந்தப் பகுதி கஜா புயலில் சிதைந்த அவலத்திலேயே இன்னமும் கெடக்கு.

மக்கள் எதிர்ப்பை மீறி பழங்கள்ளிமேடு அருகே இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு சாதகமா தடுப்பணை கட்டி வர்றாங்க. இதனால, இறால் பண்ணையில் பயன்படுத்தப்படும் ரசாயனக் கழிவுகள் எல்லாம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருது. நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறுன்னு மக்கள் அல்லல்படுறாங்க’’ என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் செந்தில்.

சொத்துக்குவிப்புப் புகார்கள்!

“ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வசித்த ஓ.எஸ்.மணியனுக்கு இருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் அவர் சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோதே வித்தாச்சு. அதில் அவருக்கு ஏகப்பட்ட கடன் வேற. இன்று அவருக்கு அதே இடத்தில் ஆடம்பரமான சொகுசு பங்களா ரெண்டு இருக்கு. தலைஞாயிறு பகுதியில் பல இடங்களை வாங்கிட்டார். ஒரு ஏழைகூட வீடு கட்ட இங்கு இடம் வாங்க முடியாது. வாட்டாக்குடியில் 150 ஏக்கர் நிலம், வெள்ளப்பள்ளத்தில் 10 ஏக்கரில் பண்ணை வீடு, வேதாரண்யத்தில் வணிக வளாகம், சென்னையில் சூப்பர் மார்க்கெட்னு வளமாகிட்டார். மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் பெட்ரோல் பங்குகள் உள்ளன. இப்படிப் பல கோடிக்குச் சொத்துகளைச் சேர்த்திருக்கிறார். ஏகப்பட்ட இறால் பண்ணைகளும் இருக்கு. தனக்குச் சொந்தமான இறால் பண்ணையின் வசதிக்காக அடப்பாறு முகத்துவாரத்தையே அடைத்துவிட்டார். இதனால் அங்கே விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.

தலைஞாயிறை தனித் தாலுகா ஆக்குவேன்னு சொன்னார். ஆனா, அவர் வீட்டுக்கு அருகில் பழுதடைந்த நிலையிலிருந்த சமுதாயக்கூடத்தை, கஜா புயலைக் காரணம் காட்டி இடிச்சுட்டு, அதை ஆக்கிரமிச்சு வைக்கோல் போர் வெச்சிருக்கார். சொந்த ஊருக்கு அவர் செய்தது இதுதான். கஜா புயல் காலத்தில் சொந்த ஊரான இங்கு குழந்தைகளுக்குப் பாலில்லை, பசித்தவர்களுக்குச் சோறில்லை என்று போராடிய மக்கள்மீது போலீஸை வைத்துத் தடியடி நடத்தியவர்தான் அமைச்சர். 135 பேர்மீது வழக்கு போட வைத்து, இன்னும் 55 பேர் கோர்ட்டுக்கு அலைந்துகொண்டிருக்கிறோம். பலர்மீது குண்டர் சட்டம் உட்பட கடுமையான வழக்குகள் உள்ளன’’ என்கிறார், தலைஞாயிறு பேரூராட்சித் தலைவராக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த இராஜேந்திரன்.

என்ன சொல்கிறார் அமைச்சர்?

ந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் பேசினோம். பெரிய புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தார் அவர்.

மந்திரி தந்திரி: ஓ.எஸ்.மணியன்

“ஆயக்காரன்புலத்தில் ‘வேதா ஆயத்த ஜவுளி பூங்கா’ அமைப்பதற்கு 140 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். மத்திய, மாநில அரசுகளின் 63 சதவிகித மானியத்துடன் இந்தப் பூங்கா அமைகிறது. இதனால் மினி திருப்பூராக வேதாரண்யம் மாறும். எனது கனவுத்திட்டமான இதனை, பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கவிருக்கிறோம். அடுத்த மூன்றாண்டுகளில் தொழில் நிறுவனங்களை ஈர்த்து, 21,000 பெண்களுக்கு மேல் வேலை வழங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம்.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. வேதாரண் யத்துக்கு மீன்வளக் கல்லூரி கொண்டு வந்திருக்கிறேன். கல்லூரி அமைக்க நிலம் கொடுத்த ஏழு விவசாயிகளின் பிள்ளைகளுக்கு அந்தக் கல்லூரி யிலேயே வேலைவாய்ப்பும் பெற்றுத் தந்திருக்கிறேன். மேடான பகுதி என்பதால், அவரிக்காடு கிராமத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இதற்காக ஒன்றரைக் கோடி ரூபாயில் ஆர்.ஓ ப்ளான்ட் அமைத்துத் தண்ணீர் சப்ளை செய்ய ஏற்பாடுகள் நடை பெறுகின்றன.

தொகுதிக்குள் 95 சதவிகிதம் மண் சாலைகளே இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறேன். வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில், புயல் வீசினாலும் அன்று மாலையே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும் நிலையை உருவாக்கியிருக்கிறேன். கஜா புயலில் வீடிழந்தவர்களுக்கு 6,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி நடைபெறுகிறது.

காமேஸ்வரத்தில் மாம்பழத் தொழிற்சாலை அமைக்கும் பணி தொடங்கிவிட்டது. ஆனால், கஜா புயலில் இப்பகுதியிலிருந்த மாமரங்கள் சாய்ந்துவிட்டதால், மாம்பழங்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. மணக்கும் மல்லிகை ரகத்திலிருந்துதான் சென்ட் தயாரிக்க முடியும். அந்த ரகம் இங்கு விளைவதில்லை. அதனால், சென்ட் தொழிற்சாலை கொண்டுவர முடியவில்லை. சோடா ஆஷ் தொழிற்சாலை என்னுடைய வாக்குறுதி அல்ல. ஆனாலும், அதற்காக வாய்மேடு கிராமத்தில் திட்டம் ஆரம்பித்தோம். அந்தப் பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது’’ என்ற அமைச்சரிடம், அவரது சொத்து விவகாரங்கள் குறித்துப் பேசினோம்.

“எனக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை வேட்புமனுவில் நிச்சயம் குறிப்பிடுவேன். தவறாக இருக்கும்பட்சத்தில் என் வேட்புமனுவே நிராகரிக்கப்பட்டுவிடும். எனக்கு இரண்டு பெண்கள். ஒரு மாப்பிள்ளை டாக்டர், மற்றொருவர் இன்ஜினீயர். அவர்களின் தொழில் சார்ந்த விஷயங்களை என்னோடு தொடர்புபடுத்துவது தவறு. அவரவர் உழைப்பினால் முன்னேற அவரவருக்கு உரிமை இருக்கிறது” என்று முடித்துக் கொண்டார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.