
ஜெயலலிதாவை ‘தமிழர் குலசாமி’ என்றபோதும், அதன்பின் சசிகலாவை ‘தியாகத்தலைவி’ என்றபோதும், இப்போது எடப்பாடியை ‘இரண்டாம் கரிகால் சோழன்’ என்று புகழும்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்.
அரசியல் கொஞ்சம், ஆன்மிகம் கொஞ்சம், அட்ராசிட்டி மிச்சம் எனக் கலந்து செய்த உருவம்... வருடத்தில் பாதி நாள்கள் கோயில்களுக்குச் செல்ல காவி வேட்டி கட்டி விரதமிருப்பார். திடீரென்று ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல் பின்னணியில் ஒலிக்க, பேன்ட், டி-ஷர்ட் அணிந்து சைக்கிள் பேரணி நடத்துவார். தாடி வளர்த்த சித்தராகவும், மொட்டையடித்த புத்தராகவும் மக்கள் மத்தியில் மாறி மாறிக் காட்சி தரும் வித்தியாசமான பர்சனாலிட்டிதான் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க சார்பில் கட்சி அலுவலகத்தில் சிலை வைத்தனர். சேலத்தில் அரசு செலவில் சிலை அமைத்தார் எடப்பாடி. இன்னும் சில அமைச்சர்கள் ஜெயலலிதா பெயரில் நலத்திட்ட உதவிகள், இலவசத் திருமணங்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துகிறார்கள். ஆனால், ஜெயலலிதாவுக்குக் கோயில் எழுப்பி, திறப்புவிழாவை பிரமாண்டமாக நடத்தி, தினமும் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார் உதயகுமார். இதன்மூலம் தாய்ப்பாசத்தில் எல்லோரையும் மிஞ்சியது தான்தான் என்பதை உலகுக்கு அறிவித்திருக்கிறார்.

ஆட்சித் தலைமையைக் குளிர வைப்பதில் இவரை அடித்துக் கொள்ளவே முடியாது. அமைச்சரான புதிதில் காலில் செருப்பில் லாமல் சட்டமன்றத்துக்குச் சென்று, ‘`ஜெயலலிதா எனக்கு சாமி. அவர் இருக்கும் இடம் கோயில். கோயிலுக்குள் செருப்பணிந்து செல்ல மாட்டேன்’’ என்று சொல்லி ஜெயலலிதா வையே கிறுகிறுக்க வைத்தவர். அதே நேரம், ‘ஓவர் விசுவாசம் உடம்புக்கு ஆகாது’ என்பதுபோல் திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை வரவேற்று எட்டு கி.மீ தூரத்துக்கு இவர் அமைத்த மின் விளக்கு அலங்காரங்கள், இவர் ப்யூஸைப் பிடுங்கியது. மின் பற்றாக்குறை இருந்த காலகட்டத்தில் உதயகுமார் இப்படிச் செய்ததால் கோபடைந்த ஜெயலலிதா, கட்சிப் பதவியுடன் அமைச்சர் பதவியையும் சேர்த்துப் பிடுங்கினார்.

பதவி போனதால் அவர் சோர்ந்துவிடவில்லை. ஜெயலலிதாவைக் குளிர்விக்கும் வகையில் அதே உற்சாகத்துடன் பிரமாண்ட நிகழ்ச்சிகளை மதுரையில் தொடர்ந்து நடத்தினார். அது ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்கே பிடித்துப் போனது. அதனால் மீண்டும் அமைச்சரானார்.
ஜெயலலிதாவை ‘தமிழர் குலசாமி’ என்றபோதும், அதன்பின் சசிகலாவை ‘தியாகத்தலைவி’ என்றபோதும், இப்போது எடப்பாடியை ‘இரண்டாம் கரிகால் சோழன்’ என்று புகழும்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்... அதுதான் ஆர்.பி.உதயகுமார்.

ஓவர்நைட்டில் ஒபாமா ஆனவர் இல்லை உதயகுமார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமாரின் குடும்பம் பல வருடங்களுக்கு முன் மதுரை அவனியாபுரம் பகுதியில் குடியேறியது. எம்.ஜி.ஆர் ரசிகரான அவர் தந்தை, அப்பகுதி அ.தி.மு.க-வில் தீவிரமாகப் பணியாற்றினார். அதனால் சிறுவயது முதலே அரசியல் ஈடுபாடு வந்துவிட்டது உதயகுமாருக்கு. மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் பி.காம் முடித்து, எம்.எஸ்.டபிள்யூ சேர்ந்தார். பிறகு சட்டமும் படித்தவருக்கு ஜெத்மலானி, நாரிமன் போல பெரிய வழக்கறிஞராக வேண்டுமென்று ஆசை. ஆனால் அதற்கு வெகு காலம் ஆகும் என்பதால், அரசியலில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்.

வில்லாபுரம் பகுதி அ.தி.மு.க-வில் செல்வாக்குடன் வலம் வந்த உறவினர் புலிகேசி மூலம் அ.தி.மு.க மாணவரணியில் நுழைந்தார். மாணவரணி மாநில நிர்வாகியான, முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரையை அடிக்கடி சந்தித்து நண்பராகிறார். மாணவரணி மாவட்டப் பொறுப்பிலிருந்த ராஜலிங்கத்துக்கும் உதயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டதால், மாணவரணியிலிருந்து இளைஞர் அணி மாவட்டச் செயலாளராக மாறுகிறார். இளைஞரணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்ட, சசிகலா உறவினர் டாக்டர் வெங்கடேஷின் குட்புக்கில் இடம்பெறுகிறார். 2006-ல் விருதுநகர் மாவட்டச் செயலாளர் சிவசாமிக்கும், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ராஜேந்திரபாலாஜிக்கும் கோஷ்டி சண்டை தீவிரமானது. அதைச் சரிசெய்ய, டாக்டர் வெங்கடேஷ் சிபாரிசில் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதிலிருந்துதான் ஆர்.பி.உதயகுமாரின் அரசியல் கிராஃப் உயர ஆரம்பித்தது.

தற்போது வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை என பவர்ஃபுல் அமைச்சராக உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதிகாரம் செலுத்தும் வகையில் ஜெயலலிதா பேரவைச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். மதுரை மாவட்டக் கட்சியிலும் அதிகாரம் செலுத்த உதயகுமார் ஆசைப்பட, ராஜன் செல்லப்பா பொறுப்பில் இருந்த மதுரை புறநகர் மாவட்டத்தை இரண்டாக உடைத்து, மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை உதயகுமாருக்கு அளித்தார் எடப்பாடி. சமீபத்தில் அ.தி.மு.க-வில் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் உதயகுமாருக்கு மட்டும் ஐந்து மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படி எடப்பாடிக்கு மிக நெருக்கமான வேலுமணி, தங்கமணி வரிசையில் உதயகுமாரும் இருப்பதுதான் கட்சி சீனியர்கள் பலருக்கும் உறுத்தலாக உள்ளது.

வருமானத்தில் பெரும்பகுதியைக் கட்சிக்காகச் செலவு செய்தாலும், அது தலைமையை டச் செய்ய வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்படும் உதயகுமார், மதுரையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில்தான் வசிக்கிறார். கொரோனா பாதிப்பு மதுரையில் பெரிய அளவு இருந்தபோது, ‘அம்மா கிச்சன்’ என்ற பெயரில் மூன்று வேளை உணவு வழங்கி அமர்க்களப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் தினமும் குடும்பத்தி னருடன் வந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டு அனைவராலும் பாராட்டப் பட்டார். தொகுதி முழுக்க கொரோனாத் தடுப்பு மருந்துகள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கினார். தொகுதியில் பெரும்பாலான வீடுகளில் இவர் கொடுத்த வேட்டி, சேலை, பேன்ட்-ஷர்ட், இலவசப் பொருள்கள் குறைந்தது பத்து செட் இருக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மக்களை அன்பளிப்பு களால் அலற விடுகிறார். இதுபோதாதென்று ஜெயலலிதா பேரவை சார்பில் மாவட்டம்தோறும் சைக்கிள் பேரணி நடத்தி, கலந்து கொண்ட வர்களுக்கு சைக்கிளைப் பரிசாக அளிப்பார்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை உருவாக்கி சாதனை படைத்தார் மு.க.அழகிரி. அந்த ஃபார்முலாவைத்தான் இப்போது அதே திருமங்கலம் தொகுதியில் ஜெயித்திருக்கும் ஆர்.பி.உதயகுமார் பயன்படுத்துகிறார் என்கிறார்கள். ‘விழா நடத்தவும், மக்களுக்குத் தொடர்ந்து அன்பளிப்புகள் வழங்கவும் எங்கிருந்து பணம் வருகிறது’ என்று கேட்டால், ‘`அமைச்சரின் குடும்பத்தினர் நடத்தும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் செலவு செய்கிறார்’’ என்று கட்சியினர் கூறுகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளைக்குத் தொழிலதிபர்கள், கட்சி நிர்வாகிகள் நன்கொடை அளிப்பதாகச் சொல்கிறார்கள். ஜெயலலிதா கோயிலும் இந்த அறக்கட்டளை மூலம் கட்டியதுதான்.

கட்சியிலும் அவ்வப்போது பல அதிரடி வேலைகளைச் செய்வார் உதயகுமார். செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா தவிர்த்து மதுரை மாவட்டத்திலுள்ள மற்ற நான்கு எம்.எல்.ஏ-க்களையும் தன் ஆதரவாளர்களாக மாற்றிவிட்டார். இவர் நடத்துகிற நிகழ்ச்சிகளில் இந்த நான்கு எம்.எல்.ஏ-க்களும் கலந்த கொள் வார்கள். அவர்கள் தொகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் உதயகுமார் கலந்துகொள்வார். அதுமட்டுமல்ல, தி.மு.க முக்கிய நிர்வாகிகள் தொழில்ரீதியாக இவருடன் தொடர்பில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இப்படிப் பரபரப்பாகச் செயல்பட்டுவரும் ஆர்.பி.உதயகுமார், தொகுதிக்கும் மாவட்டத்துக்கும், வகிக்கும் துறையிலும் என்ன சாதித்துள்ளார்?

கடந்த தேர்தலில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயராம், ‘`திருமங்கலம் தொகுதி மக்களுக்குப் பலன் தரும் திட்டம் எதுவும் கொண்டு வரவில்லை. வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் வெளியூர்களுக்குச் செல்கிறார்கள். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் எதையும் கொண்டு வராமல், அவ்வப்போது விழாக்களை மட்டும் நடத்தி மக்களுக்குப் பணம் கொடுத்து, இவர் கையை எதிர்பார்க்கும் நிலையில் வைத்திருப்பதுதான் இவரின் சாதனை. இன்னும் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டு மோசமான நிலையில் உள்ளது. தொகுதியில் பல இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. டி.கல்லுப்பட்டி, பேரையூர்ப் பகுதிகள் எந்த வளர்ச்சியும் இல்லாமல் உள்ளன. திருமங்கலம் நகராட்சிக்கு அருகில் இருக்கும் டோல்கேட்டால் இப்பகுதி மக்கள் பெரும்பிரச்னையைச் சந்தித்து வருகிறார்கள். அதற்கு எந்தத் தீர்வும் ஏற்படுத்தவில்லை. நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் அமைக்காததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலையில்தான் அமைச்சர் இருக்கிறார்’’ என்றார்.

தி.மு.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த அன்புநிதி, ‘`தொகுதிக்கு எந்த நலத்திட்டமும் கொண்டு வராமல், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த யோசிக்காமல், தான் பொறுப்பு வகிக்கும் துறை ரீதியாகவும் எந்த சாதனையும் செய்யாமல், வெட்டியாக விழாக்கள் நடத்துவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார். ஒரு அமைச்சருக்கு இதுதான் வேலையா? கொரோனா காலத்தில் மக்கள் வேலை இழந்து வருமானம் இழந்துள்ள சூழலில் அதற்கு எந்தத் தீர்வும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டி பூஜை செய்வதை என்னவென்று சொல்வது? எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. அதைக் கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்காதவர், அதை மறைப்பதற்காக ஜெயலலிதா கோயில் என்று சீன் காட்டுகிறார். ஏற்கெனவே பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் தவறு நடப்பதாக எழுந்த புகாரில் மத்திய அரசே அதை நிறுத்தி வைத்துள்ளது. இவர் துறையின் செயல்பாட்டுக்கு இதைவிட உதாரணம் சொல்ல முடியாது’’ என்றார்.

அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் வெற்றிபாண்டியன், ‘`நான் அ.தி.மு.க மாணவரணியில் இருந்தபோது அவரும் இருந்தார். ரொம்ப சாதாரணமாக கட்சியில் இருந்தவர்தான். டாக்டர் வெங்கடேஷின் சிபாரிசால் 2011 தேர்தலில் சாத்தூர்த் தொகுதியைப் பெற்று, அமைச்சரும் ஆனார். அமைச்சர் பதவி பறிபோனபோது சசிகலா கருணையால் மீண்டும் பதவி பெற்றார். விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜியுடன் மல்லுக்கட்டி ஒன்றும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டபோது, எப்படியோ திருமங்கலத்தைப் போராடிப் பெற்றார். அம்மா மறைவுக்குப் பின் ‘சசிகலா முதல்வராக வேண்டும்’ என்று முதலில் தீர்மானம் போட்டவர் இவர்தான். அதன்பின் தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். வளர்த்து விட்டவர்களையே எதிர்த்துப் பேச ஆரம்பித்தார். இப்போது பல வகையிலும் எடப்பாடிக்கு எடுபிடியாக இருக்கிறார். தேர்தலுக்குப் பின் அவர் காணாமல் போய்விடுவார்’’ என்றார்.

வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட 4,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதைச் சரிசெய்யவும் அமைச்சர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 10 அம்சக் கோரிக்கைகளுடன் வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்திவருகிறார்கள். போராட்டம் செய்வோருடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்தப் போராட்டம் எடப்பாடி அரசுக்குத் தேர்தலில் பெரும் பின்னடைவைத் தரும் என்கிறார்கள்.
பதறவைக்கும் பாரத்நெட் முறைகேடு!
‘`மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள பாரத்நெட் திட்ட டெண்டரில் முறைகேடு செய்த அமைச்சர் உதயகுமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்’’ என அறப்போர் இயக்கம் கோரியது. அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள வசதியை வழங்கும் ரூ.1,950 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், ஆரம்பத்திலிருந்தே பெரும் சர்ச்சைகளில் சிக்கிவருகிறது.

இந்தத் திட்டத்துக்கான டெண்டர் விதிகளை வகுத்தவர், ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு. ‘தங்களுக்கு வேண்டிய தகுதியற்ற நிறுவனத்துக்கு டெண்டரைக் கொடுக்கும் வகையில் விதிகளை அரசு மாற்ற முயன்றது. இதற்கு சந்தோஷ்பாபு வளைந்து கொடுக்கவில்லை’ எனப் புகார் எழுந்தது. இடையில் சந்தோஷ்பாபு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். டெண்டர் விதிகளும் அதன்பின் மாற்றப்பட்டன. ‘இந்த விவகாரத்தில் விஜிலென்ஸ் விசாரணை நடத்த வேண்டும்’ என்று தி.மு.க வழக்கு தொடர்ந்தது. அறப்போர் இயக்கம் இன்னொரு பக்கம் மத்திய அரசின் விஜிலென்ஸ் கமிஷன், தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் எனப் பலருக்கும் புகார் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, டெண்டரையே ரத்து செய்ய உத்தரவிட்டது மத்திய அரசு.
நெருக்கடிகளால் வெறுத்துப்போய் சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திருத்தப்பட்ட விதிகளுடன் இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்ட பாரத்நெட் டெண்டரையும் மத்திய அரசு தடுத்தது. அதனால், இன்னும் டெண்டர் விடப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்னும் ஆவேசத்துடன் இப்போது குற்றம் சாட்டுகின்றன. அமைச்சர் உதயகுமாரிடம் கேட்டால், ‘`யாருக்கு டெண்டர் கொடுக்கப் போறோம்னு எங்கள்மீது குற்றம் சொன்னார்களோ, அந்த நிறுவனத்தைத் தகுதிநீக்கம் செய்தோம். அவர்கள் இப்போது வழக்கு போட்டுள்ளார்கள். அதனால் டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாரத்நெட் வந்துவிட்டால் தனியார் தொலைக்காட்சிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்படும். அதனால் முட்டுக்கட்டை போடுறாங்க. இதில் சதி உள்ளது’’ என்கிறார்.
எல்லாக் குற்றச்சாட்டுகள் குறித்தும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டோம். ‘`எதிர்க்கட்சியினர் அரசியலுக்காகக் குறை சொல்லலாம். ஆனால், அதில் ஓரளவாவது உண்மை இருக்க வேண்டும். எய்ம்ஸ் கட்டுமான வேலை ஜப்பான் நிதி வந்தவுடன் விரைவில் தொடங்கும். எந்தப் பின்புலமும் இல்லாத எனக்குப் பொறுப்புகள் கொடுத்து, அமைச்சராக்கியவர். அவரை அப்போதிருந்தே நானும் என் குடும்பத்தினரும் குலசாமியாகத்தான் பார்க்கிறோம். ஜெயலலிதாவை சாமியாகப் பார்ப்பதால் கோயில் கட்டினேன். ஜெயலலிதா கோயில் மக்களுக்குத்தான் பயன்படப்போகிறது.

கள்ளிக்குடியைத் தனித் தாலுகாவாக உருவாக்கியுள்ளோம். திருமங்கலம் தனி வருவாய்க் கோட்டம் ஆகியுள்ளது. அரசுக் கலைக்கல்லூரி, தனிக் கல்வி மாவட்டம், நகராட்சி, தாலுகா அலுவலகங்களுக்குப் புதிய கட்டடங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதியும், கூட்டுக்குடிநீர் இணைப்பும் கொடுத்துள்ளேன். நீண்டகாலக் கோரிக்கையான திருமங்கலம் ரயில்வே மேம்பால வேலை தொடங்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனைப் பட்டா உட்பட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திருமங்கலத்தில் ஊழியர்களுடன் எனது அலுவலகம் செயல்பட்டாலும், நானே ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று மனுக்களை வாங்குகிறேன். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஐம்பது தடவையும் சில கிராமங்களுக்கு அதிகபட்சமாக 200 தடவையும் சென்றிருக்கிறேன். அந்த அளவுக்கு மக்களுடன் நெருக்கமாக இருக்கிறேன். தொகுதியில் குடிமராமத்துப்பணி சிறப்பாக நடைபெற்றுள்ளதால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துக் கண்மாய்களும் நிரம்பியுள்ளன. முக்கியமாக திருமங்கலம் பிரதானக் கால்வாய் தூர்வாரப்பட்டு, தண்ணீர் ஓடுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர்களின்போது பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம். தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். தற்போது ஐ.டி முதலீடுகளால் தென்மாவட்டங்கள் வளர்ச்சியடையவுள்ளன’’ என்றார்.