மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி: பி.தங்கமணி

பி.தங்கமணி
பிரீமியம் ஸ்டோரி
News
பி.தங்கமணி

வட இந்தியாவிற்கு ஜவுளி வியாபாரத்திற்குச் சென்றபோது கற்றுக்கொண்ட இந்தி இங்குதான் உதவுகிறது.

`‘அம்மா இறந்து, ஆட்சி சின்னா பின்னமாகிவிடுமோ என அ.தி.மு.க-வே தள்ளாடிய நேரத்தில், ஊன்றுகோலாக இருந்து தாங்கிப் பிடித்தவர்கள் வேலுமணியும் தங்கமணியும்தான்...''

கோவையில் நடந்த அ.தி.மு.க விழா ஒன்றில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய வார்த்தைகள் இவை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இடதும் வலதுமாக பவுன்சர்களைப் போல அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் பவனி வருவதை வைத்தே, ஆட்சிக்கும் எடப்பாடிக்கும் இவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் எனத் தெரிந்து கொள்ளலாம். டெல்லியிலிருந்து ஏதேனும் கோபக் குரல் எழுந்தால், சமாதானம் பேச தங்கமணி தடதடவென ஃப்ளைட் பிடித்து ஓடுவார். அ.தி.மு.க-வின் சமாதானப் புறா அல்லவா!

எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத் துக்கும் உரசல் என்றால், இருவரின் வீடுகளுக்கும் தங்கமணியின் கார் பரபரக்கும். கூட்டணியில் பா.ம.க முரண்டுபிடிக்கிறது என்றால், தைலாபுரம் தோட்டத்திற்கு ஓடுவார். இப்படி அ.தி.மு.க ஆட்சிக்குப் பாதுகாவலனாக, எடப்பாடி யாருக்குத் தூதராக இருக்கும் தங்கமணி, தான் அமைச்சராக இருக்கும் துறைகளுக்கு என்ன செய்திருக்கிறார்?

மந்திரி தந்திரி: பி.தங்கமணி

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளைக் கையில் வைத்திருக்கிறார் தங்கமணி. ‘தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருக்கிறது’ என அவர் சொல்லும் ஜோடனையான வார்த்தைகளுக்குப் பின்னால், மின்சாரத்துறை பல ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பதும், முறைகேடுகளும் ஊழல்களும் புரையோடிக் கிடப்பதும் பெரும் அவலம். அதேபோல, ‘படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்' எனச் சொல்லி ஆட்சியைப் பிடித்துவிட்டு, டார்கெட் வைத்துத் தமிழகத்தை மதுவால் குளிப்பாட்டி வைத்திருக்கிறார்கள். குடியால் தினம் தினம் கண்ணீரோடு வாழ்க்கை நடத்தும் பல லட்சம் குடும்பங்களின் நிலை, டெல்லிக்கு ‘ரூட்டு தல'யாக இருக்கும் தங்கமணிக்குத் தெரியாமல் இல்லை. ‘டாஸ்மாக்கை மூடுங்கள்' என பெண்கள் சாலையில் இறங்கிப் போராடியதைத் தமிழகம் பார்த்தது. ‘‘கள்ளச்சாராயம் புகுந்து விடும் என்பதாலேயே, படிப்படியாக மதுக் கடைகள் குறைக்கப்படுகின்றன. மதுபானம் அருந்துவோர் அளவாகக் குடித்தால் பிரச்னை இல்லை’’ என சட்டசபையிலேயே விஞ்ஞான விளக்கம் தந்த மற்றுமொரு விஞ்ஞானிதான் தங்கமணி.

இப்பேர்ப்பட்டவர் தமிழக அரசியலின் முக்கிய பவர் சென்டராக மாறியது எப்படி?

50 வருடங்களுக்கு முன்பு திருச்செங்கோட்டின் அருகிலுள்ள வால்ராசபாளையம் கிராமத்திலிருந்து, குடும்ப வறுமையால் தறி ஓட்டிப் பிழைப்பு நடத்த பள்ளிபாளையம் அருகிலுள்ள கோவிந்தம்பாளையத்திற்கு வருகிறார், தங்கமணியின் அப்பா பெருமாள் கவுண்டர். அ.தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டு கோவிந்தம்பாளையம் கிளைச் செயலாளர் ஆகிறார். அந்த அளவிலேயே அவரின் அரசியல் வரலாறு முடிந்துவிடுகிறது.

அப்பாவுக்கு உதவியாக ஜவுளி வியாபாரம் செய்துவந்த தங்கமணிக்கு, அரசியல் மேல் பெரும் ஆர்வம் உண்டானது. ‘ஒரு கவுன்சிலராகவாவது ஆகிவிட மாட்டோமா' என்று ஏங்கிக் கிடந்திருக்கிறார். 1991-ல் திருச்செங்கோட்டுத் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரான டி.எம்.செல்வகணபதி, பெரும் செல்வாக்குடன் வலம் வந்த நேரம் அது. செல்வகணபதியின் நண்பர் சிவசுப்ரமணியன் என்பவரைப் பிடித்து, செல்வகணபதியுடன் நெருக்கமாகிறார் தங்கமணி. செல்வகணபதியின் ஆசியால் முதலில் பள்ளிபாளையம் ஒன்றிய ஜெ. பேரவைச் செயலாளர் ஆனார். ஒரே வருடத்தில் ஒன்றியச் செயலாளர் ஆனார். 2001 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பள்ளிபாளையம் ஒன்றிய சேர்மனாகவும் ஆனார்.

அமைச்சரின் வீடு
அமைச்சரின் வீடு

திருச்செங்கோட்டுத் தொகுதியில் ஜெயித்து அமைச்சராகவும் இருந்த பொன்னையன் மீது 2006 தேர்தல் நேரத்தில் போயஸ் கார்டனில் நல்ல அபிப்ராயம் இல்லாமல் போய்விடுகிறது. செல்வகணபதி மற்றும் மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் மூலம் திருச்செங்கோட்டுத் தொகுதியில் சீட் கேட்டுக் காய் நகர்த்துகிறார் தங்கமணி. அப்போது தங்கமணி மீது 11 லட்ச ரூபாய் செக் மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. ‘வழக்கை முடிச்சிட்டு வா. சீட்டு கிடைக்கும்’ என போயஸ் கார்டனில் உறுதி கிடைக்க, ஊருக்கு வந்த தங்கமணி ஊர்ப் பெரியவர்களை வைத்து ‘என்கிட்ட 11 லட்சமெல்லாம் இல்லை. நாலரை லட்சம்தான் இருக்கு. பைசல் பேசி பிரச்னையை முடிச்சி விடுங்க' என்றிருக்கிறார். (அன்றைக்கு 11 லட்ச ரூபாயை செட்டில் செய்ய முடியாத தங்கமணியின் சொத்து இன்றைக்கு மலையளவு குவிந்து கிடப்பது தனிக்கதை). வழக்கு வாபஸ் வாங்கப்பட்டு, தங்கமணிக்கு சீட் கிடைக்கிறது. வெறும் 116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகிறார் தங்கமணி.

அந்தத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆறு தொகுதிகளில் ஐந்தில் அ.தி.மு.க தோற்க, தங்கமணி மட்டும் வெற்றிபெறுகிறார். அதற்கு போனஸாக நாமக்கல் மாவட்டச் செயலாளர் பதவியைத் தங்கமணிக்கு வழங்குகிறார் ஜெயலலிதா. அதன்பிறகு அவரே எதிர்பார்க்காத அளவுக்கு அசுர வளர்ச்சி.

தங்கமணியை அரசியலில் வளர்த்துவிட்டு, எம்.எல்.ஏ-வாக்கி அழகுபார்த்த செல்வகணபதிக்கு அ.தி.மு.க-வில் செல்வாக்கு குறைகிறது. 2008-ல் செல்வகணபதி தி.மு.க-வில் ஐக்கியமாகிறார். அந்த நேரத்தில் செல்வகணபதியை எதிர்த்து அரசியல் செய்தால், ஜெ.வின் குட்புக்கில் இடம் பிடிக்கலாம் என செல்வகணபதியை விமர்சித்து, எதிராகச் செயல்படுகிறார். இதற்கிடையே தங்கமணியின் மகள் லதாஸ்ரீக்கும், தங்கமணிக்கு அரசியல் டோக்கன் வாங்கிக் கொடுத்த சிவசுப்ரமணியன் மகன் தினேஷிற்கும் இடையே காதலாகி, திருமணத்தில் முடிகிறது. செல்வகணபதி தலைமையில் திருமணம் நடக்கிறது. ஜெயலலிதாவிற்குத் தெரிந்தால் பதவி போய்விடுமென மகளின் திருமணத்திற்குக் கூட தங்கமணி செல்லவில்லையாம்.

எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் மாஸை வைத்து 2011 சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் களமிறங்கி வெற்றிபெற்று வருவாய்த்துறை அமைச்சராகிறார். அதன்பிறகு தொழில்துறை மற்றும் செந்தில் பாலாஜியிடமிருந்த போக்குவரத்துத் துறை ஆகியவையும் தங்கமணிக்குக் கிடைக்கின்றன. 2016 தேர்தலில் மறுபடியும் குமாரபாளையம் தொகுதியில் 47,329 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அதிரடிக்கிறார். இம்முறை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தங்கமணிக்குக் கிடைக்கிறது. முதலமைச்சர் எடப்பாடியாரின் மச்சான் மகள் சாராவை, மகன் தரணீதரனுக்கு மணம் முடித்த வகையில், எடப்பாடியாருக்கு உறவின ராகிறார். அதனால் எடப்பாடியுடன் கூடுதல் நெருக்கம் ஏற்படுகிறது.

ரயில்வே மேம்பாலம்
ரயில்வே மேம்பாலம்

வட இந்தியாவிற்கு ஜவுளி வியாபாரத்திற்குச் சென்றபோது கற்றுக்கொண்ட இந்தி இங்குதான் உதவுகிறது. கடந்தமுறை போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் இருந்தபோதே அதானி நிறுவனத்துடன் தங்கமணிக்குப் பழக்கம் உண்டாகிறது. அந்தத் தொடர்பின் மூலமாகத்தான் தற்போது பா.ஜ.க தலைமைக்கும், அ.தி.மு.க-விற்கும் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுவருகிறார். சீனியர்கள் பலரையும் ஓவர்டேக் செய்து, இன்றைக்குத் தலைமையில் பெரும் செல்வாக்கோடு பவர் சென்டராக வலம் வருகிறார் தங்கமணி.

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத தங்கமணி, யாரிடமும் அதிர்ந்துகூடப் பேச மாட்டார். இவ்வளவு வளர்ச்சிக்குப் பின்னும் பங்களா மாதிரி வீடு கட்டாமல், பூர்வீக வீட்டிலேயே குடியிருக்கிறார். கார்கூடப் போக முடியாத குறுகிய சந்தில் இருக்கும் தன் வீட்டுக்கு நடந்துதான் போவார். மகன் தரணீதரன், சம்பந்தி சிவசுப்ரமணியன், மாப்பிள்ளை தினேஷ் ஆகிய மூவரும்தான் தங்கமணிக்கு எல்லாமுமாக இருக்கின்றனர். வேலுமணி போல வெளிப்படையான அதிரடி எதுவுமில்லை. ஆனால், ‘சாதுவாக வலம் வந்தாலும் தங்கமணி சைலன்ட் கில்லர்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். நாமக்கல்லில் எந்தச் சொத்தையும் வாங்காதவர், வெளியூரில் எக்கச்சக்கமாக வாங்கிக் குவித்திருப்பதாகச் சொல்கின்றனர். நாமக்கல்லில் எந்தக் கட்சியிலும் அவரைத் தாண்டி வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாதென்பதில் கவனமாக இருப்பார். பள்ளி பாளையத்தில் ஜே.கே.கே.எம் என்னும் கல்வி நிறுவனங்களை நடத்திவரும் ஓம் சரவணா என்பவர் பா.ஜ.க மாவட்டச் செயலாளராக இருந்துவந்தார். தங்கமணியை அவர் வளர்ச்சி உறுத்த, அவரின் பதவி பறிபோனது. எப்படியோ மறுபடியும் பதவியை வாங்கிய ஓம் சரவணா, `எப்படியாவது கூட்டணியில் குமாரபாளையம் தொகுதியை வாங்கியே தீருவேன்' என தங்கமணிக்கு எதிராகக் களமிறங்கியிருக்கிறார். கொக்கராயன் பேட்டை ஈஸ்வரமூர்த்தி என்பவர் டி.டி.வி. தினகரன் அணிக்குத் தாவிய சமயம். அவர் நடத்திய செங்கல்சூளையில் தங்கமணி உத்தரவால் ரெய்டு நடக்க, பயந்துபோய் யுடர்ன் அடித்து அ.தி.மு.க-விற்கே வந்துவிட்டாராம் ஈஸ்வரமூர்த்தி. ‘‘தங்கமணியின் அதிரடிக்கு இதெல்லாம் சில சாம்பிள்கள்'' என்கின்றனர்.

பள்ளிபாளையம் தி.மு.க ஒன்றியச் செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான யுவராஜ், “நெசவுத் தொழில்தான் அமைச்சரின் குடும்பத்திற்கு ஆரம்பக்காலங்களில் சோறு போட்டது. அந்த நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்குக்கூட தங்கமணி எதையும் செய்யவில்லை. இங்கு ஏராளமான கைத்தறி, விசைத்தறித் தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஜி.எஸ்.டி-யால் தொழில் நசிந்துபோக, மக்கள் கந்துவட்டிக் கொடுமையில் தவிக்கின்றனர். ‘சாய ஆலைக்கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதைத் தடுக்க, பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பேன். இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்’ என வீர வசனம் பேசி ஓட்டு கேட்டார். இன்னும் அது நிறைவேறவில்லை. பள்ளிபாளையம் அருகிலுள்ள ‘பொன்னி சுகர்ஸ்’ சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கு 67 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளது. அதை வாங்கித் தர அமைச்சர் தங்கமணி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோழிப்பண்ணை அசோசியேஷன், சாயப்பட்டறைச் சங்கம், விசைத்தறிச் சங்கம் என எல்லாச் சங்கங்களையும் தன் அதிகாரத்தால கையில வச்சிருக்காரு. பணத்தை அடிச்சா எல்லாத்தையும் சரிக்கட்டிடலாம்னு இருக்காரு” என்றார்.

யுவராஜ், ஈசன், பி.தங்கமணி, விஜயன், திருச்செல்வன்
யுவராஜ், ஈசன், பி.தங்கமணி, விஜயன், திருச்செல்வன்

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவரும், உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் ஈசனோ, “ஜெயலலிதா உதய் மின் திட்டத்தை ஏற்காதபோது, இப்போதைய அரசு அதில் கையெழுத்திட்டிருக்கிறது. இலவச மின்சார இணைப்பிற்காக 6 லட்சம் விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம். தட்கல் திட்டத்தைக் கொண்டு வந்து சிறு, குறு விவசாயிகள் எந்த மின் இணைப்பும் வாங்க முடியாதபடி செய்திருக்கிறார்கள். ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் என 13 மாவட்டங்களில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். போராடிய விவசாயிகள் மீது 38 வழக்குகள் போட்டு சிறைக்கு அனுப்பினார் அமைச்சர் தங்கமணி. முறையான இழப்பீடு அல்லது குறைந்தபட்சம் மாத வாடகையாவது கொடுங்கள் எனக் கேட்கிறோம். விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. மின்சார நிறுவனங்கள் நஷ்டமடையக் கூடாது என நினைக்கிறார்” என்றார்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன், “நம்முடைய மின் நிலையங்களில் உற்பத்தியை முழுவீச்சில் செய்தாலே, தனியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் அளவு குறையும். ஆனால், மின்சார வாரியத்தைக் கடுமையான நஷ்டத்தில் தள்ளும்வகையில், தனியாரிடம் அதிக பணம் கொடுத்து நீண்ட காலம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறார்கள். மின் கம்பங்கள், மீட்டர்கள் போன்ற தரமான பொருள்கள் சப்ளை செய்யப்படுவதில்லை. 23,000 கள உதவியாளர் பதவிகளும், 8,206 கம்பியாளர் பதவிகளும் காலியாக உள்ளன. கிட்டத்தட்ட 52,000 காலிப் பணியிடங்கள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. பணி நியமனங்களில் லஞ்சம் தலைவிரித்தாடு கிறது. பல ஆண்டுகளாக வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யவில்லை. அதைப் போலவே ரீடிங் எடுப்பதற்காக 1,300 பேருக்கு வேலை அறிவித்து, இன்னும் அவர்களை வேலைக்கு எடுக்காமல் இருக்கின்றனர். மின் விநியோகத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்க இருந்தார்கள். மின் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் போராடிய பின்னர் பின்வாங்கினர். நாம் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்து, தமிழகத்தினுடைய தேவையைப் பூர்த்தி செய்தபின் உபரியை வெளியே கொடுத்தால்தான், தமிழ்நாடு மின்மிகை மாநிலம். ஆனால், மின்சார வாரியத்தின் உற்பத்தியை நிறுத்திவிட்டு வெளியே வாங்கி விநியோகம் செய்வதை ‘மின்மிகை மாநிலம்' என அமைச்சர் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது” என்றார்.

டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன், ‘‘எங்கள் ஊழியர்களைப் பணிவரைமுறைப்படுத்துமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்துவருகிறோம். 18 வருடங்களாக வேலை பார்த்துவருபவர்களின் ஊதியம் இன்னமும் ரூ.12,750தான். இதை வைத்து எப்படிக் குடும்பம் நடத்துவது?

டாஸ்மாக் பார்களை ஆளுங்கட்சியினர்தான் எடுத்து நடத்துகின்றனர். கொரோனாவால் மூடிவைத்து, மே மாதத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறந்தபிறகும் பார்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால், பெரும்பாலான பார்கள் சட்டவிரோதமாகச் செயல்பட்டன. பார் நடத்துபவர்கள் டாஸ்மாக் கடை ஊழியர்களைத் தாக்கும் நிலையும் இருக்கிறது.

டாஸ்மாக்கின் மூலம் மட்டுமே அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக 30,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. வேறெந்த மாநிலத்திலும் மது மூலமாக இவ்வளவு வருமானம் கிடைப்பதில்லை. ஆனால், இந்த நிறுவனத்தில் வெளிப்படைத்தன்மை கிடையாது. தனியார் ஆதிக்கத்தால் அரசுக்கு வர வேண்டிய வருவாயை இழக்கிறோம் என்று கருதியே டாஸ்மாக்கை அரசே எடுத்து நடத்த ஆரம்பித்தது. ஆனால், இன்று பெயரளவிற்குத்தான் அரசு நிறுவனமாக டாஸ்மாக் இருக்கிறது. மது கொள்முதலில் ஆரம்பித்து, பார்களை நடத்துவதுவரை தனியார்தான் நல்ல லாபமடைகிறார்கள்” என்கிறார்.

இந்த எல்லாவற்றையும் குறித்து அமைச்சரின் கருத்து கேட்க ஒரு வாரம் முயற்சி செய்தோம். போனில் அழைத்தபோதும், நேரில் சந்தித்தபோதும், ‘‘நிச்சயம் பேசுகிறேன். இப்போது நேரமில்லை’’ என சொந்த ஊரிலும் சென்னையிலும் நம்மைத் தொடர்ச்சியாக அலைக்கழித்தவர், இறுதிவரை பேசவே இல்லை. அவர் கருத்து சொல்வதைத் தவிர்க்க நினைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.

ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நஷ்டம்!

‘`த
மிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை எனக் காட்டிக்கொள்வதற்காக வெளியிலிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எண்ணூர் புதிய அனல் மின் நிலையத்திற்காக ‘லேன்கோ இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ என்ற நிறுவனத்திடம் 660 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சுமார் 5,500 கோடி மதிப்பீட்டில் திட்டத்தைக் கொடுத்தார்கள். 2018-ல் முடிய வேண்டிய அது, இன்றுவரை 17 சதவிகிதம் மட்டுமே முடிந்திருக்கிறது. அதேபோல தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து ரூ.8,500 கோடி முதலீட்டில் உருவாக்கிய வல்லூர் அனல் மின் நிலையத்தில் 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் தமிழக அரசின் பங்களிப்பு ரூ.4,250 கோடி. முதலீடு செய்த இந்தத் தொகைக்கு வருடா வருடம் சுமார் ரூ.300 கோடி அளவில் வட்டி கட்டிவருகிறோம்.

இப்படி நாம் முதலீடு செய்த இடத்தில் ஒரு யூனிட் விலை ரூ.5.10. குறைந்தளவே இங்கிருந்து மின்சாரத்தை வாங்குகின்றனர். ஆனால், ரூ.1.90 விலையுள்ள சோலார் மின்சாரத்தை, அதானி நிறுவனத்திடமிருந்து ரூ.7.01-க்கு வாங்குகிறார்கள். சிலரின் ஆதாயங்களுக்காக அதிக விலை கொடுத்துத் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதாலும், புதிய மின் திட்டங்களைக் கொண்டு வராததாலும், ஆண்டுதோறும் ரூ.10,000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது’’ என்கிறார் சி.ஐ.டி.யு மாநிலத் துணைத் தலைவர் கே.விஜயன்.

டாஸ்மாக் கடைகளை மூடியது உண்மையா?

“அரசு கொள்கை முடிவெடுத்து 1000 டாஸ்மாக் கடைகளை மூடியதாகச் சொல்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைகளில் இருந்த 3,300 கடைகளை மூடியதாக அமைச்சர் சொல்கிறார். அப்படி 4,300 கடைகள் மூடப்பட்டிருந்தால், 2,000 டாஸ்மாக் கடைகள்தான் இப்போது இருக்க வேண்டும். ஆனால், இப்போது தமிழகத்தில் 5,200 கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஹைவேஸில் மூடப்பட்ட கடைகளுக்குப் பதிலாக சுடுகாட்டுக்கு அருகில், ஊருக்கு வெளியே எனப் பாதுகாப்பற்ற இடங்களில் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள்.

எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டாலும், மதுவிலிருந்து வரக்கூடிய வருவாய்தான் இலக்காக இருக்கிறது. மதுபானங்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை. குடிப்பவர்கள் விரும்புகின்ற சரக்கைக்கூடக் கொடுக்காமல், அதிலும் பெரும் லாபி நடக்கிறது. அறிமுகமில்லாத, தரமில்லாத மது வகைகளை வழங்குகின்றனர். டாஸ்மாக்கில் விற்கும் மதுவின் தரத்தைப் பரிசோதனை செய்வதற்கான எந்தக் கட்டமைப்பும் இந்நிறுவனத்தில் கிடையாது. ‘குடிகாரர்கள்தானே... எது கொடுத்தாலும் வாங்கிக் குடிச்சிட்டுப் போவாங்க’ என்கிற நினைப்பில் இருக்கிறார்கள். அமைச்சர் இதில் கவனம் செலுத்துவதில்லை’’ என வருந்துகிறார், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன்.