கண்ணூர் மாவட்டம் கோட்டியூர் அருகே உள்ள அம்பயதோட் டவுனில், இன்று அதிகாலை திடீரென மாவோயிஸ்ட்டுகள் திரண்டுள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதி வழியாக நகருக்குள் நுழைந்த ஒரு பெண் உள்ளிட்ட அனைவரும் அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள்.
அதைப் பார்த்ததும், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அங்கு வந்தபோது, அவர்களிடம் அச்சிட்ட கைப்பிரதிகளை மாவோயிஸ்ட்டுகள் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன், அந்தப் பகுதிகளில் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், மாவோயிஸ்ட்டுகளின் போஸ்டர் மற்றும் கைப்பிரதிகளில் வாசகங்கள் அடங்கியிருந்தன. குறிப்பாக, நக்சல் இயக்கங்களை ஒடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்திருந்தன.

`ஆபரேஷன் சமாதான்’ என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கையைக் கண்டித்துள்ள மாவோயிஸ்ட்டுகள், இந்த நடவடிக்கை உயர் வகுப்பினருக்கு ஆதரவான செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 30-ம் தேதி, கேரள மாநிலம் அட்டப்பாடி மலைப்பகுதியில் கேரள காவல்துறையின் தண்டர்போல்டு படையினரால் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர். அவர்கள் சரணடைய விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அவர்களைச் சுட்டுக்கொன்றதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில், அட்டப்பாடி என்கவுன்டர் சம்பவத்துக்கு கேரள அரசு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்த மாவோயிஸ்ட்டுகள், இந்தச் சம்பவத்தில் கொட்டப்பட்ட ரத்தத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளனர். மத்திய அரசின் ஆபரேஷன் சமாதானத் திட்டத்துக்கு எதிராக, வரும் 31-ம் தேதி நாடு தழுவிய அளவில் பந்த் நடத்தப்படும் என்றும் மாவோயிஸ்ட்டுகள் தெரிவித்துள்ளனர்.