
பெரிய அளவுக்குப் பணம் சேர்ந்துவிட்டாலும், ராதாகிருஷ்ணன் பிரமாண்டம் எல்லாம் காட்டிக் கொள்வதில்லை.
90களின் தொடக்கத்தில் உடுமலைப் பேட்டை வீதிகளில், கக்கத்தில் ஒரு பையை வைத்தபடி கேபிள் ஏஜென்ட் ஒருவர் அனைத்து வீடுகளுக்கும் விசுக் விசுக்கென்று நடந்து சென்று வசூல் செய்வார். ஊருக்குள் அவரை, ‘கேபிள் ராதா’ என்று அழைப்பார்கள். அவ்வப்போது இருசக்கர வாகனத்திலும் வந்து வசூல் செய்த அந்த கேபிள் ராதா என்பவர்தான், தற்போதைய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ள உடுமலை ராதாகிருஷ்ணன்.
உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கோலார்பட்டி கிராமம்தான் ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர். ராதாகிருஷ்ணனுக்கு ஒரு சகோதரியும் உண்டு. அவர் தந்தை அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்தார். பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் பி.காம் படித்தபோதே ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் ஆசை முளைத்துவிட்டது. அப்போதே அம்மா பேரவையில் இணைந்துவிட்டார்.

1991-ம் ஆண்டு பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் ஆனார். ஐந்தே ஆண்டுகளில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் ஆனார். கூடவே உடுமலையில் அன்னை கேபிள் டி.வி-யைத் தொடங்கி அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ராக்கெட் வேகத்தில் உயரம் தொட்டுவிட்டார். பா.வெ.தாமோதரன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அவரை குஷிப்படுத்தி, அவரது குட்புக்கில் இடம் பிடித்தார் ராதாகிருஷ்ணன். கோவை புறநகர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர், திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவைத் தலைவர் பதவிகள் தேடி வந்தன.

அப்போதும் அமைச்சர்களுக்கு மன்னார்குடி குடும்பம்தானே ரூட் பாஸ். தாமோதரன் மன்னார்குடி குடும்பத்தினரைக் ‘கவனிக்க’ச் செல்லும்போது ராதாகிருஷ்ணனும் போவது வழக்கம். ஒருமுறை தாமோதரன் போக முடியாதபோது, அவர் சார்பில் ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது நெளிவுசுளிவுகளைக் கற்றார். ராவணன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்பட்டது. அது கட்சியிலும், பிசினஸிலும் ராதாகிருஷ்ணனுக்குப் பல மடங்கு வளர்ச்சியைக் கொடுத்தது. ‘`கட்சியே ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தை எதிர்க்கும் இந்தச் சூழலிலும், ஜெயா டி.வி-யை நிர்வாகம் செய்துவரும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுடன் நெருக்கம் காட்டி வருகிறார் ராதாகிருஷ்ணன்’’ என்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.
சாதாரண கேபிள் டி.வி ஆபரேட்டராக இருந்த ராதாகிருஷ்ணன், 2011-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது தனது கேபிள் பிசினஸ் நெட்வொர்க்கை தமிழகம் முழுவதும் பரப்பினார். அதற்கு அடுத்த ஆண்டே, திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் ஆனார். கட்சியில் சீனியரான பொள்ளாச்சி ஜெயராமனிடம் இருந்த தேர்தல் பிரிவுச் செயலாளர் பதவியும் ராதாகிருஷ்ணன் கைக்கு வந்தது. இன்றுவரை இருவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது.
பொள்ளாச்சி ஜெயராமனைப் போலவே, முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, காங்கேயம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போன்ற சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு திருப்பூர் மாவட்டத்தின் முக்கியத் தலைவராக உருவெடுத்தார் ராதாகிருஷ்ணன். அதன்பிறகு எம்.எல்.ஏ பதவிக்கு குறிவைத்தார். 2016-ம் ஆண்டு உடுமலைப்பேட்டைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ராதாகிருஷ்ணன். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போதே அமைச்சராகும் வாய்ப்பும் கிடைத்தது. வீட்டுவசதித் துறைக்கு அமைச்சரானார். அதனால், அவர் வசம் இருந்த தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனிடம் ஒப்படைக்கப் பட்டது.

ஜெ. மறைவுக்குப் பிறகு எடப்பாடி, பன்னீர் செல்வம் அணிகள் பிரிந்து மீண்டும் இணைந்தபோது ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதித் துறை பறிக்கப்பட்டு பன்னீரிடம் வழங்கப்பட்டது. அதற்குப் பதிலாக கால்நடை பராமரிப்புத்துறை வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் பதவியும் பிடுங்கி, மீண்டும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வழங்கப்பட்டது. சசிகலா தரப்புடன் ராதாகிருஷ்ணன் காட்டிய நெருக்கமே, அவரது இறங்குமுகத்துக்குக் காரணம் என்று கிசுகிசுத்தனர்.
ஏற்கெனவே மொத்த சீனியர்களையும் ஓரங்கட்டி மேலே வந்த ராதாகிருஷ்ணனுக்கு, மீண்டும் அந்த இடத்தைப் பிடிப்பது கஷ்டமான காரியமா என்ன? பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தார், செய்ய வேண்டியதைச் செய்தார். 2019-ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத் தலைவர் பதவி ராதாகிருஷ்ணனைத் தேடி வந்தது. மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் ஆகிவிட்டார். தற்போது கொங்கு மண்டலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக, எடப்பாடி பழனிசாமியின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
என்றாலும், சொந்தக் கட்சியிலேயே ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்புகள் அதிகம். சீனியர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``எம்.ஜி.ஆர் காலத்து சீனியர்களையெல்லாம், ‘உங்களால இனி என்ன ஆகப்போகுது?’ என ஓப்பனாகவே கேட்டு ஒதுக்கிவிட்டார். அவரது சமுதாயத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். மற்ற சமூகத்தினரைப் புறக்கணிக்கிறார். ஏதாவது கேட்டுச் சென்றால், ஒருமையில் முகத்தில் அடித்தபடி பேசுகிறார். கட்சிக்காரர் களிடமே இப்படி என்றால் மக்களிடம் கேட்கவா வேண்டும்?’’ என்றனர். ஜெயலலிதா காலத்தில் தொகுதிக்குள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வரும் ராதாகிருஷ்ணன், இப்போது மக்கள் நடமாட்டமே இல்லாத கிராமத்துக்குள் சென்றாலும் சைரன் ஒலியுடன் போலீஸ் வாகனங்கள் சீறிப்பாய்கின்றன.

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், ‘`தனது சொந்தப் பொருளாதாரத்தை உயர்த்திய அளவுக்கு, அவர் தொகுதியை உயர்த்தவில்லை. ஜமீன் ஊத்துக்குளி போன்ற பல பகுதிகளில் தண்ணீர்ப் பிரச்னை இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. குளம் தூர்வாருகிறோம் என்ற பெயரில் மணலைக் கொள்ளையடித் துள்ளனர். இங்கு அதிக விளைச்சல் தரும் தக்காளி, மல்பெரி, வெங்காயம் போன்றவற்றை சந்தைப்படுத்த வசதிகள் இல்லை. குளிர்பதனக் கிடங்கு ஏற்படுத்தித் தரவில்லை. அமராவதி, திருமூர்த்திமலை போன்ற சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளரும், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவருமான மதுசூதனன், ‘`கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவே, கால்நடை மருத்துவ மனைகளில் போதுமான அளவுக்கு மருந்துகள் இல்லை. கிடைக்கும் மருந்துகளும் தரமாக இல்லை. விவசாயிகளுக்குப் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் கோழி கொடுத்தனர். ஒரு கோழிக்குஞ்சின் விலை ரூ.50. ஆனால், சாலை ஓரமாக விற்றுக்கொண்டிருக்கும் தரமற்ற கோழிக்குஞ்சுகளையே கொடுத்தனர். 10 கோழிக்குஞ்சுகள் வாங்கினால், இரண்டுதான் தங்கியது. சமீபத்தில் மாடுகளுக்கு வந்த அம்மை நோய்க்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பல மாடுகள் இறந்தேவிட்டன. அதற்கு மருத்துவ உதவி செய்யவில்லை. தேர்தல் நெருங்குவதால், இங்கு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். பெரும்பாலான திட்டங்கள் அவர்களது கட்சிக் காரர்களுக்குத்தான் செல்கின்றன’’ என்றார். அமைச்சரின் சொந்தத் தொகுதி என்பதால், இங்கு கறவை மாடுகள், ஆடுகள் சற்று அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. அதிலும் பணம் தாராளமாக விளையாடுகிறது.
கேபிள் டி.வி ஆபரேட்டர்களிடம் பேசினோம். ‘`ஏற்கெனவே, அன்னை கேபிள் டி.வி நடத்தி வந்தவர், அரசு கேபிள் டி.வி தலைவரான பிறகு அக்ஷயா கேபிள் என்ற பெயரில் பிசினஸ் நடத்துகிறார். அந்த நிறுவனத்தை முன்னேற்றுவதில்தான் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அரசு கேபிள் டி.வி-யில் கட்டணம் குறைவாக இருந்தாலும், டிராய் விதிகள்படி எம்.எஸ்.ஓ-க்கள், சேனல் உரிமையாளர்களுக்கு பிராட் காஸ்டிங்குக்குப் பணம் கொடுக்க வேண்டும். அப்படித் தராமல் கோடிக் கணக்கில் பாக்கி வைத்துள்ளனர். இதனால் அரசு கேபிளின் கடன் பலமடங்கு அதிகரித்துவிட்டது. அரசு கேபிள் டி.வி இலவச செட்டாப் பாக்ஸ் தருகிறோம் என்ற பெயரில் மோசடி செய்கின்றனர். தனியாரைவிட அதிக விலைக்கு செட்டாப் பாக்ஸைக் கொள்முதல் செய்கின்றனர். அவை ஆபரேட்டர்கள் மூலம்தான் மக்களுக்குச் செல்லும். ஆனால், ஆபரேட்டர்களுக்கு அவை இலவசமாகக் கிடைக்காது. 100 இணைப்புகளுக்கு லைசென்ஸ் வைத்திருந்தால், அவற்றில் ஐம்பதுக்கு மட்டும் செட்டாப் பாக்ஸ் கிடைக்கும். அதற்கு தனியாகக் காசு வாங்கிக்கொண்டு, அமைச்சருக்கு நெருக்கமான சில தரகர்கள் தருகின்றனர். அரசுக்கு அந்தப் பணம் போவதில்லை. அந்த வகையிலும் அரசுக்குப் பெரிய அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அவரது சொந்தத் தொகுதியான உடுமலைப்பேட்டையில்கூட, அரசு விதித்ததைவிட அதிகமாகவே கேபிள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என்றனர் அவர்கள்.
தமிழ்நாடு கேபிள் டி.வி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சேகர், ‘`அரசு கேபிள் டி.வி நிறுவனம் தொடங்கப்பட, நானும் ஒரு காரணமாக இருந்தவன். உடுமலை ராதாகிருஷ்ணன் கேபிள் ஆபரேட்டாக இருந்தவர் என்ற அடிப்படையில்தான் நாங்கள் அவரை ஆதரித்தோம். ஆனால், அவர் பதவிக்கு வந்தபிறகு தங்களது கட்சிக்காரர்களுக்கு மட்டுமே உதவும் வகையில் செயல்பட்டார். இதனால், அரசு கேபிள் டி.வி-யில் இருந்து பல நிறுவனங்கள் வெளியில் சென்றுவிட்டன. உடுமலையில் கேபிள் ஆபரேட்டராக இருந்தவர், அந்தப் பதவிக்கு வந்து தனது நிறுவனத்தை மாநிலம் முழுவதும் பரப்பினார். தனது வளர்ச்சியைப் பெருக்கி, அரசு கேபிளை டம்மியாக்கிவிட்டார்’’ என்று ஆதங்கத்துடன் சொன்னார்.
பெரிய அளவுக்குப் பணம் சேர்ந்துவிட்டாலும், ராதாகிருஷ்ணன் பிரமாண்டம் எல்லாம் காட்டிக் கொள்வதில்லை. கோலார்பட்டியில் உள்ள அவர்களது வீடு தற்போது புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவர் பகல் நேரங்களில் ஓய்வெடுக்க, உடுமலை ஸ்டேட் பாங்க் காலனியில் ஒரு வீடு உள்ளது. ராதாகிருஷ்ணனின் சகோதரி கேரளாவில் இருப்பதாகவும், அங்குதான் அவர் பல முதலீடுகளை இறக்கியிருப்பதாகவும் சொல்கின்றனர். அதேபோல, வெளிநாடுகளிலும் மறைமுகமாக ஹோட்டல் பிசினஸ் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
அமைச்சர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினோம். ‘`சட்டமன்ற உறுப்பினரானவுடன் நான் வீட்டுவசதித்துறை அமைச்சரானேன். அப்போது 2,10,000 ரூபாய் முழு மானியத்தில் அதிக வீடுகள் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் 10 லட்சம் வீடுகளைக் கேட்டுப் பெற்றேன். என் தொகுதியில் நிறைய வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளேன். கால்நடைத் துறையைப் பொறுத்தவரை, ரூ.1,000 கோடி மதிப்பில் 1,200 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே பிரமாண்டமான கால்நடைப் பூங்கா சேலம் தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரே ஆண்டில் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவிருப்பது தமிழகத்தில்தான். சேலம், தேனி மற்றும் உடுமலைத் தொகுதியில் கால்நடை ஆராய்ச்சி மையங்கள் அமையவுள்ளன. நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தில், 5.5 லட்சம் மகளிருக்கு நாட்டுக் கோழி கொடுத்துள்ளோம். 12.5 லட்சம் மகளிருக்கு வெள்ளாடு, 1.5 லட்சம் மகளிருக்கு கறவை மாடுகள் கொடுத்துள்ளோம். மாடு, ஆடு போன்றவற்றை வெளிச்சந்தையில்தான் வாங்குகிறோம். தரப் பரிசோதனை செய்து வாங்க முடியாது. வரும்போது நல்லமுறையில்தான் வருகின்றன. வந்தபிறகு சில இறந்துவிடுகின்றன. அவற்றுக்கு இன்சூரன்ஸ் வசதி செய்து கொடுக்கிறோம். ஏதாவது தவறு நடந்து, அது என் கவனத்துக்கு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறேன்.

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தில் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. முன்பு தமிழகத்தில் ஒரே கேபிள் டி.வி கனெக்ஷன் மட்டும்தான் இருந்தது. இப்போது மத்திய அரசு 150 பேருக்கு டிஜிட்டல் லைசென்ஸ் கொடுத்துள்ளது. தனியாரிடம் அதிக லைசென்ஸ் இருப்பதால், அரசு கேபிள் டி.வி வருவாயில் சிக்கல்கள் உள்ளன. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் காலத்தில் வேண்டுமானால் ஏதாவது முறைகேடு நடந்திருக்குமா என்று பார்க்க வேண்டும். நான் வந்தபிறகு எந்தக் கொள்முதலும் செய்யவில்லை. பிறகு எப்படி ஊழல் நடக்கும்?
கேபிள் டி.வி தொழில் தொடர்பாக எல்லோரும் வந்து என்னைப் பார்க்கத்தான் செய்வார்கள். சன் டி.வி-யிலிருந்துகூட வந்து பார்க்கின்றனர். அது வணிகரீதியான தொடர்பு. இதில் அரசியல் கிடையாது. என்னுடைய மூலதனமே கேபிள் டி.விதான். அரசியல்வாதி தொழில் செய்யக் கூடாதா? தொழில் செய்யாமல் எப்படிச் சாப்பிட முடியும்?
அ.தி.மு.க-வில் நான்காவது தலைமுறை வந்துவிட்டது. இங்கு உழைப்பவர்களுக்குத்தான் அங்கீகாரம் கிடைக்கும். உடுமலையில் எங்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர்தான் என்னை எதிர்க்கிறார்கள். அவர்களைக் கட்சியை விட்டு நீக்க வெகு நேரம் ஆகாது. அவர்களையெல்லாம் நான் பொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்களெல்லாம் என்னிடம் வாங்கிச் சாப்பிட்டவர்கள்தான்.
தொகுதியில் எட்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். எல்லா நல்லது கெட்டதுக்கும் சென்று வருகிறேன். என் மனதுக்குத் தோன்றினால், நானே நல்லது செய்வேன். மற்றபடி, யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்’’ என்றார்.

கடத்தல் க்ளைமாக்ஸ்!
‘`கொரோனா காலகட்டத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன், பட்டப்பகலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்துக் கடத்தப்பட்டார். இதுதொடர்பான திக்திக் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. அமைச்சரின் சகலமும் தெரிந்த கர்ணன் கடத்தப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய மர்மம் இருக்கிறது. அந்த மர்மம் தற்போதுவரை வெளியாகவில்லை. கர்ணன்தான் இங்கு நிழல் அமைச்சர். பண விவகாரங்களிலும் கட் அண்ட் ரைட்டாகப் பேசிவந்துள்ளார் கர்ணன். இந்நிலையில், ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கர்ணன் உறுதியளித் ததாகவும், சொன்னபடி செய்யாததால் கடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையான காரணம் வேறு. அது அமைச்சருக்கும், கர்ணனுக்கும், சில போலீஸாருக்கும் மட்டுமே தெரியும். அதனால்தான் அந்த வழக்குஅமுக்கப்பட்டது. இப்போதுவரை ராதாகிருஷ்ணனுடன்தான் கர்ணன் இருக்கிறார்’’ என அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரே சொல்கின்றனர்.
அமைச்சரிடம் கேட்டபோது, ‘`தனிப்பட்ட பிரச்னைகாரணமாக, என் உதவியாளர் கர்ணன் கடத்தப்பட்டிருக்கலாம். ‘அதில் என்ன இருக்கிறதோ நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று போலீஸாரிடம் சொல்லிவிட்டேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு கர்ணனை விலக்கி வைத்துவிட்டேன். இத்தனை நாள்கள் உடன் இருந்ததால் சில பணிகளை அவர் ஃபாலோ செய்கிறார், அவ்வளவுதான்’’ என்றார்.