மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி: வி.எம்.ராஜலட்சுமி

வி.எம்.ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
வி.எம்.ராஜலட்சுமி

எல்.ஆண்டனிராஜ்

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் வி.எம்.ராஜலட்சுமிக்கு இடம் கொடுக் கப்பட்ட தகவல் வெளியானபோது, ‘குருவி தலையில் பனங்காயா?’ என அ.தி.மு.க-வினரே ஆச்சர்யப் பட்டார்கள். காரணம், அந்த அமைச்சரவையில் மிகக்குறைந்த வயது கொண்டவர் அவர்தான். அப்போது அவருக்கு வயது 30. அமைச்சரவையில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையில் இளம் ரத்தத்தைப் பாய்ச்சி புதிய திட்டங்களை நிறைவேற்றினாரா? தனக்கு வாக்களித்த சங்கரன்கோவில் மக்களின் மேம்பாட்டுக்கு என்ன செய்து கொடுத்தார்?
மந்திரி தந்திரி: வி.எம்.ராஜலட்சுமி

தொகுதி ரீவைண்ட்!

அ.தி.மு.க-வின் எஃகுக்கோட்டையாக இருப்பது, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி. 1980-ம் ஆண்டு முதன்முதலாக இந்தத் தொகுதியை அ.தி.மு.க கைப்பற்றியது. இடையில் 1989-ம் ஆண்டு தேர்தலில் மட்டும் தி.மு.க வசம் இந்தத் தொகுதி சென்றது. அதன்பின் தொடர்ச்சியாக அ.தி.மு.க-வே இந்தத் தொகுதியைக் கைப்பற்றியது. 1996-ம் ஆண்டு தமிழகம் முழுக்க மோசமாகத் தோற்றபோதும், அ.தி.மு.க வென்ற நான்கு தொகுதிகளில் இதுவும் ஒன்று.

அமைச்சரின் வீடு
அமைச்சரின் வீடு

2011 சட்டமன்றத் தேர்தலில் வென்று அமைச்சராக இருந்த சொ.கருப்பசாமி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய முத்துச்செல்வி வென்றார். அவர்மீது ஜெயலலிதாவுக்கு நல்ல அபிப்ராயம் இல்லாமல்போனதால், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதியவரான ராஜலட்சுமிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆசிரியர் கனவு டு அமைச்சர்!

சங்கரன்கோவிலில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி படிப்பில் படுசுட்டி. விவசாய வேலை செய்து வந்த அவரின் தந்தை கிருஷ்ணன், ராஜலட்சுமியை எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வைத்தார். இளம் வயதிலிருந்தே ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த ராஜலட்சுமி, பி.எட் படித்து முடித்தார்.

செயல்படாத பேருந்து நிலையம்
செயல்படாத பேருந்து நிலையம்

ஆசிரியர் வேலைக்கான ஆயத்தத்தில் இருந்தபோது சங்கரன்கோவிலில் அ.தி.மு.க நகர இணைச் செயலாளராக இருந்த இ.வேலுச்சாமியின் மகன் முருகனுடன் திருமணம் முடிந்தது. அதன்பிறகும் ஆசிரியர் வேலைக்கான தேடல் அவரிடம் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், ராஜலட்சுமியின் மாமனாரான நாட்டாண்மை இ.வேலுச்சாமிக்கு ஒரு கனவு இருந்தது. அதுதான் ராஜலட்சுமியை அரசியலுக்குள் இழுத்து வந்தது.

மந்திரி தந்திரி: வி.எம்.ராஜலட்சுமி

எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான இ.வேலுச்சாமி, அ.தி.மு.க தொடங்கப்பட்ட 1972 முதலாகவே கட்சியில் ஈடுபாட்டுடன் இருந்தார். ஒரு சைக்கிளை வைத்துக்கொண்டு அரசியலில் அவர் காட்டிய வேகமும் ஈடுபாடும் அவரை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்க வேண்டும். ஆனால், படிப்பறிவு இல்லாததால் அவர் புறக்கணிக்கப்பட்டார். தான் இழந்த வாய்ப்பைத் தன் குடும்பத்தினர் மூலம் சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் அவர் இருந்தார். அதை ராஜலட்சுமி மூலம் அவர் சாதித்துக்கொண்டார்.

அரசியல் பயணம்!

கல்யாணமாகி வந்ததும், இ.வேலுச்சாமி தன் மருமகளை அ.தி.மு.க-வில் இணைத்தார். 2004-ல் கட்சியில் சேர்ந்த ராஜலட்சுமிக்கு 2006-ம் ஆண்டு சங்கரன்கோவிலின் 18-வது வார்டு இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியுடன் இ.வேலுச்சாமி நெருக்கமாக இருந்ததால், அவரது உதவியால் 2014-ம் ஆண்டு சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராகப் போட்டியின்றித் தேர்வானார் ராஜலட்சுமி.

மந்திரி தந்திரி: வி.எம்.ராஜலட்சுமி

2016-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சீட் கொடுக்கப்பட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அமைச்சராக்கப்பட்டார். தனக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என்பதை ராஜலட்சுமியே எதிர்பார்க்கவில்லை. அதனால் அமைச்சர் பொறுப்பு கிடைத்த தகவலைக் கேட்டதும் நெகிழ்ச்சியில் அழுதுவிட்டார் எனக் குடும்பத்தினர் சொல்கிறார்கள்.

அன்புமணி கணேசன், சதன் திருமலைக்குமார்
அன்புமணி கணேசன், சதன் திருமலைக்குமார்

தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் சங்கரன்கோவில் தொகுதிக்கு நிறைய செய்திருக்க முடியும். ஆனால், எதையுமே செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு ஓங்கி ஒலிக்கிறது.

அமைதி... அடக்கம்!

அமைச்சர் ராஜலட்சுமி யாரிடமும் அதிர்ந்து பேசாதவர். கட்சியில் பல கோஷ்டிகள் இருந்தாலும், எல்லோருடனும் நெருக்கம் காட்டுபவர். பொதுவாகக் கட்சிக்காரர்கள் யாரைப் பார்த்தாலும், ‘அண்ணே’ என்று பாசமாக அழைத்துப் பேசுவார். கட்சியினர் யார் பத்திரிகை கொடுத்தாலும் அந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். `அமைதியே ராஜலட்சுமியின் பலம்’ என்பதை அவரைப் பிடிக்காதவர்கள்கூட ஒப்புக் கொள்கிறார்கள். இதெல்லாம் சரி. அமைச்சராக, எம்.எல்.ஏவாக மக்களுக்கு என்ன செய்தார்?

தொழில் வாய்ப்பு எதுவும் இல்லை!

ம.தி.மு.க உயர்நிலைக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான டாக்டர் சதன் திருமலைக்குமார், “ஒரு அமைச்சராக எவ்வளவோ செய்திருக்க முடியும். ஆனால், எதையுமே செய்யாமல் இருந்துவிட்டார். இந்தத் தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும் என்பதால் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால், இந்தப் பகுதி மக்கள் அருகில் உள்ள கேரளாவுக்குப் பிழைப்புக்காகச் செல்கிறார்கள். சங்கரன்கோவிலைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூ விளைச்சல் அதிகம். இங்குள்ள பூ மார்க்கெட் பிரபலமானது. பூ விவசாயிகள் பயனடையும் வகையில் சென்ட் பேக்டரி கொண்டுவர வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை. அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நெல்லையில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது சங்கரன்கோவில் தொகுதியைத் தென்காசியுடன் சேர்த்து விட்டார்கள். ஆனால், இந்தத் தொகுதி நெல்லை மாவட்டத்துடன் இருப்பதையே மக்கள் விரும்பினார்கள். அதற்காகப் பல்வேறு போராட்டங்கள் நடந்தபோதிலும் அமைச்சர் எதையும் கண்டுகொள்ளவில்லை.

இங்குள்ள அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. தொகுதி மக்களை விடுங்கள், தான் இருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக ஏதாவது செய்திருக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் வழங்கப்பட்டு வந்த தையல் இயந்திரங்கள் இரண்டு ஆண்டுகளாகக் கொடுக்கப்படவில்லை” என்று ஆதங்கப்பட்டார்.

எதுவும் செய்யாத அமைச்சர்!

கடந்த முறை தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவரும் தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான அன்புமணி கணேசன், “ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுப் பல வருடங்களாகத் திறக்காமல் கிடக்கும் புதிய பேருந்து நிலையத்தைத் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சங்கரன்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமா இருக்கு. அதைச் சமாளிக்க ரிங் ரோடு கொண்டு வந்திருக்கலாம். அதற்கான முயற்சியைக்கூடச் செய்யவில்லை. ராஜபாளையம் சாலையில் இருக்கும் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கொண்டுவர எந்த முயற்சியும் செய்யவில்லை. ஒரு அமைச்சராக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சங்கரன்கோவில் வழியாகக் கூடுதல் ரயில் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாலம் இல்லாத ரயில்வே கேட்
பாலம் இல்லாத ரயில்வே கேட்

புதிதாகத் தொடங்கப்பட்ட தென்காசி மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கலாம். அரசுப் பொறியியல் கல்லூரி அல்லது சட்டக் கல்லூரியைக் கேட்டிருக்கலாம். ஆனால் சட்டமன்றத்தில் மாவட்ட மக்களின் குரலாக அமைச்சர் பேசவே இல்லை என்பதுதான் உண்மை” என்று படபடத்தார்.

நெசவுத் தொழிலாளர்களின் குமுறல்!

சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெசவுத் தொழில் அதிகம் நடக்கிறது. சுமார் 20,000 குடும்பங்கள் விசைத்தறித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அந்தத் தொழில் மேம்பாட்டுக்கு அமைச்சர் எதுவும் செய்யவில்லை என்ற குமுறல் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் இருக்கிறது. இதுபற்றிப் பேசிய விசைத்தறி நெசவாளர் சங்கத்தின் செயலாளரான டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன், “விசைத்தறி உரிமையாளர்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறோம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நெசவுத் தொழிலுக்கு வரிவிலக்கு இருந்துவந்த நிலையில், தற்போது ஐந்து சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், அமைச்சர் எங்களுக்காக அரசிடம் பேசவில்லை. விசைத்தறிக்குப் பயன்படும் நூல் விலையைக் கட்டுப்படுத்தவும் உதவி செய்யவில்லை. கைத்தறித் துணிகளை கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்வதுபோல, விசைத்தறித் துணிகளையும் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் அமைச்சர் உதவவில்லை” என்கிறார்.

நலிவடைந்த விசைத்தறி தொழில்
நலிவடைந்த விசைத்தறி தொழில்

சங்கரன்கோவில் வட்டார விசைத்தறித் தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளரான மாணிக்கம், “விசைத்தறித் தொழிலாளர்கள் கடுமையான நெருக்கடியில் இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் ஆறு மாதம் தொழில் முடங்கியது. அந்தச் சூழல் இன்னும் முழுமையாக மாறவில்லை. கொரோனா காலத்தில் அமைச்சரின் உதவி எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் விசைத்தறித் தொழிலை மேம்படுத்தும் வகையில் ஒரு ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. அதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. நெசவுத் தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் கண்டுகொள்ளவில்லை” என்றார்.

சுப்ரமணியன் , மாணிக்கம்
சுப்ரமணியன் , மாணிக்கம்

விவசாயிகளின் ஆதங்கம்!

“மழையை எதிர்பார்த்தே விவசாயம் நடக்கும் நிலையில், சிற்றாறு பகுதியில் இருந்து சங்கரன்கோவில் வரை கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரள எல்லைக்குள் இருக்கும் செண்பகவல்லி அணைக்கட்டு உடைந்து கிடக்கிறது. அதைச் சரிசெய்தால் தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியும், தென்காசி மாவட்டம் முழுவதும் செழிப்பாக மாறும். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அரசுக்கு அமைச்சர் அழுத்தம் கொடுக்கவில்லை.

புளியங்குடிப் பகுதியில் எலுமிச்சை அதிகமாகப் பயிரிடப்படுகிறது. அங்குள்ள எலுமிச்சை மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். எலுமிச்சையைப் பதப்படுத்திப் பாதுகாக்க மையம் அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தோம். அங்கு அமைய இருந்த எலுமிச்சை ஆராய்ச்சி மையத்தை, சம்பந்தமே இல்லாத வன்னிக்கோனேந்தல் பகுதிக்குக் கொண்டு வந்து வீணடித்துவிட்டார். நெல்லையில் கால்நடை மருத்துவக் கல்லூரி இருக்கிறது. அங்கு ஆட்டின ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், எதையாவது தன் தொகுதிக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த ஆட்டின ஆராய்ச்சி மையத்தை சங்கரன்கோவில் அருகில் உள்ள சின்னக்கோவிலான்குளம் கிராமத்தில் அமைத்து வீணாக்கினார்'' என்று வருத்தப்பட்டார்கள்.

மந்திரி தந்திரி: வி.எம்.ராஜலட்சுமி

``செய்ய முடிந்ததைச் செய்தேன்!''

மைச்சர் ராஜலட்சுமியை சந்தித்துப் பேசினோம். “சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறேன். குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க, நெல்லை கொண்டா நகரத்தில் இருந்து 543 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். நகராட்சியில் 51 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர்த் திட்டப் பணிகளையும் 27 கிராமங்கள் பயனடையும் வகையில் ரூ.50 கோடி மதிப்பிலான குடிநீர்த் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். சாலை மேம்பாட்டுக்குப் புதிய திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறேன். நெல்லை-ராஜபாளையம் சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து வசதி கிடைக்க வழிசெய்துள்ளேன்.

சிப்காட் பகுதியில் வேளாண் உணவுப் பூங்கா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தைச் சீரமைத்துத் திறக்க விரைவில் பணிகள் தொடங்கப்படும். திருவேங்கடத்தில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை விவசாயிகள் பயனடைய, வன்னிக்கோனேந்தல் பகுதியில் எலுமிச்சை ஆராய்ச்சி மையம் வந்துள்ளது. அதேபோல சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆட்டின ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர, பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்கள், அம்மா மினி கிளினிக் என கிராமப் பகுதி மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.