மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி: செல்லூர் ராஜூ

 செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லூர் ராஜூ

அழகிரி மட்டும் தி.மு.க தலைவராக இருந்திருந்தால், நாங்கள் அச்சத்துடன் இருந்திருப்போம்.

‘இந்த ஆண்டுக்கான நோபல் விருது அறிவிப்பில் தமிழக விஞ்ஞானி புறக்கணிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்று நோபல் தேர்வுக்குழுவுக்கே மீம்ஸ் பறக்கும் வகையில் மீம்ஸ் கிரியேட்டர்களை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர்...‘மதுரை இனி சிட்னியாகும்’ என்ற அறிவிப்பால், இட்லிக்கு வெரைட்டியான சட்னிகளை மட்டுமே அறிந்திருந்த மதுரை மக்களைத் திகைக்க வைத்தவர். சிட்னியை மதுரை அளவுக்குத் தரம் உயர்த்த ஆஸ்திரேலிய அரசை உசுப்பி விட்டவர்...‘`போற போக்குல என்னையும் கொரோனா டச் பண்ணிட்டுப் போயிருச்சு. அதனால மாஸ்க் தேவையில்லை...’’ என்று சொன்னது மட்டுமல்லாமல், கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததற்கு அரசு மருத்துவமனை செல்லும் சாலையை மறித்து தனக்கு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த வைத்து கொரோனாவைத் தெறிக்க விட்டவர்...

வைகை அணை நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோலை டேப் போட்டு ஒட்டி மிதக்க விட்டு, பள்ளிப் பிள்ளைகளின் புராஜெக்ட்டுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தெர்மாகோலை சர்வதேச அளவுக்குப் புகழ்பெற வைத்தவர். கூகுளில் ‘தெர்மாகோல்’ என்று தேடினால் ‘செல்லூர்’ என்று வரும் அதிசயத்தை நிகழ்த்தியவர்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

‘`அழகிரி மட்டும் தி.மு.க தலைவராக இருந்திருந்தால், நாங்கள் அச்சத்துடன் இருந்திருப்போம். கலைஞரின் மூளை அழகிரியிடம்தான் உள்ளது. ஸ்டாலின் தலைவர் பதவிக்குத் தகுதியற்றவர்’’ என்று அதிரடியாகப் பேசி அ.தி.மு.க-வினரை மட்டுமல்ல, தி.மு.க-வினரையும் திகிலடைய வைத்தவர்.மதுரையில் டெங்கு தீவிரமாகப் பரவிய நேரத்தில், ‘`எந்த மருந்துக்கும் டெங்கு கொசு சாகாது. வீட்டு வாசலில் சாணம் தெளித்தால் எந்தக் கிருமியும் வராது’’ என்று புதிய மருத்துவ ஆலோசனையைக் கூறி அதிர வைத்தவர்...மனு கொடுக்க வந்த பொதுமக்களைப் பார்த்து, ‘`தலையில எண்ணெய்கூட இல்லாமல் பஞ்சப்பராரியாக வந்திருக்கீங்களே’’ என்று எம்.ஆர்.ராதா ஸ்டைலில் பேசி மக்களை அதிர வைத்தவர்... செல்லூர் ராஜூவின் பிரதாபங்களுக்கு எல்லையே இல்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை மேடையில் வைத்துக்கொண்டு, ‘`இவர் ‘அமைதிப்படை’ அமாவாசை மாதிரி அரசியலில் வளர்ந்தவர்...’’ என்று பேச, அதை இன்றுவரை சொல்லி வருகிறார்கள் மக்கள். கோபாலகிருஷ்ணனும் அதை மறக்கவில்லை.

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், செல்லூரில் அதே திட்டத்தில் அமைக்கப்பட்ட ரவுண்டானாவைப் பற்றி அமைச்சர் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த ரவுண்டானாவின் தரைத் தளம் இடிந்து கட்சியினர் தொபுக்கடீர் என்று விழுந்த சம்பவமும் நடந்தது.காமெடியாகத்தான் பேசுவார் என்று நினைத்துவிடக் கூடாது. அவர் சீரியஸாகப் பேச ஆரம்பித்தால் கட்சியில் பிரளயமே ஏற்படும். அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் குறித்து செல்லூர் ராஜூ அசால்ட்டாகக் கிளப்பிவிட்ட விவகாரம், பத்து நாள்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தூங்க விடாமல் செய்தது.

ஜெயலலிதா இருந்தபோது அவரைக் கவர்வதற்காகப் பல ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தினார். பிரமாண்டமாகப் பால் காவடி, வேல் காவடி, பறவைக்காவடிகளை எடுக்க வைத்து, காவடி எடுப்பதை அவுட்சோர்ஸிங் பணியாக்கினார். மதுரையில் விழாக்கள் எடுப்பதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் போட்டி போட்டு, மக்களை டயர்டாக்கினார். ஜெ. மறைவுக்குப்பின் ஆடம்பர விழாக்களைக் குறைத்துக்கொண்டவர், எடப்பாடி முதலமைச்சரான பின்பு தன் பேரப்பிள்ளைகளின் காதணி நிகழ்ச்சியைப் பாண்டி கோயிலில் பிரமாண்டமாக நடத்தி ‘மதுரை குலுங்க குலுங்க’ வைத்தார்.இப்படிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்தவராக, உலகத் தமிழர்கள் உற்று நோக்கும் செலிபிரிட்டியாக வலம் வரும் செல்லூர் ராஜூவை, 20 வருடங்களுக்கு முன்பு செல்லூர்ப் பகுதி மக்களுக்கே தெரியாது என்றால் நம்ப முடிகிறதா?

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் செயலாளராக ராஜன் செல்லப்பா இருந்தபோது, வட்டச் செயலாளராக இருந்தவர் செல்லூர் ராஜூ. தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ராஜன் செல்லப்பா இதுவரை அமைச்சராக முடியவில்லை. செல்லூர் ராஜூ பத்து ஆண்டுகளாக அமைச்சர்.  இன்று பரபரப்பாகத் திகழும் செல்லூர் ராஜூ ஒரு காலத்தில் அமைதியாக இயங்கியவர். வியாபாரத்தில் பெரிய ஆளாக வர வேண்டும் என்பதுதான் அவருடைய இலக்காக இருந்தது. உசிலம்பட்டி வட்டாரத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்லூர் ராஜூவின் பெற்றோர், மதுரை செல்லூரில் குடியேறி யானைக்கல் பகுதியில் பழக்கடை நடத்தினார்கள். உசிலம்பட்டியிலுள்ள அரசு விடுதியில் தங்கி பள்ளிக்கல்வியைத் தொடர்ந்த ராஜூ, விடுமுறை நாள்களில் தன் பெற்றோருடன் வியாபாரத்தில் ஈடுபடுவார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அழுத்தம் திருத்தமாகப் பேசுவார் என்பதால், பள்ளி பிரேயரில் நாளிதழில் உள்ள முக்கியச் செய்திகளைப் படிக்கும் பணியை ஆசிரியர் இவருக்கு வழங்கியுள்ளார். ‘`எனக்கு அரசியல் தெரியக் காரணமே அந்த அனுபவம்தான்’’ என்று அடிக்கடி கூறுவார். பின்பு மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை சேர்ந்தார். கல்லூரிக் காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக மாறி, பட ரீலிஸின்போது முதல் ஆளாக நின்றார். யானைக்கல், செல்லூர்ப் பகுதியில் அ.தி.மு.க கூட்டங்களில் தொண்டர்களோடு தொண்டராக வலம் வந்தவருக்கு, குடும்பத் தொழிலான பழக்கடை மூலம் அப்போது மாவட்ட அ.தி.மு.க-வில் முக்கிய நிர்வாகியாக இருந்த பழக்கடை பாண்டியின் அறிமுகம் கிடைக்கிறது. சீட்டு கம்பெனி நடத்தி நெசவாளர்களுக்கு ஃபைனான்ஸ் செய்ய ஆரம்பித்தார். பின்பு கோரிப்பாளையத்தில் பிராந்திக்கடை நடத்தினார். பளீர் டிரஸ், பளிச் சிரிப்பு, பணிவு என ஸ்கூட்டரில் ஸ்மார்ட்டாக வலம் வந்த செல்லூர் ராஜூவின் தோற்றம், அப்போது மாவட்டச் செயலாளர்களாக இருந்த ராஜன் செல்லப்பா, எஸ்.டி.கே ஜக்கையன் போன்றோரை ஈர்த்தது.செல்லூர் வட்டச்செயலாளராகப் பொறுப்பேற்றவர், 1996-ல் செல்லூர்ப் பகுதி மாநகராட்சி கவுன்சிலர் ஆனார். அங்கிருந்து அவருடைய அரசியல் கிராஃப் உயர்கிறது.

டி.டி.வி.தினகரன் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது மதுரையில்தான் தங்கியிருப்பார். தினமும் அவரைப் பார்த்துக் கும்பிடு போட்டு, மன்னார்குடி ரூட்டைத் தெரிந்துகொண்டார். அதன் விளைவால், 2011-ல் மதுரை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ ஆனார். மாநகரச் செயலாளர், அமைச்சர் என அடுத்தடுத்து பதவிகள் வந்தன. கூட்டுறவுத் துறைக்குத் தொடர்ச்சியாகப் பத்தாண்டுகளாக அமைச்சராக இருக்கிறார்.அமைச்சரான நேரத்தில், மகன் தமிழ்மணி சாலை விபத்தில் மரணமடைந்தது அவருக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகன் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, அந்தத் துயரிலிருந்து மீண்டு வந்தார். சென்னையில் ஒரு மகளும் மதுரையில் ஒரு மகளும் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார்கள்.

மதுரை மாநகரில் மற்ற எம்.எல்.ஏ-க்கள் இவருடன் பட்டும்படாமல் இருப்பதால், தனக்கென்று ஒரு ஆதரவாளர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு வலம் வருகிறார். தொழில்ரீதியான விஷயங்களுக்குச் சிலர், நிகழ்ச்சிகளுக்குக் கூட்டம் சேர்க்கவும் தன் பாதுகாப்புக்கும் சிலர் என ஆட்களைப் பிரித்துப் பிரித்து வைத்திருக்கிறார்.

தொகுதியிலும் மதுரையிலும் செல்லூர் ராஜூ மீது ஏகப்பட்ட அதிருப்தி நிலவுகிறது. மாநகராட்சியின் சில பகுதிகளும் கிராமங்களும் கலந்ததாக இருக்கிறது மதுரை மேற்குத்தொகுதி. ‘`விவசாயிகள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள் அதிகம் வசிக்கும் தொகுதி இது. சிறுதொழில்கள் நசிந்து, எளிய மக்கள் வேலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பத்தாண்டுகள் அமைச்சராக இருந்தும், அதற்கு எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை. ஆனால், அவர் குடும்பத்தினர் ஜவுளிக்கடை, நகைக்கடை, ஃபைனான்ஸ் எனப் பல புதிய தொழில்களில் முதலீடு செய்து வசதியைப் பெருக்கிக்கொண்டனர்’’ என ஆளுங்கட்சியினரே கூறுகிறார்கள்.

சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமலும் குடிநீர் கிடைக்காமலும் மக்கள் நீண்ட காலமாகச் சிரமப்படுகிறார்கள். கடந்த தேர்தலில் ஓட்டு கேட்டுப் போனபோது அப்பகுதி மக்கள் அமைச்சரைத் துரத்திய சம்பவம் நடந்தது. மதுரையின் நீராதாரம், அவர் தொகுதியில் இருக்கும் மாடக்குளம் கண்மாய். அதைத் தூர்வாரி, தண்ணீரைச் சேமித்திருந்தாலே குடிநீர்ப் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்.

‘`தேம்ஸ் நதி போல் மதுரையில் ஓடும் வைகை ஆறு மாறும்’’ என்றார். ஆனால், சமீபத்தில் ரசாயனக் கழிவுகளால் பத்தடி உயரத்துக்கு நுரை பொங்கியது. வைகையைத் தூய்மைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வைகைக் கரையோரம் அமைக்கப்பட்ட சாலைகளால் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்று சொன்னாலும், அகன்று விரிந்து ஓடிய ஆறு குறுக்கப்பட்டுள்ளது சோகம். அதேநேரம் உருப்படியாக காளவாசலில் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.கூட்டுறவுத்துறையிலும் பல பிரச்னைகள். கமிஷன் பஞ்சாயத்தால், ரேஷன் கடைகளிலுள்ள சாக்குகள் நீண்ட காலமாக ஏலம் விடாமல் கிடந்து வீணானதை இன்றும் சொல்கிறார்கள். ‘`கூட்டுறவு வங்கிப் பணியாளர் நியமனத்திலும், குண்டூசி முதல் கம்ப்யூட்டர்கள் வரை கூடுதல் விலைக்கு வாங்கியும் ஆதாயம் பார்க்கப்பட்டது’’ என்கிறார்கள்.

விஞ்ஞானத்துடன் வீம்பாக விளையாடுபவருக்கு வெற்றியா, தோல்வியா என்பதை வரும் தேர்தல் சொல்லும்.

``ஜெயலலிதா இல்லாவிட்டாலும் தேர்தலில்வெற்றிபெறுவோம்’’
``ஜெயலலிதா இல்லாவிட்டாலும் தேர்தலில்வெற்றிபெறுவோம்’’

ந்த எல்லாவற்றையும் பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பேசினோம். ‘`நான் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கூட்டுறவு வங்கிகளை நவீனப்படுத்தி யிருக்கிறேன். 23 மாவட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உரிமை பெற்றிருக்கிறோம். வங்கிகள் அனைத்தையும் கணினிமயமாக்கியிருக்கிறோம். திருட்டு ஏதும் நடக்காதபடி பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்தியிருக்கிறோம். கூட்டுறவுக் கடன் சங்கங்களைத் தனியார் வங்கி அளவுக்குத் தரம் உயர்த்தியிருக்கிறோம். வாடிக்கையாளர் சேவை சிறப்பாகச் செய்யப்படுகிறது. எந்தவொரு முறைகேடும் நடக்காத வகையில் பார்த்துவருகிறோம். சிறப்பான சேவைக்கு வங்கிப் பணியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளோம். எங்கள் நோக்கம் கந்துவட்டிக் கொடுமையை ஒழிப்பது. மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், வியாபாரிகளுக்கு உதவும் வகையில் அதிக அளவில் கடன் வழங்குகிறோம். ஒரு கோடியே எட்டு லட்சம் விவசாயிகளுக்கு 59,000 கோடி ரூபாய் வட்டி இல்லாக் கடன் கொடுத்திருக்கிறோம். இது பெரிய சாதனை.

ரேஷன் கடைகள் மூலம் ஒரு கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகளுக்குப் பொருள்கள் வழங்குகிறோம். ஸ்மார்ட் ரேஷன் கார்டு, பயோ மெட்ரிக் முறை கொண்டு வந்தோம். 2,000 புதிய கடைகள் திறந்திருக்கிறோம். நடமாடும் கடைகள் திறந்து 50 குடும்பங்கள் வாழ்கிற ஊர்களில் நேரடியாகச் சென்று பொருள்கள் கொடுக்கிறோம். ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் அதிக ஊதிய உயர்வு கொடுத்திருக்கிறோம்.

மதுரை மாவட்டத்தில் நான் அமைச்சராக வந்த பின்புதான் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் பல பணிகள் நடக்கின்றன. முல்லைப் பெரியாற்றிலிருந்து மதுரைக்கு 1,296 கோடி ரூபாய் செலவில் குடிநீர் கொண்டு வரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. காளவாசல் பாலம் கட்டித் திறக்கப்பட்டது. வைகையின் இருபுறமும் எட்டு கிலோ மீட்டருக்கு விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. குருவிக்காரன் உயர்மட்ட சாலைப்பாலம் வேலை நடந்து வருகிறது. காமராசர் பாலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பெரியார் பேருந்து நிலையம் நவீனமாக்கப்பட்டு வருகிறது.

என்னைப் பொறுத்தவரையில் நான் எளிமையாக இருக்கிறேன். கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை. மதுரையில் ரவுடியிசம் இல்லை. தி.மு.க ஆட்சியில் எப்படி இருந்தது என்பது மக்களுக்குத் தெரியும். எங்கள் கட்சியில் கோஷ்டிப்பூசல் ஒன்றுமில்லை. ஜெயலலிதா இல்லாவிட்டலும் தேர்தலில் வெற்றி பெறுவோம்’’ என்றார் அவர்.